சமூக மாற்றங்களை இலக்கியம் எதிரொலிக்கும் காரணத்தால் காப்பியத் தலைவர்களாக மன்னர்களும் படைத்தலைவர்களும் இருந்த நிலை மாறி இன்று ‘சாதாரணர்கள்’ முதன்மைக் கதைமாந்தர்களாகப் படைக்கப்படுகின்றனர், சமூகத்தின் பொருளாதார அடித்தட்டில் நிற்கும் மனிதர்கள் முதன்மைக் கதைமாந்தர்களாகப் பொறுப்பேற்கும் போது. அவர்களிடமும் காப்பிய இலக்கியப் பாட்டுடைத் தலைவர்களின் பேராளுமைப் பண்புகள் குறைவன்றி நிறைந்திருப்பதை இலக்கியம் நிரூபித்து வருகின்றது, அபாயங்களை எதிர்கொள்ளும் வீரம், உற்றார் உறவினரைக் காக்கும் பொறுப்பு, சான்றாண்மை. தாங்கு சக்தி, உலக ஞானம், அறப்பற்று போன்ற ஆளுமைப் பண்புகளை இன்றைய படைப்பாளிகள் கடைநிலை மனிதனிடமும் கண்டு அதை இலக்கியப் பதிவாக்குகிறார்கள்.

jayagandhan 411ஜெயகாந்தன் காப்பிய, மாந்தர்களையும் அவர்களது காப்பியப் பண்புகளையும் சாதாரணர்களில் அடையாளம் காட்டுகிறார், அவரது இலட்சியவாதக் கனவுகள் சாதாரணர்களால் நிறைவேறுகின்றன, சாதாரணர்களின் அசாதாரணப் பண்புகள் அவரது பாடுபொருட்களாகின்றன, தாஜ்மகாலிலும் கோயில்களிலும் வாழும் இந்தியக் கலாச்சாரமும் பண்பாடும் சேரிகளிலும் குப்பங்களிலும் கூட வாழ்கிறது என்று தனது படைப்புகளால் ஜெயகாந்தன் நிறுவுகிறார். வேசியின் கிழிந்த கோரைப் பாயின் மீதும் ஆலவாய் அம்மன் மூக்குப் பொட்டிலும் கள்ளச் சாராயம் காய்ச்சும் மறைவிடங்களிலும் அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தரும் குப்பைத் தொட்டிகளிலும் மனித நேயத்தின் ஊற்றுக்கண் வற்றாமல் கசிந்தபடியே இருப்பதை தொய்வின்றி ஜெயகாந்தனின் கதைமாந்தர்கள் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றனர்.

 “நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும் அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.”

என்ற அவரது கூற்றை மெய்ப்பிப்பதாகவே அவரது படைப்புகள் உள்ளன, அவரது “ஆதர்சப் பேரிலக்கியம் எதிர்மறைப் பார்வை” கொண்டதாக இல்லை, மானுடம் வெல்லுமம்மா என்ற ஒற்றை படைப்பிலக்கியக் கருவை நூற்றுக்கணக்கான கோணங்களிலிருந்து ஜெயகாந்தன் பார்க்கிறார், வக்கரிப்பாகவும் கேவலமாகவும் சேறாகவும் சகதியாகவும் சாக்கடையாகவும் சமுதாயத்தின் கண்களுக்குத் தோன்றுபவையும் ஒரு சிறந்த படைப்பாளனின் கண்களுக்குப் புனிதமானவையே. லா,ச,ராமாமிருதம் தனது பாற்கடல் என்ற சிறுகதையில் சொல்வதைப் போல் மனித மனமென்னும் பாற்கடலிலிருந்தே ஆலகாலமும் அமிழ்தமும் தோன்றுகின்றன, இதை மற்றவர்களைக் காட்டிலும் நன்குணர்ந்தவன் படைப்பாளன்.

ஜெயகாந்தன் தனது கதைமாந்தர்களது பிரச்சினைகளை அவர்களோடு நின்று அவர்களது பார்வையில் பார்க்கிறார். அதனால்தான் அவரது கதைமாந்தர்கள் வாழ்விலிருந்து பிறந்து வருகின்றனர். நிணமும் ரத்தமும் தொப்புள் கொடியும் மனித கவிச்சியும் கழுவிக் களையப்படாமல் அலங்காரப் பூச்சுக்கள் எதுவுமில்லாமல். பிறந்த குழந்தையின் உயிர்த் துடிப்போடும் வாழ்வின் மீது நம்பிக்கையோடும் நிர்வாண நேர்மையோடும் உரத்த குரலில் கூவியபடி தங்களின் இருப்பை உலகிற்குத் தெரிவிக்கிறார்கள்,

 ஜெயகாந்தனின் கதை மாந்தர்கள் யாரும் வீர நாயகர்கள் அல்லர். எந்த ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்திலும் அவர்கள் வார்த்தெடுக்கப் படவில்லை. சோசப்புகளும், கோகிலாக்களும், ராமநாதன்களும், அம்மாசிகளும், சங்கர சர்மாக்களும், டோனிகளும். இருதயமேரிகளும், பாப்பாத்திகளும், படைக்கப்படவில்லை, சமுதாயத்தில் நம்மிடையே நம்முள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். இவர்களுக்குச் சாதனைகளைப் பற்றித் தெரியாது, பேரம் பேசத் தெரியாது, ஆனால் சாதிக்க முடியும், சாதனை என்ற உணர்வும் பெருமையும் இன்றி. அன்றாட வாழ்வில் அவரவர் சக்திக்கு இயன்றபடி அணுஅளவேனும் அறம்சார் வீரத்தை வெளிப்படுத்தவியலும். அக வெளிச்சத்தின் உதவியால் புற இருளைப் போக்கும் கலையைப் பயின்றவர்கள் ஜெயகாந்தனின் கதை மாந்தர்கள்.    

ஜெயகாந்தனின் சமூகப் பார்வையில் தந்தையின் பரிவான கண்டிப்பும் தாயின் நிபந்தனைகளற்ற அன்பும் சகோதரியின் சகிப்புத் தன்மையும் சகோதரனின் தோள் கொடுக்கும் உடனிருப்பும் நண்பனின் உடுக்கை இழந்தவன் கை போன்ற புரிதலும் காதலின் வசீகரமும் வாழ்க்கைத் துணையின் வற்றாத பகிர்தலும் நிறைந்து நிற்கின்றன.

அவரது கதைமாந்தர்கள் பேசுவார்கள், உரக்க வாதிடுவார்கள், மகிழ்வார்கள், அழுவார்கள், பலங்களோடும் பலவீனங்களோடும் குறை நிறைகளோடும் காதலோடும் காழ்ப்போடும் வர்க்க பேதமின்றி. பால் பேதமின்றி. வயது பேதமின்றி ஆழிப்பேரலையாக வாழ்க்கையிலிருந்து தோன்றிய வண்ணம் இருப்பார்கள், மற்ற படைப்பாளர்களின் கதைமாந்தர்களிடமிருந்து இவர்கள் மாறுபட்டு நிற்கக் காரணம் ஜெயகாந்தனைப் போலவே இவர்களும் வளர்ச்சியிலும் வாழ்க்கையிலும் தேயாத நம்பிக்கை உள்ளவர்கள்,

யுக சந்தியின் காமாட்சிப் பாட்டியும் நந்தவனத்து ஆண்டியும் ‘பிணக்கி’ன் தர்மாம்பாளும் குருபீடத்தின் சீடனும் கல்யாணியும் ஹென்றியும் வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க வந்தவர்கள் அல்லர், தீர்ப்புச் சொன்னவர்களும் அல்லர், ஆனால் அவர்கள் தங்களின் நிழலின் பொய்யோடும் சிறுமையோடும் சமரசம் செய்து கொள்ளாமல். வெற்றி தோல்வி என்ற விளைவுகளுக்காகக் காத்து நிற்காமல் வாழ்க்கையின் ஒளியை ஓயாமல் தேடிய போராளிகள், இதற்குக் காரணம் ஜெயகாந்தனது பார்வையில் சறுக்கல்கள் வீழ்ச்சிகளல்ல. தவறுகள் குற்றங்களல்ல,

ஜெயகாந்தனின் கதைமாந்தர்கள் யாரும் ‘போலி’ களும் ‘மாதிரி’ களுமல்ல, அவர்கள் அசாதாரணமான தனித்தன்மையால் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள், ஜெயகாந்தன் தனது கதை மாந்தர்களுக்குப் பெயர்கள் சூட்டினாலும். உளவியல் பார்வையில் அக்கதைமாந்தர்கள். ‘அவன்’ ‘அவள்’ என்ற பொதுச் சுட்டுப் பெயர்களோடு பொருந்திப் போகிறார்கள், அகப்பாடல்களில் வரும் மாந்தர்களும் இவ்வுணர்வை ஏற்படுத்துவர் என்பது நினைவு கூரத்தக்கது,        

ஜெயகாந்தனின் கதைமாந்தர் மனித நேயம் மிகுந்தவர்கள், செல்வச் செழிப்பும் சமுதாய அந்தஸ்தும் எதுவுமில்லா அன்றாடம் காய்ச்சிகளிடமும் குறைவின்றி இருப்பது மனிதநேயம்தான். இம் மனித நேயமே ஆன்மீகமாக ஜெயகாந்தனால் கொண்டாடப்படுகிறது, ஓங்கூர்சாமியும் சோசப்பும் இரண்டு ஆன்மீக உச்சங்கள்.

“எதையும் வெறுக்கறவன் சாமியார் இல்லே அல்லாத்தியும் விரும்புறவன்தாய்யா சாமியாரு” என்ற ஓங்கூர்சாமியின் அன்பின் பிரகடனமும்.

“கெட்டதுன்னா என்ன ஆண்டவனே? யாரு சொன்னது? நீங்க கூடத்தான் கிறிஸ்து, உலகத்திலே இருக்கற எல்லாமே கிறிஸ்துதான்” என்ற திருட்டு முழி சோசப்பின் விவிலியப் புதலும் ஆன்மீகக் கூற்றுகள், சித்தர்களைப் போல பற்றற்ற பற்று ஒன்றினையே இந்தியச் சிந்தனை தனது வேராகக் கொண்டு வந்துள்ளது, புளியம் பழத்தைப் போல ஓட்டில் ஒட்டாமல் ஆனால் உள்ளே ஈரம் கசிந்தபடி இருக்க ஒரு பக்குவம் வேண்டும், அது இருப்பதால் தான். “உங்கள் கையில் வந்து கிடைப்பது ஒரு புத்தகமல்ல. எழுதியவனின் இதயம் என்பதை லட்சியப் படுத்தி இதய பூர்வமாய்க் களங்கமற்றுப் படியுங்கள்” என்று படைப்பாளனின் வீரத்தோடு ஜெயகாந்தனால் கேட்க முடிகிறது,

“அவருடைய கதைகளில் வரும் பாத்திரங்களெல்லாம் தெருவிலே. குடிசையிலே. பிளாட்பாரத்திலே. கூவம் நதிக்கரையிலே காணக்கூடிய மக்களின் பிரதி பிம்பங்கள் தான், அநேகமாக ‘ஒரு பிடி சோறு’ அகப்படாமல் உயிர் போகும் சமூக அநாதைகளின் வாழாத வாழ்வைத்தான் அவருடைய கற்பனை ‘ஸர்ச்லைட்’ ஒளி செய்து குறியிட்டுக் காட்டுகிறது, அவருடைய ஏழை மக்கள் ஆசாபாசங்களற்ற அப்பாவிகள் அல்ல; விருப்பும் வெறுப்பும் வேதனையும் ஆத்திரமும் வெட்கமும் தன் மதிப்புமுள்ள மக்கள் அவர்கள்... சொல்லப் போனால் அவர்கள்தான் மனிதப் பிறவிகள்... ஜெயகாந்தனின் கற்பனை துலாக்கோல் எங்கேயாவது சாயுமானால் ‘பேவ்மென்ட்’ வெயில் பக்கம் சாயுமே ஒழியப் பக்கத்தில் உள்ள மச்சு நிழலிலே சாயாது” (தி. ஜானகிராமன். ஒருபிடி சோறு முன்னுரை 1958)

ஜெயகாந்தனின் இறவா இலக்கியப் படைப்புகளில் சோசப்பு தனி இடம் வகிக்கிறான், தன்னைச் சுற்றி அவன் அமைத்துக் கொள்ளும் சத்தியத்தின் அரண் பாவத்தின் தீண்டலிலிருந்து அவனைப் பாதுகாக்கிறது, சார்லஸ் டிக்கன்ஸின் (Charles Dickens) ஆலிவர் ட்விஸ்ட் (Oliver Twist) என்ற நாவலின் முதன்மைக் கதைமாந்தரான சிறுவனிடமும் இது போன்ற நேர்மை காணப்படும். சத்தியத்தின் சன்னிதானமாக சோசப்பு திகழ்கிறான். ஜெயகாந்னுக்குத் தெய்வ நம்பிக்கை கிடையாது. ஆனால் மனிதனுள் உறையும் தெய்வீகத்தின் மீது குறையாத நம்பிக்கை உண்டு, அதன் அற்புத வெளிப்பாடே சோசப்பு. வேறுவழியின்றிப் பிறரது பாவங்களைச் சுமக்கவில்லை சோசப்பு. வேண்டி விரும்பியே சுமக்கிறான், அவனது மௌனம் வார்த்தைகளை விடப் பொருளும் வீரமும் கொண்டது. அதனுடைய மென்மையின் கூர்மை. மன்னிப்பையே பெரும் தண்டனையாக மாற்றி விடுகின்றது,

சோசப்பு. ‘நடராஜ விலாஸ் உயர்தர காப்பி அண்டு மிலிடெரி சாப்பாடு ஹோட்டலி’ன் ஊழியன் அதன் உரிமையாளர் ரத்தினவேலு முதலியாருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் அவன் பெயர் ‘திருட்டு முழி சோசப்பு. அப்படிப்பட்ட வினோதப் பிராணி மட்டுமன்றி அந்த ஹோட்டலின் எல்லா ஊழியர்களும் சினிமாவுக்குப் போகும் திங்கட்கிழமை இரவுகளிலும் கோணிச் சாக்கால் தரையை அழுத்தித் தேய்த்து ஹோட்டலைச் சுத்தம் செய்து கொண்டிருப்பான். இதுவரை ‘அட்வான்ஸ்’ கேட்காத ஒரே நபர் அவன் மட்டும் தான். சமையல்கார நாயுடு கோவிந்தசாமி அவனை ஒரு ‘வினோதப் பிறவி’. ‘தனி அவதாரம்’ என்றும் கருதினார். சோசப்பிற்குப் பணச்செலவு பெரிதாகக் கிடையாது. அவனது மாதச்சம்பளமான பத்து ரூபாயில் ஒரு ரூபாய்க்கு மேல் அவனுக்குச் செலவு இருந்ததில்லை, அந்த ஒரு ரூபாய்க்கும் ஒரு ஏசுநாதரின் படமோ. கிருஷ்ணன் படமோ - அவன் மனதில் தோன்றும் தெய்வீக உணர்வுக்கு எது காரணமாக இருந்ததோ - அதை வாங்கி வருவான். எல்லா அறைகளிலுமுள்ள மேசைகள் மீதோ அன்றி மாடங்களிலோ அவற்றை வைப்பான்.

அன்றும் சோசப்பு மூன்று குரங்குகளின் பொம்மையை வாங்கியிருந்தான், பொம்மையின் பொருள் என்னவென்று சோசப்பு யோசிக்கக் கூட இல்லை, கோவிந்தசாமிதான் கெட்டதைப் பார்க்காதே என்றும் கெட்டதைக் கேட்காதே என்றும் கெட்டதைப் பேசாதே என்றும் அந்தக் குரங்கு பொம்மைகள் கூறுவதாக எடுத்துச் சொன்னார்.

அதைக் கேட்டபடி மௌனமாகப் படுத்திருந்த சோசப்பு “ஆமா ஆண்டவனே. கெட்டதுன்னா என்ன?” என்கிறான், கோவிந்தசாமி நாயுடு அதற்கு “உலகத்துலே நல்லதுன்னும் கெட்டதுன்னும் பிரிச்சுப் பார்க்கிற சாதாரண மனுசனா இருந்தா ஒனக்குத் தெரியும். நீதான் தனி அவதாரமாச்சே நீ ரொம்ப நல்லவன். ஒனுக்குக் கெட்டதுன்னா என்னென்னே தெரியலே, ஆனா ஒனக்குத் தெரியிலேங்கறதுனாலே நல்லதுன்னும் கெட்டதுன்னும் இல்லேன்னு நெனச்சிக்காதே” என்கிறார்.

சோசப்பின் சொந்த ஊர் வேலூர், அவன் மாமன் மகளான ஒரு காலத்தில் அவனது மனைவியுமான பார்வதி நல்ல அழகி. சோசப்பின் தந்தை ராமலிங்கப் படையாச்சி. அவனது தெருவில் ஒரு பாதிரியார் சாமி இருந்தார், ஊர் ஊராக அவர் மீட்டிங் பேசப் போகும்போதெல்லாம் உடன் சோசப்பும் உண்டு. அவரது பிரசங்கம் இன்றும் அவன் காதுகளில் ஒலிப்பதாக அவன் பரவசப்படுவான். “கர்த்தரை விசுவாசிக்கிறவன் யாராயிருந்தாலும் கிறிஸ்துதாண்டா” என்ற பாதியாரின் வார்த்தைகளின் முழுப் பொருளும் சோசப்பிற்குப் புரிந்ததாலோ என்னவோ. “அப்போ நீ சுயமா கிறிஸ்தவன் இல்லியா” என்று நாயுடு ஆச்சரியத்தோடு கேட்டதற்கு “யாரு சொன்னது - நீங்க கூடத்தான் கிறிஸ்து, உலகத்திலே இருக்கிற எல்லாருமே கிறிஸ்துதான், அதான். பாதிரியார் சாமியே சொல்லிட்டாரே” என்றான் சோசப்பு,

ஒரு மதியநேரம் தன் மனைவி பார்வதியும் நண்பன் மாரிமுத்துவும் குடிசைக்குள் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதை சோசப்பு பார்க்க நேரிடுகிறது, அவர்கள் இருவரின் இடையில் ஏற்பட்ட உறவினை அறிந்த சோசப்பு கோபப்படவோ அன்றி அவர்களிடம் குறைகாணவோ முயலவில்லை, மாறாக அவர்களுக்கு தனது முழு ஆசியையும் சம்மதத்தையும் தந்துவிட்டு மாரிமுத்துவுக்குத் தனது தோட்டக்கார வேலையையும் கொடுத்த பின் ஊரை விட்டு கிளம்பிவிட்டான்.

கோவிந்தசாமி நாயுடுக்கு அவன் கதையைக் கேட்கக் கேட்கத் திகைப்பும் பெருமையும் பொங்கியது, “சோசப்பு. நீ மனுஷனில்லே,,,, தேவன். உன்னைப் பத்தி என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலே; நீ வெறும் கிறிஸ்தவன் மட்டுமில்லே,,, நீ கிறிஸ்து கருங்கல்லு மாதிரி இருக்கும் இந்த உன் உடம்புக்குள்ளே. பூ மாதிரி புனிதமான இருதயம் இருக்கு... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே... எனக்கு ஆன வயசுல பாதிதான் இருக்கும் உனக்கு, ஆனா உன் கால்லே விழுந்து கும்பிடணும் போல இருக்கு...” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டு திணறித் திணறிப் பேசினார் நாயுடு, 19 அன்று இரவு அறை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு வந்த சேட்டு மிகுந்த குடிபோதையில் மூவாயிரம் ரூபாய் திணித்து அடைக்கப்பட்டிருந்த தனது மணிபர்ஸை முதலியார் பாதுகாப்பில் தந்து விட்டுப் பொழுது விடிந்தவுடன் முதல் நாள் இரவு நடந்ததை முற்றிலுமாக மறந்து விட்டிருந்தான். இந்த சம்பவத்திற்கு ஒரே சாட்சி சோசப்பு தான், சேட்டு உறங்கிக் கொண்டிருந்த நேரம் அவனது அறைக்குச் சென்றவன் சோசப்பு மட்டுமே. காபியைக் கொண்டு போய் வைத்து விட்டு. கூடவே அந்த மூன்று குரங்கு பொம்மைகளையும் அந்த அறை மேசையின் மீது வைத்து விட்டு வந்திருந்தான் சோசப்பு. விடிந்தவுடன் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டினான் சேட்டு. மாடியிலிருந்த மற்ற அறைகளில் ஒன்றில் ஒரு சூதாடியும் அவனது நண்பனும் தங்கியிருந்தார்கள். இன்னொன்றில் ஒரு பெண் தங்கியிருந்தாள். சோசப்பின் சக ஊழியர்கள் அனைவரும் வந்து கூடிவிட்டனர். நாயுடு தனது சொந்த கிராமத்திற்கு சென்றிருந்ததனால் சோசப்பிற்குச் சாதகமாகப் பேச ஒருவருமில்லை.

முதலியார் சேட்டிடம் ‘நன்றாகத் தேடிப் பார்க்கச்’ சொன்ன போது சோசப்பிற்கு நிலைமை முழுவதுமாகப் புரிந்து போனது. அவன் காதுகளில் முதல் நாள் இரவு நாயுடு சொன்ன ‘கெட்டதைப் பார்க்காதே. கெட்டதைப் பேசாதே. கெட்டதைக் கேட்காதே’ என்ற சொற்கள் முழங்கிய வண்ணமிருந்தன. சேட்ஜி முதல் எல்லோரும் தங்கள் பாணியில் அவனை விசாரித்தனர். “நான் எடுக்கல்லே. ஆண்டவனே” என்ற பதிலைத் தவிர வேறு எதையும் சோசப்பு சொல்லவில்லை, முதலியாரையும் அவனைத் தனியே விசாரிக்கும்படிச் செய்தார்கள். முதலியாரும் அவர்களின் திருப்திக்காக அவனை அழைத்துக் கொண்டு தன் தனியறைக்குள் நுழைந்தார். அடிபட்டு வீங்கிய அவன் முகத்தைப் பார்த்த போது உண்மையிலே கனத்து போன அவர் இருதயம் வலித்தது, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சில வினாடிகள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர், அவனது பெரிய விழிகள் அகல விரிந்தன. கருவிழிகள் திருதிருவென ஆடி அவர் முகத்தில் மொய்த்தன. ‘உனக்குத் தெரிஞ்சிருந்தா என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே’ என்பது போல் அவர் பார்வை அவனைக் கெஞ்சிற்று. பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு எல்லோரும் அவனைக் கேட்ட அதே கேள்வியைத் திக்கித் திணறியவாறு கேட்டார்:

“பர்ஸ் எங்கேடா ?”

அவனோ எல்லோரிடமும் சொன்ன அந்த பதிலைச் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் இருந்த பொருள் அவருக்குப் புரிந்தது. அந்தக் கண்களை ஏறிட்டு நோக்க முடியமால் அவர் விழிகள் கூசின.

கிராமத்துக்குப் போயிருந்த நாயுடு திரும்பி வந்தார், யாரோ ஒருவன் சோசப்பின் மீது சுமத்திய பழியைவிட அவனோடு பழகிய ஹோட்டல் ஊழியர்களும் முதலாளியும் அவன் குற்றம் சாட்டப்பட்டுத் துன்புறுவதைப் பார்த்து நின்ற செயல் அவருக்கு வேதனையளித்தது. அவர்களைப் பார்த்துக் காரி உமிழ்ந்தார்.

“திருடனை அடிக்கலாம்டா. தெய்வத்தை அடிக்கலாமா?” என்று உறுமினார். “முதலாளி நீங்க போயி எல்லா ரூமையும் இழுத்துப் பூட்டிக்கிட்டு வாங்க, போலீஸ் வந்ததும் அவுங்க கையிலே சாவியைக் குடுத்துச் சோதனை போடச் சொல்லுவோம் போங்க” என்றார் நாயுடு.

 இந்தத் தருணத்தையும் விட்டுவிட்டால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என்று முதலியார் சேட்டின் அறையைப் பூட்டச் சென்றபோது தனது மடியிலிருந்த பர்ஸை மேசை மீதிருந்த குரங்கு பொம்மைக்குப் பின்னால் வைத்துவிட்டு நிம்மதியுடன் வெளியே வந்தார். சேட் தனது பர்ஸ் சுவருக்கு மேசைக்குமுள்ள இடைவெளியில் கண்டான், ‘ஐயோ பர்ஸ்’ என்று பாய்ந்தான், தான் குடிபோதையில் பொம்மைக்குப் பின்னால் பர்ஸை வைத்திருக்கக் கூடும் என்றும் நினைத்தான். சோசப்பைக் குற்றவாளியாக்கியது அவனை நாணச் செய்தது,

சோசப்பு நாயுடு அழைத்து வர மாடிக்கு வந்தான். கும்பல் விலகி அவனுக்கு வழிவிட்டது, ஆனால். ‘முதலியாருக்கோ அவனைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல தோன்றியது. அவரது கைகள் நடுங்கின அவனைப் பார்க்கும் போது தொண்டை வறண்டது. தன் நெஞ்சைப் பிளத்து ஹிருதய கமலத்தையே அவன் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் போல் மனம் துடித்தது. அவரது கௌரவம் தடுத்தாலும். கௌரவம் அந்தஸ்து என்ற பொய்யணிகளெல்லாம் கழன்று போய் அவரது ஆத்மா நிர்வாணமாக அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தது, அவன் எளிமையான சத்தியத்தின் ரூபமாய் வந்தான்,

சோசப்பு தன்னைச் சுற்றி நின்ற ஒவ்வொரு முகத்தையும் தனது பெரிய விழிகளை உயர்த்திக் கருப்பு விழிகள் நடுங்கப் பார்த்தான், அடிபட்டு வீங்கிப் போன அவனது உதடுகளும் நாசியும் துடிக்க விழிகளில் ‘கண்ணீர் சுரந்து தளும்பித் தத்தளித்தது’,திடீரென்று அவன் திரும்பி நின்று. சுவரில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ‘ஓ’ வென்று பெருங்குரலில் கதறி அழ ஆரம்பித்தான், அந்த அழுகைக் குரல் அனைவரின் வயிற்றையும் கலக்கிற்று... அவன் குமுறிக் குமுறி அழுதான். அங்கிருந்த அனைவருக்கும் ஒன்று தெரியும்; அவன் தனக்காகவோ தான் பட்ட வேதனைகளுக்காவோ அழவில்லை என்று. பின் யாருக்காக அழுதான்? “ஆண்டவனே... என்னை மன்னிச்சிடு” என்று சோசப்பைப் பார்த்துத் தன்னுள் முனகிக் கொண்டார் முதலியார்.

நாயுடு சோசப்பைப் பற்றி எண்ணி வியக்கும் போது. “அந்த மாரிமுத்து இவனைப் பைத்தியம்னு நெனச்சி ஏமாத்திட்டோம்னு சந்தோஷப்படுவான். அதுக்கென்னா? இந்த ஓட்டல்லே கூட இவனை எல்லோரும் அசட்டுப் பயன்னுதானே நெனச்சிட்டு இருக்காங்க. அது ஒரு வகையிலே உண்மைதான். அசடுகளும் கடவுளின் பக்கத்திலே நிக்கிற அளவுக்கு மகானைப் போல உயர்ந்த மனுசனாகவும் இருக்க முடியும். மேதைகளும் கடைகெட்ட அயோக்கியனா மிருகத்துக்கும் கீழானவனா இருக்க முடியும். அறிவுங்கறது வேறெ; மனசுங்கறது வேறெ; சோசப்பு மனசாலே உயர்ந்த பிறவில. இவன் கதையைக் கேட்டு இவனை ‘இளிச்சவாயன்’னும் சொல்லாம். அது சொல்றவங்க மனசாலே பார்க்கறாங்களா. அறிவாலே பார்க்கறாங்களாங்கறதையும். பார்க்கறவங்க மனசையும் அறிவையும் பொறுத்தது. எப்படி இருந்தாலும் இவன் ஒரு தனி அவதாரம். விசேக்ஷப் பிறவிதான்”

‘யாருக்காக அழுதான்’ என்பது குறியீடாக விளங்கும் கேள்வி. காலம் காலமாக நல்ல உள்ளங்கள் பிறருக்காக வடிக்கும் கண்ணீர் இன்றளவும் குறியீடாகவே நின்றுவிட்டது, காட்டிக் கொடுக்காமல் இருப்பது மட்டுமன்று. தனது மௌனமான சகிப்பினால் முதலியாருக்கு ஒரு ஆத்ம தண்டனையும் தந்து விட்டிருந்தான் சோசப்பு. இயேசுவைப் போல பிறரது பாவங்களைக் கழுவிக்களைய தனது பரிசுத்தமான ஆன்மாவிலிருந்து பெருகிய கண்ணீரை சோசப்பு பயன்படுத்தினான் போலும்.

“சோசப்பை கிறிஸ்தவ இலட்சிய வாதத்தின் உச்ச உருவமாக வடித்திருக்கிறார் ஜெயகாந்தன். பாவத்திலிருந்து ஆன்ம சக்தியால் மீண்ட கதாபாத்திரமல்ல சோசப்பு. மாறாகத் தன் களங்கமின்மையினால் பாவத்தையே அறியாமல் ஆன்மாவைக் காத்துக் கொண்ட மனிதர், பல்வேறு அலைக்கழிப்புக்கள் கொண்ட தமிழ்ப் புனைக்கதை கதாபாத்திரங்களின் மறு எல்லையாகத் தனித்து நிற்கத் திராணி கொண்ட கதாபாத்திரம். ஓங்கூர் சாமியின் சிறப்பு போலே உக்கிரமாக சோசப்பின் அழுகையையும் ஜெயகாந்தன் படைத்துள்ளார். சிக்கும் சித்தனும் கண்ணீர் மல்கிய யேசுவும் நம் மனதில் ஆழப்பதிந்த பிம்பங்கள்.” என்னும் ஜெயமோகனின் கருத்து இதற்கு வலுவூட்டுவதாக உள்ளது,

ஜெயகாந்தனின் முதன்மைக் கதை மாந்தர்கள் அன்றாட வாழ்க்கையில் அனைவராலும் சந்திக்கப்படும் நபர்களேயின்றி வீரநாயகர்கள் அல்ல, புரட்சிக்காரர்கள். ஆனால் வன்முறையாளர்கள் அல்ல, இவர்கள் அவரவர் வாழ்க்கைச் சூழலில் தோன்றும் பிரச்னைகளை அவரவரால் இயன்ற அளவு நேர்மையோடு தீர்த்துக் கொள்பவர்கள். எல்லாவற்றையும் வீழ்த்தி வென்றடக்கப் புறப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் பல்வேறு விதமான பலங்களையும் பலவீனங்களையும் கொண்டவர்கள். அவற்றை உணர்ந்தும் உணராமலும் இருப்பவர்கள், இவர்களில் பலர் வீரத்தை ஒரு பண்பாகப் பயின்றவர்கள் கூடக் கிடையாது, இருப்பினும் வாழ்க்கையின் இக்கட்டான சூழல்களில். ஆண்மனத்தின் ஆழ்நிலை ஊற்றுக்கண்ணிலிருந்து பொங்கிப் பீறிட்டெழும் அசாதாரணமான அறம்சார் வீரம் இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் விலக்கப்பட்டவர்களும் வேட்டையாடப் பட்டவர்களும் போற்றப்பட்டவர்களும் தூற்றப்பட்டவர்களுமான மிகச்சாதாரண நிலையில் உள்ளவர்கள் இம்முதன்மைக் கதைமாந்தர்கள், இருப்பினும் இவர்கள் வாழ்க்கையின் பிரதிநிதிகள்,

‘இதுதான் வாழ்க்கை’ என்று சமுதாயம் கோடுகளை வரைந்து கோட்பாடுகளை எழுதி. விதிகள் அமைத்து. அரண்களை எழுப்பினாலும். ‘இதுவும்தான் வாழ்க்கை’ என்றபடி இலக்கியம் வேறு பலவற்றையும் பதிவு செய்கிறது. வாழ்பவர்கள் எல்லோரிடமும் இலக்கியம் வாழ்க்கையின் மகத்துவத்தைக் காண்கிறது. ஜெயகாந்தனின் சாதாரணக் கதாபாத்திரங்கள் அடையாளம் அற்ற, பதவி மற்றும் அதிகார இச்சையில்லாத, முகமும் முகவரியுமற்ற, ஆனாலும் ஆழ் மனத்தில் தேடல் உள்ள, புரட்சியாளர்கள். பற்றற்ற பற்று அனைவரிடத்தும் காணப்படுகிறது. அத்தகு தார்மீகப் புரட்சியில் ஈடுபடும் தன்மையே இவர்களை மூலப்படிமங்களாக அடையாளம் காட்டுகிறது.

“குறிப்பிட்ட என் பிரச்னை உன் பிரச்னை என்றால் அதற்குத் தீர்வு உண்டு, ஒரு குறிப்புக்கு உட்பட்ட நீயும் நானும் தீர்ந்தும் போகிறோம், ஆனால். கதையில் வரும் கம்பனின் கும்பகர்ணனும். வியாசனின் கண்ணனும். ஷேக்ஸ்பியரின் ஷேலக்கும். தாஸ்தாவெஸ்கியின் ராஸ்கோலினிகாவும். டால்ஸ்டாயின் அன்னாவும். டென்னஸி வில்லியம்ஸின் ஆல்மாவும் தனித்த உருவங்களாயின் அவர்களின் பிரச்னை தீர்ந்தே போயிருக்கும், அந்தக் கதைகளோடு. ஆனால் அவ்வாறு தீராது போன காரணம்தான் என்ன?

அவர்கள் குறிப்பாக ஒரு உருவம் தாங்கிய போதிலும் பொதுவான மனித குலத்தின் பிரதிநிதிகள் என்பதாலேயே பிரச்னைகளின் முடிவாகக் கதையின் நிறைந்திருந்தும். பிரச்னைகளின் ஆரம்பமாக வாழ்க்கையில் முளைத்த வண்ணமுமிருக்கிறர்கள். முடிவா? யாருக்கு வேண்டும்?” என்ற ஜெயகாந்தனின் கருத்தின் படி. மனித இனத்தின் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை வாழ்க்கை வீசும் சவால்கள் இருந்தவண்ணமே இருக்கும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் புரிந்து கொள்ளும் அறிவையும் அதைத் தாண்டியும் பார்க்கும் ஞானத்தையும் இலக்கியம் தரவல்லது.

- பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், குறுந்தொகை குறித்து ஆங்கிலத்திலும் ஜெயகாந்தன் படைப்புகள் குறித்து தமிழிலும் ஆய்வு செய்து இரண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.