வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளில் அடிக்கடி பண்பாடு, நாகரிகம் ஆகிய இரு சொற்கள் வழங்கும். பொதுவாக இரண்டுக்கும் பொருளை வேறுபடுத்துவதில்லை. ஆழமாகப் பார்த்தால் இரண்டும் வேறு வேறு பொருள் தரும் சொற்கள். ஆனால் தொடர்புடையவை. பண்பாடு ஆங்கிலத்தில் culture எனப்படும். நாகரிகம் civilization என்ற சொல்லால் குறிக்கப்படும். பண்பாடு பொதுவாக கலாச்சாரம் என்ற வடமொழிச் சொல்லாலும் குறிக்கவும் படும். பண்பாடு ஒரு மக்கள் கூட்டத்தின் (அல்லது சமூகத்தின்) பழக்க வழக்கங்கள், பொருளியல், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் ஆகியவற்றை கூட்டாகக் குறிக்கும். ஆக, எல்லா சமூகங்களுக்கும் – அது பழங்குடிச் சமூகமானாலும் சரி, நன்கு முன்னேறிய சாதிச் சமூகமானாலும் சரி, ஏதோ ஒரு பண்பாடு இருக்கும். சமூகத்துக்குச் சமூகம் பண்பாட்டுக் கூறுகளில் சில வேறுபாடுகள் இருக்கும். இந்த வகையில் தொல்பழங்காலப் பண்பாடு, கற்காலப் பண்பாடு, இரும்புக் காலப் பண்பாடு, சங்க காலப் பண்பாடு என்று வேறுபடுத்திச் சொல்லலாம்.
பல நேரங்களில் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இணைத்துச் சொன்னாலும் இரண்டுக்கும் தனித்தனி பொருள் உண்டு. நாகரிகம் என்பதை பண்பாட்டு முதிர்ச்சி என்று ஒருவகையில் சொல்லலாம். ஆனால் தெளிவாக, நல்ல வரன்முறையோடு குறிப்பிட வேண்டுமானால், பலதொழில் செய்யும் மக்கள் கூடி வாழும் பெரிய ஊர்கள் அல்லது நகரங்கள் ஒரு சமூகம் கொண்டிருந்தாலே, அதன் பண்பாட்டை நாகரிகம் என்று சொல்ல இயலும். அங்கு பெரிய வீடுகள், முறையாக வகுக்கப் பட்ட தெருக்கள், கழிவுநீர்த் திட்டம், காவல் ஏற்பாடு போன்ற பொது வசதிகள், சுறுசுறுப்பான வணிக நடவடிக்கைகள், முதலியவை யெல்லாம் இருக்க வேண்டும் (காட்டு: சிந்து வெளி நாகரிகம்).
இந்த வகையில் மதுரைக் காஞ்சி விவரிக்கும் மதுரை நகரம், பட்டினப்பாலை மற்றும் சிலப்பதிகாரம் விவரிக்கும் காவிரிப்பூம்பட்டினம் ஆகியவை ஓரளவு இத்தகுதி பெற்ற பழம் நகரங்களாகச் சொல்லலாம். இடைக்காலத்தில் சோழர் காலத்தில் பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பல நகரங்கள் உருவாயின.
ஆக, நாம் இதுவரை அகழாய்வு செய்துள்ள பெரும்பாலான ஊர்கள், நகரம் என்ற தகுதி பெற்றுள்ளதா என்று பல கோணங்களிலும் ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். காட்டாக, கொடுமணல் அகழாய்வு பலபடப் புகழப் பட்டாலும் அது தொடர்ந்து, ஒரு முன்னூறு ஆண்டுகள், பளிங்கு போன்ற நவமணிக் கற்களைக் கொண்டு நகை மணிகள் செய்யும் ஒரு கைத்தொழில் கூடமாகவே இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். நல்ல வீடுகள், தெருக்கள் என்று எதுவும் அங்கு வெளிப்படவில்லை.
- எ.சுப்பராயலு