கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ராகுல சாங்கிருத்தியாயன் 1942 இல் ஹஜாராபாக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறைக்குள்ளேயே எழுதி முடித்த நூல்தான் 'வால்காவிலிருந்து கங்கை வரை'.

volga muthal gangai varai ncbhஇந்நூல் பதிப்பிக்கப்பட்டு வெளி வந்து குறுகிய காலத்திலேயே கண. முத்தையா அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அவரின், தமிழ்ப் புத்தகாலயம் மூலம் 1949இல் பதிப்பிக்கப்பட்டது. அந்நூல் இதுவரை 37 பதிப்புகள் வந்து பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளது.

கண. முத்தையா நேதாஜியின் ஐ.என்.ஏ வில் இருந்து கைதாகி 1945-46 இல் பர்மாவில் யுத்தக் கைதியாக சிறையிலிருந்தபோது ராகுல்ஜியிடம் கடிதம் மூலம் அனுமதி பெற்று இந்நூலை சிறைக்குள்ளேயே மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

இந்நூல் வெளிவந்த சில நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசிய அறிஞர் அண்ணா 'ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்' என்று இதனை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'பொதுவுடைமை தான் என்ன?' என்ற ராகுல்ஜியின் நூலையும் கண. முத்தையா தான் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் 1946 லேயே வெளியிடப்பட்டது.

இந்நூலும் தமிழ் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கிற்று. அப்போது சென்னை மாகாணத்தில் பிரகாசத்தின் தலைமையிலான ஆட்சி. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். அன்றைய ஆளுங் கட்சி உறுப்பினர் 'பொதுவுடைமைதான் என்ன?' என்ற நூலை மாகாண அரசு தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பேசினார். அதற்கு பதில் அளித்த அன்றைய கல்வியமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் 'அந்த நூல் வெளிவந்ததுமே நான் அதை வாங்கிப் படித்து விட்டேன். அது கட்சிப் பிரச்சார நூலல்ல; ஒரு நல்ல தத்துவ விளக்க நூல். தத்துவ விளக்க நூல்களை தடை செய்ய இயலாது' என்று கூறினார்.

செக் நாட்டுப் புரட்சியாளரும் ஊடக வியலாளருமான ஜூலியஸ் பூசிக் எழுதிய 'தூக்கு மேடைக் குறிப்புகள்' என்ற நூல் எம்.இஸ்மத் பாஷா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்ப் புத்தகாலயத்தால் 1949 இல் வெளியிடப்பட்டது.

இந்நூலும் இத்தகைய நூல்கள் அனைத்துமே அக்காலத்தில் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததோடு அடுத்தடுத்து பல பதிப்புகள் கண்டன.

'தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்' என்ற தலைப்பில் திறனாய்வாளர் ந.முருகேசபாண்டியன் எழுதிய நூல் 2010இல் வெளிவந்துள்ளது. அது அவரது முனைவர் பட்ட ஆய்வேடு. அதற்கு அணிந்துரை எழுதியுள்ள எழுத்தாளர் பிரபஞ்சன் "என் உலக இலக்கிய அறிவு, ஆங்கிலத்தால் வந்தது அன்று; மொழிபெயர்ப்பால் நேர்ந்ததே ஆகும். புதுவையில் ஆட்சியாளர்கள் பிரஞ்சியராய் இருந்தமை காரணமாக எனக்குப் பிரஞ்ச் இலக்கிய வாதிகளே முதல் படைப்பாளர்கள். எங்கள் ஊர் ரொமென் ரொலான் நூலகத்தில் இருந்த பிரஞ்ச் தமிழ் மொழியாக்க நூல்கள் என் வாசிப்பில் முதலிடம் பெற்றன. மாப்பசான், பால்சாக், தூமாஸ், ஆந்த்ரே மீத், ரஷ்ய இலக்கிய ஆசான்கள் செகாவ், கார்க்கி, தால்ஸ்தோய், தாஸ்தாவ்ஸ்கி, துர்கனேவ், சோகல், புஷ்கின், அலக்சி டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்று வளர்ந்து தாமஸ்மன், ஹெர்மென், ஹெஸ்ஸே எனப் படர்ந்து அமெரிக்க, பின் லத்தீன் அமெரிக்க ஆசிரியர்கள் என வளர்ந்த வாசிப்பு என்னுடையது. என் படைப்பால் சத்தான பகுதிகள் ஏதேனும் இருக்குமானால் அது, மேற்சொன்ன ஆசான்கள் தந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது ஆய்வு நூலில் தமிழில் வெளிவந்துள்ள உலக அளவிலான கீர்த்தி மிக்க பிறமொழி நூல்கள் பற்றி மிக விரிவாகவும் துல்லியமாகவும் விளக்கியுள்ளார் ந.முருகேச பாண்டியன்.

தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டில் ஆங்கில நூல்கள் எண்ணிக்கையால் முதலிடத்தைப் பெறுவதாகவும், ரஷ்ய மொழி நூல்கள் இரண்டாம் இடத்தைப் பெறுவதாகவும் பிரஞ்ச் மொழி மூன்றாம் இடத்தைப் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

'உலக மொழிகளில் எழுதப்பட்டுள்ள உன்னதமான இலக்கியப் படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும் போது, ஒரு வகையில் அவை தமிழ்ப் படைப்புகளாக மாறும் விந்தை நிகழுகின்றது.

தமிழில் வெளியாகும் அசலான படைப்புகளுக்கு எந்த வகையிலும் குறையாத இடத்தை மொழிபெயர்ப்புப் படைப்புகள் பெற்று வருகின்றன. என்றும் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வெளியாகியுள்ள தரமான நூல்கள், தகுதிமிக்க நூல்கள், தமிழ்ச் சமூகத்தை முன்னோக்கி இட்டுச் செல்லும் அறிவார்ந்த நூல்கள், மக்களை சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டுள்ள அரிய நூல்கள் அவை எந்த மொழியில் வெளிவந்திருந்தாலும் அவையனைத்தும் தமிழில் கொண்டுவர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழில் அசல் நூல்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. தனித்தன்மை மிக்க தமிழ் நூல்கள் உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இவற்றுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இருக்குமெனில் தமிழ் மண் அறிவுத்தளத்தில் செழித்தோங்கும் என்பதில் சந்தேகமில்லை. மொழிபெயர்ப்புக்கான நூல் தேர்வுகளும் அத்தகைய திசை நோக்கியதாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்புகளும் அதற்கேற்ற முழு தரத்தோடு விளங்க வேண்டும்.

அரசு, பல்கலைக்கழகங்கள், பதிப்பகங்கள் சமூக நலப்பொது அமைப்புகள், ஆர்வமும் ஈடுபாடும் மிக்க தனி நபர்கள் எனப் பன்முக மொழிபெயர்ப்பு முயற்சிகள் அவசியப்படுகின்றன.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு