தோழர் கண.குறிஞ்சி இவ்வாண்டில் (2023) தம் 'புதுமலர்' எனும் 'சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழின் நான்கிதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

தேவைப்படும் தருணங்களில் முகாமையான ஆளுமையர் தம் ஆவணச் சிறப்பிதழாக வெளிவரும் என்றும் குறித்தார். அவ்வாறே இதன் முதலிதழ் 'வள்ளலார் - 200 ஆவணச் சிறப்பிதழ்' ஆகவும்; நான்காமிதழ் 'கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுச் சிறப்பிதழ்' ஆகவும் ஆவணத் தொகைகளாக வெளியாகி உள்ளன. காலாண்டிதழ் விலை நூறு மேனி ஆண்டுக் கட்டணம் 400/- என முறைப்படுத்தப்பட்டு விட்டாலும் - பக்கங்கள் கூடுதலாகிப் போனாலும் ஒரே விலையாக வெளிக்கொணரப் படுவது பாராட்டத்தக்கதே.

முதலிதழைத் தவிர முறையே ஏனைப்பிற இதழ்களில் மொழி உரிமைப் போராளி பஞ்சாப் பேராசிரியர் ஜோகா சிங்,மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி திபேன்,பேரா. வீ.அரசு மூவருடனான குறிப்பிடத்தக்க செவ்விகள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு துறை சார் ஆளுமைகளுடன் அவர்தம் பட்டுப் பாடூன்றும் பணிகள் தெள்ளிதின் புலப்படுமாறு குறிஞ்சி இவற்றை மேற்கொண்டுள்ளது கவனங் கொள்ளத்தக்கது.

'மொழிச்சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்' எனும் ஜோகா சிங்கின் - குறிஞ்சி தமிழாக்கத்திலானநூல் புதுமலர் வெளியீடாக நான்கு பதிப்புகள் 3000 படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது . இதுவரையில் இதனையும் உள்ளடக்கி இந்நூல் 11 இந்திய மொழிகளில் அச்சு வடிவிலோ, மின்னூல் வடிவிலே கிடக்கின்றது. அவர் தொடங்கிய 'மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கத்தில் (CLEAR)' - இந்திய மொழிகள் பலவற்றின் சார்பிலும் பலர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் குறிஞ்சி, பழநி, மணி மணிவண்ணண், ஆழி செந்தில் நாதன் ஆகிய நால்வரும் முன்னோடிச் செயல்பாட்டாளர்களாக உள்ளனர். தம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி. செந்தில்நாதன் அதன் முகாமை அச்சென ஜோகா சிங் விதந்தோதிப் போற்றுகின்றார்.

நவீன இந்தியாவில் சமூகநீதி இயக்கங்களுக்குவழிகாட்டியாகவும்; கூட்டாட்சி இந்தியாவின் பாதுகாவலன் ஆகவும் ஜோகிந்தர் தமிழ்நாட்டை அடையாளப்படுத்துகின்றார். முறையே இவற்றிற்கான பெருமை பெரியார் அவர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் தான் போய்ச் சேருமெனப் போற்றுகின்றார். தம் பாடப்பயிற்சியில் தொல்காப்பியர் பங்களிப்புக் குறித்து அறிய நேர்ந்ததைப் பதிவு செய்கின்றார்.

வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாம் பொதுவாழ்விற்கு வரக்காரணமானவர் தமைத்தத்தெடுத்து ஆளாக்கிய அம்மை; வேடசந்தூரில் மேற்கொண்ட கம்யூன்வாழ்க்கை; தம் பியூசிஎல் அமைப்புப்பணி ,அத்தொடர்பிலான உண்மை காண் குழுக்களப்பணி, காவல்துறை வன்முறைக்கு எதிராகச் செயல்படக் காரணமான நிகழ்வு; தலைமறைவு வாழ்க்கையில் தப்பி ஓடுகையில் காவலர்களிடமிருந்து பழ.நெடுமாறனார் தமைப் பாதுகாத்தமை; மதுரையில் 'மக்கள் கண்காணிப்பகம்' உருவாகக் காரணமான வாய்ப்பு, அவ்வமைப்பு மிக வலுவாக மனித உரிமைக்களத்தில் பணியாற்ற நேர்ந்த சூழல்; காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கப்பாடுகள் குறித்த மனித உரிமைச் சமராவணமாக இச்செவ்வியை அவரிடமிருந்து வெளிக்கொணர வைத்து குறிஞ்சி காத்திரமாக ஆவணப்படுத்தி உள்ளார்.

இன்னும் அருட்பணி ஸ்டேன் சாமி உடனான அனுபவங்கள், அவர் காலமானபின் அவருடைய சாம்பல்பவனித் திட்டத்தை அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டாக முன்னெடுக்க முனைந்தமை, அதற்கூடான இடர்ப்பாடுகள்; எதிர்காலத் திட்டங்கள், திராவிட மாடல் அரசு மேற்கொள்ள வேண்டிய சித்திரவதைத் தடுப்புக்கான சிறப்புச்சட்டம்; உலகளாவிய மனித உரிமைக் கூட்டமைப்பில் உறுப்பாண்மை,தேசியமனித உரிமை ஆணையங்களைத் தலையீடு செய்வதற்கான - அரசு சாரா அமைப்புகளுக்கு ஆசிய அளவிலான ANNI எனுந் தள உருவாக்கம் ஆகியவை குறித்த பதிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கண்காணிப்பகத்தின் தலித் மனித உரிமைப் பணி குறித்து சந்திரபோஸ், தொல்.திருமா இருவரும் அதன் முன்னோடித் தன்மை குறித்தும் ,தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய பயிற்சிகளை வலியுறுத்தியும் பெரிதும் பாராட்டி உள்ளனர். கண.குறிஞ்சி களத்தூன்றி நிற்கும் மனித உரிமைப் போராளி என்பதனால் அவராலன்றி தகைசால் மனித உரிமைப் போராளி ஹென்றியின் வாணாட் பாடுகளை இத்துணைச் சிறப்பாக இத்தகுசெவ்வியாக வெளிக்கொணர்விக்க இயலாதுதானே?

பேரா.வீ.அரசு உடனான செவ்வி அவருடைய பல்துறைப்பாடுகள் யாவற்றையும் ஒன்றுவிடாமல் துருவித்துருவி சாவி நாம் மலைக்கும் வண்ணம் வெகு சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளது. அவையாவன: அவருடைய பல்கலைக்கழகப் பேராசிரியராகத் தனித்துவமான பணிகள்; தொகுப்பாசிரியப் பணிகள்; ஈழப்போராட்டப் பங்களிப்புகள்; சற்றொப்ப இருபத்தையாயிலரம் பிரதிகளுடன் பெருஞ் சேகரிப்பான 'கல்மரம்' இல்ல நூலகம்; பல்வேறு ஆளுமை குறித்த அவருடைய பார்வைகள்; இயக்கங்கள் பலவற்றையும் குறித்த அவரது பதிவுகள் எனப் பன்முகமான விரிவான செவ்வியை நிகழ்த்தியுள்ளார் குறிஞ்சி.

இம்மூன்று பேட்டிகளுமே நேர்காணல் என்பதாக அல்லாமல் செவ்வி தலைப்பட்ட உரையாடலாக வாய்த்துள்ளன எனிலது மிகையாகாது. முகாமையான ஆளுமையர் குறித்த ஆவணச் சிறப்பிதழ் எனும் வகையில் ஏலவே குறிப்பிட்ட வள்ளலார், தமிழ்ஒளி குறித்த ஆவணச் சிறப்பிதழ்கள் தேர்ந்த தெரிவும் வெளிப்பாடுகளுமாகக் காலத்தின் தேவையாக முன்னெடுக்கப்பட வேண்டிய வண்ணம் அருமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 'கடைவிரித்தேன் பொருள் கொள்வாரில்லை' எனக் கடைகட்டிக் கொண்டதாக ஒரு கூற்று இராமலிங்கக்கூற்றாகப் பலராலும் பலகாலும் சுட்டப்பட்டாலும்.எனக்கு எட்டிய மட்டில் அது அவர் கூற்றாகக்காணக் கிடைக்கவில்லை. இதுவும் ஏலவே சிலராலும் குறிப்பிடப்பட்ட ஒன்றே. கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிகெனவும்,அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்கெனவும் அரசியலைப் பேசிநின்றவர் அன்றோ அவர்? இற்றைச் சூழலில் இராமலிங்கரை எவ்வாறெல்லாம் நாம் வாசிக்க வேண்டும்,எவ்வாறு எல்லாம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த வல்லனவாக அவர் குறித்த ஆவணத் தொகுப்பு அமைந்தியல்கின்றது. மட்டுமல்லாமல் அவர் படைப்புகள் குறித்த பதிப்பரசியல்; அவரை எவ்வாறெல்லாம் இருட்டடித்தும் , திசைதிருப்பியும் நிகழ்த்தப்பட்ட அரசியலையும் கட்டுரைகள் அருமையாக எடுத்துரைக்கக் காணலாம்.மபொசியின் திருகுதாளங்கள், மு.அருணாசலத்தின் உண்மைக்குப் புறம்பான மதநோக்கு சைவசமய மரபுக்குள் வள்ளலாரைக் கட்டமைக்கும் அரசியல் ஆகியனவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. வடலூரும் ஈரோடும் சங்கமிக்கும் சங்குமுகங்கள் குறித்தும் எம்மனோர் முன்வைத்துள்ளோம். காவியை மறுத்த வெண்மைத் தெரிவின் உட்கிடையும் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றிய முன்னோடித் தேசியச் செல்நெறியும் சுட்டியே காட்டப்பட்டுள்ளது. தொகு மொத்தமாக இற்றைப்படுத்தி நோக்கையில் காவி தர்பார் பாசிசச் சூழலில் வள்ளலாரியத்தின் இன்றியமையாத் தேவை தெற்றெனத் துலங்குமாறு அதன் ஆவணச் சிறப்பிதழ் சிறப்பாக வெளிப்போந்துள்ளது.

வாழ்ந்த போதும் உரிய ஏற்பு வாய்க்கப் பெறாமலேயே போனது மட்டுமல்லாமல் ; வாணாட் காலத்துக்குப் பின்னருங்கூட அவருக்கான இடத்தை அடையொணாமல் போன கெடுவாய்ப்பிற்கு ஆளான மகத்தான ஆளுமையே தமிழ்ஒளி.அவருக்கொரு பாஸ்வெல்லாய் தனிஒருவராய்த் தம் வாணாட்பாடாக அவரைப் பதிப்பித்தே முன்னிறுத்தியவர் செ.து.சஞ்சீவி தாம். தமிழ்ச் சூழலில் முப்பெருங்கவிஞர்கள் எனப் பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என அவரவர் இயக்கப் பின்புலத்தோடு ஒரு முறைவைப்பை முன்மொழிந்து தம் நூலாலும் ,கட்டுரைகளாலும், பேச்சுக்கூடாகவும் தொடர்ந்து வலியுறுத்தியவர் பேரா.வீ.அரசு தாம்.தமிழ்ஓளி நூற்றாண்டு விழாவை முன்னெடுத்த அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமே. அதன் சார்பில் ஒரு சிறப்புமலரையும் வெளிக்கொணர்ந்துள்ளது. மார்க்சியச் செயற்பாட்டாளர்களான ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் எனும் வரிசையில் தமிழ்ஒளியை அறிமுகப்படுத்துவார் வீ.அரசு. இடதுசாரி மேடைப்பாடல் மரபில் ஜீவா,வெ.நா.திருமூர்த்தி வரிசையில் தமிழ்ஒளியை அடையாளப்படுத்துவார். மேலும் தன்மான இயக்கக் கருத்தியலை இடதுசாரி அமைப்புச் செயற்பாடுகளுக்கு ஊடாகவும் நடைமுறைப்படுத்தியவர் ஆக அவரை இனங்காண்பார். இடதுசாரி/ திராவிட / தமிழியக்க முன்னோடியாகத் தமிழ்ஒளியை இனங்காணும் ஜமாலன் இன்குலாப் கூட இம்மரபில் கிளைத்தவர் என்பார். அவரது தமிழியல் சார் ஆய்வுகளை வாசிக்கையில் ஆழ்ந்த தமிழறிவும், அதன் உருவாக்கமான தமிழியல் சிந்தனையின் நவீனத்தையும் எத்தகையதென அறிய முடிந்ததென்பார். தமிழ்ஒளியின் கவிதை, காவியங்கள் என்பதற்கு அப்பாலாக சிறுகதைகள், புலமைத்துவம், திறனாய்வு, ஆராய்ச்சி ,சிறார் பாடல்கள், நாடகப் பிரதிகள் குறித்தும் வெவ்வேறு கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. பாரதிதாசன் அவர்களின் சமாந்தரக் கவிஞர்களை இனங்கண்டு எடுத்துரைத்த பரிமாணம் விதந்தோதிக் காண வேண்டியதாகும். இத்தொடர்பில் முன்னோடியான பாரதியை மட்டுமன்றி அவர் தமிழ் ஒளி, சுரதா, பட்டுக்கோட்டையார், பொன்னடியான், ஈரோடு தமிழன்பன் என்றவர் மாணவர் பட்டியல் நீளும். முடியரசன்,வாணிதாசன் இருவரும் அவரை நகலெடுத்தோரே. எல்லாவகையாலும் பாரதிதாசப் பரம்பரையில் தலைமாணக்கர் தமிழ் ஒளியே. கவித்துவப் பாரம்பரியத்தில் மட்டுமல்ல புலமைத்துவப் பாரம்பரியத்திலும் கூடத்தான் என்பதை இச்சிறப்பிதழும் குறிப்பாக அரசின்பதிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. இம்மலர் மூலம் காணக்கிடைத்த இன்னுமொரு புதிய திறப்பு தொ.மு.சி, புதுமைப்பித்தன் குறித்த தமிழ் ஓளியின் மதிப்பீடுகளாகும். தொ.மு.சி, புதுமைப்பித்தன் போலவே வசன கவிதையை தமிழ்ஒளியும் ஏற்கவில்லை. இன்னும் தொமுசியைப் போலன்றி புதுமைப்பித்தன் கவிதைகளையே தமிழ்ஓளி ஏற்கவில்லை. மாறாக பித்தனின் 'சாபவிமோசனம்' கதையை அகல்யை குறித்த புனைவுகளில் சிறப்பானதாகக் கொண்டாடுகின்றார். இந்திரன் ,இந்திர தேசம் குறித்த தொன்ம வகைமையில் ஆரியஎதிர்ப்பு தமிழின் ஆழ்தள உளவியலாக அமைந்தியல்கின்றது என்னும் ஜமாலன் அதனைத் தொன்மக்கதைகளைத் தலைகீழாக்கும் நவீனக் கோட்பாட்டின் மொழிவிளையாட்டாக எடுத்துரைப்பார். தமிழின் மூல முதல் நூலான 'ஐந்திர ' நூலை அடிப்படையாகக் கொண்டு இந்திரன் குறித்த கருத்தியலை வளர்த்தெடுப்பதாகத் தொடர்வார்.

1948 இல் வெளியான தொமுசியின் 'இலக்கிய விமர்சனமே ' கலை இலக்கியம் தலைமயங்கி முயங்கி வெளியான தமிழின் முதல் நவீனத் திறனாய்வு நூலாகும்.இந்நூல் குறித்து மிக விரிவான எதிர்மறைத் திறனாய்வைத் தமிழ்ஒளி முன்வைத்துள்ளது குறித்தும் குறிப்பிடுகின்றார் அரசு. அதன் மீதான வாசிப்பிற்கு அப்புறமே மேலும் விவாதிக்கத்தக்கதென்பதால் இங்கே அதுகுறித்து இதற்குமேல் பேச இடமில்லை. ஜமாலன் முறையான தமிழ் வாசிப்பு தமக்கில்லாதாலேயே தமிழ்ஒளியின் முன்னோடிப் பங்களிப்பைத் தம்மால் இனங்காண இயலாமற் போயிற்றென ஒரு தன்னாய்வை முன்வைப்பார்.மாறாக இதில் முரண்தொனி யாதெனில் தமிழ்ஒளி பாரதிதாசன் தமிழ்ஒளியை முறையாகத் தமிழ் பயில வற்புறுத்திக் கரந்தையில் சேர்ப்பித்தும் தமிழ்ஒளி அதனைத் தவிர்த்து வெளியேறினார் என்பதே. அங்கவர்மீது ஆதிக்கசாதியினர் அடக்குமுறையால் மனநொந்தவர் வெளியேற நேர்ந்தபோது பாரதிதாசன் பாதுகாப்பரண் ஏற்படுத்தியும் தமிழ்ப்ப­யில்வின் பாடத்திட்ட முறைமையையே தமிழ்ஒளி புறக்கணித்து வெளியேற நேர்ந்தது என்பது கவனங்கூர வேண்டியதாகும்.

இவை தவிர மூன்றாமிதழ் தலித் ஆளுமமையர் சிறப்பிதழாக வாய்த்துள்ளது மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரையிலான சோசலிச அனுபவங்கள்; அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் குறித்த கட்டுரைகள் ; ஆவணங்களில் அடித்தளமக்கள், சாதி ஒழிப்பு வரலாற்றுக் குறிப்புகள் ; ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. விரித்தெழுத இடமில்லை.இன்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைந்த பரப்புரை குறித்த கட்டுரையின் தமிழாக்கம்; என் பவளவிழா குறித்த பதிவுகள், என் மெய்­யியல் சார்ந்த உரையாடல்கள் மீதான கட்டுரை ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.'புதுமலர்' காலாண்டிதழ் முதலாண்டின் முச்செவ்விகள், மூன்று ஆவணச்சிறப்பிதழ்களுக்கு ஊடாகவும் புதுப்புதுத் திறப்புகள் வாயிலாகப் புதுவெளிச்சம் பாய்ச்சி உள்ளது.

- பொதிகைச்சித்தர்

**

புதுமலர் இதழ் (அக்டோபர்&திசம்பர் 2003 ) சிறப்பாக வந்துள்ளது. துரை.மதிவாணன் அய்யாவின் பெரியவர் தொகுப்பு கவனப்படுத்தியமைக்குப் புதுமலர் இதழுக்கு மிக்க நன்றி. கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் முழுப் பரிணாமம் இந்த இதழ் வழியாக வாசித்துத் தெரிந்து கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு இதழும் சிறப்பான கவனத்துடன் வருகிறது

- ரெங்கைய்யா முருகன்

***

ஜெயகாந்தன் வயது 13. தமிழ் ஒளியின் வயது 23. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு இவர்களது நட்பு தொடங்கியது. அதன்பின் ஒன்பது ஆண்டுகள் இருவரும் இணைபிரியாத் தோழர்கள்.

தமிழ் ஒளியின் பேதைமையாலும், ஜெயகாந்தன் தனது சகிப்பின்மையாலும் தமிழ் ஒளியின் நட்பைத் துண்டித்துக் கொண்டதாக ஜே.கே. தனது அனுபவங்களில் எழுதியிருக்கிறார்.

இப்போது ஆராய்கையில் இருவரும் எதிரெதிர் தத்துவங்களைத் தம் வாழ்வின் பாதையாக ஏற்றுக் கொண்டவர்கள் என்று தெரிகிறது.

அநீதிகளை அடித்தளமாகக் கொண்ட சனாதனத்தையும், அதன் பிள்ளையான சாதியத்தையும் எதிர்ப்பதே தமிழ் ஒளியின் தாரக மந்திரம்.

இன்றும் ஆதிக்கம் செய்யும் சனாதனத்தையும், சாதியையும் தம் இறுதிவரை தூக்கிப் பிடித்து வாழ்ந்தார் ஜெயகாந்தன்.தமிழ் ஒளியின் ‘வீராயி' காவியத்தை நான் ஏற்கனவே படித்து வியந்திருக்கிறேன்.

தமிழ் ஒளியைப் படிக்கவே இந்தச் சிறப்பிதழை உடனே வாங்கினேன். தமிழ் ஒளிக்குச் செய்த சீரிய நன்றிக்கடன்களில் இது முதன்மையானது.பேராசிரியர் வீ.அரசு அவர்களின் சிறப்பான பேட்டி என்னை வெகுவாகக் கவர்ந்தது. இந்த அரிதினும் அரிதான புத்தகத்தை வாங்க Gana Kurinji 94433 07681 அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

- கவுதமன், முகநூல் பதிவு

***

தோழர் கண.குறிஞ்சி அவர்களை ஆசிரியராக கொண்டு அவர் நடத்தும் புதுமலர் இதழைத் தமிழ் உலகம் கட்டாயம் போற்றி வளர்த்துப் பாதுகாக்க வேண்டும்.

கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் சிறப்பிதழாக மலர்ந்துள்ள நான்காவது இதழின் உள்ளே தமிழ்ஒளியைக் காண்பதற்கு முன்பு - பேரா.வீ.அரசு அவர்களின் ஒரு விரிவான செவ்வியையும் முன்விருந்தாக நமக்குப் புதுமலர் படைக்கிறது.

பேரா.வீ அரசு அவர்களின் வாழ்க்கை / மணவாழ்வு / கல்வி நூலகம் உருவாக்கம் / அதில் உள்ள நேர்த்தி இவைகளுக்கு அப்பால் துறைதோறும் அவர்பெற்றுள்ள அறிவுத் தொடர்புகள் - இலக்கியம், இலக்கணம், படைப்பாளர்கள், அவர்களது அரசியல் சமூகக் கண்ணோட்டத்தை மார்க்சிய தேடல்வழியில் நின்று இவர் (வீ.அரசு) பார்க்கும் நோக்கு திறனாய்வு, புதுமைப்பித்தன், பேரா.கேசவன், பேரா.கவிஞர், இன்குலாப், வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன் எனப் பலரையும் மதிப்பீடு செய்யும் முறைமை என்னை வெகுவாக வியக்க வைத்துவிட்டது.

பேருக்கு ஆசிரியர்களாக பலரும்இருக்கிற சமூகத்தில், இவர் தனித்த, ஓர் இயங்கும் பேராசிரியராக விளங்கி வருகிறார்.திராவிடம், மார்க்சியம், அம்பேத்கர் எனத் தமிழ்ச்சமூக மாற்றுக் கருத்தோட்டங்களின் துலக்கங்களை தெள்ளிதின் காய்தல் உவத்தலின்றி பதிவிடுகிறார். கவிஞர் தமிழ் ஒளி குறித்துக் காத்திரமான செய்திகளைத் தருகிறார்.

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் நேர்காணலுக்குப் பொருத்தமும் தகுதியும் வாய்ந்த ஒருவரைத் தேர்வு செய்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாம் இந்த நேர்காணலில் தோழர் வீ.அரசுவை மட்டும் பார்க்கவில்லை;அவருடைய நேர்காணல் செய்திகள் ஆவணங்கள் வழியாக தமிழ்ச் சமுக மானுடம் இலக்கியம் இலக்கணம் தொல்பொருள் அரசியல் சமூக வரலாறு அனைத்தையும் அறிந்து கொள்ளும் காலக் கண்ணாடியாக வரலாற்றுப் பெட்டகமாக பேழையாக பேராசிரியர் தோழர் வீ.அரசின் நேர்காணல் அமைந்துள்ளது தமிழுக்குக் கிடைத்த பெரும்பேறு

- அரங்க. குணசேகரன், பட்டுக்கோட்டை

***

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டில் அவரை மேலும் வாசிக்கத் தூண்டும் அழகிய பதிப்பாகக் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளிவந்துள்ளது..ஒரு வரலாற்று பணியைப் "புதுமலர் பதிப்பகம்" செய்துள்ளது..

புதுமலர் ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

பேராசிரியர் வீ. அரசு அவர்களுடனான நேர்த்தியான நேர்காணல் தொடங்கி அனைத்துக் கட்டுரைகளும் பல்வேறு ஆக்கபூர்வமான செய்திகளுடன் அமைந்துள்ளது.

தலையங்கம், அரசிற்கும் சமூகத்திற்கும் ஒரு திசைகாட்டி.

தமிழ்ஒளி படைப்புகளைப் பாடநூல் கழகம் வெளியிட வைக்கப்பட்ட கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்.

பேராசிரியர் வீ. அரசு தொடங்கி சதீஷ் குமார் வரை இத்தொகுப்பில் எழுதியுள்ள கட்டுரைகள், கவிஞர் தமிழ்ஒளியின் தாகத்தையும், தவிப்பையும் உணர்ந்திட உதவுகிறது.. தங்களின் பொறுமையே இப்படைப்பின் வெற்றி

- பிரின்சு கஜேந்திர பாபு, சென்னை.