அமைதியாக, அதே சமயம் அழுத்தமாக இதழியல் பணியைச் செவ்வனே செய்து வருபவர்களில் இன்றைய தினம் ஈரோட்டுத் தோழர் கண.குறிஞ்சி அவர்களுக்கு ஈடு இணை இல்லை.

ஆண்டுக்கு நான்கென, காலாண்டு இதழாக அவர் கொண்டு வரும் புதுமலர் என்ற சமூக இலக்கிய இதழ் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களாகும்.

சமூகத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்து மறைந்தவர்களை மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வள்ளலார், வ.உ.சி, கவிஞர் தமிழ் ஒளி ஆகியோருக்கு கொண்டு வந்த சிறப்பிதழ்களே சாட்சி! இது மட்டுமின்றி வாழும் அறிஞர்கள், சான்றோர்கள், சமூகத்திற்கு உழைப்பவர்கள் போன்றவர்களை தேடிக் கண்டடைந்து வாழும் போதே கவனப்படுத்துகிறார்.

இந்த வகையில் சென்ற இதழில் ஹென்றி டிபேன் அவர்களையும், தற்போதைய இதழில் பேராசிரியர் வீ.அரசு அவர்களையும் விரிவாக நேர்காணல் செய்து அவர்களின் தமிழ்ச் சமூகத்திற்கான பங்களிப்பை ஆவணப்படுத்தி உள்ளார்.

 ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் மேற்படி இருவரையும் நான் கடந்த 30 அண்டுகளுக்கும் மேலாக அறிவேன் என்றாலும், இவர்களைக் குறித்த முழுமையான பிம்பம் எனக்கு புதுமலர் காலாண்டிதழ் மூலமே தெரிய வந்தது. அடடா, நானே மேற்படி சான்றோர்களைச் சரியாக உணராமல் இருந்துள்ளேனே..என குற்றவுணர்வு ஏற்பட்டது. ஆம், நாம் கற்க, கற்கத்தான் நாம் தெரிந்து வைத்திருப்பது மிகக் குறைவு! தெரிய வேண்டியது மிக அதிகம் எனப் புரிய வருகிறது.

வள்ளலார் ஆவணச் சிறப்பிதழில் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, பொதிகை சித்தர், கண.குறிஞ்சி, பொழிலன், விடுதலை ராஜேந்திரன், ரெங்கையா முருகன், முனைவர் தேவேந்திரன், கு.கலைவாணன், ஐ.சிவக்குமார் ஆகிய பத்து ஆளுமைகள் விதவிதமாக வள்ளலாரை ஆய்வு செய்திருந்தனர்.

 தற்போதைய தமிழ்ஒளி சிறப்பிதழில் பேராசிரியர் வீ.அரசு, ஈரோடு தமிழன்பன், தோழர் தியாகு, ச.தமிழ்ச் செல்வன், பேராசிரியர் பஞ்சாங்கம், மயிலை பாலு, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, கண.குறிஞ்சி, ஜமாலன், சதீஷ்குமார் ஆகிய பத்து ஆளுமைகள் கவிஞர் தமிழ்ஒளியை ஒவ்வொரு தலைப்பில் ஆழமாக ஆய்வு செய்துள்ளனர்! கவிஞர் தமிழ்ஒளி குறித்த சரியான புரிதலுக்கு வர இந்தக் கட்டுரைகள் நமக்கு உதவுகின்றன.

இப்படியாக அந்தந்த இதழ்களின் பேசுபடு பொருளுக்கு ஏற்றத் தகுந்த ஆளுமைகளை கண்டடைவது மட்டுமல்ல, அவர்களை எழுத வைத்து கட்டுரைகள் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. தோழர் கண.குறிஞ்சி மீது இப்படியானவர்கள் வைத்துள்ள மரியாதையும், அன்பும் இதில் வெளிப்படுகிறது. எனினும், பல ஆளுமைகளிடம் கட்டுரைகள் பெறும் போது தொடர் நினைவூட்டலின்றி அவற்றை சுலபத்தில் வாங்க முடியாது. ஆகவே, காலாண்டு இடைவெளியில் இவை அனைத்தும் சாத்தியமாகிறது என நினைக்கிறேன்.

தமிழ் மற்றும் சமூகத் தளத்தில் இயங்கும் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், இதழியலளர்கள் தவறாமல் படிக்க வேண்டிய இதழ் புதுமலர். தொடர்ந்து இந்த காலாண்டிதழ்களை வாசித்து வரும் யாரும் இங்கே நான் குறிப்பிட்டவை எதுவுமே மிகைபடக் கிடையாது என உணர முடியும். நூலகங்கள் நடத்துபவர்கள் இந்த இதழைத் தவறாமல் வாங்கி பாதுகாக்க வேண்டும்.

- சாவித்திரி கண்ணன், அறம் இணைய இதழ்