“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்பதும் ‘கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை’ என்பதும் நம் வழக்கத்தில் உள்ள சொல்லாடல்கள். இந்த இரு பொருள் பொதிந்த சொல்லாடல்களுக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, எழுத்தாளர் அண்டனூர் சுரா தற்பொழுது எழுதி வெளியிட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின், 'மண் மக்கள் வரலாறு’ பற்றி பல்வேறு வரலாற்றாய்வுச் செய்திகள் அடங்கிய அரிய நூலாகும்.

puthukkottai muthal thoguthiபுதுக்கோட்டை பற்றி பல்வேறு சமயங்களில் கடந்த காலங்களில் பல படைப்பாளிகள் நூல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்நூல் தனித்துவமான ஒரு பெரும் முயற்சியே ஆகும். பல பரிசுகளும் பாராட்டுக்களும் வெகுமதிகளும் பெற்றுக் கொண்டாடப்பெற்று வரும் நல்ல புதினங்களையும், தற்காலச் சமூகப் போக்குகளைப் படம்பிடித்துக் காட்டும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துவரும் இந்நூலாசிரியர், தாம் பிறந்த மண்ணான புதுக்கோட்டை பற்றி, இவ்வளவு விரிவான ஒரு வரலாற்று நூலை ‘புதுக்கோட்டையின் மீது நான் கொண்டிருக்கும் அன்பே இந்நூல்’ என்ற புளகாங்கிதத்தோடு வெளியிட்டுள்ளார். இன்னும் புதுக்கோட்டை பற்றி எழுத நிறைய உள்ளது என்றும் கோடிட்டுக் காட்டி புதுக்கோட்டையின் தனித்துவ வரலாற்றை வளப்படுத்தி, செழுமைப்படுத்துகிறார்.

ஒரு ஆசிரியருக்கு மிகப்பரந்த சமூகப் பார்வை வேண்டும் என்பதை, அண்டனூர் குக்கிராமத்தில் ஒரு மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சு.இராஜமாணிக்கம் என்ற எளிய, அமைதியான இளைஞர், தமது எழுத்துப் பேராற்றலால் தமிழ் படைப்புலகில் மிகத்திடமாக மெய்ப்பித்து வருகிறார். தமது கற்பனைத் திறனை எதார்த்த சமூக வாழ்வோடு பொருத்திப் புதினங்களும், சிறு கதைகளும், தொடர்கதைகளும் எழுதுவது என்பது ஒரு கூர்மையான படைப்பாற்றல் கோணம். ஆனால், இன்றையப் பொதுப் பார்வைக்கான ஆய்வு நோக்கிலமைந்த கட்டுரைகளையும் தம்மால் படைக்க முடியும் என்பதை இந்நூலின் மூலம் சுரா நூற்றுக்குநூறு மெய்ப்பித்துள்ளார் என்றே மதிப்பிட வேண்டும். இதுபோன்று, சில மாத இதழ்களிலும் தமது கருத்தாழமிக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் என்று அறிய முடிகிறது. இதற்கு முன்பே, பல்வேறு சொல்லாய்வுகள் பற்றி ஒரு சிறந்த நூலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புதுக்கோட்டை மாவட்ட ஆய்வு நூல், இம்மாவட்டம் பற்றிய சமூக வரலாற்றுச் செய்திகளையும், பழைய சமஸ்தான நிர்வாக வரலாற்றுச் செய்திகளையும் உள்ளடக்கி பழமையையும் புதுமையையும் ஒருங்கிணைத்து இருபத்து நான்கு வெவ்வேறு தலைப்புகளிலான விரிவான பகுதிகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 280 பக்கங்களைக் கொண்ட இந்நூல், மிகப் பொருத்தமாக, இன்றைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகமான பழைய மன்னராட்சியின் கம்பீரமான அரண்மனைத் தோற்றத்தை தனது முகப்புப் படமாகக் கொண்டுள்ளது.

280 பக்கங்களும் சற்றும் சோடை போகாமல், சிறுசிறு வாங்கியங்களில் தகுந்த சொல்லாற்றலோடு, ஒரு நிறைந்த செய்திக் களஞ்சியமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நூல் செய்திகள் அனைத்தும் பழைய கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புகழ்பெற்ற ஞானாலயா நூலகம் உள்ளிட்ட பல்வேறு நூலக ஆவணங்கள், நூல்கள் மற்றும் இயல்பாகவே தகவமைந்துள்ள பட்டறிவு ஆகியவற்றின் மூலமாகச் சேகரித்த தரவுகளைக் கொண்டே நூலை முழுமை அடையச் செய்துள்ளார். தமது உள்ளார்ந்த ஆசிரியர் பணிக்கு இடையே இவ்வளவு தேடலும், வாசிப்பும், ஆய்வும் ஒருங்கிணைந்த பார்வைதான் நூலாசிரியருக்குப் பக்கபலமாக இருந்துள்ளது. என்பது நன்கு புலப்படுகிறது.

இருபத்து நான்கு தலைப்புகளும் எண்ணிலடங்காச் செய்திகளைக் கொண்டுள்ளன என்றாலும், மாவட்டத்தின் பகுதிகள் வாரியாகவோ அல்லது வரலாற்று அடிப்படையிலோ (நாடு சுதந்திரமடைவதற்கு முற்பட்ட காலம், இடைப்பட்ட காலம், சமஸ்தான தனியரசுக் காலம், திருச்சி மாவட்டத்தில் இருந்த காலம், தனி மாவட்ட நிர்வாகக் காலம்) ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை அடிப்படையில் நூல் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை என்பது தெரிகிறது.

எடுத்தவுடன், 1974ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உதயமானதை ஒரு நேரடி ஒளிபரப்பு போன்று தொடங்கி, உடனே அதற்கடுத்து ஒருங்கிணைந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் நின்று முதுபெருந்தோழர் ஆர்.உமாநாத் முப்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும், தொடர்ந்து புதுக்கோட்டை தனி மாவட்டமாக ஆக வேண்டிய எஸ்.பி.சீனிவாசன் அறிக்கை மற்றும் தனி புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சியர் மா.மயில்வாகனன் இ.ஆ.ப ஆனது முதலான, வரலாற்றுச் செய்திகளை சுவை குன்றாமல் அடுக்கியுள்ளார். நூலாசிரியர் சுராவின் ஆழ்ந்தகன்ற இதழியல் பார்வைக்கு எடுத்துக்காட்டாக, தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ‘சக்தி இதழ்’ வை.கோவிந்தன் அவர்களது, ‘புதுக்கோட்டையில் புது சகாப்தம்’ என்று 1948 ஏப்ரல் இதழில் எழுதிய முழுத் தலையங்கத்தையும் பொருத்தமாகக் கொண்டுவந்து இணைத்து தனது நூலை மெருகேற்றியதுதான்.

இந்நூலின் உள்ளடக்கப் பகுப்பு என்று பார்க்கும்பொழுது, முதலில் கூறியதுபோல் வரலாற்று நிகழ்வுகள் வரிசைக் கிரமமாக நிகழ்வுகள் அடுக்கப்படுவது என்று வைத்துக் கொண்டால் அது நூல் வாசிப்பும், வாசிப்போர் உள்வாங்கிக் கொள்ளும் மன இயல்பும் ஒன்றிணைந்து துலக்கமாக அமையாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, நிகழ்வுகள் கடந்த காலத்தையும் தற்காலத்தையும் அடுத்தடுத்து கலந்து எழுதி வாசிப்போர் அலுப்புத்தட்டாமல் மன ஈடுபாடுகொள்ளும் வகையில் நூலாசிரியர் பின்பற்றிய முறையே சரியாக இருக்கலாம்.

இவ்வாறு வரலாறு முன்னுக்குப் பின்னாகப் பதிவிடப்படும்போது, 1962இல் நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் ஆர். உமாநாத் பற்றிய பதிவு முன்பும் (பக் - 15), அதற்கு முன்னமே 1952இல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான கொப்பம்பட்டி க.முத்துச்சாமி வல்லத்தரசு பி.ஏ., பி.எல். பற்றிய பதிவு அதற்குப் பின்பும் (பக் - 59) இடம் பெற்றுள்ளது. வாசிப்போர் மத்தியில் சரியான புரிதலை உண்டாக்காமல் போய் விடலாம்.

நூலின் உச்சபட்ச சிறப்பு என்னவென்றால், தக்க இடங்களில் இடம் பெற வேண்டிய ஏராளமான தொடர்புடைய படங்கள், ஆவணங்களின் ஒளியச்சு நகல்கள், பட்டியல்கள், ஆங்காங்கு இடம்பெற்றுள்ள சொல்லாய்வு நுட்பங்கள், அதற்குத்தகுந்த எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கிடும் பொருளுக்குத் தக்கபடியான உள்தலைப்புக்கள் ஆகியனவையே ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மரங்களின் பெயர்களால் உருவான ஊர்ப் பெயர் பட்டியல் (பக் - 131, 132), புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறும் பழமையான நாட்டு அடிப்படையிலான பதிவுப் பட்டியல் (பக் - 156, 157), கோவில்கள் தொடர்புடைய தெய்வ வழிபாட்டுப் பெயர்ப் பட்டியல் (பக் - 133, 134), புதுக்கோட்டை மாவட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பில் உள்ள புள்ளி விவரங்கள் (பக் - 83), ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கான அடைமொழிகளின் நீண்ட பட்டியல் (பக் - 95) புதுக்கோட்டை தொடர்புடைய ஆறுகளின் பட்டியல், காவிரி கிளை ஆறுகளின் பட்டியல் (பக் - 169) மற்றும் ஆற்றுப் போக்குத் தூரங்கள், கல்லணைக் கால்வாயிலிருந்து பிரியும் முக்கிய கிளை வாய்க்கால்களின் பட்டியல் (பக் - 173) ஆகிய பெருமுயற்சியிலான புள்ளி விவரங்கள் ஆகியவை நூலை வாசிப்போருக்கான அபரிமிதமான செய்திகளை உள்வாங்கும் நேர்த்திக்கானது மட்டுமின்றி நூலாசிரியரது படைப்பாற்றல் தொடர்பான நேர்மை குன்றாத பக்குவத்தையும் எடுத்துரைக்கின்றன. ஆனால், சாதிகளற்ற சமதர்ம சமுதாயப் போக்கில் சிந்தனைகளும் வாழ்வு முறைகளும் மேலோங்கி நிற்கும் இக்காலத்தில் மீண்டும் பழைய காலத்து சாதிகள் பற்றிய இவ்வளவு விரிவான அலசலும், ஆய்வும், பட்டியல்களும் புதுக்கோட்டை மாவட்ட பல்வகைப்பட்ட மக்களின் மனங்களில் மீண்டும் சில நெருடல்களை உருவாக்குமோ என்றும் சிந்திக்க வாய்ப்புகள் உண்டு. அதேசமயம், நூலாசிரியரது இவ்வளவு ஆழ்ந்தகன்ற தேடல் வேட்கை வாசகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதும் உண்மை.

ஒரு கணிதப் பட்டதாரியான நூலாசிரியர் சுராவின் ஆழமான தமிழ் இலக்கிய அறிவும், பரந்த வாசிப்பின் நேசிப்பும், முதுபெரும் படைப்பாளிகளது விவரங்களைப் பதிவிடும் பேரார்வமும், பழமையான செய்யுள்கள், சங்க இலக்கிய மேற்கோள்கள், இதழியல் வரலாறு, பதிப்பகங்களின் விவரங்கள் ஆகியன அவரது வயதுக்கு மிஞ்சிய காத்திரமான உற்றுநோக்கலையும், அவற்றை வாசிப்போர்க்குத் தகுந்த முறையில் தெளிவாக வெளிப்படுத்தும் நுட்பதிட்பங்களும் நூல் முழுதும் சிறப்பாகப் பளிச்சிடுகின்றன. நூலாசிரியர் ஆங்காங்கு எடுத்தாளும் பொருத்தமான இலக்கிய, வரலாற்று, அரசியல், படைப்புலக எடுத்துக்காட்டுகள் அவற்றைப் பதிவிடும் விதம் ஆகியவை மேலும் நூலுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.

மன்னராட்சியை எதிர்த்துப் போராடிய தோழர் முத்துச்சாமி வல்லத்தரசின் நாடு கடத்தலைக் கண்டித்து 1939இல் பாவேந்தர் பாரதிதாசன் ‘புதுவை முரசில்’ எழுதிய சமூக சீர்திருத்த முன்னெடுப்பை வலியுறுத்தும் இருபத்து நான்கு வரி கவிதையைக் கண்டுபிடித்து நூலின் 57ஆம் பக்கம் சேர்த்துள்ளார் நூலாசிரியர். இதேபோல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் முசோலினி சர்வாதிகார வீழ்ச்சி பற்றி, கிள்ளுக்கோட்டை தலைமை ஆசிரியர் அப்பொழுது எழுதிய நாட்டுப்புற வேடிக்கைப் பாட்டும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முதல் பத்திரிகையான ‘ஜனமித்திரன்’ இதழ் பற்றிய விரிவான செய்திகளும் (பக் - 191, 192), அவ்விதழின் முகப்பில் இடம் பெற்ற அமரகவி சுப்பிரமணிய பாரதியின் ‘ஏழையராகி..’ என்று தொடங்கும் ஒன்பது வரி தேசியக் கவிதையும் நூலாசிரியரது புதுக்கோட்டை தொடர்பான படைப்புலகு பற்றிய அரிய தேடல் முயற்சியை வியக்க வைக்கின்றன.

இதேபோல், புதுக்கோட்டை மண்ணின் பெருங்களூரில் பிறந்த மாபெரும் எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமாகிய அகிலாண்டம் என்ற அகிலனைப் பற்றி நூலாசிரியர் விரிவான பதிவினை வாசகர்களுக்குத் தந்துள்ளார். அத்துடன், 1974ஆம் ஆண்டு, அப்போதைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வரலாறு படைத்த முதுபெரும் எழுத்தாளர் பேராசிரியர் டாக்டர். மு.வ. அவர்கள் அப்பல்கலைக் கழகத்தில் நான்கு நாட்கள் நடத்திய படைப்பாக்கக் கருத்தரங்கில் அவர் அகிலன் பற்றி ஆற்றிய உரை, இறுதியில் அகிலன் அவர்களது அரிய ஏற்புரை ஆகியவற்றையெல்லாம் தேடிக் கண்டடைந்து சிறப்பாகப் பதிவு செய்து புதுக்கோட்டை மண்ணிற்குப் பேரும் புகழும் கூட்டியுள்ளார் அண்டனூர் சுரா. இத்துடன் புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்களின் பழங்கவிகள், பாடல்கள், கவிஞர்கள் மற்றும் அவர்களது கவிப்படைப்புகளையும் நமது பார்வைக்கு மீளக் கொணர்ந்து பெருமை சேர்த்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயர் பின்புலம், இதற்கு முன்பு இது ‘பன்றி நாடாக விளங்கிய வரலாற்று ஆய்வுகள், மற்றும் மிகப் பெரும் ஆளுமைகளான எட்கர் தர்ஸ்டன், லூயிஸ் மூரே, ஹெமிங்வே, சுத்தானந்த பாரதியார், ரா.பி.சேதுப் பிள்ளை, சர்.ஆர்தர் காட்டன் ஆகியோர் மற்றும் பலரது வரலாற்றுச் சுவடுகளைத் தமது இடைவிடாத் தேடல் மூலம் ஆய்ந்தறிந்து இந்நூலில் சிறப்பாகப் பதிவிட்டு புதுக்கோட்டைப் படைப்புலகில் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் சுரா. புதுக்கோட்டையின் முதல் வரலாற்று ஆய்வு, முதல் அச்சகம், முதல் பேருந்து நிறுத்தம், முதல் மின் இணைப்புப் பெற்ற கிராமம், முதல் இதழாசிரியர் மற்றும் ‘புதுகை’ பெயரிலான புதுகைத் தென்றல், புதுகைத் தந்தி போன்ற எண்ணற்ற செய்திகளைத் தந்துள்ளார். அவரது திட்டப்படி தனது அடுத்தடுத்த தொகுதிகளில் இன்னும் விட்டுப் போன புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னபிற விவரங்களைத் தரும் பொருட்டு நூலாசிரியரைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தி ஊக்குவிப்போம்.

புதுக்கோட்டை: பன்றி நாடு முதல் புதுகை வரை
(தொகுதி –ஒன்று) | சந்தியா பதிப்பகம், 044-24896979

விலை – ரூ. 330/-

- சி.பாலையா