தமிழ் மரபில் பாரதிக்கென்று தனித்த இடம் என்றுமுண்டு. அதற்குக் காரணம் அவர் படைத்த படைப்புகள் மட்டுமல்ல, அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்த விதத்தினாலும்தான். தமிழ் வெகுசனப் பரப்பில் பாரதிக்கென்று இன்றைக்கு உருவாயிருக்கும் அடையாளம் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல்வேறு வழிகளில், பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் வாயிலாக, பல்வேறு கருத்தியல்வாதிகளின் கருத்து மோதல்களால் உருவாகி வந்திருக்கிறது. இன்னும் எழுதித் தீராத உன்னத வாழ்வாக பாரதியின் வாழ்வு இன்றும் படைப்பாளிகளுக்கு உள்ளது என்பதற்கு 2016ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்ற ‘பாரதி காவியம்’ என்ற நூல் சான்றாகும். இக்கவிதை நூலின் ஆசிரியர் அறிவியல் விஞ்ஞானியும் கவிஞருமான நெல்லை சு.முத்து ஆவார். இந்திய விண்வெளித்துறையில் முதனிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ள இவர் 140க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.
பாரதி எனும் ஆவணம்
எங்கள் தலைமுறை வெறுமனே பாரதியாரின் ஒன்றிரண்டு கவிதை வரிகளைப் படித்துவிட்டுப் போகிற போக்கில் தம் வசதிக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்திக் கொண்டு போகிறதோ என்ற ஐயப்பாடு எனக்குண்டு. அவர் கவிதைகளையோ அவர் வாழ்க்கையையோ தெளிந்து உள்வாங்கும் நோக்கம் எதுவும் இல்லாமல் போகின்றதோ என்ற பதற்றமும் உண்டு. அந்தப் பதற்றத்தைப் போக்கும் விதமாக வெளிவந்துள்ள கவிதை நூல்தான் பாரதி காவியம்.
நெல்லை சு.முத்து அவர்கள் பாரதி காவியத்தை செய்யுள் வடிவில் படைத்திருப்பினும் எளிமையாக எல்லோரும் படிக்கும்படியான புதுக்கவிதை நடையில் படைத்திருக்கிறார். வெறுமனே கவிதைகளைச் சொல்லழகு காட்டி, கவித்துவம் என்கிற பெயரில் புலமை நெறி காட்டி எழுதாமல் சுவைப்பட பாரதியின் வரலாற்றை கவிதையாகப் படைத்திருக்கிறார். வரலாற்றை ஒரு படைப்பாகப் படைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமானது ‘உண்மையான’ வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். இதுவே அப்படைப்பை வரலாற்றுப் பூர்வமாகப் படைப்பதற்கான முதல் நிபந்தனை. பாரதி காவியம் கவிதைகளால் ஓர் உண்மை வரலாற்றை வரைந்திருக்கிறது. அதற்காக அவர் பின்னிணைப்பாக பாரதியின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்தவர்கள் எழுதிய நூல்கள், பாரதியைப் பற்றிய தேடலையே தன் முழு வாழ்க்கையாகக் கொண்டு இயங்கிய அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம், இரா.அ.பத்மநாபன் போன்றோரின் நூல்களை வரிசைப்படுத்தியதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னும் உள்ள வரலாற்று விளக்கத்தை அடிக்குறிப்பிட்டுச் சொல்வது இக்கவிதை நூலுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாரதி ஏன் பூணூல் அணியும் பழக்கத்தை கைவிட்டார்? பாரதிக்கு யார் பிரெஞ்சு மொழி கற்றுக்கொடுத்தது? என்பன போன்ற நுண்ணிய வரலாற்றுக் குறிப்புகளால் இக்காவியம் மெருகூட்டப்பட்டிருக்கிறது.
கவித்துவ அழகு
பாரதிக்கு சிறுவயதில் அவர் தந்தை கணக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறார். கணக்கு அவர் மண்டையில் ஏறவில்லை. ஆனால் இயல்பாக அவர் மனதிற்குத் தமிழ்ச் சொற்களை சந்த நயமாக எதுகை, மோனையோடு மாற்றத் தெரிந்திருக்கிறது. ஒருமுறை கணக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது புரியாமல் மனதுக்குள் கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்திருக்கிறான் சிறுவன் பாரதி. இதனைக் கவிஞர்,
முந்திவரும் சந்தவியல் ‘கணக்கி’ னுக்கு
இழிந்தகணப் ‘பிணக்கு’முதல் ‘ஆம ணக்கு’
எதுகைபல அடுக்கிமகன் விழித்திருப்பான்
என்று மொழிகிறார்.
அண்டவெளியில் இருக்கும் கருந்துளை தன் எதிரே எது வரினும் உள்ளிழுக்கும் வல்லமை கொண்டிருக்கும். அதுபோல் பாரதியின் கவிதை எதிரில் உள்ளோரின் கருத்தைக் கவரும் என்கிறார். மேலும் ஓர் இடத்தில்,
மின்னலெனில் உடன்மறையும்! ஆயின் நெஞ்ச
வேதனையும், விடுதலையின் விடுதலை வேட்கைத் தீயும்
மின்மநிலைப் பாடல்களாய் ஆகா யத்து
வெறுமைநிலை அணுத்துகளாய் ஊடா டுங்காண்!
என்று பாரதியின் கவித்திறத்திற்கு கவியழகு கூட்டும் கவிஞர் ‘மின்மநிலை’ என்பதற்கு அடிக்குறிப்பில் பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
'மின்மநிலை'(Plasma): அயனிகளால் நிறைந்த 'நெருப்பு' நிலை. இயற்பியலின் நிலம் (solid), நீர் (liquid), காற்று (gaseous) ஆகிய மூன்று நிலைகளுக்கு அப்பால் பொருளின் நான்காவது நிலை. ஐந்தாவதான ‘வெறுமம்’ (emptiness) பஞ்சபூதங்களில் இறுதியான ஆற்றல் வடிவமாகிய 'வானம்'. இங்குக் கவிதைக்குள் அறிவியல் வருகிறது.
விடுதலைக்கு முன்பே இந்திய தேசத்தின் விடுதலையைப் பாராமல் மறைந்த பாரதியார்,
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே
என்று பாடியவர். கவிதையில் மட்டும் புலமையில்லாமல் ஓர் இதழியலாளராகவும் இருந்தவர். ஆங்கிலேயருக்கெதிராக தன் நெஞ்சக் கனலைச் சித்திரப் படமாக, கட்டுரைகளாக வரைந்து விடுதலை வேள்வியில் பங்குபெற்றவர். ஆங்கிலேயருக்கெதிராக பாரதி கைது செய்யப்படும் அபாயம் இருக்கும் வேளையில் புதுவைக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். பிரிட்டிஷ் உளவாளி ஒருவன் அப்போது அவரிடம் மாறுவேடத்தில் வந்து விசாரிக்கிறான். விசாரிப்பவன் ஓர் உளவாளி என்று கண்டுகொண்ட பாரதியை கவிஞர் ‘கதிரியக்கப் பார்வையாளன்’ என்று புகழ்கிறார்.
இல்லாத வேடந் தாங்கி
எழுந்தவனைக் கவிஞன் நோக்கி,
“மெல்லாதீர்! எடும்உம் காவல்
வேலைஅடை யாளச் சீட்டை!”
சொல்லான கதிரியக்கம்
துளைக்குமவன் விலாஎ லும்பை!
நில்லாமல் ஓடி விட்டான்
நேர்க்கவிஞன் நகைக்க லுற்றான்
என்கிறார்.
நவீனத்துவத்தின் முகம் பாரதி
பாரதி பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்திருந்த 39 வருடங்கள் தமிழ் மண்ணில் நவீனத்துவக் கருத்துகள் சூல் கொண்டிருந்த நேரம். ஏனெனில் இங்கு 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கல்வியினால் படித்த நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று உருவாகியிருந்ததே அதற்குக் காரணம். இவர்களின் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தில் நவீனத்துவக் கருத்துகள் மெல்ல மெல்ல உருவாகிப் பரவியது. பாரதியும் அந்த படித்த நடுத்தர வர்க்கத்தினரில் ஒருவன். அதன் நீட்சியாகவே அவரின் சீர்திருத்தக் கருத்துகளையும் பார்க்க வேண்டும்.
பாரதி இந்திய விடுதலையைப் பார்க்காவிடினும் அவருக்கு அந்த விடுதலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இங்கு ஆதிக்கச் சாதியாக இருந்தாலும் தாழ்ந்த சாதியாக இருந்தாலும் எல்லோருக்குமானதாகத்தான் அந்த விடுதலை அமைய வேண்டும் என்று எண்ணியவர். பெண்களுக்கும் விடுதலை வேண்டும் என்று சொன்னவர்.
இன்று சமூக சீர்திருத்தக் கருத்துகள் பேசும் எவரிடமும் எதிர்பார்க்கும் தகுதி சுயசாதி விமர்சனம். ஏனெனில் தான் பிறந்த சாதியில் இருக்கும் கொடுமையை முதலில் பேச வேண்டும் என்று இன்று எல்லாத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு முதல் ஆளாய் முன்னின்று சுயசாதி விமர்சனம் செய்தவர் பாரதி.
“பார்ப்பாரை ஐயர் என்ற காலமும் போச்சே”
என்று பாடியவர், பாரதி. “சாதிகள் இரண்டொழிய வேறில்லை” என்று சொன்னவர். ஆனால் சாதி அழித்தொழிப்புக்கு பாரதியின் வழி என்பது தனி வழியாகத்தான் இருந்திருக்கிறது.
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்
என்பதே அவர் கொள்கை. ஒரு தாழ்த்தப்பட்டவரான கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து அவரை ‘பிராமணன்’ ஆக்கியவர். பிறப்பினால் மட்டுமே ஒருவன் உயர்ந்தவன் ஆகிவிட முடியாது என்று ஆழமாக நம்பியவர்.
நெல்லை சு. முத்து அவர்கள் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்கிறார். ஒருமுறை பூணூல் அணியாத பாரதியைப் பார்த்து “உள்ளபடி பார்ப்பானோ நீவிர்?” என்று கேட்கின்றான் ஒருவன். அதற்குக் கவிஞர்,
சொல்லினியீர்! பூணுலேன் பெரிது செய்வீர்?
தூய அந்தண்மைக் குறியோ பூணூல்? (267)
என்று எதிர்க் கேள்வி கேட்கின்றார். தான் பிறந்த சாதியைச் சமரசமில்லாமல் சுய விமர்சனம் செய்து அதனால் பல்வேறு எதிர்வினைகளை எதிர் கொண்டவர் பாரதி. அதே போல் சாதி ஒழிப்புடன் கூடவே பெண்விடுதலை என்பதையும் உரத்து ஒலித்தவர்.
பாரதியைப் பற்றி நெல்லை சு.முத்து கவிதையில் புகழுரை செய்கிறார்.
போதைதரும் புகழுரையில் நாட்ட மில்லை!
பொருள்பெருக்கும் வழிமுறையில் நோட்டமில்லை!
ஊதையுற வாழ்ந்திடவும் வேட்கை இல்லை!
ஊனர்மனம் தாழ்ந்திடவும் நெஞ்ச மில்லை!
சீதமுறக் கடலலைமுன் தனித்து நின்று
சில இரவுப் பொழுதுகளைச் சுவைத்தி ருப்பான்!
நீதமுற கதிரவனின் ஒளித்தேன் மாந்தி
நெஞ்சுயர்த்திப் பூங்கவிதை இசைத்தி ருப்பான்!
பாரதியின் கவிதைகளைப் படித்திருப்போம். ஆனால் பாரதியார் வாழ்க்கையில் நடந்ததை, மனைவியிடம் அவருரைத்த புத்திமதிகளைக் கவிதை வடிவில் படித்திருக்கிறோமா? பாரதி காவியத்தில் தன் மனைவி செல்லம்மாளுக்கு பெண்ணடிமையின் தீய விளைவுகளையும் தீண்டாமையின் அவலத்தையும் சொல்வதைக் கவிஞர் சொல்கிறார். தன் காலத்தில் பிராமணர்கள், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சமைப்பதைத் தீட்டு என்று ஒதுக்கி வைத்து விடுவதையும் அதே நேரம் வீட்டில் பணிப்பெண்கள் இருந்தாலும் அவர்கள் சூத்திரர்கள் ஆதலால் அவர்களையும் சமைக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதையும் சொல்லும் பாரதி,
சரியென்று வெளியுணவுச் சாலை உண்டி
அமைவுடனே சூத்திரர்தாம் அளித்திட் டாலும்
அதுதீட்டாம்! திருநீறால் சுத்தி செய்வார்!
குமைகின்ற மடைமைகளும் விரைவில் மாறும்!
கோத்திரங்கள் வெளிவேடம் மறைந்து போகும்!
என்கிறார். மேலும் உரைக்கிறார்;
போயழிந்த மேற்சட்டை ஓலைப் பாம்பைப்
புதுப்பாம்பு எனப்பயந்து ஓடலாமோ?
தூய்மைமிகும் புதுநெறிகள் உதிக்கும் வேளை
சொப்பனத்தை நிசமென்று தரிசிக்க லாமோ?
தீயவெளிப் பகட்டெல்லாம் செத்த பின்னர்
தீண்டாமை எனும்பொய்மைக்(கு) அஞ்சலாமோ?
ஆயகலை மருத்துவனோர் பார்ப்பான் இன்றோ
அம்பட்டன் போலபிணம் அறுக்கின் றானே!
தீண்டாமையும் பெண்ணடிமைத்தனமும் தான் பிறந்த சாதியில் உள்ளதை வெறுத்து அதனைக் களைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பாரதியின் எண்ணத்தைக் கவிஞர் மேற்கண்டவாறு சொல்கிறார். காலமாற்றத்தில் எல்லோரும் வேறு வேறு தொழில்கள் செய்யப்புகும் நேரத்தில் பழைய சனாதனத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை வெறுக்கிறார் பாரதி.
தமிழ்ச் சமூகம் பாரதியை இன்றும் கொண்டாடுவதற்கு முக்கியமான காரணம் அவரின் தாய்மொழிப் பற்று. ‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றவர், ஒரு முறை செல்லம்மாள் பகவத்கீதையை வடமொழியில் பாராயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுத் தான் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்ற பகவத்கீதையைப் படி என்று உரைக்கிறார். சொல்லிவிட்டுச் சொல்கிறார்,
எந்தமொழி யானாலும் பகவா னுக்கு
இன்பமொழி; அதில்அவனைத் தொழுதல் நன்றாம்!
சிந்தையறி யாமலெதும் தோத்தி ரத்தில்
திண்டாட வேண்டாமே! எனப் பகர்ந்தான்! (541)
என்கிறார். நம் காலத்திற்குத் தகுந்தாற்போன்ற வாசகங்கள் தாய்மொழியில் இறைவனைத் துதிப்பதை, அர்ச்சனை செய்வதை பாரதியின் எண்ணங்களைக் கவிஞர் கவிதையாகப் பிரதிபலித்திருக்கிறார்.
பாரதியை இன்று பல தரப்பினரும் விமர்சிக்கின்றனர். அவருடைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் யாவும் அவர் காலத்தில் இருந்த சமூக நிலைமைகளுக்குத் தகுந்தாற் போல்வன என்பதை நாம் நினைவில் கொண்டால் அவரின் வாழ்வைப் புரிந்து கொள்ள நமக்குப் பேருதவியாக இருக்கும். அதற்கு பாரதி காவியம் என்னும் இந்நூல் நமக்குத் துணை புரியும். பாரதியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைக் கவிதைகளாக்கித் தந்த விஞ்ஞானியும் கவிஞருமான நெல்லை சு. முத்து அவர்கள் இந்நூல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியும் படியான தமிழில் படைத்திருக்கின்றார். பாரதிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் ‘பாரதி காவியம்’ தமிழ் என்னும் மகுடத்திற்கு முத்தாக என்றும் மிளிரும்.
- அ.அன்பரசன், முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்