1940-களில் கட்டுரை இலக்கியம் தோன்றியது என்பார் மா. இராமலிங்கம். ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவலாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் கற்றதை தனது தாய் மொழியில் தர வேண்டிய கட்டாயம் அறிஞர்களுக்கு ஏற்படலாயிற்று. மேலைநாட்டு இலக்கிய வடிவங்களான சிறுகதை, புதினம் மற்றும் கட்டுரை தமிழுக்கு வரத் தொடங்கியது.

ravikumar book on ambedkarஎன்சிபிஎச் வெளியிட்ட “விடுதலைக்குப்பின் கட்டுரை இலக்கியம்" என்கிற தனது நூலில் அறிவுக் கட்டுரை, சுவை கட்டுரை என கட்டுரைகளை இரண்டாக பகுப்பர்கள் என்கிறார் எழுத்தாளர் இரா.காமராசு. மேலும், இந்திய விடுதலைக்குப் பிறகான தமிழ் கட்டுரைகளை அரசியல் நோக்கு மற்றும் இலக்கிய நோக்கு என இரண்டாகப் பிரிக்கலாம் என்கிறார். திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பொதுவுடமை இயக்கம் மற்றும் தலித் இயக்கங்களின் கட்டுரைகளை அரசியல் நோக்கின் கீழும்; மரபுத்தன்மை, நவீனத்தன்மை மற்றும் புதிய கோட்பாட்டுத்தன்மை பொருந்திய கட்டுரைகளை இலக்கிய நோக்கின் கீழும் வகைப்படுத்தலாம் என்கிறார் எழுத்தாளர் இரா.காமராசு.

வாசிப்பு என்பது ஒரு முழு ஈடுபாட்டுச் செயலாகும். வாசிக்கும் பொருண்மையைப் பொறுத்து பொழுதுபோக்குக்கான வாசிப்பு (Reading for entertainment), தகவலுக்கான வாசிப்பு (Reading for information) மற்றும் புரிதலுக்கான வாசிப்பு (Reading for understanding) என வாசிப்பை மூன்றாக பிரிக்கலாம். பொழுதுபோக்குக்கான வாசிப்பில் கற்றலுக்கு இடமில்லை. தகவலுக்கான வாசிப்பில் பெரிதாக பயன் எதுவும் கிடையாது, அதுவும் இந்த நவயுக காலத்தில் மிடுக்குப் பேசிகள் (Smart phones) தகவல்களை குப்பையாக குவித்து வைத்திருக்கிறது. புரிதலுக்கான வாசிப்புதான் கற்றலுக்கானவை.விஷயங்களை ஆழமாக அறிந்து கொள்ள புரிதலுக்கான வாசிப்பு கை கொடுக்கிறது. இதில் வாசகரை விட எழுத்தாளர் விசய ஞானம் உடையவராகத் திகழ்வது கட்டாயமாகும். “தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்" என்கிற ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு புரிதலுக்கான வாசிப்பாக அமைந்துள்ளது.

கட்டுரைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதில் முக்கியமானது கட்டுரை ஆய்வுக் கட்டுரையாகி விடக்கூடாது என்பதாகும். இதைக் கருத்தில் கொண்டு மொத்தம் இருக்கிற 11 கட்டுரைகளில், நூல் அறிமுகக் கட்டுரைக்கு தேவையான இரண்டு கட்டுரைகளை மட்டும் விளக்கிக் கூறுவது சிறப்பாக இருக்கும்.

“அம்பேத்கரும் படைப்பிலக்கியமும்" என்று தலைப்பிடப்பட்ட கடைசி கட்டுரையில், படைப்பிலக்கியத்தில் சமூகப் பார்வை குறித்து பேசுகிறார்கள்; இந்திய நாட்டில் முதலில் சமூகம் என்ற ஒன்று இருக்கிறதா? இங்கு இருப்பதெல்லாம் சாதிகளின் தொகுப்பே என்கிற அம்பேத்கரின் சமூகம் குறித்த கருத்தையும், மேற்கில் இலக்கியம் என்பது எதையும் சொல்லலாம் என்கிற அனுமதியோடு தொடர்பு கொண்டது; ஜனநாயகம் என்பதிலிருந்து அது பிரிக்க முடியாததாக உள்ளது என்கிற ழாக் தெரிதாவின் கருத்தையும் ஒப்பிடும் கட்டுரையாளர் இன, மத, சாதி அடையாளங்களைத் தாங்கி நிற்பவன் படைப்பாளியாக முடியாது என்கிற உண்மையை பளார் என முகத்தில் அறைவதைப் போன்று கூறிச் செல்கிறார். மேலும், மனிதர்களை மனிதர்களாக பாவிக்காத எந்த ஒரு படைப்பாளரின் படைப்பும், படைப்பாகாது என்கிற முக்கியமான முடிவுக்கு வருகிறார்.

“அம்பேத்கரும் சாதி அடிப்படைவாதமும்" என்று தலைப்பிடப்பட்ட 5வது கட்டுரையில், பட்டியலின கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும், பட்டியலின மக்கள் மற்ற கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என சில ஆலோசனைகள் பட்டியலினத்தைச் சேர்ந்த சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தை எதிர்க்கும் கட்டுரையாளர், பட்டியல் இன கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்கிற கோரிக்கை மற்ற சாதிகளின் அணி சேர்க்கைக்கு வழி வகுத்துவிடும் என்று தெளிவுபடுத்துகிறார். மேலும் இந்தக் கருத்து அரசியல் தளத்தையும் சாதிய ரீதியாக பிளவு படுத்தி வகுப்புவாத பெரும்பான்மையை கட்டியமைக்க முயலும் சனாதன சக்திகளுக்கு பயன்படும் என்பதை தெளிவாக்கி விளக்கிக் கூறுகிறார்.

மேற்கண்ட இந்த இரண்டு கட்டுரைகளையும் ஒப்பு நோக்குகையில் தலித்திய கோட்பாட்டாளராகவும், தலித்திய செயல்பாட்டாளராகவும் திகழும் கட்டுரையாளர் எவ்வித பக்கச் சாய்வும் இல்லாதவராக இருக்கிறார். எவ்வகையிலான சாதிய திரட்சியும் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்து விடும் என்பதில் கறாராக இருக்கிறார். ஒரு படைப்பாளிக்கு உரியதான அறத்தோடு இயங்குகிறார்.

மாணவர்களுக்கு மத்தியிலான சாதிய மோதல்கள், மதவாத அரசியல் ஒருங்கிணைந்த தேர்தலை முன்மொழிதல், சட்ட அமைச்சர் மற்றும் கொலிஜியம் இடையிலான மோதல்கள், மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டுதல், அறிவியல் அமைப்புகளை பலவீனப்படுத்துதல், படைப்பு சுதந்திரத்தை நசுக்குதல் என பிரச்சனைகள் காலத்திற்கு ஏற்றாற் போல் புது ஒப்பனைகளுடன் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் அம்பேத்கரின் ஒளியில் தீர்வை முன்மொழிபவராக இக்கட்டுரைத் தொகுப்பை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ரவிக்குமார்.

தலித்துகளை விமர்சிப்பதற்கு மட்டும்தான் அம்பேத்கரை இவர்கள் மேற்கோள் காட்டுவார்கள். வேறு எந்த ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிக்கும் போதும் அம்பேத்கரை மேற்கோள் காட்ட எந்த ஒரு அறிவுஜீவியும், பத்திரிகையாளரும் முன்வருவதில்லை என விசனப்படும் எழுத்தாளர் ரவிக்குமார், இந்தியாவின் பன்மைத்துவம் வாய்ந்த சிக்கல்களுக்கு அம்பேத்கரின் ஒளியில் பிரச்சனைகளை அணுகி ஆராய்ந்து இருப்பது மிகச் சிறப்பு.

வெறுமனே மேற்கோள்களை படிக்காமல் அம்பேத்கரின் எழுத்துக்களை படிப்பதற்கு இந்திய அறிவாளிகள் இப்போதாவது முன்வர வேண்டும் என்கிற ரவிக்குமாரின் வேண்டுகோளை நான் உயர்த்திப் பிடிக்கிறேன்.

தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர். | ரவிக்குமார்

வெளியீடு: என்சிபிஎச் | பக்கம்- 62 | விலை - ரூ:100

- நந்தசிவம் புகழேந்தி