மெய்யுறு சொற்கள் என்பவை நமது உணர்வின் வழியிலோ அன்றி ஓசையின் வழியிலோ தோன்றும் தனித்த சொற்களாகக் கொள்ளலாம். ஆ! ஐயோ!, அட!, அடடா!, அடடே!, சோ!, அச்சோ!, ஜல்ஜல்!, என்பதாகவோ இன்னும் பலவாகவோ இச்சொற்கள் வெளிப்படலாம். இவ்வகை உணர்வுச் சொற்கள் பெரும்பாலும் இருவரிடையேயான உணர்வுப் பூர்வமான உரையாடலின் போதோ, நாட்டுப்புறப் பாடல்களின் வழியாகவோ அல்லது திரையிசைப் பாடல்களின் வழியாகவோ பாடப்படலாம்.
நமது மெய்மை உணர்வோடு உரசிவரும் இதுபோன்ற சொற்கள் பெரும்பாலும் செவ்வியல் இலக்கியங்களில் பயின்று வருவதில்லை. காரணம், இதுபோன்ற மெய்யுறு சொற்கள் ஒரு பாடலில் அல்லது பனுவலில் பயின்று வந்தால் மேற்படி பாடலின் செவ்வியல் தன்மை சிதைவு அடைய வாய்ப்புண்டு. இதுவே கவிதை இலக்கணத்தின் பொதுவியல் தன்மையாகக் கருதப்பட்டாலும் இதற்கு விலக்கானவையாகவும், கவிதை உணர்வின் வெளிப்பாட்டு உத்தியில் மிகுந்த சிறப்பு சேர்ப்பனவாகவும் மேற்படி சொற்களில் சில செவ்வியல் கவிதைகளில் அமைந்து விடுவதும் உண்டு.
தமிழ் இலக்கியங்களில் சிறப்பு சேர்க்கும் விதமாக பயின்று வரும் மேற்படி மெய்யுறு சொற்களின் பயன்பாடு பல கவிதைகளில், பல இடங்களில் உண்டு. அவற்றுள் நயம்மிக்கதாகவும், வாசிப்பவர்களின் இதயங்களைக் கொள்ளையடிப்பவைகளாகவும் அமைந்த, ஆகச் சிறந்த மூன்று, நான்கு பனுவல்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். செவ்வியல் இலக்கியங்களின் மீதான தனித்துவமான ஆய்வுகள் பலவும் தேவைப்படும் இக்காலகட்டத்தில், சங்க இலக்கியங்களின் மீதோ அல்லது அதற்குப் பின்னதான சமகால இலக்கியங்களின் மீதோ விதவிதமாக ஆய்வு செய்து தமிழின் படைப்பிலக்கிய மேன்மையை உயர்த்துவது அவசியமாகும்.
கம்ப மா சித்திரம்
பன்னீராயிரம் பாடல்களில் இராமகாதையை தமிழ் மரபு சிதைவுறாமல் பாடியதன் மூலம் உலக காப்பியங்களுக்கு முதன்மையாகத் தன் படைப்பை நிலை நிறுத்திக் கொண்டவன் கம்பன். கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் ஆறாவது படலமாகத் திகழ்கின்ற கங்கை படலத்தில் சீதையோடும் தம்பியோடும் கானகம் புகுந்த இராமனின் பேரழகை வர்ணிப்பதாக அமைந்த, அறுசீர் விருத்தத்தில் பயின்று வந்த மெய்யுறு சொல் ஒன்றைத் தாங்கிய அற்புதப் பாடல் இதுவாகும்.
“வெய்யோன் ஒளிதன் மேனியின்
விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையா னொடும் போனான்
மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர்
அழியா அழகுடையான்!”
சூரியனுடைய ஒளியானது இராமனின் கரியமேனியில் பட்டு அந்த ஒளியானது, சோதியாகிப் பிரகாசிக்கிறதாம். சீதாப் பிராட்டிக்கு இடை இருக்கிறதா?. இல்லையா? என்ற ஐயம் மீதுற அவளுடனும், இளைய நம்பியாகிய இலக்குவனுடனும் கானகத்தே செல்லும் இராமனின் பேரழகை முதலில் ‘மை’யுடன்’ ஒப்பிட்டுப் பார்க்கிறார் கம்பர். மை, அழிந்துவிடக்கூடியது, இராமனின் அழகு அழியக்கூடியதா? ஆகவே இது சரியில்லை என்று அடுத்த உவமைக்;குச் செல்கிறார். ‘மரகதமோ!’, மரகதம் விலை உயர்ந்ததாகவும், அழகாகவும் இருந்தாலும் இது ஒரு கல்தானே, அதுவும் இராமனுக்கு ஈடாகாது. மூன்றாவதாக ஆழமான கடல்போன்றவனா இராமன்? என்றவாறு ‘மறிகடலோ!’ என்கிறார். ஆனாலும் கடலில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. மேலும், அது உப்பு மயமானது. எனவே இனிய இராமனின் தன்மைக்கு அதுவும் பொருந்தாது எனத் தவிர்த்து விட்டு ‘மழை முகிலோ!’ என்று சிந்திக்கிறார். மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும் என்ற உண்மை கம்பனைச் சுடுகிறது.
எல்லா உயிர்களுக்கும், எல்லா நேரமும் நன்மையே பயக்கும் இராமனுக்கு இதுவும் இணையன்று என உணர்ந்த கம்பர், பிரிதொரு பொருத்தமான உவமை கிடைக்காத காரணத்தால் கவிச் சக்கரவர்த்தியாகிய அவர் ‘ஐயோ!’ என்ற மெய்யுறு சொல்லைப் போட்டுத் தன் தவிப்பை அல்லது வியப்பை வெளிப்படுத்துகிறார். இராமனின் வடிவழகு அழியாத தன்மையது என்பதை ஐயோ! என்ற செற்பதம் துலங்கக் காட்டுகிறது. கம்பனின் சொற்திறத்தை உயர்த்திக் காட்டி வாசிப்பவர்களின் உள்ளத்துள்ளும் ரசவாதம் செய்கிறது. சாதாரண பேச்சு முறையின்போது மங்கலம் அல்லாததாக அல்லது அபய விழிச் சொல்லாகப் பயன்படும் ‘ஐயோ!’ என்ற வார்த்தை இங்கே இலக்கியத் தகுதியைப் பெறுகிறது.
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
மகாகவி பாரதியின் தனிப்பாடல்களுள், ஞானப்பாடல் வரிசையில் ‘அக்கினிக்குஞ்சு’ என்ற ஒரு அற்புதப் பாடல் உண்டு. வெறும் ஐந்தே வரிகளிலான சொற்சித்திரமான ஞானப் பிழிவு இப்பாடல். படிமம் ஊடாட உயர்ந்து நிற்கும் குறியீட்டுக் கவிதை என்றும் இதனைக் கொள்ளலாம். இப்பாடலின் கடைசி வரியாக ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!’ என்ற மெய்யுணர்வு சொற்கள் மூன்றனுக்கு என்ன வேலை?. என்று சிந்தித்த போதுதான் இப்பாடலின் அடிநாதமாகிய ஆனந்தக் கூத்தின் மாற்றுருவம் இச்சொற்கள் என்பது விளங்கியது.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
நெஞ்சில் உரமிருந்தால், நேர்மைத் திறமிருந்தால் தீமை எனும் காட்டை அழித்தொழிக்க படைப்பட்டாளங்கள் தேவையில்லை, தீரத்தின் ஒரு சிறு பொறி போதும் என்பதை இதைவிடவும் தத்துவார்த்தமாக யாரும் சொல்லிவிட முடியாது. இதில் ஒரு நுட்பம் என்னவென்றால், வெறும் அக்கினி என்ற சொல்லுக்குப் பதிலாக ‘அக்கினிக் குஞ்சு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகும்.
ஐம் பூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தினுள் ‘நிலம்;’, பன்முகத் தன்மை கொண்டது, மண்ணின் தரமும் இடத்திற்கு இடம் மாறுபாடு கொண்டதாகும். ‘நீர்;’, நல்லதென்றும் கெட்ட நீர் என்றும் உண்டு. ‘காற்று’, மாசுபடும் தன்மை கொண்டது. ‘ஆகாயம்,’ பூமியின் குப்பைத் தொட்டியாக மாறிவருவதை நாமறிவோம். ஆனால், ‘நெருப்பு’ மட்டுமே அசுத்தமற்றது, அழுக்கு என்பது அதில் இல்லை. நெருப்புக்குள் குஞ்சென்றும், மூப்பென்றும் திறம் பிரிக்க இயலாது என்பதைக் கண்டுகொண்ட பாரதி, தீமை எனும் காட்டை சுட்டுப் பொசுக்குவதற்கு நெருப்பின் குஞ்சொன்று போதும் என்று வெகு நுட்பமாக இப்பாடலில் காட்டினான். அக்கினிக் குஞ்சின் தழல் வீரத்தால் வெந்து தணிந்த காட்டின் மீது நம் கவனம் குவித்துக் காட்டுவதற்கு பாரதிக்கு சராசரி கவிதை வார்த்தைகளுக்கும் மேலான, மெய்யுறு சொற்களான ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்ற வார்த்தைகள் தேவைப்பட்டன. ஒரு சிறிய கவிதை நம்முள்ளே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாவதும் அச்சொற்களே என்பதையும் உணரலாம்.
கலின்! கலின்! என்றொரு மெல்லோசை
கலின்! கலின்! என்ற வார்த்தை தமிழ் இலக்கண அகராதிகள் எதிலும் பொருந்திவராத வார்த்தை. ‘கலி’ என்றால் இன்பம் என்று சொல்லிவிடலாம். ‘கலின்!’ என்பது தனித்த பொருள் எதுவும் தரவில்லை என்றாலும், ‘குற்றாலக் குறவஞ்சி’யில் ‘திரிகூட ராசப்பக்கவிராயர்;’ வசந்தவல்லி பந்தாட்டம் ஆடுவதன் வழியே அழகியல் தன்மையால் மெல்லோசையுடன் இச்சொற்களைப் பயன்படுத்தும் போது, வசந்தவல்லியின் பந்தாடும் நளினத்தை வெளிபடுத்தி வாசிப்பவர்களுக்குச் சுவை சேர்க்கிறது. இதோ அந்தப் பாடல்:
செங்கையில் வண்டு கலின்! கலின்! என்று
செயம் செயம் என்றாட - இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
நாயகியாம் வசந்தவல்லி பந்தடிக்கும் போது "அவளுடைய செங்கைகளில் உள்ள வளையல்கள் ‘கலீர்! கலீர்!’ என்றும் ‘செயம் செயம்’ என்றும் ஒலி முழங்கின. அவளின் இடை இனி நிலைத்திருப்பதே சந்தேகந்தான் என்று காலில் சிலம்புகள் புலம்பிக் கொண்டே அவளுடன் கலந்தாடுகின்றன. அவளுடைய இரு கொங்கைகளும் தமக்குப் போட்டியான பந்துகளை வென்று விட்டோம் என்று குழைந்து குழைந்து துள்ளிக் குதிக்க மெல்லிய பூங்கொடி போன்ற நங்கை வசந்தவல்லி பந்து விளையாடுகிறாள்," என்றவாறு அழகியலோடு அருமையானதொரு காட்சிச் சித்திரத்தை இப்பாடலில் திரிகூட ராசப்பக் கவிராயர் வழங்குகிறார். அந்த அழகியலுக்கு மெருகேற்ற ‘கலின்! கலின்!’ என்ற சொற்கள் மெய்யுறு சொற்களாகப் பெரிதும் இங்கே பயன்படுகின்றன.
‘பாசம்’ என்றொரு பழைய திரைப்படம். அதில் கவியரசர் கண்ணதாசன் அருமையானதொரு பாடல் எழுதியிருப்பார். கதை நாயகனைச் சந்தித்த கதாநாயகி காதல் வயப்பட்ட நிலையில் காட்டுவழியில் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டே பாடுவதாக அமைந்த பாடல் அது
“ஜல் ஜல் ஜல்லெனும் சலங்கை யொலி
சல சல சலவெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே...”
என்பதாகத் தொடரும் இப்பாடலுக்கு ‘விசுவநாதன்-ராமமூர்த்தி’ மிகச் சிறப்பாக இசையமைத்திருப்பார். ‘ஜல்! ஜல்! மற்றும் ‘சலசல’ என்னும் வார்த்தைகள் உணர்வூட்டும் ஒலிப்புச் சொற்கள் மட்டுமே. ஆனால், பயன்பாட்டு உத்தியில் மேற்படி சொற்கள் இப்பாடலில் தவிர்க்க இயலாத இடம் பெற்று இப்பாடலின் தன்மையை உயர்த்துவதைக் காண்கிறோம். காளைகளின் கழுத்து மணி ஜல்! ஜல்! என ஒலியெழுப்பி காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் வணடிப் பயணத்திற்கு இணைதான் எது?
மகாகவி பாரதியின் பாடல்களிலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பலவற்றிலும் மெய்யுணர்வுச் சொற்களாகிய ‘அடா!’ ‘அடடே!’ என்பனவும் இன்னும் பிறவும் பயின்று வந்து அவர்தம் செவ்வியல் கவிதைகளுக்குச் சுவையூட்டுவதையும் காண்கிறோம். இக்கட்டுரையின் சுருக்கம் கருதி அவற்றை விட்டுவிட்டோம். அவற்றைத் தனித்தனியே ஆய்வு செய்தல் நலம் பயப்பதாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அல்லது மனிதகுல வாசிப்பு வரலாற்றின் மையப் புள்ளியாகத் திகழும் திருக்குறளில் நானறிந்தவரை ‘கெடுப்பதூவும்’, ‘எடுப்பதூவும்’, ‘தீதொரீஇ’, ‘தழீஇய’ போன்ற இலக்கண வரையறைக்கு உட்பட்ட அளபெடைச் சொற்கள் அன்றி மெய்யுணர்வு சொற்கள் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால், கருத்தியலால் ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ போன்ற சொற்றொடர்கள் தரும் உணர்வு சூட்டை நாம் மேலும் மேலும் தனியே ஆய்வு செய்ய முடியும் தானே!
மேற்பார்வை நூல்கள்:
1. கம்பன் கவிநயம், திருமுருக கிருபானந்த வாரியார் உரை
2. பாரதியார் கவிதைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
3. திருக்குற்றாலக் குறவஞ்சி, புலியூர்க் கேசிகன் உரையுடன் சாரதா பதிப்பகம் வெளியீடு.
4. கண்ணதாசன் திரையிசைப் பாடல்கள், தொகுதி-2, வானதி பதிப்பகம் வெளியீடு.
- மு.செல்லா