நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பது வள்ளுவர் வாக்கு. இதில் குறிப்பிட்டுள்ள நோய் நாடும் செயலே, மருத்துவரின் முதன்மையான பணியாகும். நோய் நாடுவதற்குப் பல முறைகள் இருக்கின்றன. நோய் நிதானம் என்ற நோய் நாடல் துறையில் சித்தர் அகத்தியர் இயற்றிய ஒரு தொன்மையான நூல் “சூடாமணி கயிறு சூத்திரம்” என்ற ‘மணிக்கடை நூல்’. இந்த சாஸ்திரத்தில், ஒரு மனிதனின் விரற்கடையைப் (விரல்அளவு) பயன்படுத்தி எப்படி நோய்களைக் கணிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .

ஒன்றை நான்காகப் பிரித்தால் அதில் நான்கில் ஒரு பங்கு கால் என்றும் பாதியாகப் பிரித்தால் அரை என்போம் அல்லவா? அதே போல் உடலின் கால் பாகத்திற்குக் கால் என்றும் அரைப்பகுதிக்கு அரை என்றும் எவ்வளவு நுணுக்கமாகப் பெயர் வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். தொல்காப்பியத்தில் அளவு குறித்தப் பெயர்களான தூணிப்பதக்கு, நாடுரி (நாழி, உரி) போன்ற அளத்தல் கருவிகளும், ‘எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ ‘சாண் நீண்டால் தான் முழம் நீளும்’ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழிகளும், ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்று வழங்கப்படும் இலக்கிய வரி வழங்கப்படுவதும் அளவு குறித்து பண்டைய தமிழர்களின் அளவு குறித்த அறிவு கருதத்தக்கது. தமிழர்களின் கணித அறிவு அபரிமிதமானது. கணக்கதிகாரம் என்ற நூல் தமிழில் உள்ளது. அதில் நம் முன்னோர்கள் கீழ்க்கண்டவாறு அளவைகளைக் குறித்துள்ளனர்.akathiyar soodamaniமேல்வாயிலக்கம் அலகுகள்

மேல் அரை. (அரை)

மேற் கால் கால்

மேல் அரைக்கால் அரைக்கால்

மேல் வீசம் வீசம்

¾ முக்கால்

½ அரைக்கால்

1/4 கால்

               நாலு மா

3/16 மூன்று வீசம்

3/20 3 மா

1/8 அரைக்கால்

1/10 இருமா

1/16 மாகாணி (வீசம்)

1/20 ஒரு மா

3/64 முக்கால் வீசம்

3/80 முக்காணி

1/32 அரை வீசம்

1/40 அரைமா

1/64 கால்வீசம்

1/80 காணி

3/320 அரைக்காணி முந்திரி

1/160 அரைக்காணி

1/320 முந்திரி

கீழ்வாயிலக்கம் அலகுகள்

1/640 கீழரை

1/280 கீழ்க்கால்

1/2560 கீழரைக்கால்

1/5120 கீழ் வீசம்

1/102400 கீழ்முந்திரி

1/1075200. இம்மி

1/23654400. மும்மி

1/165580800. அணு

1/1490227200. குணம்

1/1451136000. பந்தம்

1/44706816000. பாகம்

1/312947712000. விந்தம்

1/5320111104000. நாகவிந்தம்

1/74481555456000. சிந்தை

1/489631109120000. கதிர்முனை

1/9585244364800000. குரல் வளைப் படி

1/575114661888000000. வெள்ளம்

1/57511466188800000000. நுண்மணல்

எண் கூற்று வாய்ப்பாடு

ஒரு இம்மி.                       11 மும்மி

11 மும்மி.                        7 அணு

ஒரு அணு.                        9 குணம்

ஒரு குணம்.                      5 பந்தம்

ஒரு பந்தம்                        6 பாகம்.

ஒரு பாகம்                         7 விந்தம்

7 விந்தம்                           17 நாகவிந்தம்

ஒரு நாகவிந்தம்               60 குரல்வளைப்படி

ஒரு குரல்வளைப்படி    60 வெள்ளம்

ஒரு வெள்ளம்.                100 நுண்மணல்

இவற்றை நோக்கும்போது தமிழர்கள் அளவு குறித்த அறிவை எவ்வளவு நுணுக்கமாகப் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.

அளவைப்பற்றிய அறிவோடு மட்டுமல்ல, அளவினால் நம் உடலில் வந்துள்ள வரப்போகும் நோயைப் பற்றியும் அளக்கும் [அறியும்] அறிவியல் அறிவையும் பெற்றிருந்தனர். அதன் ஒரு அடையாளமே அகத்தியரால் எழுதப்பட்ட சூடாமணி கயிறு சூத்திரமாகும். இன்றைக்கு மனிதனின் நோயைக் கண்டுபிடிக்க எவ்வளவோ அளவை முறைகள் வந்துவிட்டன. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே மிக எளிமையாக எடுத்துரைத்த பாங்கு சிறப்பிற்குரியது.

சொல் விளக்கம்;

மணி: மணிக்கட்டு கடை: அளவு நூல்: புத்தகம், மணிக்கடை அளவு பற்றி சொல்லப்படும் நூல் சூடாமணி: தலை சிறந்த மணி, மதிப்புமிக்க பொருள்.

கயிறு:

விரற்கடை அல்லது விரல் அளவு எடுக்க பயன்படுத்தும் நூல் / கயிறு.

சூத்திரம்:

விதிமுறை சாஸ்திரங்கள், நுணுக்கம். சூடாமணி கயிறு சூத்திரம் என்பது சித்த மருத்துவத்தில் ஒரு பழமையான நோயறிதல் மற்றும் முன்கணிப்பு முறையாகும். இந்த நூல் அளவீடுகளைப் (விரற்கடை) பயன்படுத்தி நோய்களைக் கண்டறியும் முறைகளை விளக்குகிறது.

இலக்கியத்தின் அதிகாரம்:

பாரம்பரிய குறிப்புகளின்படி, இந்த அறி­வியலின் அறிவு, ஆதி குருவான சிவனிடமிருந்து முனிவர் அகத்தியருக்குக் கொடுக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக இது பகிரப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மிகு பழமையான சித்த வைத்தியத்தில் புகழ்பெற்ற முனிவரான அகத்தியர், மருத்துவம், ஜோதிடம், ரசவாதம், யோகம் மற்றும் ஆன்மீக அறிவியல், தற்காப்புக் கலை போன்ற

100க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் பாடல்களை இயற்றியுள்ளதால் இவர் சித்த மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

நூற் - குறிப்பு:

இந்த நூல் தனியாகக் கிடைக்கவில்லை, மேலும் சில பாரம்பரிய தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிட்ட பாடமாக சேர்க்கப்பட்ட சிறப்பு அத்தியாயமாக விவரிக்கப்பட்டுள்ளது. சூடாமணி கயிறு சூத்திர நூலில், சிவபெருமான் அகத்தியருக்கு உரைத்ததாக 30 பாடல்கள் அமைந்துள்ளன.

இலக்கண நடை மற்றும் நூல் அமைப்பு:

யாப்பு - வடிவம்:

நால்வகைப் பாக்களுள் மிகவும் பழமையானதும் இயல்பானதும் ஆன ஆசிரியப்பா வகையில் ஒன்றான நிலைமண்டில ஆசிரியப்பாவினால் இந்நூல் அமைந்துள்ளது. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஒவ்வொரு பாடலும் நான்கடியில் அமைந்து தம்முள் அளவொத்து வந்துள்ளது. ஒவ்வொரு பாடலிலும் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி அடியெதுகை பெற்று வந்துள்ளது. பத்தாம் பாடல் மட்டும் இவ்வகையில் அமையாமல் இரண்டடியால் ஆக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்தின் காலம்:

சங்க இலக்கியத்திலேயே நிலைமண்டில ஆசிரியப்பா வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. தொல்காப்பியரும் பாவகை பற்றிக் குறிப்பிடும் பொழுது ஆசிரியப்பாவை முதலில் குறிப்பிடுகிறார். அதனால், அதற்கு முந்தைய காலத்திலேயே இப்பாவகைப் பயின்று வந்திருப்பதிலிருந்து இப்பாவகையின் பழமையை அறியலாம். பழமையான பாவகையில் இந்நூல் அமைந்துள்ளதால் இந்நூலின் காலமும் முற்பட்டதாக இருக்க வேண்டும்.

நூலின் முக்கிய உள்ளடக்கம்:

இந்த நூல் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அறிமுகப் பகுதி, வழிமுறை, குணப்படுத்தக்கூடிய விரற்கடை அறிகுறிகள், குணப்படுத்த முடியாத விரற்கடை அறிகுறிகள் மற்றும் முடிவுப் பகுதி. அறிமுகப் பகுதியானது காப்பு எனப்படும் இலக்கிய வணக்கத்தை விவரிக்கும் இரண்டு செய்யுள்களைக் (பாடல்) கொண்டுள்ளது. இதில் வேடமுனியான சிவபெருமான் அகத்தியருக்கு அருள்செய்தது மணிக்கடை நூல் என்று குறிப்பிட்டுள்ளது. காப்புப் பாடலின் இரண்டாம் பாடல் சிவன் மகனான விநாயகப் பெருமான் இந்நூலிற்கு அருள வேண்டும் என்று வேண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாடலில் மணிக்கடை நூல் வாயிலாக எவ்வாறு நோய் அறிய வேண்டும் என்பதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. நான்காம் பாடலிலிருந்து இருபத்தியொன்பதாம் பாடல் வரை மணிக்கடையில் இருந்து நான்கு விரற்கடை தள்ளி அளக்கும்போது பதினொன்று விரற்கடையிலிருந்து நான்கு விரற்கடை வரை கால் கால் பகுதியாக பிரித்து அந்தந்த அளவுகள் வரும்போது ஒரு மனிதனின் உடலில் என்னென்ன நோய்க்கூறுகள் இருக்கும் என்பதை ஓரளவு அறிந்து கொள்ளலாம் என்பதைத் தெரிவிக்கின்றது. முப்பதாம் பாடலில் சிறப்புடைய சாஸ்திரத்தில் சூட்சுமமான இந்தச் செய்தியை உலகத்தில் உள்ளோர் நோய் குணங்களை அறிய வேண்டி சிவனே உரைத்ததாக அறிய வேண்டும் என்று நூலின் முடிவு கூறப்பட்டுள்ளது.

இந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ள அளவைகள் குறித்துக் கீழ்க்காணும் அட்டவணை தெளிவாக விளக்குகிறது.

தொற்று நோய்களைக் குறிக்கும் விவரங்கள்

decease metrics in tamil

தூணைநூல்கள்

1.           கந்தசாமி முதலியார். ஆத்ம ரட்சாமிர்தம்,வைத்திய சரசங்கிரகம் - பகுதி -1. இந்திய மருத்துவத் துறை மற்றும் ஹோமியோபதி துறை; 2010. 3 வது பதிப்பு,சென்னை

2. டாக்டர்.எம்.சண்முகவேலு. நோய் நாடல் நோய்முதல் நாடல் திரட்டு - பகுதி 1. இந்திய மருத்துவத் துறை மற்றும் ஹோமியோபதி துறை; 1 வது பதிப்பு 2009 ,சென்னை

3.           டி.வி.சாம்பசிவம் பிள்ளை. தமிழ்-ஆங்கில அகராதி- பகுதி 2. தொகுதி 1-5, 2 வது பதிப்பு.1998 இந்திய மருத்துவத் துறை மற்றும் ஹோமியோபதி துறை சென்னை.

4. வேலுமணி, ஆசிரியப்பா=அகவற்பா இந்திய இலக்கியம் - பன்னாட்டு ஆய்விதழ் இலக்கியம்:1(1), 64-68.

5.           கே.என். குப்புசாமி முதலியார். சித்த மருத்துவம்: பொது (தமிழ்). 1வது பதிப்பு. 2012: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை;சென்னை

6.           கணக்கதிகாரம், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், 1998.

- முனைவர் ஜா.திரிபுர சூடாமணி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை தர்மமூர்த்தி இராவ்பகதூர்கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை-72