‘புலியூர்க் கேசிகன் உரையைக் கையில் வைத்திருந்தாலே பாவம்’ என்று கருதுகின்ற மனநிலைதான் இன்றுவரை தமிழ் இலக்கிய மாணவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. அவரின் உரையைத் தழுவி எழுதப் பெறும் பிறர் உரைகள் இத்தண்டணைக்கு ஆளாவதில்லை. ஆனால், புலியூர்க்கேசிகன் மட்டும் தடை செய்யப்படுகிறார். 39 நூல்களுக்கு உரைகள், 9 திறனாய்வு நூல்கள், 8 சோதிட நூல்கள், ஆன்மிகம் முதலான நூல்களாக 6 என இத்தனை நூல்களை எழுதிய புலியூர்க்கேசிகன் இன்றுவரை புறக்கணிக்கப்படுவதன் காரணம் குறித்துச் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. புலியூர்க்கேசிகனைப் பற்றி நூல் வடிவ ஆவணங்களோ, இணையவழி ஆவணங்களோ இதுவரை இல்லை என்பதன்வழி, அவர் புறந்தள்ளப் பெற்றிருப்பதன் வலிமையினை உய்த்துணரலாம். ‘அவர்தம் உரைகள் புலமைத்துவம் அற்றவை; அவற்றைப் பயிலக்கூடாது’ என்றெல்லாம் புலமையாளர்களால் கருதப்பெற்ற சூழலில்தான் 2009இல் அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றிப் பெரும்பாலான மக்களால் வாசிக்கப்பெறுவதால்தான் அவரது உரைகள் இன்றுவரை பல்வேறு பதிப்பகங்களின்வழி மறுபதிப்புகள் பலவற்றைக் கண்டுள்ளன. புலமையாளர்களால் புறந்தள்ளப்பெற்ற ஒருவரின் உரை நாட்டுடைமையாகி இருப்பது குறித்தும், மிகுதியான மறுபதிப்புகளைக் கண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டும், புலமைத்துவம் அற்றதாகப் பொதுநிலையில் கருதப்பெறும் ஓர் தெளிவுரை பரவலாக வாசிக்கப் பெற்றிருப்பது குறித்தும் சிந்திக்க வேண்டியது நமது கடமையாகும்.வாழ்வும் பணியும்
16.10.1923 முதல் 17.04.1992 வரை வாழ்ந்தவர் புலியூர்க்கேசிகன். திருநெல்வேலி மாவட்டம், புலியூர்க்குறிச்சி எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இவர், புலியூர்க்குறிச்சி K.Chockalingan என்பதன் சுருக்கமாகவே புலியூர்க்கேசிகன் (புலியூர் K.C.gan) என்பதைப் பயன்படுத்தினார்1. பள்ளிக்கல்வியை டோணாவூரிலும் இடைநிலை வகுப்பைத் திருநெல்வேலி, ம.தி.தா.இந்துக் கல்லூரியிலும் நிறைவு செய்த இவர் வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் வழிகாட்டுதலினால் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியேற்றார். தொடர்ந்து கழகத்தின் சென்னை அலுவலராகப் பணியேற்றுச் செயல்பட்டு அருணா பப்ளிகேசன்ஸ், பாரி நிலையம், மாருதி பதிப்பகம் ஆகியவற்றின் மேலாளராகவும் தம் பணியைத் திறம்படச் செய்தார்.
அவர் மேற்கண்ட பதிப்பகங்களில் பணியாற்றிய காலக்கட்டங்களில் பல்வேறு நூல்களுக்கு அவர் உரை எழுதியுள்ளார். தொல்காப்பியம் (1958), நற்றிணை (1966), குறுந்தொகை (1965), ஐங்குறுநூறு (1982, 1983), பதிற்றுப்பத்து (1974), பரிபாடல் (1962, 1971), கலித்தொகை (1958), அகநானூறு (1960, 1962), புறநானூறு (1958), பத்துப்பாட்டு (1960), திருக்குறள் (1969), பழமொழி நானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை, திருவாசகம் (1964), திருப்பாவை (1959), நன்னூல், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, தகடூர் யாத்திரை, காளமேகம் தனிப்பாடல்கள், ஔவையார் தனிப்பாடல்கள், கொக்கோகம், இல்லற ரகசியம், பெண்மையின் ரகசியம், சிங்கார நாயகிகள் என்பன அவை.
இந்த உரைகளைத் தாண்டித் திறனாய்வு நூல்கள், சோதிட நூல்கள், உலாநூல், யோகநூல், ஆன்மிகம், வரலாறு, தொகுப்பு நூல்கள் எனப் பல துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். இந்நூல்களுள் பெரும்பாலானவற்றின் முதல் பதிப்புக் காலத்தைக்கூட இன்றுவரை அறிய இயலவில்லை. இவர்தம் சமகாலத்தில் செயல்பட்ட பிற அறிஞர்களின் படைப்புகள் காப்பாற்றப்பெற்ற அளவிற்கு இவர்தம் நூல்கள் காக்கப்பெறவில்லை என்பதை இதன்வழி அறியமுடிகிறது. பதிப்பியல் ஆய்வாளர்கள்கூடப் புலியூர்க்கேசிகனைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் வேதனையிலும் வேதனை. பதிப்பாசிரியர், உரையாசிரியர், மெய்ப்புத் திருத்துநர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட இவரது நூல்கள் புறந்தள்ளப்பட்டதன் காரணம் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
யாருக்காக உரை எழுதினார்?
பழந்தமிழ்ப் பனுவல்களுக்கு உரை எழுதிய பிற இலக்கண, இலக்கிய உரையாசிரியர்களிடம் காணப்பெறுகின்ற இயல்புகளான அருஞ்சொற்பொருள் குறித்தல் முதல் உள்ளுறை, இறைச்சி குறித்தல் வரையிலான அனைத்தும் இவர்தம் உரைகளிலும் காணப்பெறுகின்றன. பொருள் குறித்தலில் அடிப்படை மாற்றம் எதையும் இவர் செய்து விடவில்லை. பழந்தமிழ்ப் பொருள்கள் எவை என்பதை ஆய்ந்தும் தெளிவாக அறிந்துமே இவர் பொருள் குறிக்கிறார். ‘மரையா’ எனும் சங்கச் சொல்லுக்கான பொருளைத் தெளிவுபடுத்த முயற்சித்து உரையாசிரியர்களை அணுகியபோது, காட்டுக்குதிரை, மான் என்றெல்லாம் பொருள் குறித்த அறிஞர்களுக்கு மத்தியில் ‘மரையா’ என்பது இவ்விரண்டும் அற்ற ஓர் விலங்கு எனும் கருத்தியல் அடிப்படையில் ‘மரையா’ என்றே பொருள் குறித்த மிகச்சிலருள் இவரும் ஒருவர்2. அது காட்டுப்பசுவைக் குறித்தது என்று பின்னர் வந்த ஆய்வாளர்களாலேயே விளக்கப்பெற்றுள்ளது. இதுபோன்ற பல சான்றுகளை இவர்தம் உரையிலிருந்து காட்ட இயலும். இந்தளவிற்குத் தெளிவாகவும் கவனமுடனும் பொருள் குறித்த இவரது உரை புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணமே எளிமைதான் என்பது வேதனையிலும் வேதனை.
செவ்வியல் முதலான இலக்கண, இலக்கியப் பனுவல்களுக்கு எளிமையாகப் பொருள் குறித்து எளிய மக்களிடமும் இளந்தலைமுறையினரான மாணவர்களிடமும் அப்பனுவல்களைக் கொண்டு செல்ல முனைந்தவர் புலியூர்க்கேசிகன். அதற்கு அடையாளமாகவே அவர்தம் உரை நூல்களில் ‘மக்கள் பதிப்பு, தெளிவுரை’ எனும் கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறார். இந்தக் கலைச்சொற்களை இலக்கண, இலக்கியப் பதிப்புகளில் முதன்முதலில் பயன்படுத்தியவர் இவரே ஆவார். தற்காலப் பதிப்பு, வெளியீடுகள் இவரைப் புறக்கணித்துவிட்டு இவர் உருவாக்கிய இக்கலைச்சொற்களையும் இவர்தம் உரைநெறியையும் பயன்படுத்துகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகிறது. இக்கலைச்சொற்களைப் பயன்படுத்தும் இக்காலப் பதிப்புகள் உண்மையில் மக்கள் பதிப்புகளாகவும் தெளிவுரைகளாகவும் இருக்கின்றனவா என்பது அந்தந்தப் பதிப்பகங்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால், புலியூர்க்கேசிகன் அதைத் திறம்படச் செய்தார்; வெற்றியும் கண்டார். எளிமையாக்கத்தைத் தம் பெயரிலிருந்தே தொடங்குகிறார் (புலியூர்க் குறிச்சி K.Chockalingan = புலியூர் K.C.gan) அவர். “இப்பதிப்புக்கள் பலவும் தமிழறிஞருக்கு மட்டுமே பயன்படக் கண்டு, தமிழார்வம் உடையவர் அனைவருமே விருப்பமுடன் எளிதாகக் கற்று மகிழும் வகையிலேயும், இத்தெளிவுரை அமைப்பு உருவாக்கம் பெற்றிருக்கின்றது”3 என்று அகநானூற்று உரைநூலின் முகவுரையில் இவர் பதிவு செய்திருப்பதும் இதனை மெய்ப்பிக்கிறது.
உரைகள் - தோற்றப் பின்னணி
புலியூர்க்கேசிகன் உரை எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் எளிய மக்களை மையப்படுத்திய பதிப்புகளோ, உரைகளோ தோன்றவில்லை. புலமையாளர்களை மையமிட்ட உரைகளே தோற்றம் பெற்றிருந்தன. அதேவேளை, எளிய மக்களை மையமிட்ட தெளிவுரைகள் தோன்ற வேண்டிய தேவையும் இருந்தது. 1938 தொடங்கித் தமிழ்நாட்டில் நிலவிய மொழிப்போர்ச் சூழல் அதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. இவர்தம் உரைநூல்களுக்கான அடிப்படைக் காரணமும் அதுவேயாகும். 1938 முதல் 1967 வரையிலான காலக்கட்டங்களில் பல்வேறு கட்டங்களாக மொழிப்போர்ச் சூழல் தமிழ்நாட்டில் நிலவியமை அனைவரும் அறிந்த ஒன்றே. இக்காலக்கட்டத்தில் பலர் சிறை சென்றனர்; பலர் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானதும் ஜனவரி 23, 1968இல் கொண்டுவந்த இருமொழிக் கொள்கை தீர்மானமே மொழிப்போரின் முடிவாக அமைந்தது.
இந்தியை எதிர்த்து நடந்த இம் மொழிப்போரில் தமிழின் தொன்மை குறித்தும் வளமை குறித்தும் எளிய மக்களிடமும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை அக்கால அரசியல் இயக்கங்களுக்கு இருந்தது. அதற்குச் ‘செவ்வியல் பனுவல்களை மீட்டெடுப்பதே சிறந்த வழி’ எனும் கருத்தியல் ஆழமாக வேரூன்றியது. குறிப்பாக தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அரசியல் இயக்கத் தலைவர்களால் பரவலாகப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லப்பெற்றன. அக்காலக்கட்டத்தில் இருந்த பெரும் புலமையாளர்களின் பதிப்புகள் அனைத்தும் தமிழறிஞர்களால் மட்டுமே வாசிக்கக் கூடியனவாக இருந்தன. இந்தச் சூழலில்தான் எளிய, உழைக்கும் மக்களையும் மொழிப்போராட்டத்தில் பெருமளவில் பங்குபெற்ற மாணவர்களையும் கருத்தில் கொண்டு செவ்விலக்கியங்களுக்கான வசன நூல்களும் தெளிவுரைகளும் உருவாக்கப்பெற்றன. வசன நூல்களின் உருவாக்கத்திற்கு ந.சி.கந்தையா முன்னோடி என்றால் மாணவர்களை மையமிட்ட தெளிவுரைகளுக்கு புலியூர்க்கேசிகன் முன்னோடியாகத் திகழ்கிறார். இந்தப் பின்னணியில்தான் இவர்தம் உரைகள் தோற்றம் பெறுகின்றன.
1948இல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போரில் நேரடியாகக் கலந்து கொண்டவர் புலியூர்க்கேசிகன். ஏற்கனவே அச்சகத்துறையில் இருந்த அவருக்குத் தெளிவுரைகள், வசனங்களின் தேவை குறித்த புரிதல் உருவாகியதில் வியப்பேதும் இருக்காது. இதனடிப்படையிலேயே, மொழிப்போராட்டக் கள அனுபவப் பின்னணியில் இவர்தம் தெளிவுரைகள் உருவாகியிருக்கின்றன. இவர் முதன்முதலில் வெளியிட்ட தொல்காப்பியம், கலித்தொகை, புறநானூற்றுத் தெளிவுரைகள் வெளிவந்த ஆண்டுக்குறிப்பும் (1958) இதனைத் தெளிவுபடுத்துகிறது. இப்பின்புலத்தை அறிந்துதான் அக்காலக்கட்டப் புலமையாளர்கள், ‘எளிமையாக எழுதுவது செவ்வியல் பனுவலின் ஆழத்தைக் குறைப்பதைப் போன்றது’ எனும் கருத்தியலை உருவாக்கித் திட்டமிட்டு இவர் உரையைப் புறந்தள்ளியிருக்கின்றனர்; இன்றுவரை புறந்தள்ள வைத்திருக்கின்றனர். பெரும்புலமையாளர்களின் செயல்பாடு எளிய மக்களை மையமிட்டு அமையாத சூழலில் இவர்தம் செயல்பாடுகள் எளிய மக்களையும் இளந்தலைமுறையினரையும் மையமிட்டதாக அமைந்ததே அதற்கான முதன்மைக் காரணம் எனலாம். மற்றொரு காரணத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
அக்காலப் பெரும்புலமையாளர்கள் சமஸ்கிருதக் கருத்துகளோடு தமிழை ஒப்புமைப்படுத்தி, ‘சமஸ்கிருதக் கருத்தியல் போல் தமிழ்க் கருத்தியல் உள்ளது’ என்பதாகப் பேசும் இயல்புடையவராகவும் எளிய மக்களுக்குப் புரியாமல் எழுதுவதே நல்லது எனும் கருத்துடையவராகவும் பெரும்பாலும் திகழ்ந்தனர். இத்தகு இயல்புடையோருக்கு எளிய மக்களை மையமிட்டு உரை எழுதுவதென்பது எரிச்சலைத் தந்திருக்கத்தான் செய்யும். அச்சுப் பதிப்பியல் பின்புலத்தில் இருந்த புலியூர்க்கேசிகனுக்கு இது நன்கு புரிந்திருக்கும். அக்காலப் பெரும்புலமையாளர்களாகத் திகழ்ந்தவர்கள், எளிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தம் உரைகளை உருவாக்கி இருப்பார்களேயானால் புலியூர்க்கேசிகன் எனும் உரையாளர் தோன்றவேண்டிய தேவை இருந்திருக்காது. தெளிவுரையாளர் புலியூர்க்கேசிகனின் தோற்றத்திற்கு அடிகோலியது அக்காலப் பெரும்புலமையாளர்களின் செயல்பாடும் மொழிப்போராட்டமுமே என்றால் அது மிகையன்று. இந்தப் பின்னணியில்தான் எளிய நடையில் தம் தெளிவுரைகளை வெளியிடுகிறார் புலியூர்க்கேசிகன். எளிய நடையில் எழுதினாரே அன்றித் தம் புலமையைக் கைவிட்டாரில்லை. எளிமை, புலமை இரண்டும் இவர்தம் நெறிகளாயின. புலமைத்துவ உதவியுடன் எளிமையாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் தமிழறிவை ஊட்டுவதைக் கருத்தில் கொண்டுதான், ‘இவர் உரை பிழையானது; தவறானது; படிக்கக் கூடாதது’ என்பன போன்ற கருத்துகள் பெரும்புலமையாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப் பெற்றிருக்க வேண்டும்.
எளிய மக்கள், போராட்டக்கள மாணவர்கள் எளிதில் தமிழறிவு பெறுவதை விரும்பாத இந்த நிலை அக்காலத்தில் இருந்ததை மற்றொரு சான்றுவழியும் விளக்கலாம். சந்தி பிரித்துத் தமிழ் இலக்கியங்களை வெளியிட்டவர் மர்ரே எஸ்.இராஜம். இவரின் பதிப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்தவர் பேராசிரியர் எஸ்.வையாபுரியார். எளிய மக்களையும் மாணவர்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பெற்ற அப்பதிப்புகளையும் அக்காலப் பெரும் புலமையாளர்கள் வெறுத்தனர்; எதிர்த்தனர். இதனை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“மர்ரே அண்டு கம்பெனியார் சிலப்பதிகாரம், மணிமேகலைப் பதிப்புகளை வெளியிட்ட விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர் இந்த மாதிரி சந்திபிரித்து வெளியிடும் பதிப்புகளைப் பார்க்கவே என் மனம் சங்கடப்படுகிறது என்றார். அவரது கருத்தை மறுத்து நான் பேசியபோது, இரண்டாயிரமாண்டுகளாக என்போன்ற சாமானியர்களைச் சந்தியில் நிறுத்திச் சங்கடப்படுத்தியது போதாதா? சந்திபிரித்து வெளியிட்டால்தானே சங்கதி புரிகிறது என்று கூறினேன். அவையில் பெருத்த கைதட்டல் ஆரவாரம் எழுந்தது. இதனால் சந்திபிரித்து வெளியிடுவதை மக்கள் வரவேற்கிறார்கள் என்பது மேடையிலிருந்த புலவர்களுக்குப் புரிந்தது.”4
இப்பதிவு அக்காலச் சூழலில் நிலவியிருந்த எளிய முறைப் பதிப்பு, உரைகளுக்கான தேவையை வலியுறுத்துகிறது. இவற்றுள், எளிய முறையிலான மலிவு விலைப் பதிப்புகளை மர்ரே அண்டு கம்பெனியார் வெளியிட்டனர் என்றால், எளிய முறையிலான தெளிவுரைகளைப் புலியூர்க்கேசிகன் எழுதி வெளியிட்டார். இந்தப் பின்னணியில்தான் புலியூர்க்கேசிகன் உரைகள் தோன்றியுள்ளன. அவை புறந்தள்ளத்தக்கனவா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
உரை இயங்கியல்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்றவர், தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளாரின் மகள்வழிப் பேத்தியைத் (நீலாம்பிகை அம்மையாரின் மகள் சுந்தரத்தம்மையார்) திருமணம் செய்து கொண்டவர், கவிமணி, ந.மு.வேங்கடசாமியார், மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், மு.வரதராசனார் முதலானோரின் உதவிவழித் தமிழ்ப்புலமையை வளர்த்துக் கொண்டவர் எனத் தனித்தமிழோடு தொடர்புடைய இவர் உரையில் பிறமொழிக் கலப்பைக் காணமுடிகிறதே என்று கூறுவோரும் உண்டு. பிறமொழிக் கலப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மைதான். அக்கலப்புகள் ‘கதிரவன், ஆரவாரம், ஆபரணம்’ முதலான எளிய மக்களுக்கு நன்கு புரியும் சொற்களாகவே அமைகின்றன. இவற்றையும் போகிறபோக்கில் எழுதுகிறாரே ஒழியத் திட்டமிட்டு அவர் எழுதவில்லை. இச்சொற்களை வேறுசில இடங்களில் தனித்தமிழ்ச் சொற்களாகப் பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது.
புலியூர்க்கேசிகன் தெய்வ நம்பிக்கை உடையவர். ஆனால், வருணாசிரமத்திற்கு எதிரானவர். தம் உரைவழி அதையும் வெளிப்படுத்தி உள்ளார். அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலுக்குச் ‘சிவபிரான் வாழ்த்து’ என்று தலைப்பிட்டுத் தம் தெய்வ நம்பிக்கையைப் பதிவு செய்யும் இவர், “பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி” (அகம்.34:11) என்பதற்கு உரையெழுதும் போது, “ஆடை ஒலிப்பவள்” என்று பொருள் குறிக்கிறார். அவரின் சமகாலத்தில் வாழ்ந்த பெரும்புலமையாளரான சி.கணேசையரும் உ.வே.சா. பதிப்பின் வழி வெளியிடப்பெற்றுள்ள மயிலம் வே.சிவசுப்பிரமணியன் பதிப்பின் பொழிப்புரைகாரரும் இதற்கு, “ஆடை ஒலிக்கும் வண்ணாத்தி” என்று பதிவு செய்கின்றனர். இதேபோல், “வல்லோன் பொறியமை பாவையின்” (அகம்.98:19-20) என்பதற்கு ராஜகோபாலார்யனும் மயிலம் வே.சிவசுப்பிரமணியன் பதிப்பின் பொழிப்புரைகாரரும், “பொறியமைக்க வல்லவன் அமைத்த சூத்திரப்பாவை போல” என்று உரை குறிக்க புலியூர்க்கேசிகன், “வல்லோன் ஆட்டும் பொறியமைத்த பாவை போல” என்று பொருள் தருகிறார். இக்கருத்துகளுள் எது இயல்பானது? எது புறந்தள்ளத்தக்கது? என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
இதுபோன்று எளிய மக்களின் பக்கம் நின்று தம் தெளிவுரையை அமைத்ததால்தான் அக்காலப் பெரும்புலமையாளர்களாகத் திகழ்ந்தவர்கள் இவர் உரையைப் பொருந்தாவுரை எனக் கூறி, அவ்வுரைகளின் வாசிப்பையும் பரவலாக்கத்தையும் தடை செய்திருக்கின்றனர். நாமும், ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதற்கேற்றவாறு குருட்டு நம்பிக்கையோடு இன்றுவரை அதைப் பின்பற்றித் தவறான கருத்துகளை, பொருள் புரியாது பரப்பிக் கொண்டிருக்கிறோம். இதில் வேடிக்கை என்னவெனில் தம்மை இடதுசாரிகளாகக் கருதும் பேரறிஞர்களும்கூட எளிய மக்களின் பக்கம் நின்ற புலியூர்க்கேசிகனை ஏற்பதில்லை. மேலும், எளிய மக்களைக் கருத்தில்கொண்டு, பொருள் மாற்றம் ஏதும் செய்துவிடாமல் செவ்வியல் பனுவல் முதலான அனைத்திற்கும் உரையெழுதிய அவர்தம் எழுத்துகளை, ‘பரமார்த்த குருகதை போன்றவை’ என்றும் எள்ளி நகையாடுவதும் வேதனைக்குரியதாகிறது. அவரின் நூற்றாண்டு நிறைவிலாவது, ‘புலியூர்க்கேசிகன் உரை பொருந்தாவுரை; அதைப் புறந்தள்ள வேண்டும்’ என்போரின் கருத்துகளைப் புறந்தள்ளி விழிப்புடன் செயல்படுவது நமது கடமையாகும்.
குறிப்புகள்
1. லோகேஸ்வரன் ம., பரிபாடல் - பதிப்பு வரலாறு (1918 - 2010), ப. Xi
2. பரமசிவன் மா., அகநானூறு: களிற்றியானை நிரை - உரைவேறுபாடு, ப. 94
3. புலியூர்க்கேசிகன் (உரை.), அகநானூறு - களிற்றியானை நிரை தெளிவுரை, ப. 3
4. முனீஸ்மூர்த்தி மு., உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, ப. 73
- முனைவர் மா.பரமசிவன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.