கொரோனா காலகட்டத்தில் வில்லிசைக் கலைஞன் தங்கமணி மூலம் எனக்குக் கிடைத்த ஏடுகளில் அனந்தாயி கதை ஏடு தெளிவாக படிக்கும்படியாக இருந்தது. அதைக் கொஞ்சம் படிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே என்னிடம் இருந்த தாள் பிரதியின் கதை என்பதை அறிந்து கொண்டேன் என்றாலும் சிறிய கதை தானே என்று அதைப் பிரதி செய்துகொண்டேன்.

அனந்தாயி கதை ஏடு மலையாள ஆண்டு 1075 ல் (1910) பிரதி செய்யப்பட்டது. 715 வரிகள் கொண்டது. உத்தேசமாக ஒரு பக்கத்தில் ஆறு வரிகள். 60 ஒலைகள்.

16 செ மீ நீளம். 6. செ மீ அகலம். புதிய ஓலை அதனால் எழுத்துக்கள் படிப்பதற்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே எண்பதுகளின் ஆரம்பத்தில் அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப்பெருமாள் நாடாரிடம் வாங்கிய பிரதியை இந்த ஏட்டுப் பிரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ஆறுமுகப் பெருமாள் நாடாரின் பிரதி வில்லிசை நிகழ்ச்சியில் படிப்பதற்கு என்று மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால் இடையிடையே வசனப்பகுதி இருந்தது. ஏட்டுப்பகுதியில் வசனம் இல்லை. மேலும் தாள்பிரதி கொஞ்சம் விரிவாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டு கதைச்சுருக்கத்தைத் தயார் செய்து கொண்டேன்.angry womanஅனந்தாயி கதையை எனது பிஎச்டி ஆய்வேட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து படித்து அது தொடர்பாக சேகரித்த செய்திகளை மறுபடியும் புரட்டினேன். என் ஆய்வேட்டின் பக்க வரையறை கருதி அனந்தாயி கதையைப் பயன்படுத்தவில்லை. அதனால் நான் சேகரித்த பழைய செய்திகளை இந்தக் கட்டுரையில் சேர்த்துக் கொண்டேன்.

இந்தக் கதை ஸ்ரீவைகுண்டம் ஊர் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த கதை. அந்த ஊரை இப்போது அடையாளம் காண முடியவில்லை. ஸ்ரீ வைகுண்டத்திற்குக் கோட்டை பிள்ளை எனும் சமூகத்தினர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க சென்ற போது அனந்தாயி கதையைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன். மிகக் குறைவான செய்திகளே கிடைத்தன. அனந்தாயிக்கு அந்த ஊரில் வழிபாடு இல்லை என்பதை ஓரளவு கேட்டுத் தெரிந்து கொண்டேன். இந்தக்கதை நடந்த அந்தக் கிராமத்தையும் அடையாளம் காண முடியவில்லை.

அனந்தாயி இறந்த பிறகு இலக்கியம்மன், போன்ற வேறு தெய்வங்களுடன் இணைந்து வழிபாடு பெறுகிறாள் என்ற செய்தி மட்டும் ஸ்ரீவைகுண்டத்தில் கேட்டேன். தென் மாவட்டங்களில் இவளது வழிபாடு பரவலாக இல்லை என்றாலும் வெள்ளை மாரி என்னும் பெயரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி எல்லையில் உள்ள கடற்கரை கிராமங்களில் வழிபாடு பெறுவதை அறிந்தேன்.

பொதுவாகக் கொலைப்பட்டவரோ கொலைக்குக் காரணமானவரோ இறந்தவரை வழிபடுதல் என்பது பொது நியதி. ஆனால் இங்கு இறந்து தெய்வமான பிராமணப் பெண்ணான அனந்தாயியைப் பிராமணர்கள் யாரும் வழிபட்டதாக செய்தி கிடைக்கவில்லை அவளது கொலைக்குக் காரணமானவர்களும் அவளை வழிபட்டதாகச் செய்தி கிடைக்கவில்லை. ஆனால் அவள் எப்படியோ வழிபாடு பெறுகிறாள்.

அனந்தாயி கதை மற்ற கதைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. ஆனந்தாயி தற்கொலை செய்து கொண்டு தெய்வமானவள். சொத்துத் தகராறின் காரணமாக ஊரை விட்டு குடி பெயர்ந்து தன்னை மாய்த்துக் கொண்டவள். அவளுக்கு சரியான நியாயம் வழங்கப்படவில்லை. கைக்கூலி பெற்றுக் கொண்டு அவளுக்கு அநியாயம் செய்த மணியக்காரனும் அவனது குடும்பமும் இயற்கைப் பேரிடரால் அழிந்து போகிறார்கள்.

மற்ற கதைகளில் இருந்து இக்கதை வேறுபடும் இடமும் இதுதான். இந்தக் கதையில் பஞ்சதந்திரக் கதை தொடர்பான ஒரு நிகழ்ச்சி வருகிறது. வீட்டில் வளர்த்த கீரிப்பிள்ளையை அனந்தாயி அறியாமல் கொன்று விட்டாள். அந்தப் பாவத்தைத் தீர்க்க பாபநாசம் சென்ற கணவன் பாம்பு கடித்து இறக்கிறான்.

இதன் பிறகு அனந்தாயியின் கணவனின் உறவினர்கள் அவளை ஊரை விட்டு விரட்ட சதி செய்கின்றனர். ஆண் குழந்தை இல்லை. பெண் குழந்தை மட்டுமே இருக்கிறது. ஆகவே சொத்துக்கு உரிமை இல்லை என்ற காரணத்தைக் கூறி அவளை விரட்டுகின்றனர். ஊர் மணியக்காரனும் முதலில் அவளுக்காக பரிந்து பேசினாலும் பின்னால் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவளுக்குச் சொத்தில் உரிமை இல்லை என்று தீர்ப்பு சொல்லுகிறான். ஆகவே அவள் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

அனந்தாயி மணியக்காரனின் அநியாயமான தீர்ப்பைக் கேட்டு ஆவேசமாய் சாபம் கொடுக்கிறாள். கதைப்பாடலின் இந்தப் பகுதி உருக்கமாக உள்ளது. மணியக்காரனின் ஒரே மகளுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. அந்தத் திருமணம் நடக்காது. மணமகள் மட்டுமல்ல, குடும்பத்தார் எல்லோருமே அழிந்து விடுவார்கள் என்று சாபம் விடுகிறாள் அனந்தாயி. அவள் சாபம் பலிக்கிறது.

பேராசிரியர் வையாபுரி பிள்ளை சிலப்பதிகாரத்தின் காலத்தை கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கொண்டு செல்லுகிறார். இதற்கான ஆதாரங்களை விரிவாகவே தருகிறார். அந்தச் சான்றுகளில் ஒன்று பஞ்சதந்திரத்தில் வரும் கீரிப்பிள்ளை கதை. சிலப்பதிகாரத்தில் பார்ப்பனப் பெண் ஒருத்தி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இதே கதை பஞ்சதந்திரக் கதையிலும் வருகிறது. பஞ்சதந்திரக் கதையின் காலம் கிபி ஐந்தாம் நூற்றாண்டு என்பது பெரிடேல் சீத்தின் கருத்து. ஆகவே சிலப்பதிகாரம் இதற்குப் பிற்பட்டது என்பது வையாபுரிப் பிள்ளையின் வாதம்.

சிலப்பதிகாரம் அடைக்கலக்காதையில் வரும் மாடல மறையோன் கோவலனுக்கு நேர்ந்த அவலத்தைக் கேட்டு அவனைத் தேற்றுகிறான். கோவலன் செய்த நல்ல காரியங்களை எல்லாம் பட்டியலிடுகிறான். அப்போது சொல்லும் ஒரு செய்தி (அடைக்கலக்காதை வரி 54 75) பிராமணன் ஒருவனின் மனைவி தெரியாமல் பிழையாக கீரிப்பிள்ளை ஒன்றைக் கொன்று விடுகிறாள். அதனால் அவளது கணவன் அவனைப் பழித்து பேசுகிறான். உன் கையால் இனி சாப்பிட மாட்டேன் என்கிறான். அவளிடம் வடமொழியில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தைக் கையில் கொடுத்தான். இதை நல்லவர் யாராவது கிடைத்தால் காட்டு. உதவி செய்வார்கள் என்று சொல்லிவிட்டு அவன் அவளை விட்டு நீங்கி காசிக்குக் சென்று விடுகிறான்.

அந்த பிராமணப் பெண் கணவன் கொடுத்த வாசகம் அடங்கிய ஓலையைப் பலரிடம் காட்டுகிறாள். யாரும் அவளுக்கு உதவி செய்யவில்லை. கடைசியில் கோவலனிடம் கொடுக்கிறாள். அவன் அவளது பாவம் தீர உதவி செய்கிறான். வாழ்விற்கு உதவுகிறான்.

இந்தச் செய்தியைச் சொல்லும் சிலப்பதிகாரம் "பிள்ளை நகுலம் பெரும் பிறிது ஆக எள்ளிய மனையோள்" என்று கூறுகிறது (அடைக்கலக் காதை 54-55 இதற்கு அடியார்க்கு நல்லார் "தான் வளர்த்த கீரி தன் பிள்ளையைக் காத்திருந்ததாகவும் அதனை ஒரு பாம்பணுக அதனைக் கவ்வித் துணித்த குருதி வாயோடு தன் வரவு பார்த்து எதிர் கொண்டதனை தன் பிள்ளையைக் கடித்தது எனக் கருதி தன் கையின் மணையால் புடைக்க அது மரித்ததாலே வட திசை நோக்கி கங்கையாடப் போகின்ற கொழுநன் , " என்று கூறுகிறது (உ.வே. சா சிலப்பதிகாரம் 1960 பக் 402)

இப்படியாகப் புறப்பட்ட அந்தக் கணவன் ஒரு ஓலையில் வட மொழி வாசகம் ஒன்றை எழுதிக் கொடுத்து இதைத் தகுந்தவரிடம் காட்டு உதவி கிடைக்கும் என்கிறான். பிராமணன் எழுதிய வடமொழி (ஆரியம்) வாசகம் பஞ்சதந்திர கதையில் (5-18) வருவது என்கிறார் அடியார்க்கு நல்லார் (உ.வே.சா. மேற்படி).

இந்த வடமொழி வாசகம் "அபரீக்ஷ்ய ந | கர்த்தவ்யம் கர்த்தவ்யம் ஸு பரீக்ஷி தம் பச்சாத் பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணி நகுலம் யதா " என்பதாகும் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். இந்தச் செய்யுள் பஞ்சதந்திரம் 5 ஆம் தந்திரத்தில் முதற்கதையில் வருவது.

பஞ்சதந்திரம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட செய்யுள் நூல். ஆசிரியர் விஷ்ணு சர்மா. காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்பது பெரிடேல் கீத் கருத்து. இக்கதை பார்சி (570) அரபி (750) ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. பஞ்சதந்திரக் கதை உலகளாவிய நிலையில் பரவலாக அறியப்பட்ட கதை. இந்தக் கதையின் செல்வாக்கு சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல அனந்தாயி கதையிலும் வருகிறது.

மிக அபூர்வமாக வில்லுப்பாட்டில் இது பாடப்படுகிறது. அகால மரணம் அடைந்தவர்கள் பிரபலமான நாட்டார் தெய்வத்துடன் இணைந்து அதுவாக ஆகி வழிபாடு பெறுவது என்னும் பொதுவான கருத்தாக்கம் அனந்தாயி கதைக்கும் பொருந்தும். வாரியூர் அருகே ஒரு குக்கிராமத்தில் இசக்கி அம்மன் கோயிலில் வெள்ளமாரி என்னும் பெயரில் துணை தெய்வமாக கொடை விழாவிற்கு மட்டுமே வழிபாடு பெறும் ஒரு தெய்வத்தைப் பற்றிய விவரத்தை கேட்ட போது அது அனந்தாயி என்பதை அறிந்தேன். அந்தக் கோவிலைச் சார்ந்தவர்களுக்கு அந்த தெய்வத்தைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பதிவாக அங்கு வில்லுப் பாட்டு பாட வரும் கலைஞருக்கு அந்தக் கதை தெரிந்திருக்கிறது.

அனந்தாயி கதைச் சுருக்கம் வருமாறு

அனந்தாயி கதையை எனக்கு முதலில் சுயம்பு ராசன் சுருக்கமாக சொன்னார். அதன் பிறகு ஆறுமுகம் பெருமாள் நாடார் தந்த தாள் பிரதியைப் படித்து கதையை விரிவாக அறிந்து கொண்டேன். மறுபடியும் இந்தக் கட்டுரை எழுதுவதற்காக ஏட்டுப் பிரதியையும் தாள் பிரதியையும் ஒப்புநோக்கி ஒரு புதிய பிரதியை தயாரித்துக் கொண்டேன்.

காப்பு பாடலில் ஸ்ரீவைகுண்டம் ஊரில் பிறந்த பெண் அனந்தாயி என்பவரின் கதையைப் பாட கணபதியை நான் சரணடைகிறேன் என்று நூல் தொடங்குகிறது. உண்மையில் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இக்கதை நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் பக்தி சார்ந்த மக்கள் வாழும் ஒரு ஊர். பழமையானது. ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த 108 திருப்பதிகளில் ஒன்று. அற்புதமான சிற்பங்களுக்குப் பேர் போன யாளி மண்டபம் இங்கே இருக்கின்றது.

இந்த ஊரில் 60 பிராமண குடும்பங்கள் வாழ்ந்தன. அவர்களில் ஹரி கிருஷ்ணன் என்பவனும் ஒருவன். அவனது மனைவி அனந்தாயி. அவர்களுக்குத் திருமணம் ஆகி நாட்கள் பல ஆயின. குழந்தை இல்லை, அனந்தாயிக்கு 32 வயதானது. குழந்தை இல்லை என்ற ஏக்கம் அவளைத் துன்புறுத்தியது. அவள் கோவில் கோவிலாக சென்றாள். குலதெய்வங்களுக்கு விளக்கேற்றினாள்.

அவளது கண்ணீருக்கு குலதெய்வம் இரங்கியது. அவள் கர்ப்பமுற்றாள். மாதம் பத்தானது. அரிகிருஷ்ணன் மனைவிக்கு மகப்பேறு பார்க்க மருத்துவச்சி ஒருத்தியை அழைக்க ஆலோசனை செய்தான். வள்ளியூரில் மணிமாலை என்ற பெண் நன்றாக மகப்பேறு பார்ப்பாள் என்பதை அறிந்தான். அவளை அழைக்க அழகப்பன் என்ற ஓட்டனை அனுப்பினான்.

ஓட்டன் வள்ளியூருக்குப் போனான். மணிமாலை முதலில் ஸ்ரீவைகுண்டத்திற்கு வர மறுத்தாள். ஓட்டன் அவளுக்கு நிறைய பொன் கொடுப்பதாக சொல்லி ஆசை காட்டி அவளை அழைத்தான். அவள் ஸ்ரீவைகுண்டம் வந்தாள். மகப்பேறுக்கு உரிய மருந்துகளையும் எண்ணையையும் கூடவே கொண்டு வந்தாள். அனந்தாயியிக்கு மகப்பேறு பார்த்தாள். குழந்தை பிறந்தது. அதைத் தொட்டிலிலிட்டு தாலாட்டினாள் அனந்தாயி. மருத்துவச்சிக்கு நிறைய பொருளும் கொடுத்து வள்ளியூருக்கு அனுப்பி வைத்தான் அரிகிருஷ்ணன்.

குலதெய்வத்தின் அருளால் பிறந்த குழந்தைக்குக் கிருட்டிணத்தம்மை என்று பெயரிட்டான் அரிகிருஷ்ணன். திருநெல்வேலி பகுயிலிருந்து ஒரு ஜோதிடனை வரவழைத்து குழந்தையின் எதிர்காலம் பற்றி கேட்டான். ஜோதிடன் குழந்தையின் பிறந்தநாளை கணித்தான். ரொம்ப நேரம் கணக்கு போட்டான். பின் பேச ஆரம்பித்தான். இந்தக் குழந்தைக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அப்படியானால் குழந்தை நீண்ட ஆயுளோடு வாழும் என்று சொன்னான்.

அரி கிருஷ்ணன் ஜோதிடரிடம் பரிகாரத்தைச் சொல்லு உடனே செய்கிறேன் என்றான். ஜோதிடன் பரிகாரம் அவளுக்கல்ல, உனக்கும் அல்ல. கோவில்களிலும் செய்ய வேண்டாம், தெய்வங்களை வாழ்த்தி செய்ய வேண்டாம், உன் வீட்டிலே ஒரு கீரிப்பிள்ளை வளர்க்க வேண்டும். அப்படியானால் சர்ப்ப தோஷம் நிவர்த்தி ஆகும். அந்தக் கீரிப்பிள்ளையைக் கவனமாக உன் பிள்ளையைப் போல கவனித்து வளர்க்க வேண்டும் அதற்கு எதாவது நேர்ந்தால் உன் குடும்பமே அழிந்துவிடும் என்று சொன்னான்.

அரிகிருஷ்ணனுக்கு ஜோதிடர் சொன்ன பரிகாரம் சாதாரணமாகத் தோன்றியது. தன் நண்பர்களிடம் ஆலோசித்தான். அவர்கள் நம் ஊரில் இருந்து சற்று தொலைவில் உள்ள அருணகிரி மலையில் கீரிப்பிள்ளை இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். நாமே போய் பிடித்து வரலாம் என்று சொன்னார்கள்.

அரி கிருஷ்ணன் நண்பர்களுடன் அருணகிரி மலைக்குப் போனான். ஒரு குட்டிக் கீரியைத் தேடிக் கண்டுபிடித்தான். அதை ஒரு கூட்டிலே அடைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தான். மனைவி­யிடம் கொடுத்தான். அவளும் அதை அன்போடு வளர்த்தாள். கீரிப்பிள்ளை அவளுக்கு இரண்டாவது ஆண் குழந்தையைப் போன்று வளர்ந்தது. அதனுடன் கொஞ்சிப் பேசி விருப்பம் போல் அலையவிட்டு வளர்த்தாள்.

ஒரு நாள் அனந்தாயி தன் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளையும் கீரையையும் பறிப்பதற்கு தன் தோட்டத்திற்கு புறப்பட்டாள். கையிலே ஒரு கத்தியையும் கூடையையும் எடுத்துக் கொண்டாள். கீரி அவளுடன் புறப்பட்டது. அனந்தாயி "நீ குழந்தைக்கு காவலாக இருப்பாய். நான் தோட்டத்திற்குச் சென்று வருகிறேன் "என்று சொன்னாள். கீரி அவள் சொன்னபடி கேட்டது.

வீட்டை விட்டு அவள் கிளம்பினாள். அப்போது பல்லி அபசகுனமாய் ஒலியை எழுப்பியது. அவளுக்கு சகுனம் சரியில்லையோ என்று மனதில்பட்டது. ஆனால் அதைப் பெரிதாக எடுக்கவில்லை, அவள் தோட்டத்திற்குச் சென்று விட்டாள். பச்சைக் கீரைகளை கூடையிலே பறித்துப் போட்டாள். கத்திரிக்காய், வெண்டைக்காய் என காய்கறிகளையும் பறித்தாள். கொஞ்சம் இளைப்பாறி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள். அங்கே வீட்டில் நடந்த நிகழ்ச்சி என்ன அதையும் பார்ப்போம்.

அனந்தாயி தோட்டத்துக்குக் கீரை பறிக்கச் சென்ற கொஞ்ச நேரத்தில் நல்ல பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. மெதுவாக தொட்டிலின் பக்கம் வந்தது. இதைக் கீரிப்பிள்ளை கவனித்தது. உடனே பாம்பின் மேல் பாய்ந்து இரண்டு துண்டாக வெட்டியது. அதற்கு சந்தோஷம். இந்த நல்ல செய்தியைச் சொல்வதற்காக வீட்டுக்கு வெளியே வாசலில் காத்திருந்தது. அப்போதுதான் கூடையுடன் அனந்தாயி வந்தாள்.

அவள் கீரிப்பிள்ளையை பார்த்தாள். அதன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. கொஞ்சமும் யோசிக்கவில்லை தன் குழந்தையை அது கடித்துக் குதறிவிட்டது என்று நினைத்தாள். அன்போடு அவளது காலை வருடிக் கொண்டு நின்ற கீரிப்பிள்ளையைக் கொஞ்சமும் கருணை இல்லாமல் முன் யோசனை இல்லாமல் பின் வருவது அறியாமல் கூடையிலிருந்த கத்தியால் வெட்டி விட்டாள். உடனே கீரி செத்து மடிந்தது. அவள் பதைபதைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அங்கே தொட்டிலில் குழந்தை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. தொட்டிலின் அருகே நல்ல பாம்பு ஒன்று இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. எங்கும் ரத்தம். அனந்தாயிக்குப் புரிந்து விட்டது. பெரும் பாவம் செய்து விட்டேனே! ஜோதிடர் சொன்னது சரியாகி விட்டதே. உன் பிள்ளையைப் போல் கீரிப்பிள்ளையைக் கவனிப்பாய் என்று சொன்னானே, மறந்து விட்டேனே என்று சொல்லிச் சொல்லி அழுதாள். தலையிலே அடித்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் அனந்தாயியின் கணவன் வந்தான். மனைவி ஓலக்குரல் எடுத்து அழுத காரணம் கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். அவன் துண்டு துண்டாகக் கிடக்கும் பாம்பைப் பார்த்தான். வெட்டுப்பட்டு கிடந்த கீரியைப் பார்த்தான். இரண்டையும் எடுத்து வீட்டுப் பின் தோட்டத்திலே குழி தோண்டிப் புதைத்தான்.ananthaayi temple srivaikundam

(அனந்தாயி அம்மன் (சந்தனமாரி அம்மன்) கோயில், ஶ்ரீவைகுண்டம்)

கணவன் மனைவியிடம் "உன்னைப் பெரும் பாவம் பிடித்துக் கொண்டது. இதை எப்படித் தீர்ப்பது என்று யோசித்தான். அவள் நான் பாபநாசம் சென்று சுனையிலே குளித்து பாவத்தைப் போக்கி வருகிறேன். இன்னொரு கீரிப்பிள்ளையைப் பிடித்து வளர்க்கலாம். "என் பாவத்தைத் தீர்க்க எங்கு வேண்டுமானாலும் போவேன்" என்றாள். அவன் "நீ பாவம் தீர்க்க பாபநாசம் செல்வது சரிதான். ஆனால் நீ போக வேண்டாம். பெண்ணாய் பிறந்தவளுக்கு பாவம் சேராது என்று சொல்லுவார்கள். பெண் தனியாக தீர்த்தம் ஆடச் செல்லும் வழக்கமும் இல்லை. நம் குல வழக்கம் அதற்கு எதிரானது. அனந்தாயி நாம் இருவரும் பாபநாசம் செல்லவும் முடியாது. நானே செல்லுகிறேன். பாவம் தீர்க்க பாபநாசம் செல்லுவேன். உன் பாவத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். போகிறேன் நான் " என்றான்.

அரிகிருஷ்ணன் தன் நண்பர்களிடம் ஆலோசித்தான். ஒருவன் சொன்னான். ஏழு பேர்கள் சேர்ந்து போனால் பாவத்தின் கனம் குறையும் என்றான். ஏழு பேர்களுக்கும் அரிசி, பலசரக்கு, பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வேலையாட்கள் பாத்திர பண்டங்களைத் தலையிலே சுமந்து வந்தார்கள். அரிகிருஷ்ணன் நண்பர்களுடன் நடந்து காட்டு வழி நடந்தான்.

ஏழு பேரும் வழியில் கண்ட கோவில்களை வழிபட்டனர். புனித ஆறுகளிலே நீராடினர். சுனைகளில் நீராடினர். காட்டில் ஒரு இடத்தில் தங்கி பொங்கி சாப்பிட்டனர். பாபநாசம் சாஸ்தாவை வழிபட்டனர். அவரிடம் என்னவென்று தெரியாமல் செய்த குற்றத்தை பொறுப்பீர் என இரந்து வேண்டிக் கொண்டான், பின் வீட்டுக்குப் புறப்பட்டனர். அப்போது இருட்டிவிட்டது.

நண்பர்களில் மூத்தவன் சொன்னான். இருள் கவிழ்ந்து விட்டது. காட்டிலே இருட்டில் நடப்பதற்கு வழி தெரியாது. பயணம் செல்வதும் நல்லதல்ல. இந்தக் காடு கொடிய விலங்குகள் உடையது. இந்தச் சுனையின் அருகே இருக்கும் கல் மண்டபத்தில் நாம் இரவு தங்கிக் கொள்ளலாம். மழை வந்தாலும் பயமில்லை, பாதுகாப்பாக இருக்கும். நாளை காலையில் உறங்கி விழித்து சோர்வைப் போக்கிக் கொண்டு எழுந்து நடக்கலாம் என்றான்.

அவன் சொன்னதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். அவன் வழிகாட்ட அந்த மடத்திற்கு எல்லோரும் சென்றார்கள். அரிகிருஷ்ணன் மடத்தின் முன் மண்டபத்தில் படுத்துக் கொண்டான். அவனுக்குக் காவலாக நண்பர்கள் படுத்துக் கொண்டார்கள். வேலைக்காரர்கள் வேறு மண்டபத்தில் படுத்துக் கொண்டார்கள். இரவு நன்றாக உறங்கினார்கள்.

நடு இரவு காலனின் உருவில் ஒரு பாம்பு வந்தது. கருப்பு நிறத்தில் இருந்த அந்தப் பாம்பு ஆகாயத்தில் பறந்து வந்தது. ஏழு பேர்களையும் தொடாமல் அரிகிருஷ்ணனின் அருகிலே வந்தது. ஆகாயத்தில் பறந்து இருந்தபடி பாம்பு அவனைத் தீண்டியது. பின் ஆகாயம் வழி பறந்து சென்று விட்டது.

பாம்பின் விஷம் அரி கிருஷ்ணனின் உடம்பில் பட்டதும் மயக்கம் அடைந்தான். விஷம் தலைக்கேறியது. அவன் மயங்கியே கிடந்தான். நேரம் விடிந்தது. நண்பர்கள் எழுந்தார்கள். அவன் உறங்குகிறான் என்று நினைத்து அவனை எழுப்பவில்லை. நன்றாக உறங்கட்டும். கொஞ்சம் நாழியாகட்டும். பிறகு அவனை எழுப்பலாம் என்றான் ஒருவன்.

நண்பர்கள் காலைக்கடனை முடித்துக் கொண்டார்கள். காலை உணவைத் தயாரித்தனர். வேலைக்காரர்கள் அவன் எழுந்து வரவில்லை என்றனர். நண்பர்களுக்குக் சந்தேகம். அவனைத் தட்டினார்கள். சப்தமிட்டு அழைத்தார்கள். அவர்களுக்குச் சந்தேகம் வந்தது. அவனை தூக்கி நிறுத்திப் பார்த்தார்கள். அப்போதுதான் அவன் உடம்பு முழுக்க நீல நிற விஷம் பரந்து கிடப்பதைப் பார்த்தார்கள். அவன் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை அறிந்து கொண்டார்கள். கிடைத்த பச்சிலைகளை கசக்கி அவன் வாயிலே விட்டார்கள். ஆனால் அவன் இறந்து விட்டது உறுதியாகிவிட்டது.

நண்பர்கள் சுற்றி நின்று அழுதார்கள். அவர்களில் மூத்தவன் ஒருவன் "தோழர்களே நாம் இனி இந்த உடலை ஸ்ரீவைகுண்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. உடல் பாழாகிவிடும். இங்கே இதை எரித்து விடுவோம்" என்று சொன்னான். மற்றவர்களும் அதற்கு இணங்கினர்.

எல்லோரும் சேர்ந்து காட்டு விறகை அடுக்கினார்கள். அரி கிருஷ்ணனின் பிணத்தை விறகின் மேல் வைத்து சில சடங்குகள் செய்தார்கள். பிணம் எரிந்த அடுத்த நாள் சாம்பலை ஆற்றிலே கரைத்தனர். பின் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர். நண்பர்களைப் பார்த்த அனந்தாயி கணவன் எங்கே என்று கேட்டாள். ஒருவன் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னான்.

அனந்தாயி தரையில் புரண்டு அழுதாள், தன் குழந்தையை மடியிலே வைத்துக் கொண்டு அழுதாள். அதன் முகம் பார்த்துக் கொண்டு அழுதாள். அவளது அழுகுரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். உறவினர்கள் வந்தார்கள். அவளுக்கு உரிமை உடைய சொக்காரர்கள் வந்தார்கள். சில நாட்கள் சென்றன.

அரிகிருஷ்ணனின் உறவினர்கள் அளந்தாயியின் வீட்டிற்கு வந்தனர். அவளிடம் பேச ஆரம்பித்தனர் அவர்களில் மூத்தவன், "பெண்ணே உனக்கு ஆண் குழந்தை இல்லை. அதனால் உன் கணவனின் சொத்தில் உனக்கு உரிமை இல்லை. இந்த வீடு தோட்டம் எல்லாம் எங்களுக்குதான். நீ வீட்டை விட்டு வெளியே போய்விடு " என்றான்.

அனந்தாயி அவர்களிடம் பேசினாள் "ஐயா உங்களுக்கு கொஞ்சம் கூட கருணை இல்லையா? இந்தப் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு நான் எப்படி வாழ்வேன்? எங்கே போவேன் என் அம்மா அப்பா சிறுவயதில் இறந்து விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா, என் உறவினர்கள் எல்லோருமே ஏழைகள். என்னை வைத்து அவர்களால் பாதுகாக்கும் அளவுக்கு வசதி கிடையாது. எனக்கு யார் கதி?" என்றாள்.

உறவினர்கள் அசையவில்லை. நாங்கள் சட்டப்படி பேசுகிறோம். பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லை. இது நியாயமானது என்று சொன்னார்கள். அவள் அந்த ஊர் மணியக்காரன் முத்தையாவின் வீட்டுக்கு சென்றாள். தன் நிலைமையைச் சொன்னாள். உறவினர்கள் தன்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதைச் சொன்னாள்.

அப்போது அனந்தாயியின் சொந்தக்காரர்களும் மணியக்காரனின் வீட்டுக்கு வந்தார்கள். தங்கள் கோரிக்கையை முறையிட்டார்கள். மணியங்காரன் இரண்டையும் கேட்டான். "எனக்கு ஒரே மகள் இருக்கிறாள். அவளையும் நினைத்துப் பார்க்கிறேன். அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்த வாரம் என் மகளுக்கு திருமணம் நான் அநியாய வழக்கு உரைக்க மாட்டேன். சூரியன் தெற்கே உதித்தாலும் மாற மாட்டேன். நியாயமாக பேசுகிறேன். இந்த விதவையை நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னால் எங்கே போவாள். யோசித்துப் பாருங்கள். மாடும் வீடும் தோட்டமும் அவளுக்கே உரியது. இது என் தீர்ப்பு " என்று சொல்லி விட்டான்.

உறவினர்களுக்கு பேச முடியவில்லை மௌனமாக சென்று விட்டார்கள். அனந்தாயி வீட்டுக்கு போனாள். அன்று இரவு உறவினர்கள் எல்லோரும் கூடினார்கள். கணிசமான அளவுக்கு பணம் சேகரித்தார்கள். மூட்டையாக கட்டிக்கொண்டு மணியக்காரர் வீட்டிற்கு போனார்கள். அவன் முன்னே அதை வைத்து தீர்ப்பை நீ மாத்தி சொல்லு. இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

மணியங்காரன் மனம் மாறினான். அனந்தாயியை வீட்டிற்கு அழைத்தான். பெண்ணே நான் நேற்று சொன்ன தீர்ப்பு சரியானது அல்ல. பெண்ணுக்குச் சொத்தில் உரிமை இல்லை என்பது நம் ஊர் வழக்கம் அல்லவா. உனக்கு ஆண் குழந்தை இருந்தால் நான் உன் பக்கம் பேசி இருப்பேன். சட்டப்படி உனக்கு சொத்து கிடையாது. நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான். கருணையோடு உனக்கு ஸ்ரீவைகுண்டம் ஊர் கோவிலில் வேலை போட்டுத் தருகிறேன். நீ கோயில் மண்டபத்தில் இருந்து கொண்டு கட்டு சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழலாம் என்று சொன்னான்.

அனந்தாயி "ஐயா நீர் அநியாயம் பேசுகிறீர். நேற்று இரவு நியாயமாகப் பேசினீர். இப்போது கள்ள வழக்கு உரைத்து விட்டீர். பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி சொல்லி விட்டீர். என் கணவன் இதே ஊரிலேயே கோவில் தர்மகர்த்தாவாக அல்லவா இருந்தார். அந்தக் கோவிலில் நான் புழுக்க வேலை செய்ய வேண்டுமா. கொஞ்சமும் கருணை இல்லாமல் இப்படிச் சொல்லுகிறீரே.

பெண்ணுக்குக் கணவனின் சொத்தில் உரிமை இல்லை என்றால் அவள் எப்படி உயிர் வாழ முடியும்? அதற்கு உங்கள் நியாயம் என்ன? உங்கள் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன நியாயம் பேசுவீர்? உங்கள் மகள் இப்போது திருமணமாகாத கன்னி. நான் உங்களுக்குச் சாபம் விடுகிறேன். வயிறு எரிந்து பேசுகிறேன். மனம் நொந்து நெருப்பை அள்ளிக் கொட்டுகிறேன். உங்கள் மகள் உங்கள் இனம் கணவனின் உறவினர் யாரும் நன்றாக வாழ மாட்டார்கள். போகிறேன் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனாள்.

போகின்ற வழியில் அவளுடைய கணவனின் உறவினர்கள் கூடி இருந்த இடத்துக்குக் சென்றாள். அங்கே ஊர் மக்கள் சிலரும் நின்றார்கள். ஊர் பெருமக்களே எனக்காக நியாயம் பேச இங்கு யாரும் இல்லையா? இந்த ஊர் கள்ளபிரானும் மணியக்காரனுடன் சேர்ந்து விட்டானே! பெண்ணுக்கு சொத்து இல்லை என்று சொல்லி என்னை வெளியேற்றி விட்டானே! இந்த ஊர் அழிந்து போகும் என்றாள்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டாள். அவள் தோளிலே தூங்கிக் கொண்டிருந்த மகளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அந்த ஊர் எல்லையில் இருந்த காட்டுவழிச் சென்றாள். வழியிலே பாம்புகள் குறுக்கிட்டன. கரடி ஒன்று வந்தது. அவளைப் பார்த்துவிட்டு ஒதுங்கிச் சென்றது. காட்டில் பெரிய சுனையின் கரையில் நின்றாள். சூரியனைப் பார்த்து ஆவேசத்தோடு பேசினாள். எனக்கு நீதி வேண்டும். அநியாயம் செய்தவர்கள் அழிய வேண்டும் என்று சொன்னாள்.

இந்த நேரத்தில் மணியக்காரனின் வீட்டு கல்யாண வேலை நடந்து கொண்டிருந்தது மணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். உறவினர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். அனந்தாயியின் கணவனின் உறவினர்கள் தங்களுக்குப் பரிந்து பேசிய மணியக்காரனின் கல்யாணத்தில் முன்னே நின்று நடத்த வந்திருந்தார்கள்.

அப்போது மேகம் மூண்டது. எங்கும் இருள் சூழ்ந்தது. பெரும் மழை பெய்தது கல்மாரி பெய்தது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் புரண்டு ஓடியது. திருமண வீட்டிற்குள் ஆறு உள்ளேயே பெருக்கெடுத்து ஓடியது. திருமணப் பந்தலை அப்படியே கவிழ்த்தது. மண மேடையை உடைத்தது. பெரிய அரசமரம் ஒன்று மணியக்காரனின் வீட்டின் மேல் விழுந்தது. அந்தச் சிறு கிராமத்தில் வாழ்ந்த எல்லோரையும் ஆறு அடித்துச் சென்றது.

இந்த நேரத்தில் அனந்தாயி குழந்தையை அணைத்துக் கொண்டு சுனையிலே சாடினாள். இருவரும் பிணமாக ஆற்றிலே மிதந்தார்கள். இருவரின் உயிரும் கைலாயம் சென்றது. சிவன் அனந்தாயியிடம் "நீ வெள்ளத்தில் விழுந்து இறந்து தெய்வமானதால் வெள்ளமாரி என பெயர் பெறுவாய். உன்னைப் புதுமாரி வேப்பம் குழைக்காரி மஞ்சள் மாரி என்றெல்லாம் அழைப்பார்கள்." உனக்கு வெல்ல வரம் கொல்ல வரம். வெப்புநோயைக் கொடுக்கும் வரம் என வரம் தருகிறேன்" என்று சொன்னார்.

அப்போது அனந்தாயி சிவனிடம் " கள்ள வழக்கு சொல்லி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கின மணியக்காரனின் வம்சம் இல்லாமல் ஆக வேண்டும். அவனது வீடும் வாசலும் அழிய வேண்டும். என் கணவனின் உறவினர்கள் எல்லோரும் அழிய வேண்டும். அவர்களின் சொத்துக்கள் மண் முதல் போக வேண்டும். அந்த ஊரே அழிந்து போக வேண்டும் என்று வரம் வேண்டும்" என்று கேட்டாள். சிவன் அப்படியே தந்தேன் என்றார்.

அனந்தாயி ஆன வெள்ளை மாரி நான் என் சொந்த ஊரில் கோவில் கொள்ள மாட்டேன். சந்தனமாரி ஆக வழிபாடு பெறுவேன் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு இடங்களில் வழிபாடு பெற்றாள்..

(நன்றி: விகடன்.காம்)

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.