“எங்களோடு உறவாடிய ஒரு சமூகத்தின் வாழ்வு இதில் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. என் இணையரைப் பற்றிய பதிவுதான் இது. அதில் நானும் நீங்களும் இருக்கிறீர்கள், அதனால் இது நம் வரலாறு. அவரைப் பற்றி வாசிப்பது நம் வாழ்வை மேலும் அர்த்தப்படுத்தும்.”
பேராசிரியர் அரச.முருகுபாண்டியன், “அறம் சார்ந்து வாழ்ந்த ஒரு பெண் பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள்” எனும் பொருளில் ‘அறச்செல்வி சித்ரா’ எனும் நூலை உருவாக்கியுள்ளார். அந்தப் பின்புலத்தில் அவரது சொற்களே மேலே உள்ளவை. இந்த அரிய ஆவணத்தை வாசித்து முடியும் தருணத்தில், நமது மனசு கனத்துப் போகிறது. இனம் புரியாத சுமை அழுத்துகிறது; ஆனால் படிக்கத் தொடங்கும்போது, ‘சித்ரா’ என்ற அன்புள்ளத்தின் வாழ்க்கை என்றுதான் நூல் தொடருகிறது. அவரது அகால மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த நூலை வாசித்து முடித்த தருணத்தில் என்னுள் உருவான மனப் பதிவுகளை பதிவுசெய்ய முயற்சி செய்கிறேன். அதனை வசதி கருதி கீழே காணும் வகையில் பகுத்துக் கொள்கிறேன்.
- அம்பேத்கரிய வாழ்முறையைப் பேணிய இணையர்
- பெண்மையைக் கொண்டாடிய ஓர் ஆண்மகனின் பதிவுகள்
- கூட்டுக் குடும்ப வாழ்முறை எனும் அரிய நிகழ்வு
- ‘பாணர்குடில்’ எனும் பொதுவெளி
இந்த நூல் முழுவதும் அம்பேத்கர் ஊடுபாவாய் இருக்கிறார். திருமதி சித்ரா அவர்கள் அம்பேத்கர் குறித்தப் புரிதலோடு வாழ்ந்த முறையை அவரது இணையர் பதிவு செய்திருக்கும் முறைகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் அம்பேத்கர் குறித்தப் புரிதலை அறிய முடிகிறது.
அம்பேத்கர் என்ற மனிதர் இந்தியச் சமூகம் பற்றிய புரிதல் சார்ந்து செயல்பட்டவர். பொருளாதாரத் துறை, சட்டவியல் துறை ஆகியவற்றில் புலமைத்துவம் மிக்க அறிஞரான அம்பேத்கர், அந்தப் புலமைத்துவத்தின் மூலம் இந்தியச் சாதி அமைப்பும் அது இந்து மதம் எனும் நிறுவனத்தின் மூலம் செயல்படும் முறைகளையும் ஆழ்ந்த புலமைத்துவத்துடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். அவர் அடிமட்டத்தில், நசுக்கப்படும், ஒடுக்கப்பட்ட, தீண்டாமை அனுபவிக்கும் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது போராட்டம்தான், இந்தியாவில் வாழும் இன்றைய பட்டியல் இன மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது.
அம்பேத்கரின் மேற்குறித்த தியாகச் செயல்தான், சித்ரா-பாண்டியன் போன்றவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவர்கள் எவ்வாறெல்லாம் அம்பேத்கரை அறிந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை நூல் முழுவதிலும், பதிவாகியிருப்பதைக் காண்கிறோம். தங்கள் வாழ்முறைக்கு அடிப்படையாக அமைந்த அம்பேத்கரியத்தைச் சொல்லும் நூலாகவும் இதனை வாசிக்க முடிகிறது. இதனை நடைமுறைப்படுத்திய அமைப்பாக, சித்ரா அவர்களின் முழுமையான ஈடுபாட்டில், இருவரும் இணைந்து நடத்திய ‘போதி’ செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன.
பாணர்குடிலில் நடந்த ‘போதி’ அமைப்பின் கூட்டம் பின்னர் பிறிதொரு இடத்திற்கு மாறியது. இந்த அமைப்பை சித்ரா அவர்கள் நடத்திய முறை, அதில் அவருடைய இணையரின் பங்களிப்பு குறித்த விரிவான பதிவுகளை இந்நூலில் காண்கிறோம். சுமார் நாற்பது ஆண்டுகள், தமிழ்ச் சமூக அரசியல் செயல்பாடுகளின் மாதிரியாக போதி இருந்திருக்கிறது. தலித்திய செயற்பாட்டாளர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள், பல்வேறு இடதுசாரி கருத்துநிலை சார்ந்த அமைப்புகளில் செயல்பட்டவர்கள் என பல்பரிமாணத்தோடு, சனநாயக மரபு சார்ந்த அரசியல் மரபை ‘போதி’ நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இம்மரபை உருவாக்கிய சித்ரா - பாண்டியன் என்ற இணையர்களின் செயல்பாடுகள் விதந்து பேச வேண்டிய அருஞ்செயல்கள். இவர்கள் இப்படிச் செயல்பட வேண்டும் என்னும் உந்துதல், இவர்கள் உள்வாங்கியிருந்த அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் ஆகிய கருத்துநிலைகள் தான் காரணமாக அமைந்திருக்கிறது.
சித்ரா - பாண்டியன் என்ற இணையர் வாழ்முறை என்பது நடுத்தரக் குடும்பம் எனும் பொருளாதார அலகுகளைக் கொண்டது. இவ்வகையான குடும்பங்களில் ஆண்கள் பெரும்பாலும் ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பு சார்ந்தவர்களாக இருப்பதே இன்றைய எதார்த்தம். இவ்வகையான குடும்பங்களில் ஆண்கள், தமது இணையரைப் பற்றிப் பேசுவது என்பதே அரிய நிகழ்வு. இந்தப் பதிவில் பாண்டியன் அவர்கள் தமது இணையரை ‘குலதெய்வமாகக்’ கொண்டாடுகிறார். சித்ரா அவர்களின் ஒவ்வொரு அசைவு, ஒவ்வொரு மூச்சு, பல்வேறு இருப்புகள், அவரது கருணை - அன்பு சார்ந்த செயல்கள், அவரது விருப்பம், அவருடைய தேர்வுகள் என ஓர் உயிரியின் இயங்குமுறையை நுண்ணியதாய், ஆழமாய்ப் புரிந்து, தெரிந்து கொண்டாடிய பாங்கு இந்நூலில் முதன்மையாகக் காண்கிறோம். ஆணாதிக்க மனநிலையை இயல்பாகப் பெற்றிருக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் குறுகி, வெட்கமடைந்து, தன்னையே நொந்து கொள்ளும் மனநிலைக்கு பாண்டியன் அவர்களுடைய பதிவு அமைந்திருக்கிறது.
பெண்ணைப் பற்றிய பதிவு என்பது பெண்மையைக் கொண்டாடும் பதிவாக அமைய வேண்டும். அது நிலவுடைமைப் பண்பு என்ற நிலையை மீறி அன்பெனும் அரிய மரபில் அது திளைக்க வேண்டும். இது ஆண் - பெண் எனும் உயிரிகளின் சமத்துவத்தையும், அன்பையும் கொண்டு கொடுத்தலையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பதிவில் பாண்டியன் எனும் ஆண் அப்படியான உயிரியாக இருப்பதை உணர்கிறோம்.
ஆணாதிக்க சமூக ஒழுங்கில், ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் ஆண்கள் நிறைந்த இந்தச் சமூக வெளியில், பாண்டியன் அந்த மனநிலை இல்லாதவராக வாழும் சூழலை உருவாக்கியவராக திருமதி சித்ரா அவர்கள் இருந்து, மறைந்திருக்கிறார்கள். பாண்டியன் இப்படி வாழ்ந்தார் என்பதை சித்ரா என்ற உயிரியிலிருந்துதான் நாம் புரிந்துகொள்கிறோம். ஓர் ஆணின் ஆணாதிக்க மனநிலையை அழிக்கும் பண்புடையவராக சித்ரா இருந்திருக்கிறார் என்பதை இந்நூல் பல பரிமாணங்களில் நமக்குச் சொல்கிறது; இப்படியும் ஓர் இணையர்களா! எனும் வியப்பை சாதாரணமான மனிதர்களிடத்தில் உருவாக்குகிறது. இதனால்தான் பாண்டியன் அவர்கள் இப்படியான பதிவைச் செய்ய முடிந்திருக்கிறது. ஆணாதிக்க, நிலவுடைமைப் பண்பு சார்ந்த சமூகத்தில் சித்ரா-பாண்டியன் வாழ்முறை தனித்திருப்பதை இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது.
இந்த நூல் முழுவதும் குடும்ப உறவுகளின் பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சித்ரா-பாண்டியன் இணையர் குடும்பம் என்பது முதல் அல்லது இரண்டாம் தலைமுறை கல்வியறிவு பெற்றவர்கள். இன்றைய சமூக நெருக்கடி சார்ந்து இவ்வகையான குடும்ப உறவுகளில் நெகிழ்வுத் தன்மை அற்ற இறுக்கமான சூழலையே இச்சமூக அமைப்பு உருவாக்குகிறது. நுகர்வுப் பண்பாட்டிற்கு மிகுதியாக ஆளாகும் குடும்பங்கள் இவ்வகையானவை. ஆனால், சித்ரா-பாண்டியன் இணையர் குடும்பம் இன்றைய நெருக்கடிச் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, கூட்டுக்குடும்ப வாழ்முறையைப் பேணுவதாக அமைகிறது. குறிப்பாக, சித்ரா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பேணும் குடும்ப உறவுகள் நூல் முழுவதும் விரிந்து கிடக்கிறது. அன்பும் ஆதரவும் தான் மனித வாழ்க்கை என்பதை நடைமுறைப்படுத்தும் நிகழ்வுகள், இந்த இணையர் குடும்பத்தினரிடையே நிலவுவதை பாண்டியன் அவர்களின் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தன்மை எப்படிச் சாத்தியமாயிற்று? என்பதைத் தேடும்போது, திருமதி சித்ரா அவர்களே அதற்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறார். மனிதர்கள் மீது உள்ள அன்பு என்பது, அவர்கள் குடும்பத்தின் மீது வலுவான பிணைப்பாக உருப்பெறுகிறது. அன்பு எனும் பண்புதான் இப்படியான வாழ்முறைகளைத் தீர்மானிக்கிறது என்பது இந்த இணையரின் வாழ்க்கை உலகத்துக்குச் சொல்கிறது.
இந்த இணையர் உருவாக்கிய பாணர் குடில், சமூக இயங்குதளத்தில் பல்வேறு முன்னுதாரணங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. வீட்டையே பொதுவெளியாகக் கட்டமைப்பது என்பது சாத்தியமாகிறது. போதி என்ற நிகழ்வு மூலம், இவர்களுக்கு மட்டுமான வெளியாக இவர்களது பாணர் குடில் அமையவில்லை. அது பொதுநிகழ்வுகளுக்கான சமூக வெளியாகச் செயல்பட்டுள்ளது. போதி மூலம் நடந்த நிகழ்வுகள் என்பவை, இன்றைய தமிழ்ச் சமூகத்தின் அரசியல் புரிதல் சார்ந்தவை. தமிழகம் முழுவதும் செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஒன்று கூடல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்தியம், பெண்ணியம், தமிழ் தேசியம், மார்க்சியம் எனும் பல்வேறு சமூகக் கருத்துநிலைகள் குறித்த உரையாடல்களின் களமாக போதி நிகழ்வுகள் நடந்திருப்பதை அறிகிறோம். இதற்கான நிகழ்விடமாகவே பாணர் குடில் செயல்பட்டிருக்கிறது. திருமதி சித்ரா அவர்கள், இவ்வகையான நிகழ்வுகளில் விருந்தினர்களை அன்பு பாராட்டும் பல்வேறு பதிவுகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. உணவு, உடை, மகிழ்வாக தங்கியிருந்து செல்லுதல் ஆகிய அனைத்திற்கும் களம் அமைத்துத் தந்திருக்கிறது பாணர் குடில்.
தோழர் அரச. முருகுபாண்டியன் படைத்திருக்கும் ‘அறச்செல்வி சித்ரா’ எனும் அரிய ஆக்கம் என்பது, தமிழ்ச் சமூகத்தின் அரசியல் கருத்துநிலை சார்ந்து வாழ்ந்த இணையர்கள் இருவரின் பதிவு மட்டுமல்ல; தமிழ் சமூக அரசியல் இயங்குதளம் பற்றிய புரிதலாகவும் இருக்கிறது. அம்பேத்கரின் பல்வேறு கருத்துநிலைகளை நடைமுறையாக்கிய வாழ்முறையை இவர்களிடம் கண்டறிய முடிகிறது. இந்நூலை வாசிக்க வாய்ப்பளித்த தோழர் அரச.முருகுபாண்டியன் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றியும். .
அறச்செல்வி சித்ரா | அரச.முருகுபாண்டியன்
புலம் வெளியீடு | விலை: ரூ.300/-
சென்னை - 600 092 / தொடர்பு எண்: 6374949639
- வீ.அரசு