சத்தீஷ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் வைத்தியராஜ் என அழைக்கப்படும் ஹேம்சந்த் மஞ்சி என்பவருக்கு சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நாராயண்பூர் நகரில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு மஞ்சி உதவியுள்ளார் என்றும் அதற்கு ஈடாகப் பெரிய தொகையைப் பெற்றுக் கொண்டார் என்றும் நக்சலைட்டுகள் தரப்பில் குற்றம் சாட்டி மிரட்டப்பட்டதோடு இவரது உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மஞ்சி இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு பொதுமக்களுக்கு விளக்கமும் கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் இவர் தற்போது பத்ம ஸ்ரீ விருதினை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
மக்களுக்கு மருத்துவ சேவையாற்றியதற்காக ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட இந்த விருதைத் திரும்ப ஒப்படைக்கப் போவதாக ஒரு சமூக சேவகர் அச்சத்தின் காரணமாக அறிவித்திருப்பது துயரமானது. அவலமானதும்கூட.ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இதன் உள்விவகாரங்களில் தலையிட்டு அவருக்குப் போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யவேண்டும் என்பதோடு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டியது தற்போதைய அவசர அவசியத் தேவையாகும்.
தமிழிலக்கிய சூழலைப் பொருத்தவரை இது விருது வேட்டையாடிகளின் நிலம். விருது வேட்டையில் கடுமையான துரத்துதல்களின் காரணமாக நடுவர்கள் ‘ஆளை விட்டால் போதும்‘ என்று தப்பியோடிய கதைகள் பல உண்டு. விருதாளர்களை முடிவு செய்துவிட்டு நடத்தப்படும் சம்பிரதாயப் போட்டிகளுக்கும் குறைவில்லை. சாதா நிறுவன விருதுகள் முதல் சாகித்ய விருது வரைக்கும் ஒவ்வொரு முறை விருதுகள் வழங்கப்படும்போதும் சர்ச்சைகள் எழுவது பல்லாண்டு காலங்களாக இருந்து வரும் நடைமுறைதான். விருது பெற்ற பிறகான விருந்துகளைவிட விருதுக்கு முன்பான விருந்துகள் இங்குப் பிரசித்தம். மேல்விளக்கம் தேவையில்லை.
விருதுக்கு அலைகிறவர்கள் ஒரு ரகம் என்றால் இப்போது விருது வழங்கும் அமைப்பொன்று அம்பலப்பட்டிருக்கிறது.
புகழ் வாய்ந்த கவிஞர் ஒருவரின் பெயரால் அறக்கட்டளை தொடங்கி விருது வழங்கி வந்த ஓர் இலக்கிய அமைப்பு நான்காண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி ஒரு எழுத்தாளருக்கு இன்றைய தினம் வரை விருதுத் தொகையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஒரு எழுத்தாளனை விருதாளனாக அறிவித்துவிட்டு விருதுத் தொகையை வழங்காமல் அலட்சியப்படுத்துவது எவ்வகையிலும் உவப்புடையதல்ல. உடனடியாக இவ்விவகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் விருப்பம்.
இவ்வேளையில் விருது வழங்கப்படுவதற்கான தயாரிப்புகளை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு முன்னுதாரணமாக சமீபத்திய ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து 35 ஆண்டுகளாக இலக்கிய விருதுகளை வழங்கி வருகின்றன. இதில் தனிப்பட்ட பங்களிப்பாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த கவிஞர் கோ.கலியமூர்த்தி என்பவர் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டையொட்டி அவரது பெயரால் ஒரு விருது உருவாக்கி வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்து அதற்காக ரூபாய் ஒன்றரை லட்சத்தை தனது சேமிப்பிலிருந்து வழங்கியுள்ளார்.
தமிழ்க் கவியுலக வரலாற்றில் மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ்ஒளியின் மீதான தனது பெருவிருப்பின் காரணமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு ஒன்றரை லட்சம் நிதித் தொகுப்பு வழங்கியுள்ள அவரின் செயல்பாடு உள்ளபடியே நெகிழ்வுக்குரியதாகும். அவர் பாராட்டப்பட வேண்டியவர். வாழ்த்துக்குரியவர். வருங்காலத்தில் இன்னும் பலராலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும் என்பது நம் ஆவல்.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு