ஒரு ஞாயிறு பிற்பகலில் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியை விருத்தாச்சலம் பெரியார் நகரிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். கனிந்த முகத்தோடு வரவேற்றார். கணவர் கவிஞர் கரிகாலனும் உடனிருந்தார். பெயரக் குழந்தைகள் வியன், ஆழியோடு அளவளாவிய எழுத்தாளரை இலக்கியத்தின் திசையில் நகர்த்தி அழைத்து வந்தோம். மா மரங்களும் பலாவும் வாழையும் சூழ்ந்த அவரது தோட்டத்தில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

அளம், கற்றாழை, கீதாரி, ஆறுகாட்டுத்துறை, சிலாவம் உட்பட தமிழின் முக்கியமான நாவல்களை எழுதியவர். பல்கலைக் கழகங்களில் இவரது படைப்புகள் பாடங்களாக இருக்கின்றன.

தமிழ் வளர்ச்சித்துறை விருது, கலைஞர் பொற்கிழி விருது, த.மு.எ.க.ச விருது, அவள் விருது, புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் விருது, விளக்கு விருது, தமிழ்ப்பேராய விருது எனப் பெருமைகள் பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை. கேட்கும் கேள்விகளுக்கு தயக்கம் இல்லாமல் சிந்தித்தபடியே பதில் சொல்கிறார். வாருங்கள். சு. தமிழ்ச்செல்வியோடு உரையாடுவோம்.su tamilselvi 500வெவ்வேறு நிலம் சார்ந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பத்து நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் எழுதியுள்ளீர்கள். உங்களின் இந்த நெடிய எழுத்துப் பயணத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

குடும்பம், பணி இவற்றுக்கிடையே இவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பது பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எனது படைப்புகளைப் படித்த பலர் என்னோடு உரையாடுகிறார்கள். இருளில் காணத் தவறிய ஏதோ ஒன்றை, அவர்கள் என் எழுத்தின் ஒளியில் கண்டடைந்ததாகக் கூறினார்கள். பலர் என் கதைகளில் தங்களையே பார்த்ததாகச் சொன்னார்கள். அடுத்து என்ன செய்வது? தவித்தபோது என் படைப்பின் பாத்திரங்கள் எடுத்த முடிவுகள் தமக்கு உத்வேகமளித்ததாகத் தெரிவித்தவர் உண்டு.

என் படைப்புகள் ஊடாக நான் பல பிறவிகளை எடுத்தேன். ஏராளமான வாழ்வை வாழ்ந்தேன். புதிய நிலப் பகுதிகளில் உலவினேன். வாழ்வின் புதிர்களை அவிழ்க்க நள்ளிரவுகளில் கண்விழித்தேன். எழுத்து எனக்கு தீரா மனக்கொதிப்பைத் தந்தது. அதுவே அமைதியைக் கண்டுபிடிக்கும் வழியையும் காட்டியது.

வழக்கமான மதிப்பீடுகளைக் கலைக்கவும், நவீன வாழ்வுக்குகந்த மதிப்பீடுகளை அடையவும், என் படைப்புகள் சமகால சமூகத்துக்கு உதவியிருப்பதாகவே நம்புகிறேன். பழம் சமூகம் தன் காலத்தின் தாழியில் மூடிவைத்திருந்த நாட்டார் செல்வங்களை, என் படைப்பின் வழி அள்ளிவந்து தந்திருக்கிறேன்.

இதன்வழி மொழியின் கருவூலத்தைச் செழுமைப்படுத்தியிருக்கிறேன். பிரபஞ்சத்தின் முன்னால் நான் ஒரு சிறு துகள் என்பதை எழுதி எழுதி அறிந்திருக்கிறேன். சக மனிதர்கள் அறியவும் உதவியிருக்கிறேன். என் எழுத்தைப் பல்கலைக் கழகங்கள் எடுத்துச் சென்றபோது, மாணவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். அவர்களோடு உரையாடியபோது மேலும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் பெற்றேன்.

நான் என்பது என்ன? எனத் தேடிக்கொண்டே இருந்தபோது, அது வேறொன்றுமில்லை. நானென்பது என் எழுத்தென உணர்ந்தேன்.

வாழ்க்கைச் சூழல் காரணமாக கடுமையாக உழைக்கும் விளிம்புநிலைப் பெண்களை உங்கள் படைப்புகளில் அதிகம் ஆவணப்படுத்தியுள்ளீர்கள். அந்த அனுபவங்களைக் கூறுங்களேன்.

அடிப்படையில் வேளாண் குடும்பத்துப் பெண் நான். ஆகவே உழவு வாழ்க்கை எனக்கு மிகவும் பரிச்சயமானது. எங்களூர் ஒரு கடலோரக் கிராமம், என்பதால் மீன்பிடி வாழ்வையும் நன்கு அறிவேன். எங்களூருக்கு அருகேயுள்ள உப்பளங்களையும் அது சார்ந்த தொழிலாளர்கள் வாழ்முறையும் எனக்குப் பழக்கமானதுதான்.

திருமணத்துக்குப் பிறகு நாங்கள் விருத்தாசலத்தை ஒட்டிய பெரியார் நகரில் வசிக்கத் தொடங்கினோம். அங்கு எங்கள் குடியிருப்புப் பகுதி இடையே உள்ள காலி மனைகளில் கீதாரிகள் கூடாரங்கள் அமைத்து தங்குவார்கள். அந்தப் பெண்மணிகளோடு இரவில் பேசிக்கொண்டிருப்பேன். இரவில் மழை என்றால், அவர்கள் எங்கள் வீட்டில் தங்கிக்கொள்வார்கள். இப்படி அவர்களோடும் நெருங்க முடிந்தது.

பின்னலாடை நகரில் என் உறவுக்காரப் பெண்மணிகள் பலர் வேலை செய்தார்கள். ஒருமுறை அவர்களைப் பார்க்கச் சென்றபோது கற்றாழைக்கான விதை முளைக்கத் தொடங்கியது. எங்கள் தெருவில் ஒரு பெண் மீன் விற்பார். அவரிடம் மீன் வாங்குவோம். அவரே அரிந்து தருவார். அப்போது தன் கதையை என்னிடம் பகிர்ந்துகொள்வார்.

அது ஓர் இதிகாசம்போல வளர்ந்தபடி இருந்தது. அவரது கதையை ஒரு பாரமாக என் மனசு சுமந்து கொண்டிருந்தது. இறக்கி வைக்கலாமே எனத் தோன்றியது. அதுதான் கண்ணகி நாவல்.

 ஒரு முறை வேதாரண்யம் போயிருந்தோம். அப்படியே ஆறுகாட்டுத்துறைக்கும் போனோம். அங்கு ஒரு நாட்டாமைக்காரர். நண்பரொருவர் அவரிடம் என்னை எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் வீட்டுப் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது வளர்ந்த புதினம்தான் ஆறுகாட்டுத்துறை. அந்நாவலை எழுதி முடிக்க சில காலம் ஆறுகாட்டுத்துறையில் தங்க வேண்டி வந்தது.

பிறகு சிலாவம் நாவல் எழுத தூத்துக்குடி போனேன். சிலநாட்கள் கடலில் பயணித்தேன். புதிய தீவுகளுக்குப் போனேன். என் நாவல் பரப்பில் காணப்படுகிற வாழ்க்கை ஏதோ நாவல்களுக்காக நான் வேடிக்கை பார்த்து எழுதிய வாழ்வல்ல. நானும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் அனுபவித்த வாழ்வு.

இப்புதினங்களில் கண்ணீரும் வேர்வையும் மட்டுமல்ல. ஆன்மாவும் இருக்கிறது. மானுட இனவரைவியலுக்குத் தேவையான தரவுகள் இருக்கின்றன. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணக்கூடிய காப்பிய அவலங்கள் இருக்கின்றன.

சரி சிலாவம் நாவலில் வருவதுபோல் இப்போது முத்துக்குளித்தல் என்பதே நடப்பதில்லை என்று சொல்கிறார்களே அது குறித்து..

ஆம். சில தட்ப வெப்பச் சூழல் காரணமாக தூத்துக்குடியில் இப்போது யாரும் முத்துக் குளிப்பதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு குளித்ததாகச் சொல்கிறார்கள். இதனால் தூத்துக்குடிக்கு முத்து நகர் என்கிற பெயரும் உண்டு. சிலாவம் எழுதச் சென்றபோது அங்கு முத்துக் குளிப்பவர்களின் வாரிசுகளைச் சந்திக்க முடிந்தது. இப்போது அவர்கள் சங்கு மற்றும் சிப்பி சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சங்கு குளிப்பதற்காக அதிகாலையிலேயே கடலுக்குச் செல்கிறார்கள். கடற்கரையிலிருந்து பத்துமைல் தொலைவு சென்று சங்குகளை எடுத்து வருகின்றனர். முத்துக் குளித்த பழைய அனுபவங்களையும் இப்போது சங்கு, சிப்பி சேகரிக்கும் அனுபவங்களையும் இணைத்து, சிலாவம் நாவலை எழுதியிருக்கிறேன்.

தங்கள் படைப்புகளில் பதிவாகியுள்ள பெண்கள் இந்தக் காலகட்டத்திலும் இருக்கிறார்களா?

நிச்சயம் இருக்கிறார்கள். இன்னும் பெண்கள் வயல்காட்டில் அல்லல் படுகிறார்கள். அளத்தில் உப்பு சேகரிக்கிறார்கள். பெண் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிற சுமங்கலித் திட்டங்கள் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன .

குறைந்த சம்பளத்துக்கு பெண்களிடம் வேலை வாங்கும் போக்கில், பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை. ஆனாலும் நிலைமை முன்னேறி வருகிறது. தமிழகத்தில் பெண் கல்வியில் இடைநிற்றல் விகிதம் குறைந்திருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு சைக்கிள் கொடுத்தார். இப்போதைய அரசு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 கொடுக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை அளிக்கிறது. பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் திட்டத்தையும் பாராட்டியாக வேண்டும்.

இத்தகைய மாற்றங்கள் உருவாகவே எழுதுகிறோம்.

நம் சமூகத்தில் பொதுவாக ஆணாதிக்கக் கட்டுமானமாகவே குடும்ப அமைப்பு இருந்து வருகிறது. படித்து வேலைக்குச் செல்லும் பெண்களில் பலரது நிலையும் அவ்வாறாகவே இருக்கிறது. இதனை எப்படி சமன்படுத்த இயலும் என நினைக்கிறீர்கள்?

நிச்சயம் இயலும். இன்று மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. கோவிட் தொற்று காலத்தில் குடும்பத்தின் அவசியத்தை அனைவரும் உணரத் தொடங்கினார்கள்.

இன்றைய சூழலில் ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்கிறார்கள். அவ்வாறே இருவரும் சமையலறைக்குச் செல்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் இருவரும் அக்கறை காட்டுகிறார்கள். இளைய சமூகம் முன்பைவிட முற்போக்கான பாதையில் செல்வதைக் காண முடிகிறது. இருப்பினும் குடும்ப வன்முறைகள் குறித்த செய்திகளையும் ஊடகங்களில் கவனிக்கிறோம். கோவிட் காலத்தில் வெளியான தப்பெட், கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களுக்கு நிறைய பெண்கள் விமர்சனம் எழுதியிருந்தார்கள். குடும்பம் எந்த அளவு சனநாயகப் பண்பைப் பெறவேண்டும் என்கிற அவர்களது எதிர்பார்ப்பை உணரமுடிந்தது. இதை 2ளீ இளைஞர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மாற்றம் ஒன்றுதான் மாறாத விதி. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவலங்களையும் துயரங்களையும் எதிர்கொள்ளும் பெண்களை மட்டுமே தொடர்ந்து எழுதி வருகிறீர்களே?

அது, நான் பெண்ணாக இருப்பதாக இருக்கலாம். சமூகத்தால் ஒருவர் பாலினமாக அறியப்படுகிறவரை இத்தகைய சார்புகள் இருக்கவே செய்யும். ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவிலிருந்து எழுத வருபவர் தாம் சார்ந்த சமூகத்தை பிரதிபலிக்கவே செய்வார். அதேவேளை சமூகத்தை இப்படிப் பிரித்தும் பார்க்க முடியாது. இங்கு குடும்பம் என்கிற அமைப்பு யதார்த்தமாக இருக்கிறது. பெண்களைப் பற்றி எழுதுவது குடும்பம் குறித்த விமர்சனமாகவும் இருக்கிறது. அது குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் பாலின சமத்துவத்தை சனநாயகத்தை செயல்படுத்த உதவுமென நம்புகிறேன். இங்கு சட்டங்களை விடவும் மனப்போக்கில் மாற்றம் தேவைப்படுகிறது. அத்தகைய புதிய மதிப்பீடுகளை இலக்கியம் சமூகத்துக்கு வழங்கும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

su tamilselvi 640அப்படியென்றால் அடித்தள வர்க்கப்பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்பதோ கொண்டாட்டம் என்பதோ அறவே இல்லை என்று கூற முடியுமா?

அப்படிக் கூற முடியாது. அடித்தள மக்களிடம்தான் கேளிக்கை மனோபாவம் அதிகம். தங்கள் துன்பங்களை பாட்டிலும் கூத்திலும் கழிப்பவர்கள் அவர்கள். சிலப்பதிகாரத்தில் வருகிற குரவைக்கூத்தை ஆடியவர்கள் அடித்தட்டுப் பெண்களே. இயல்பாகவே படைப்பாக்க மனநிலை அதிகம் கொண்டவர்கள் பெண்கள். சலிப்பு நிறைந்த வாழ்வை கேளிக்கையாக மாற்றத் தெரிந்தவர்கள் அவர்கள். நடவு நட்டாலும் பாட்டு. நலங்கு வைத்தாலும் பாட்டு. உழவுக்கும் பாட்டு. இழவுக்கும் பாட்டு. பிறப்புக்கும் பாட்டு. இறப்புக்கும் பாட்டு என்பதே அடித்தட்டுப் பெண்களின் இயல்பாக இருந்து வருகிறது.

நீண்ட காலமாக நகரத்தில் வசித்து வந்தாலும் நகரத்துப் பெண்கள் குறித்தும் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வரும் கல்விப்புலம் சார்ந்த பெண்களைப் பற்றியும் ஏதும் எழுதவில்லையே?

கற்றாழை நாவல் கிராமத்தில்தான் தொடங்குகிறது. அது வந்தடைகிற இடம் திருப்பூர். கண்ணகி கிராமத்துப் பெண்தான். ஆனாலும் அவள் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை செய்வதாக எழுதியிருக்கிறேன்.

நுகர்வளவில் கிராமம் மற்றும் நகரத்துப் பெண்களிடையே சில வேறுபாடுகள் தோன்றலாம். அவை தோற்றம் மட்டுமே.

நகரமோ, கிராமமோ, பெண்கள் வசதியாக வாழுவதற்குத் தேவையான துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும். ஓரளவு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை இதற்கு உதவக்கூடும். நம்முடைய கல்வி முறையும் ஆண்களை முதன்மையாக ஏற்றுக்கொள்ளுகிற மனதைத்தான் பெண்களிடம் தயாரிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் நகரத்துப் பெண்கள், கிராமத்துப் பெண்கள் எனப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.

மெட்ரோபாலிட்டன் நாகரிகமென்பது வெறும் மால் போவது, மல்ட்டிஃபிளக்ஸ் தியேட்டருக்குப் போவதில்லை. அது பெண்களை, விளிம்புநிலை மக்களை சமத்துவமாக பாவிக்கிற மனநிலையாக உயரவேண்டும். அப்படிப்பட்ட மாநகரப் பெண்களின் வாழ்வையும் வருங்காலத்தில் எழுதுவேன். இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புதினம்கூட பள்ளி சார்ந்த உள்ளடக்கம் உடையதுதான்.

யதார்த்தவாதப் பெண் எழுத்தாளரான நீங்கள் பெண்ணியக் கோட்பாடுகளை எப்படி அணுகுகிறீர்கள்?

புதினங்கள் சிறுகதைகளை எந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலுயும் எழுதுவதில்லை. மார்க்ஸ் சொல்வதுதான். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலன் இருக்கிறது. நான் பெண் என்பதால் பாலின நலன் இருக்கலாம். மற்றபடி எனது கதைகள் யதார்த்தவாத அழகியலாக இருக்கலாம். அதேவேளை அவை நிலவுகிற யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை அல்ல. பெண்ணுக்கு உகந்த மாற்று யதார்த்தங்களை படைப்புகளில் வெகு இயல்பாகக் கட்டமைக்கிறேன். நான் கனவு காண்கிற யதார்த்தமே எனது படைப்புகளாக இருக்கின்றன.

தமிழில் பெண்கள் எழுத்து பெரிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்ற தங்கள் கருத்து இன்று மாற்றமடைந்திருக்கிறதா?

எப்போது இப்படி சொன்னேன். அல்லது எழுதினேன் எனச் சரியாக ஞாபகம் இல்லை.

(குறுக்கிட்டு) 2016இல் ஆனந்த விகடன்...

சரி, யாரிடமிருந்து அங்கீகாரம்? எதற்கான அங்கீகாரம்? அங்கீகாரம் தேவைதானா?

என்கிற கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். அங்கீகாரங்கள் ஒருவரது வேகத்தை, தேடலை, போராட்டத்தை குளிர்விக்கக் கூடும். அங்கீகாரங்களைக் கடந்து என் எழுத்துக்கள், வாசிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் ஆண் பெண் சமத்துவம் எந்தளவில் உள்ளதாகக் கருதுகிறீர்கள்?

ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. கூலித் தொழில் செய்பவர்களிடையே ஆண், பெண் ஊதிய விகிதத்தில் இன்னும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எம்.என்.சியில் வேலை செய்தாலும் பெண் என்றால் லேசான இளக்காரம் இருக்கத்தான் செய்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு இல்லை. பாலியல் சீண்டல்கள், வன்முறைகள் குறையவேண்டும். பெண்களை வல்காரிட்டியாகக் காட்டுகிற வணிகக் கலைவடிவங்கள், விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவைப்படுகிறது.

இன்றைய நிலையில் இன்னும் எப்படியான நிலைக்குப் பெண்கள் உயர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பெண்கள் படிக்கிறார்கள். உயர் பதவிக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் மனம் ஆண்களால் தயாரிக்கப்பட்ட மனமாகவே இருக்கிறது. கல்வி, மதம், பண்பாடு எனப் பரந்த அளவிலான முன்னேற்றங்கள், மாற்றங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக பாலின சமத்துவப் பார்வையை விரிவுபடுத்தும் பொறுப்பு, கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்களுக்கு இருக்கிறது.

நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த தொன்மங்கள் உங்கள் படைப்புகளின் ஊடாகப் பெருமளவில் வருகின்றன. அதைப் பற்றிக் கூறுங்களேன்.

உலகின் சிறந்த இலக்கியங்கள் யாவும் நாட்டார் கூறுகளை உள்ளடக்கியவையே. கடலும் கிழவனும் நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இல்லாத நாட்டார் கூறுகளா? ஏகாதிபத்தியங்கள், பெருந்தேசியங்கள் போன்றவை சிறிய இனக்குழுக்களின் அடையாளங்களை அழிப்பதில் கவனமுடன் செயல்படும்போது, படைப்புகளில் நாட்டார் அடையாளங்கள் தேவைப்படுகின்றன.

சிறந்த உள்ளூர் படைப்புகள்தாம் சிறந்த உலகப் படைப்புகளாகவும் போற்றப்பட்டிருக்கின்றன.

தாங்களறிந்த நாட்டார் தெய்வங்களின் கதைகள், நாட்டார் கதைகள், பாடல்களைத் தொகுத்து வெளியிடும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

அப்படி தனியாக வெளியிடும் எண்ணம் இல்லை. தன்னியல்பாக படைப்புகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். இவை பல்கலைக் கழகங்கள், நாட்டுப்புற ஆய்வாளர்கள் செய்யவேண்டிய பெரும்பணி என நினைக்கிறேன்.

நாட்டார் கதைகளை எவ்விதமாகச் சேகரிக்கிறீர்கள் எனக் கூற முடியுமா?

அளம், மாணிக்கம், கீதாரி போன்ற எனது புதினங்கள் பலவற்றில் நாட்டார் கதைகளை வாசிக்க முடியும். பெரும்பாலும் இவை எல்லாமே சிறுவயதில் நான் கேட்ட கதைகள். என்னுடைய அம்மா, அக்கா, எங்களூரைச் சேர்ந்த மூதாட்டிகளிடம் கேட்ட கதைகள். எனது சிறு பருவம் கதைகளால் வளர்ந்தது. எங்களூரில் இருந்த சிறு தெய்வங்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் கதைகளிருந்தன. வீடுகளில் செய்யப்படும் சின்னச் சின்ன சடங்களுக்குப் பின்னாலும் கதைகள் இருந்தன. இவை உண்மையா? பகுத்தறிவுக்கு உட்பட்டவையா? என ஆராய விரும்பியதில்லை. இவை ஒரு வளமார்ந்த சமூகத்தின் நினைவடுக்குகளில் இருந்தன.

இவற்றைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது, எனது கடமை எனக் கருதுகிறேன்

இன்றைய தமிழ்ச் சூழலில் பெண் எழுத்தாளர்களின் நிலை எப்படியுள்ளது? புதியவர்களின் வருகை நம்பிக்கையளிப்பதாக உள்ளதா?

சிறப்பாக உள்ளது. நிறைய புதுமுகங்கள் எழுத வருகிறார்கள். ஆகாத தீதார் என்று ஒரு சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன். ஆமினா முகம்மத் புதிய எழுத்தாளராகத் தோன்றவில்லை. இசுலாமியப் பின்னணியில் பெண்களின் வாழ்வியலை பிரமாதமாக எழுதியிருந்தார். பற்சக்கரம் என்றொரு நாவல். எஸ்.தேவி எழுதியிருக்கிறார். சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் பெண் அடையும் வலியை எழுதியுள்ளார். இவரும் புது எழுத்தாளர்தான். சிங்கப்பூரிலிருந்து எழுதும் ரமா சுரேஷின் புனைவுகள் தனித்தன்மை உடையது.

இப்படிப் பலர் எழுதி வருகிறார்கள். இத்தகைய சகோதரிகளின் இயக்கம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது. முகநூலில் பெண்கள் நிறைய பேர் கவிதைகள் எழுதுகிறார்கள். சமூக விமர்சனத்தில் ஈடுபடுகிறார்கள். இவற்றை ஆரோக்கியமான போக்காகப் பார்க்கிறேன்.

தற்போது ஏதும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?

இரண்டு நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்று கல்விப் புலம் சார்ந்தது. மற்றொன்று மருத்துவம் சார்ந்தது. இப்போது பேரக் குழந்தைகளைப் பேணும் வேலையும் சேர்ந்திருக்கிறது. அவர்கள் மழலையில் மகிழ்ந்திருக்கும் காலமிது. ஆனாலும் எழுத்துப்பணி ஓயப்போவதில்லை.

பொதுவாக இன்றைய தமிழிலக்கிய சூழல் போக்குகள் உங்களுக்கு நிறைவளிக்கக் கூடியதாக இருக்கிறதா?

நிறைவளிக்கிறது. நிறைய இளைஞர்கள் புதிதாக எழுத வருகிறார்கள். தேய்வழக்குகள் இல்லை. கதை சொல்லலில், கவிதையில், புதுமை வளர்கிறது. நேர்க்கோட்டு கதை மரபு மாறியிருக்கிறது.

எல்லாவற்றையும் கலைத்துப்போடும் உத்வேகத்தை இளம் தலைமுறைப் படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள். லஷ்மி சரவணக்குமார், அகரமுதல்வன், என்.ஸ்ரீராம், நரன், கதிர்பாரதி, பூவிதழ் உமேஷ், மாதவன் அதிகன், சீனிவாசன் நடராசன், கார்த்திக் திலகன், வெய்யில், திருச்செந்தாழை இப்படிப் பலர் புதுமை விருப்பத்தோடு இயங்குகிறார்கள். சமீபத்தில் மு.தமிழ்ச்செல்வன் எழுதிய கரிக்காசு நாவலையும் வெற்றிச்செல்வன் எழுதிய குளம்படி நாவலையும் படித்தேன். இரண்டுமே முக்கியமான நாவல்கள். இயற்கை வேளாண்மை குறித்து வானவன் எழுதிய ஒரக்குழியும் பொருட்படுத்தி வாசிக்க வேண்டிய நாவல்.

சமகால தமிழ் இலக்கியச் சூழல் ஆரோக்கியமான திசைவழியில் இயங்குவதாகவே நம்புகிறேன்.

- சு.தமிழ்ச்செல்வி

நேர்காணல்: ஜி.சரவணன்