கவிதை காலத்தின் கல்வெட்டு. கற்பனை, புனைவு என்றின்ன பிற கூறுகள் சேர்ந்தெழுந்தாலும் அதன் அடிக்கட்டுமானம் உண்மையின் பலத்தாலானது. அத்தகு உண்மையையும் வரலாற்றையும் முன்னிறுத்துகின்ற கவிஞனையும் காலம் தொலைப்பதில்லை. மறந்திருந்தாலும் நகர்ந்திருந்தாலும் தேடிக் கண்டடைந்து களத்திற்குக் கொண்டுவந்து நிறுத்திக் கைதட்டுகிறது. அந்நிரலில், தற்காலம் நூற்றாண்டு கொண்டாடி வந்திருக்கின்ற கவிஞர்தான் தமிழ்ஒளி.
தமிழ்நிலத்தின் பல்வேறு போராட்ட முகத்தை, ஒடுக்கப்பட்ட சமூகத்தை, தாய்மொழி இருப்பை, தமிழ்க் காப்பியங்களை மீளாய்வு செய்த ‘கண்ட காவிய’ப் படைப்புகளை எனத் தமிழ்ஒளி வெளிப்படுத்திய வரலாறுகளெல்லாம் எடுத்தேத்தப்பட்டு வருகிறது. ஆயினும், காலம் தாண்டிய கண்டுகொள்ளலில் கவிஞரின் மேற்பரப்பைத் தொட்டுக்காட்டியும் பரப்பளவை விரித்துக் காட்டியும் புலப்படுத்தும் முயற்சிகளோடு ஆழத்தை அளந்து காட்டுகிற தேவையும் இங்கிருக்கின்றது. அத்தகைய அளவுக்கு உள்நுழையும்போது தமிழ்ஒளியை எல்லாருடைய மனதிலும் நுழைக்க முடியும். தார்மீக எண்ணங்கொண்டு, வாழ்தலில் தாகங்கொண்டு நாற்பது வயதுக்குள்ளே கவிஞர் நமக்குச் விட்டுச்சென்றுள்ள ஆழ ஆதாரங்களில் ஒன்று ‘போர்க் கொடி'க் கவிதை.
சென்ற நூற்றாண்டின் நவீனத்தின் அடையாளமாகச் சென்னையைச் சுற்றிச் சுற்றி வந்தது ‘டிராம்’ வண்டி. இன்று பழம்பெருமையாக, 'மதராசபட்டினம்' (2010) எனும் திரைப்படத்தில் காட்டப்பட்டக் கதையாக அருங்காட்சியகப் பொருளாகி நிற்கின்றது. டிராம் வண்டி இயங்கிய பின்புலத்தில் பல்வேறு தொழிலாளர்களின் உழைப்பும் உத்திரவாதமின்மையும் இருக்கின்றன. அவற்றை மிகத் தெளிவாகப் பறைசாற்றுவதுதான் போர்க்கொடி கவிதை. பெருநிறுவனங்களுக்கே
உரித்தான திடீரென்று நிறுவனத்தை இழுத்து மூடிய துன்பத்தை எதிர்த்ததுதான் டிராம்வே தொழிலாளர் போராட்டம்.
‘தி மெட்ராஸ் எலெக்டிரிக் டிராம்வேஸ் லிமிடெட்' எனும் பெயரில் 1894இல் ஹட்சின்ஸன் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில் டிராம்களைச் சோதனை முயற்சியாக இயக்கியது. இம்முயற்சியின் விளைவால் 7.5.1895இல் சென்னையில் மின்சாரத்தால் இயங்கும் டிராம் போக்குவரத்து தொடங்கப்பட்டது (வீரபாண்டியன்: 2022: 242). 1904இல் இங்கிலாந்து நிறுவனமொன்றின்கீழ் விரிவுபடுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான டிராம்கள் நகரத்தில் இயக்கப்படலாயின (இராமச்சந்திர வைத்தியநாத்: 285. தொடக்கத்தில் துறைமுகத்தில் இருந்து பொருட்களை, மக்களை ஏற்றிக்கொண்டு வரப் பயன்படுத்தப்பட்ட டிராம், நாளடைவில் அனைத்திற்குமான முக்கியப் போக்குவரத்தானது. ஆயினும், பொருளாதார இழப்பு எனும் காரணம் காட்டித் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் காலங்கடத்தியது. ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, 11.4.1953ஆம் நாளோடு டிராம் போக்குவரத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் 1650 தொழிலாளர்கள் வேலைஇழந்தனர். இச்சூழலில், தொழிலாளர்களின் முறையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் போராட்டம் வெடித்தது.
நகரத்திலும் பொதுமக்களுக்குப் போக்குவரத்து தடைபட்டது. அடுத்தடுத்த நாள்கள் புனிதவெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு என முக்கிய நாள்களாக இருந்தமையால் மக்கள் போக்குவரத்திற்கு இன்னலுற்றனர். சூழலைச் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் பேருந்துகளோடு சரக்கு வண்டிகளையும் இயக்கியது. ஒரு மணி நேரத்திற்கு 7கி.மீ. தான் பயணிக்க முடிந்தாலும், பேருந்து, மின்சார இரயில் போக்குவரத்துகள் இருந்தாலும் டிராம் வண்டிகள் இல்லாமல்போனது பெரும்பாதிப்பையே தந்தது. டிராம் நிறுவனம் 1948லிருந்தே நட்டத்தில் இயங்குவதாகவும் இதனைச் சமாளிக்க பயணக்கட்டணத்தை அதிகரித்தால் பயணிகள் வருவது குறைந்து இன்னும் நட்டமேதான் ஏற்படும் என்பதாலும் நிறுவனத்தை மூடிவிட்டாதாகக் கூறிவிட்டது. இந்தச் சூழ்ச்சி முன்னரே முடிவெடுத்ததுதான் என்பதைத் தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர்.
ஆட்குறைப்பு செய்தமை, பராமரிப்புத் திறமையின்மை, உயர் பணிகளில் இருப்போர்க்குத் தரப்படும் அதிகமான ஊதியம், பழுதுபார்க்கும் பிரிவின் மிகையான செலவு, தொழிற்சங்கம், தொழிலாளர் நீதிமன்றம், அரசாங்கம் கருத்துரைத்தவற்றை எல்லாம் நிறுவனம் பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்பட்டன (விடுதலை: 13.4.1953). எனவே, தொழிலாளர் சார்பில் ஆர். வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், தொழில்துறை அமைச்சரான கிருஷ்ணாராவ் உள்ளிட்டோரால் அரசே ஏற்று நடத்த வேண்டும் என முறையிடப்பட்டது. அன்றைய முதலமைச்சர் இராஜாஜி, மாநில அரசு ஏற்று நடத்த முடியாத நிலையுள்ளது எனவே மக்களையும் டிராம்வே தொழிலாளர்களையும் மனதில் கொண்டு இந்தப் போக்குவரத்தையும் ‘இரயில்வே' நடத்திட வேண்டும் என்று கோரினார். ஆனால் அது நடக்கவில்லை. மாநில அரசாங்கமே நடத்திடவும் பலதரப்பும் விரும்பலாயின. 'டிராம்வே வேலை நிறுத்தம்' என்ற தலைப்பில் ஏப்ரல் 19ஆம் நாள் திராவிட நாடு இதழில் சி.என்.அண்ணாதுரை(இணையதளப் பதிவு).
'நஷ்டம் வருகிறது - ஆகவே மூடுகிறோம்' என்பதாகத் தெரிவித்துவிட்டு சென்னை டிராம்வே முதலாளிகள், 1600க்கு மேற்பட்ட தொழிலாளர்களை அனாதைகளாக்கி விட்டனர். ஆங்காங்கும் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் இந்த நேரத்தில், முதலாளிகள் வசமிருக்கும் டிராம்வே நிர்வாகத்தை, சர்க்காரே ஏற்று நடத்த வேண்டும். ‘சர்க்கார் நடத்தினால் நஷ்டம் வரும்' என்று காரணங் கூறப்படுவது சரியானதல்ல. ஒழுங்காகவும், தொழிலாளர்களின் உள்ளத்தைத் துன்புறுத்தாமலும் நிர்வாகம் நடைபெற்றால், எப்படி நஷ்டம் வரமுடியும்? - ஆகவே, தேவையானால் அவசரச் சட்டம் ஒன்று பிறப்பித்து, டிராம்வே நிர்வாகத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். பஸ் ‘இலாகாவால் சமாளித்துவிட முடியும்' என்று சர்க்கார் பெருமை பேசிக் கொள்வது, சில நாட்களுக்கே முடியும்’
என்று எடுத்துரைத்திருக்கின்றார். இத்தகுநிலையில்தான் தொழிற்சங்கத் தரப்பில் வேலைநிறுத்தம் செய்திட முடிவாகிறது. ஆனால் போராட்டம் முழுவீச்சாக நடைபெற முடியவில்லை.
ஏப்ரல் 24ஆம் நாள் காலை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 66 டிராம்வே தொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். டிராம்வே தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் சி.கே. சம்பந்தம் மற்றும் முக்கியப் பொறுப்பாளரான எஸ்.கோபாலன் ஆகியோரும் கைதாகினர். இதனால் போராட்டத்தை நடத்தவிடாமல் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தியது காவல்துறை. மேலும், 'அவர்கள் மீது கலகம் செய்ததாகவும் சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதாகவும் கொலை செய்ய முயன்றதாகவும் ' வழக்குகள் போராட்டம் பதிவானதை விடுதலை இதழ்(25.4.1953) காட்டுகிறது. இது நடைபெற்றிருக்கலாம் என ஊகிக்க வழிசெய்கிறது. இருப்பினும் அது தொடக்க முயற்சியா அல்லது வேலையின்மைக்கான போராட்டமாகவே நடந்ததா என்பதை அறியமுடியவில்லை. அதேநேரம்,
‘அவர்கள் குமாஸ்தாக்களும் வேலைக்குச் செல்லாமலிருக்க கோரி அமைதியான முறையில் மறியல் செய்ய நிச்சயித்திருந்தனர். இதனால் குழப்பமும் உயிர்சேதம், பொருள்சேதங்களும் ஏற்பட ஏதுவாகக் கூடுமென அறிவித்த சென்னை நகர போலீசு கமிஷனர் நகரின் சில பகுதிகளிலும் ரோடுகளிலும் ஒருமாத காலத்துக்கு கூட்டம் போடவோ, தடிகள் முதலான அபாயகரமான ஆயுதங்களை ஏந்திச் செல்லவோ கூடாதென 144பிரிவின்கீழ் தடையுத்தரவு பிறப்பித்தள்ளனர்'
என்பதிலிருந்து, ஒரு பெரிய போராட்டம் திட்டமிடப்பட்டு அது காவல்துறையின் தடுப்பு நடவடிக்கையால் அப்போது நடைபெறாமல் போயிருப்பதை அறியமுடிகின்றது. தடையுத்தரவு சூன் 30வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் கராச்சியில் டிராம்வேயில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதை எதிர்த்து ஏப்ரல் 28இல் வேலைநிறுத்தம் செய்த 800 தொழிலாளர்கள்மீது தடியடி நடத்தப்பட்டு,170 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனும் செய்தி, பொதுவாகவே டிராம்வே நிறுவனங்களின் போக்கைக் காட்டுகின்றது. ‘இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்' நூலிலிருந்து (வீரபாண்டியன்: 2022: 242-245) எடுத்துத் தரப்படுகிற இச்செய்திகளிலிருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் பொதுமக்களும் பாதிப்படைந்த டிராம்வே நிறுவனத்தைக் கண்டித்துப் பெரும் போராட்டம் நடத்திடத் தொடங்கி அது தொடக்கநிலையிலேயே முடக்கப்பட்டதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு மாதக் காலத்திற்குப் போராட்டம் நடைபெறவில்லையென்றே தெரிகிறது.
போராட்டமே நடத்திட முடியாத கெடுபிடியான நிலையினை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு உறுதுணையாக நின்றும் தமிழ்ஒளி தம் கவிதைமூலம் ‘போர்க் கொடி' உயர்த்துகிறார். அதில்,
"காற்றில் நெருப்பாய்க் கடலில் அலைப்பெருக்காய்
ஆற்றில் புனலாய் அலைபொங்கும் போராட்டம்!
பாய்கின்ற நேரமிது! பட்டத்துராசர் முடி
சாய்கின்ற நேரமிது! சங்கம் ஒலிப்பதுகேள்!
‘கள்ளன் பற’ங்கிதனைக் காவல் கடுஞ்சிறையில்
தள்ளுங்கள்' என்றெழுந்து தாவுகின்ற போராட்டம்!” (தமிழ்ஒளி: 2010: 97)
என்பதிலிருந்து போராட்டத்திற்கான தொழிலாளர் கூட்டத்தையும் உண்மையில் சிறையில் தள்ளப்படவேண்டியவர் யார் என்பதையும் உணர்த்துகிறது. காரணம், டிராம்வே நிலைநிற்க யார் பாடுபட்டது? யாருக்கு உரிமையானது? எனும் உக்கிரமான தன்மையில் அதற்கேற்ப வெட்டினரோ, கட்டினரோ என்றெல்லாம் வீறுகொள்கிறார்;
போர்முரசம் கேட்கப் புறப்பட்டார் செந்தமிழர்!
'யார் சொத்து? நாங்கள் அளித்தநிதி?' என்றிட்டார்!
வெள்ளையர்கள் இங்குற்று வெட்டினரோ, கட்டினரோ?
கொள்ளையிட்ட சொத்தெல்லாம் கொண்டுசெல்லல் எவ்வாறு?
(தமிழ்ஒளி:2010:97)
மேலும்,
ஆடாமல் சற்றும் அசையாமல் நீயிருக்க,
மாடாக எம்குடும்பம் மண்ணாக யாமுழைக்க மேடாக உன்வாழ்க்கை மேலாக ஓங்கியபின்
ஓடாக எம்மை உருட்டிவிடக் கூவுகின்ற
வெள்ளைக் கழுகே! விழிப்படைந்தோம்! நீயிட்ட
கொள்ளைப் பொருள்பறிக்கக் கொட்டுகின்றோம் போர்முரசு! (ப.96) என்றும்,
நத்திப் பிழைக்கஇங்கு நாய்போன்று வந்துநமைக்
கொத்திப் பிழைக்கின்ற கும்பலிலே ஓர்கழுகு
ஓடுகின்ற 'ட்ராமை' ஒருநொடியில் கைப்பற்றி,
நாடுவருந்த நமைஎதிர்க்க வந்தது காண்! (ப.95)
என்றும் எழுதியிருப்பது தொழிலாளர்களின் நிலையையும் முதலாளிமார்களின் தந்திரத் தன்மையினையும் வெளிப்படையாகவே உணர்த்துகிறது. இதற்கும் மேலாக,
ஓடிவிட்ட வெள்ளையனின் ஒருலட்சம் கொண்டமுதல்
கோடியாய் மேடிட்டுக் கோபுரமாய் ஓங்கியபின்,
'லாபமில்லை' என்றுரைக்கும் நாவையிரு
துண்டாக்கக் கோபமொடு செந்தமிழர்
கொட்டுகின்றார் போர் முரசு! நித்தநித்தம் ‘ட்ரா'மோடு
நின்றுநின்று கால்கடுக்க, சித்தம் தளராமல்
செய்தொழிலில் ஊக்கமொடு,
கண்கள் வழியோடக் கானலொடு 'ட்ரா'மோட,
எண்ணற்ற இன்னலிலே தேகம் இளைத்தோட,
சிந்தும் வியர்வையிலே தேசநலன் பெருக,
அந்தத் தொழிலாளர் ஆண்டுதொறும் பாடுபட
ஒன்றுக்கு நூறாய் உயர்ந்ததொரு லாபமெனும்
குன்றுக்கு மேலே குதித்தாடும் பேய்க்கழுகு (ப.96)
என்னும் அடிகள், டிராம்வேவை மட்டுமல்ல இன்றும் நடந்து கொண்டிருக்கின்ற ‘கார்ப்பரேட்' எனும் பன்னாட்டு முதலாளித்துவச் சித்தாந்தப் போக்கைத் தெளிவாக வேரறுக்கப் பார்க்கின்றதை உணரமுடிகிறது. இவ்வளவு கவிதையடிகள் இங்கு எடுத்துக்காட்டப்படுவதின் நோக்கம், தமிழ்ஒளி அவ்வளவு அசை அசையாக, சீர் சீராகத் தமிழ்மண்ணில் அந்நியர் நுழைவு முதல் தமிழர் அடிமையாகும் இழிவு வரை தூசி துடைத்துக் காட்டுகின்றார். கல்கத்தா, பம்பாய், தில்லி எனும் இடங்களில் இயங்கிவந்த டிராம் இதன்பிறகு சென்னையில் இயக்கப்படவே இல்லை, அந்த நிறுவனம் இயங்கிய இடத்தில் இன்று பெரியார் திடலும் தினத்தந்தியும் இருக்கின்றன.
கவிதையின் அடிக்குறிப்பில் “ 'மெட்ராஸ் எலக்டரிக் ட்ராம்வே' கம்பெனி வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது எழுதப்பட்டது!” என்று குறிப்பிடப்பட்டபோதும், இதழ்கள் வழியாக ஈவெரா, அண்ணாதுரை உள்ளிட்டோர் எடுத்துரைத்தபோதும், நட்டப்பட்டு வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் அவர்களுக்கான போராட்டத்தைக்கூட நடத்திட முடியாமல் முடக்கப்பட்டபோதும் இவ்வரலாற்றைக் கிளர்ந்து உணர்த்தாதபோது தமிழ்ஒளியின் கவிதையின் வேட்கையும் அவர்தம் மேன்மையும் முழுமை பெறாது.
சமூக வரலாற்றில் தமிழ்ஒளியின் இக்கவிதைதான் டிராம்வே எனும் நிறுவனத்தினையும் அங்குத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினையும் காட்டுகிறது. எழுபதாண்டுகள் கடந்தும் இத்தகு வரலாற்றைத் தமிழ்ஒளியின் கவிதை வாழ்விக்கிறது. இதேபோன்று, பல்வேறு போராட்டங்களையும் அடிக்குறிப்பில் 1930 என்றும் தமிழ்ஒளியின் சான்றாதாரமான செ.து.சஞ்சீவி 1930 என்றாலும் (சஞ்சீவி:2015:123) 1936இல் நடந்த புதுவைத் தொழிலாளர் போராட்டத்தையும் தமிழ்ஒளியின் கவிதைவெளி அழுத்தமாகத் திறந்தே வைத்திருக்கிறது.
சான்றுகள்:
1. இராமச்சந்திர வைத்தியநாத், சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும், 2016, பாரதி புத்தகாலயம்.
2. செ.து. சஞ்சீவி, இந்திய இலக்கியச் சிற்பிகள்:தமிழ்ஒளி, 2015, சாகித்திய அகாதெமி.
3. தமிழ்ஒளி,(தொ.ஆ:செ.து.சஞ்சீவி), தமிழ்ஒளியின் சிறந்த கவிதைகள், 2010, சாகித்திய அகாதெமி.
4. வீரபாண்டியன், பாரதி புத்தகாலயம். இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும், 2022, பாரதி
5. விடுதலை – 13,15,25 ஏப்ரல் 1953.
6. http://www.annavinpadaippugal.info/katturaigal/dramway-vaelai.htm. பா.நா: 9.3.2018.
- வீரபாண்டியன், உதவிப் பேராசிரியர், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, காஞ்சிபுரம்.