பரிச்சயமான பல எழுத்துக்கள்
புரியாத புதுவித சேர்க்கைகள்
வாழ்க்கையின் அர்த்தம் என்ன
வினவினேன் நண்பரை நாடி
விடை தேடி காத்திருந்தேன்
வேலையாய் உள்ளேன், நீதான்
வலையில் தேடிப்பார் என்றார்
இணையத்தில் இல்லாதது எது
என கூகிளில் யாகூவில் தேட
வாழ்க்கை என்பதற்கு நாற்பது
அர்த்தம் என்பதற்கு அறுநூறு
என்ன என்பதற்கு எட்டாயிரம்
இன்னபடியாய் தனித்தனியாய்
சொன்ன விடைகளை ஒட்டி
பார்த்தும் மனம் ஒப்பவில்லை
பெரிய கேள்விகள் மட்டுமே
பதில்களின்றி போவதில்லை
கழற்றி வைத்த மூக்குகண்ணாடி
காணவில்லை எங்கே போச்சோ
என்ற என் புலம்பலுக்கு, அப்பா
வைத்த இடம் தவிர வேறிடம்
எல்லாம் தேடுவாரே என்றாள்
என் மகள், அதிலொரு மின்னல்
தெறித்தது மனமேகங்களிடையில்
விரித்த உள்ளங்கையில் கேள்வி
வெறித்து பார்க்கையில் பின்னால்
புறங்கையில் விடை ஒளிகிறது
திருடன் கை மோதிரமாய் அது
வேறு ஒரு தேடலில் ஒளிர்ந்து
தெளிகிறது, கேட்கும் இரைச்சலில்
உள் ஒலிக்கும் விடைகளின் ஓசை
ஒரு போதும் கேட்பதில்லை காதில்
முன்பு தேடிய பார்க்கர் பேனா ஒன்று
மூக்குக் கண்ணாடி தேடலில் இன்று
கிடைத்தது போல வாழ்க்கையென்ற
கேள்விக்கு இன்னும் ஒரு தேடலில்
கிடைக்கலாம் எதிர்பாராத ஒரு பதில்
கேள்வி அதுவரை தொலையாதிருந்தால்!
- பாலசுப்ரமணியன் (