கீற்றில் தேட...

caste census

1871ம் ஆண்டில்தான் இந்த நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. பின்னர் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொரு முறை 1871 முதல் 1921 வரை மக்களின் மதம் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டன. முதன் முறையாக 1931ல் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சாதியிலும் இருக்கும் மக்கள் தொகை புள்ளி விவரம் தொகுக்கப்பட்டது.

1931ல் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் SC / ST மக்களுக்கு கல்வியிலும் அரசு வேலைகளிலும், சட்டமன்ற, ஊராட்சிமன்றத் தொகுதிகளிலும் தனி இடஓதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர் அம்பேத்கரும், “தாத்தா” ரெட்டைமலை சீனிவாசனும் வலியுறுத்தினார்கள். ஆங்கிலேயே அரசும் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தில் நடந்துவந்ததால் 1941ல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 1951, 1961களில் நேரு ஆட்சியிலிருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் பெரும்பான்மையினராக இருந்த ஆதிக்க உயர் சாதியினர் அனுமதிக்கவில்லை.

1971, 1981, 1991, 2001ம் ஆண்டுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் மக்களின் சாதி பற்றிய புள்ளி விவரங்கள் தொகுக்கப்படவில்லை. 1931க்குப் பிறகு 80 ஆண்டுகள் கழித்து 2-வதுமுறையாக 2011ல் மக்களின் மதங்களுடன், அவர்கள் பிறந்த சாதியின் விவரங்களும் திரட்டப்பட்டன.

மக்களின் மதங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் 2014 மார்ச் மாதமே தயாராக இருந்தும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் காரணங்களுக்காக மன்மோகன்சிங் அரசு அதை வெளியிடவில்லை. 2014 மே 8ம் நாள் ஆட்சிக்கு வந்த மோடி அரசும் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. பிகார் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டதால், மதங்களின் அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்தும் தேர்தல் ஆதாயத்துக்காக திடீரென 2015 ஆகஸ்ட் 24ம் நாள் 2011ம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கப்பெற்ற மதவாரிப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2011ம் ஆண்டு நிலவரப்படி இந்திய மக்கள் தொகை 121.09 கோடி
இந்துமதத்தினர் - 96.63 கோடி - 79.8%
இஸ்லாமியர் - 17.22 கோடி - 14.2%
கிறிஸ்துவர்கள் - 2.78 கோடி - 2.3%
சீக்கியர்கள் - 2.08 கோடி - 1.7%
புத்த மதத்தினர் - 0.84 கோடி - 0.7%
ஜைன மதத்தினர் - 0.45 கோடி - 0.4%
மற்ற மதத்தினர் - 0.79 கோடி - 0.7%
மதமே இல்லாதவர்கள் - 0.29 கோடி - 0.2%

2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் 80.5%லிருந்து 79.8% ஆகக் குறைந்து விட்டார்களாம் * (மைனஸ் 0.7) இஸ்லாமியர் 13.4% லிருந்து 14.2% ஆக (ரூ 0.8 ) அதிகரித்துவிட்டார்களாம். முஸ்லீம் மக்களின் இதே வளர்ச்சி விகிதம் நீடித்தால் 2050ம் வருடத்தில் இந்த நாட்டில் முஸ்லீம் மதத்தினர் பெரும்பான்மையாகி இந்து மதத்தினர் சிறுபான்மையாகி விடுவர்களாம்.

ஆர்.எஸ்.எஸ். தமைமையில் பிஹார் மாநிலத் தேர்தலில் நாம் எதிர்பார்த்தபடியே “முஸ்லீம்களின் ஆதிக்கம் வளர்கிறது - இந்துக்கள் சிறுபான்மையாகி விடுவோம். அபாயம் நெருங்குகிறது” என்ற விஷமப் பிரச்சாரத்தை சங்பரிவார் மதவெறி அமைப்புகள் தொடங்கிவிட்டன.

எல்லாம் சரி. 2011ம் வருடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை கடந்த 2015 ஜூலை 3ம் தேதியே வெளியிட ஒத்துக் கொண்ட மோடி அரசு, வெளியிடாமல் காலதாமப்படுத்துவதேன் ?

மண்டல் கமிசன் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் உயர்சாதியினர் முக்கியமான வாதமே “1931ல் தொகுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் அறிவியல்பூர்வமானதல்ல” என்பது தான்.

2011 ல் நடந்து முடிந்திருக்கும் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வெளியானால் ஆதிக்க சாதியினருக்கு இப்போது கிடைக்கும் 50% பொது ஒதுக்கீடும் கிடைக்கபோவதில்லை என்பது உறுதி.

இந்திய சமூகத்தில் பார்ப்பனர்கள், மிஸ்ராக்கள், ஜாட்கள், பட்டேல்கள், பனியாக்கள், சாட்டர்ஜி போன்ற உயர்சாதியினர் சதவீதம் 25% தாண்டப் போவதில்லை. மாறாக BC, SC, ST மக்கள் எண்ணிக்கை 75% மேல் வரப்போகிறது. தமிழகத்தில் 69% இடஒதுக்கிடு கூடாது, 50% ஆக குறைக்க வேண்டும் என்போர் பகற்கனவு சிதறப்போவது உறுதி.

இதை முன்கூட்டியே உணர்ந்துள்ள மோடி அரசாங்கம் 2011 சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படும் தவறுகளை திருத்தும் சாக்கில், உண்மையான புள்ளி விவரங்களை வெளியிடாமல் ஒத்திப்போடும் தந்திரத்தைக் கையாள்கிறது.

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னர், ஒரே சாதியில் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன, மொத்தம் 46 லட்சம் உட்பிரிவு சாதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக, கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியை எடுத்துக் கொண்டால் அதில் 18 பிரிவு. முதலியார் சாதியை எடுத்துக் கொண்டால் அதில் 7 பிரிவு. தேவர் சாதியில் குறைந்தபட்சம் 3, செட்டியார் சாதியில் 17 பிரிவுகள். அதைப்போலவே தேவேந்திர குலத்தை எடுத்துக் கொண்டால் 7 பிரிவினர் . “கொஞ்சமோ பிரிவினைகள், ஒரு கோடியென்றால் அது பெரிதாமோ” என்று பாரதி பாடியிருப்பது சரிதான்.

ஆகையால் உள்துறை அமைச்சகம் இந்த 46 லட்சம் உட்பிரிவு சாதிகளை மாநில அரசு ஆய்வு செய்து முதன்மையாக எந்த சாதிப்பிரிவுக்குள் அவற்றை கொண்டு வரவேண்டும் என்று கருத்து கேட்டுள்ளது. (இந்து ஆங்கில நாளேடு 17.7.2015) இது இப்போது நடக்கக்கூடிய காரியமா?

அடுத்து சாதிவாரிப் புள்ளிவிவரங்களில் 81958314 தவறுகள் ஏற்பட்டதாகவும், பின்னர் மாநில அரசுகள் மூலம் 6738119 தவறுகள் சரி செய்யப்பட்டதாகவும், இருப்பினும் இன்னமும் மிஞ்சியிருக்கும் 14577195 தவறுகள் திருத்தப்படவேண்டும் என்றும், இதற்காக மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு பட்டியலை இறுதிப்படுத்த நிட்டியின் துணைத் தலைவர் (புதிய திட்டக் கமிசன்) அரவிந்த் பக்காரியா தலைமையில் ஒரு கமிசன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி அரசு கூறியுள்ளது. (இந்து ஆங்கில நாளேடு 29-7-2015)

மாநிலங்கள் வாரியாக சரி செய்யப்பட வேண்டிய தவறுகள் எண்ணிக்கை-

மராட்டியம் - 69.1 லட்சம்
மத்திய பிரதேசம் - 13.9 லட்சம்
மேற்கு வங்கம் - 11.6 லட்சம்
ராஜஸ்தான் - 7.2 லட்சம்
உ.பி. மாநிலம் - 54 லட்சம்
கர்நாடகா - 2.9 லட்சம்
தமிழ்நாடு - 1.4 லட்சம்

சாதிவாரி கணக்கெடுப்பில் நமது தமிழக ஆசிரியர்கள்தான் நாட்டிலேயே மிகக் குறைவான தவறுகளை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுகள்.

மேற்சொன்ன சுமார் 146 லட்சம் தவறுகள் சரி செய்யப்பட்டு, 46 லட்சம் உட்பிரிவு சாதிகள் முதன்மை சாதிப்பிரிவுகளோடு இணைக்கப்பட்டு சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை இறுதிப்படுத்தும் வரை ஆதிக்க சாதியினர் இன்று அனுபவித்து வரும் 50% பொது ஒதுக்கீடு தொடரும். இந்த லட்சணத்தில் மக்கள் தொகையில் குறைந்த சதவீதம் உள்ள உயர்சாதியினர் BC, SC, STக்கு இடஒதுக்கீடே கூடாது என்று கூக்குரலிடுவது யாரை ஏமாற்ற?

“சூழ்ச்சியிலே சுவரமைத்து,
சுயநலத்தில் கோட்டை கட்டி,
சுடர்விட்ட நீதிதனை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு,
சட்டமும் நானே, சகலமும் நானே
என்று அதிகாரக் கூச்சலிடும்
ஆணவக்காரர்களின் உலகமடா”

என்று மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை 1957 ல் எம்.ஜூ.ஆர். நடித்த மகாதேவி திரைப்படத்தில் பாடியிருப்பது எவ்வளவு உண்மை.

- கே.சுப்ரமணியன்