செப்-12. தோழர் பாலனை கொலை செய்த நாள்
பாலனை அடித்துக் கொலை செய்து சரியாக 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. கொல்லச் சொன்ன 'நரவேட்டை நாயகன்' எம்.ஜி.ஆர் மறைந்து மண்ணோடு மக்கிப் போயாகிவிட்டது. கொலை செய்த ஏவல் நாய் தேவாரமோ தனது வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். பாலனால் இன்னுயிர் ஈர்ந்து கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் இயக்கம் இன்று சுக்குநூறாகி வகைக்கு ஒன்றாய் வக்கத்து நிற்கிறது. "மலைபோன்ற கனமான சாவு" நிகழ்த்திய பாலனின் தன்னிகரில்லாத் தலைமை உணர்வும், தியாகமும் ஒன்றும் இல்லாமல் போய்விட்டனவா?
தமிழகத்தில் ஒரு முன்னுதாரனமான மக்களின் தலைவனாக பாலன் திகழ்ந்தான். சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவன் அவன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவன் பாலன். அந்த மாபெரும் போராட்ட வரலாறு கொஞ்சமும் பதிவு செய்யப்படாமலேயே இன்றைக்கும் கிடக்கிறது.
தனித் தேனீர் குவளைக்கு எதிரானப் போரட்டம் பாலனின் சாதித் தீண்டாமைக்கு எதிரான பிரதான போரட்டமாகும். பிறப்பால் தானே உயர்ந்தவன் எனும் மமதையில், சேரிக்காரன் வாய்வைத்த கிளாசில் நான் டீ குடிக்கமாட்டேன் என்ற உயர்சாதி ஆதிக்க அடையாளங்களை, தீவைத்து எரித்தவன் அவன். அந்த டீ டம்ளர் உடைப்புப் போராட்டம் எந்த குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்ததோ அதே சாதியினரின் தலைமையில் நடந்ததே அதன் வெற்றிக்குக் காரணம்.
செவத்தான் என்னும் வன்னிய சமூகத்துக் கந்துவட்டிக்காரன் ஒருவன் இருந்தான். ஜம்பு வியாபாரியான இவன் பேர்பெற்ற ரௌடியுமாகத் திகழ்ந்தான். ஏழைகள் பலருக்கும் கந்துக்கு பணம் கொடுத்து வசூலிப்பது இவன் வழக்கம். தருமபுரி மாரவாடி பகுதியைச் சேர்ந்த மாரி என்ற தாழ்த்தப்பட்ட பெரியவர் ஒருவரிடம் பணம் கேட்டு கொடூரமாகத் தாக்க, அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பெரியவர் மயக்கமுற்று விழுந்திருக்கிறார். பெரியவரைத் தாக்கிய செய்தி காட்டுத் தீபோலப் பரவ, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாதிபேதமற்று ரௌடியைக் கட்டிவைத்து உதைத்திருக்கிறார்கள். ரௌடிகளின் விசுவாசியான சிவகுரு எனும் மதிகோன் பாளைய காவல் ஆய்வாளர் காப்பாற்ற ஓடிவர, காவல் ஆய்வாளரும் முட்களின் மேல் தூக்கி வீசப்பட்டார். சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை வழக்கம்போல நரவேட்டை நிகழ்த்தி சாதி மதம் பாராமல் ஆண்கள், பெண்கள் என பலரையும் கைதுசெய்தது. உடனடியாக 3000 பேர்களுக்கு மேலானவர்களை ஒன்றிணைத்த பாலன் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு அவர்களை வழக்கின்றி மீட்டார். அப்போதைய ஆங்கில நாளேடுகள் "தருமபுரிப் பகுதியில் நக்சலைட்டுகள் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்கள்" என எழுதும் அளவுக்கு நிலைமை இருந்தது.
நத்தம், மாரவாடி என இரண்டு கிராமங்களுக்கு இடையே தகராறு, வெட்டுக் குத்து என பெரும் பிரச்சனை. உள்ளூரில் உள்ள அனுதாபிகளின் வேண்டுதலுக்கு ஒப்ப பாலனும் பகுதியில் இருக்கும் தோழர் ஒருவரும் சமாதானம் செய்து வைக்கப் புறப்படுகின்றனர். ஒரு கல் பாலனின் தலையினை பலமாய்த் தாக்க காயத்திலிருந்து குருதி பீறிடுகிறது. காயத்துக்குப் பின்னால் அவர் ஆற்றிய அந்த மகத்தான உரை ஆயிரமாண்டு கால ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சி வலை உடைத்து எழுச்சி கொள்ள வைத்ததாகவும், ஒரு நாடக நிகழ்வுபோல் இரண்டு ஊர்மக்களும் முரண்பாடு களைந்து கைகோர்த்ததாகவும் உடனிருந்த தோழர்கள் இன்றைக்கும் கண்களில் நீர்பொங்க நினைவு கூர்கின்றனர்.
வழக்கமாகப் பொதுக் கூட்டமெனில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே அந்தப் பகுதிக்குச் சென்றுவிடுவார். அங்கிருக்கும் மக்களிடம் இரண்டறக் கலந்து பகுதிப் பிரச்சனைகளை உள்வாங்கிக் கொள்வார். அடுத்த நாள் பேசும்போது உள்ளூர் பிரச்சனையை விளக்கி அதன்வேர் எவ்வாறு அரசின் மக்கள் விரோதப் போக்கிலிருந்து எழுகிறது என விளக்குவார்.
"கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்" என்ற குறளுக்கு இலக்கணமாக இருக்கும் அவரின் உரை. மேலும் பொதுக்கூட்டமெனில் நம்மூர் தலைகளைப்போல மேடையில் நாற்காலி தேடிக் கொண்டிருப்பவரல்ல பாலன். பேச அழைக்கும்வரை மக்களோடு மக்களாய் மண்ணில்தான் அமர்ந்திருப்பார். பலமுறை தான் அணிந்திருந்த உடைகளை வயதானவர்களுக்குக் கொடுத்துவிட்டு அரை நிர்வாணமாய் வந்ததாக கதைகள் இருக்கின்றன. நீண்டு தொடரும் அவரின் வரலாறு சொல்ல இங்கு பக்கங்கள் போதா.
தோழர் பாலன் இறந்துவிட்டார். வர்க்கமெனும் வலிய தத்துவம் கொண்டு சாதிய அரக்கனுக்கு சாவுமணி அடிக்க முடியுமென்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்த தோழர் பாலன் இறந்துவிட்டார். அவர் எந்த அரக்கனை எதிர்த்து தன்னுயிர் ஈந்தாரோ அவர் எந்த ஒற்றுமைக்காக உயிருள்ளவரை பாடுபட்டாரோ அந்த ஒற்றுமை இன்று கானல் நீராக நிற்கிறது. அவரின் பாதம்பட்டுப் பெருமைபெற்ற மண் இன்று சாதியச் சகதியில் மூழ்கித் திளைக்கிறது.
வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம் நாம். உள்ளபடி பாலனின் மகத்துவமான போராட்டத்தை பொருளாதாரப் போராட்டமென சிறுமைப்படுத்திவிட்டு, பாலனின் பெயரை மட்டும் "வாணிக நற்பெயராக" பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஏகாதிபத்தியமென்றும், புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாய் போஸ்டர் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் பாலனின் ஆக்கப்பூர்வமான வரலாற்றுப் பதிவையும் மக்கள் திரள் போராட்டத்தின் உண்மையான வலுவையும் திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள்.
வளிமண்டலத்தின் வெற்றிடத்தை பக்கத்துக் காற்று இல்லாவிட்டால் தூரத்துக் காற்று நிரப்பிவிடும் என்பதற்கு ஒப்ப கம்யூனிஸ்டுகள் பல்வேறு கவர்ச்சியான பெயர்களில் சிதறி சின்னாபின்னமாகியிருக்கின்ற சூழலில் சாதியவாத சக்திகள் அந்த இடத்தை கச்சிதமாக ஆக்கிரமித்திருக்கின்றன.
சாதியத்தின் இருப்பு சாதிய சங்கங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை என்பதற்கு ஏற்ப சுயநலக் கூட்டமான பாமகவின் விஷப் பிரச்சாரங்களுக்கு பின்னால் இன்று பாலன் வீழ்த்தப்பட்டு நிற்கின்றார். இதில் தலித்தியம் பேசுகின்ற விசி கட்சியனரும் ஒன்றும் விதிவிலக்கில்லை. வர்க்க ஒற்றுமைகளை கூறுபோட்டு விட்டதான ஆத்ம திருப்தி அவர்களின் எழுத்துக்களில் மிளிர்கின்றன.
இன்றைக்கு ஒவ்வொரு ஆதிக்க சாதி இளைஞனுக்கும் தலித் எதிரியாக்கப் பட்டிருக்கலாம். இருதரப்பினரின் வாழ்வியல் நெருக்கடி யாவற்றுக்கும் இன்னொரு தரப்பே காரணம் என்ற கற்பிதம் பெரும் தலைவர்களால் போதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் மானுடம் நிலைக்க வேண்டுமானால், மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமானால், அவர்களின் வறிய வாழ்நிலையிலிருந்து மீண்டு எழ வேண்டுமானால் நிச்சயம் நாம் பாலனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அவனின் அணையாத தீபத்திலிருந்துதான் எழுகின்ற சிவப்புச் சூரியனுக்கு ஒளிவார்க்க வேண்டும்.
- பாவெல் இன்பன்