கீற்றில் தேட...

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பெர்க் தற்போது இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இருவரும் பங்குகளை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இருவரும் மோசடியில் ஈடுபட்டதால்தான் இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 24 ஆம்தேதி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்து 88 கேள்விகள் அடங்கிய நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் 66 கேள்விகளுக்கு சம்மந்தமே இல்லாத பதில்களைச் சொன்ன அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்தது.adani and Madhabi Buchஆனால் அதை சந்திக்கத் தயாராக உள்ளதாக அறிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தங்களுடைய குற்றச்சாட்டுகளை இந்தியாவுக்கு எதிரானது என சித்தரிக்கும் அதானி குழுமம் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியது.

மேலும் இது தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழுமம் மீதான வழக்கை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரிக்கும் என அறிவித்தது.

ஆனால் இப்போதுதான் உச்சநீதிமன்றம் திருடனிடமே குற்றத்தை கண்டுபிடிக்கும் பொறுப்பைக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வைத்த முக்கிய குற்றச்சாட்டு என்பது பட்டியலிடப்பட்ட 7 அதானி நிறுவனங்கள் தங்கள் பங்குகளின் விலையை அவற்றின் பங்கு மதிப்பில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக போலியாக அதிகப்படுத்தி பெருமளவில் கடன்களைப் பெற்றிருக்கின்றது என்பதுதான்.

ஹாங்காங் சார்ந்த முதலீட்டு குழுவான CLSA (கிரெடிட் லியோனைஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா) படி, அதானியின் ரூ. 2 லட்சம் கோடி 'கடன்' (மார்ச் 2022 நிதியாண்டு மதிப்பீட்டின் படி), 40 சதவீதம் இந்திய பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து வந்ததாகும்

அதானி குழுமத்திற்கு தனியார் வங்கிகளை விட இரண்டு மடங்கு கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வழங்கியுள்ளன. SBI மட்டுமே இந்திய அரசுடன் அதானியின் நெருங்கிய தொடர்பின் அடிப்படையிலும் வெறும் 'நம்பிக்கை' அடிப்படையிலும் மட்டுமே கடன்களை வழங்கியுள்ளது. இந்த பணம் முழுவதும் வங்கியில் சேமித்து வைத்த சாமானிய இந்தியர்களின் பணமாகும்.

2002ல் அதானியின் முக்கிய ஹோல்டிங் நிறுவனத்தின் மொத்த மதிப்பு வெறும் 70 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்த்து. ஆனால் பத்தாண்டு காலத்திற்குள், அதானி தனது சொத்தை 20000 மில்லியன் டாலராக அதாவது 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதானியின் சொத்து மதிப்பு ஊதிப் பெரிதாக்கப்பட்டதன் பின்புலத்தில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் அந்த நாடுகளுடன் இந்திய அரசு போட்டுள்ள இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஷெல் நிறுவனங்களை நிறுவி, அதன் மூலமாக பெரிய மோசடிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இந்த ஷெல் நிறுவனங்கள் என்பது போலியான நிறுவனங்கள் ஆகும். அந்த நிறுவனங்களில் ஊழியர்கள், முகவரி, தொலைபேசி எண்கள் என முறையான விவரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் பதிவு மட்டும் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு பொய்யான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடத்திருக்கின்றது. குறிப்பாக அதானியின் சகோதரர் வினோத் அதானி இந்த சதிச்செயலின் மூளையாக செயல்பட்டுள்ளார்.

வினோத் அதானி இயக்குநராகப் பணியாற்றும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து 253 மில்லியன் டாலர் கடனும், வினோத் அதானியால் கட்டுப்படுத்தப்படும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து 692.5 மில்லியன் டாலர் முதலீடுகளும் பெறப்பட்டிருக்கின்றன.

தற்போது மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் இதே பெர்முடா மற்றும் மொரிஷஸ் நிறுவனப் பங்குகளில்தான் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புச் தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் ஆகும்.

வினோத் அதானி இந்தக் கம்பெனிகள் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளைச் செயற்கையாக ஊதிப் பெருக்குவது, அதானியின் தனியார் கம்பெனிகளிலிருந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பொதுக் கம்பெனிகளுக்கு பணத்தைச் செலுத்தி இவை ஆரோக்கியமாக இருப்பதான தோற்றத்தை உருவாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

கவுதம் அதானிக்கு அவரது சகோதரர் வினோத் அதானி ஏன் பெரும் தொகையை கடனாக கொடுத்தார்? அதற்கான பணம் வினோத் அதானிக்கு எங்கிருந்து வந்தது? என்று ஹிண்டன்பர்க் எழுப்பிய கேள்விக்கு யோக்கியன் அதானி “தெரியவில்லை” என்று பதில் அளித்து இருந்தார்.

அதானி மட்டுமல்ல அதானியின் ஒட்டுமொத்த குடும்பமுமே மோசடிப் பேர்வழிகள் ஆவார்கள். அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 22 பேரில் 8 பேர் கெளதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள்.

கெளதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வியாபாரத்தில் வரி ஊழல், கையெழுத்து மோசடி போன்ற குற்றங்களுக்காக 2004-2005 ஆண்டுகளில் இரு முறை கைது செய்யப்பட்டவர். அவருக்கு அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது

கெளதம் அதானியின் மைத்துனர் சமீர் வோராவும் வைர வியாபார ஊழலில் ஈடுபட்டதாகவும், பல முறை கண்காணிப்பாளர்களுக்கு தவறான கணக்கு சமர்ப்பித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர். இவர் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா பிரிவிற்கு செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த பனியா குடும்பமும் சேர்ந்து நாட்டை மோடியின் துணையுடன் கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இந்திய மக்களின் சேமிப்புப் பணத்தை சூறையாடி இருக்கின்றார்கள்.

மோடி 2014-ல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் சொத்து மதிப்பு 60 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு 8.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததற்கு மோடியின் ஆசி மட்டுமே ஒரே காரணம்.

தற்போது அதானியின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே உடந்தையாக இருந்தது அம்பலப்பட்டு நாடே காறித் துப்பிக் கொண்டு இருக்கின்றது.

அதானியின் பங்குகளில் மதாபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் அதிக அளவில் முதலீடுகளை செய்ததால்தான் அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று அதானி மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

அதுமட்டுல்ல குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகம் இந்தியாவிற்கே போதை பொருள்களை சப்ளை செய்யும் கேந்திரமாக உள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் மிக சர்வ சாதாரணமாக முந்த்ரா துறைமுகத்திற்கு வருகின்றன.

அதானி இவ்வளவு அயோக்கியத்தனங்கள் செய்தும் ஏன் இன்னும் சிறைக்குச் செல்லவில்லை என்றால் அதானியின் அடியாட்கள் காவல்துறை, நாடாளுமன்றம் என அனைத்து இடங்களிலும் இருப்பதால்தான்.

அதானி தனி ஒரு திருடனல்ல. இந்தியாவைக் கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பலின் கூட்டு மனசாட்சி ஆவான்.

- செ.கார்கி