01. Subaltern Studies: இப்பெருந்தலைப்பில் 10 தொகுதிகளில் பலகட்டுரைகள் பேராசிரியர் இரணஜித் குஹ (Ranajit Guha (RG) அவர்களின் மேற்பார்வையில் OUP வாயிலாக 1980 தொடக்கம் வெளியிடப்பட்டன. இது, வரலாறு எழுதலில் (history writing) புதிய genre என்று பெரிதும் வரவேற்கப்பட்டது. இந் நூல்வரிசையின் முதல்தொகுதியில் subaltern என்ற சொல்லுக்கான விளக்கத்தினை RG அளித்துள்ளார். இது, பிறகு விளக்கப்படும். இதனை ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் வரலாறு என்று ஒருவரியில் RG விளக்குகிறார். என்றாலும் அழுத்தப்பட்ட அம்மக்களை கலகத்திற்குத் தூண்டும் கூறுகள் சமையம், சாதி, கருத்தியல், அதிகாரம், பால் (gender) உள்ளூர் ஆதிக்கவாதிகள் (indigenous dominant-group), அயலாதிக்கவாதிகள் (foreign dominant group) என்று வரையறுக்கிறார். இதில், ஒரு வட்டாரத்தில் ஆதிக்க வர்க்கமாக இருப்பவர் பிறிதொரு வட்டாரத்தில் அழுத்தப்பட்டவர்களாக இருப்பர் என்பது அவரது கூற்று. இந்நிலை வட்டாரத்திற்கு வட்டாரம்மாறும். எனவே, ஒரு மக்கள்கூட்டம் மட்டும் தொடர்ந்து அழுத்தப்பட்டு வந்தனர் என்று கூறவியலாது. அழுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் தலைமைக்கும் அத்துயரத்தில் பங்கு உண்டு என்பதனையும் இத்தொகுதிகளில் பதியப்பட்ட கட்டுரைகள் வழியே அறிய முடிகிறது.Ranajit Guha02. இத்தொகுதியின் பொதுக்கருத்தியல் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிரான வேளாண்குடிகளின் எழுச்சி (peasant uprising) என்று அமைந்துள்ளது. இவ்வாய்வுக்களத்தின் காலம் முகலாயரின் ஆட்சி தொடக்கம் சென்ற நூற்றாண்டின் மூன்றாம் கூறுவரையாகும். வேளாண்குடிகளின் எழுச்சி மட்டுமல்லாமல், தொழிற்சாலை வேலையாள்கள் வரைக்கும் ஆய்வுக்களம் தொடர்கிறது. மேலும், பஞ்சம், தொற்றுநோய், இலக்கியவிமர்சனம், வரலாற்றியல், பெண்ணியம், ஆதிவாசிகள், இனவியல், காடுகள் என்று ஆய்வுத் தலைப்புகள் பரந்து அமைகின்றன. இத்தலைப்புகள் (Historiography) வரலாற்றுவரைவியலில் ஒரு புதிய genre என்றாலும் கட்டுரையாளர்கள் இதனை மார்க்சிய அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே நிரூபித்துள்ளனர். பல கட்டுரையாளர்கள் தம் தம் கட்டுரைகளை பல இடங்களில் மார்க்சியத் தொடர்களோடு தொடர்கின்றனர். மார்க்சிய கருத்தியல்களை பரக்கப் பயன்படுத்தியுள்ளனர். மார்க்சிய கொள்கைகள்தான் கட்டுரைகளை ஒன்றாகக் கோக்கும் கொடிக்கயிறாக உள்ளது. கட்டுரையாளர்கள் வரலாற்றாசிரியர்கள், மானிடவியலார், இலக்கிய அறிஞர்கள், இலக்கியவிமர்சகர்கள் என்று பலரும் இத்தொகுதிகளில் பங்களித்துள்ளனர்.

03. கட்டுரையாளர்கள் மொத்தம் 44 பேராவர். இவரில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டினர் (சுந்தர் காளி). 10 தொகுதிகளில் மொத்தம் 73 கட்டுரைகள், 3 விவாத திரட்டுகள் உள்ளன. பெரும்பாலான தொகுதிகளை RG பதிப்பித்துள்ளார் (தொகுதிகள்: 1,2,3,4,5,6). தொகுதி 8 David Arnold, David Haridman என்ற இருவரால் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுதி 9 இனை தொகுத்தவர்கள் Shahid Amin, Dipesh Chakrabarthy ஆவர். தொகுதி 7 Partha Chatterjee, Gyanendra Pandey என்று இருவரால் தொகுக்கப்பட்டது. தொகுதி 10 மூவரால் தொகுக்கப்பட்டது. அனைத்துத் தொகுதிகளின் பொதுத்தலைப்பும் Writings on South Asian History and Society என்று அமைந்துள்ளது. கட்டுரையாளர்களின் பொதுவான பார்வை மானிடவியல் ஊடாகச்செல்கிறது. தொகுதி ஒன்றில் RG சபால்டர்ன் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தினை அளித்துள்ளார். இரண்டாம் தொகுதியில் இவரது biography, bibliography தரப்பட்டுள்ளன.

04.சபால்டன்: ஒரு விளக்கம் : சபால்டர்ன் பற்றி RG தரும் விளக்கம் நுணுக்கமான ஆய்விற்குப் பெரிதும் பயன்படும். Elite, people, subaltern என்ற மூன்று சொற்களும் அதற்கான விளக்கமுமே இக்கட்டுரைகளைப் புரிந்து கொள்வதற்கான திறப்பாகும். Elite என்ற சொல்லை dominant group என்ற பொருளில் பயன்படுத்துகிறார். இது (dominant indigenous groups) முன்பே சொல்லப்பட்டதுபோல் உள்ளூர்க்காரராகவும் இருக்கலாம், வெளிலிருந்தும் வரலாம். அந்த அயலவர்கள் அதாவது அழுத்தப்பட்ட மக்களுக்கு அயலானவர்கள்: முக்கியமான பிரிடிஷ் அலுவலர்கள், அயல்நாட்டுத் தொழிலதிபர்கள், வணிகர்கள், வட்டிக்கடைக்காரர்கள், தோட்டத்துமுதலாளிகள், நிலக்கிழார்கள், சமயப்பரப்புரையாளர்கள் (missionaries) என்று வரிசைப்படுத்துகிறார். உள்ளூர் ஆதிக்கக்குழுக்கள்: வர்க்கங்கள், பெருநிலக்கிழார்கள், தொழில்வளம் நிறைந்த இடைத்தட்டு மக்கள், உள்ளூரில் இயங்கும் உயரலுவலர்கள். இவர்களனைவரும் ஒரே இனத்தினை சேர்ந்தவராக இருக்க மாட்டர் என்றும் கூறுகிறார். இங்கு புரிதலின் வசதிக்காக (Dominant) ஆதிக்கவாதிகள் என்றும் (appressed people) அழுத்தப்படும்மக்கள் (சபால்டன்) என்றும் விளங்கிக் கொள்ளலாம். இது இடத்திற்கு இடம் வேறுபடும் என்பதால் இக்கருத்தில் தெளிவற்ற தன்மையும் முரண்படும் தன்மையும் இருப்பதுபோல் தோன்றும். அடித்தளத்தில் உள்ள (lowest strata) ஊர்ப்புற விவசாயி (rural gentry) வளர்ந்த நிலக்கிழார் (improvised landlords, rich peasants, upper-middle peasants) வளம்பெற்ற வேளாண்குடிகள், சற்றுமேலான வேளாண்குடிகள் அனைவரும் அழுத்தப்பட்ட மக்கள் என்ற வகைக்குள் வருவர் என்கிறார். சுருக்கமாக, இவ்விளக்கங்களின் அடிப்படையில் சபால்டன் ஆய்வு என்பதனை அழுத்தப்பட்ட மக்களின் வரலாறு என்று புரிந்து கொள்ளலாம்.

05.இந்திய தேசியவரலாற்றியல்: வரலாற்றியல் பற்றி RG எழுதிய இரு கட்டுரைகள் படிப்போரின் பார்வையினைப் புதுமையாக்கும். அதில் முதல் கட்டுரையான இந்திய தேசிய வரலாற்றியல் (historiography of Indian Nationalism) பற்றியது. பிரிடிஷ் இந்தியாவில் தோன்றிய இவ்வரலாறு எழுதும் முறை காலனிய மேட்டுக்குடியாலும், பூர்சுவாக்களாலும் எழுதப்பட்டது என்கிறார். அதனைத் தொடர்ந்து வந்ததே (neo-colonialist) நவகாலனிய, நவதேசியவாத வரலாற்றியல் (neo-nationalist historiography) என்கிறார். இதுவே, இந்தியாவில் வழமையாகப் பின்பற்றப்பட்டது என்பது இவரது கூற்று. நவகாலனிய வரலாற்றினை எழுதியது பிரிடிஷ் காலனியஆட்சியர், நிர்வாகிகள், நிறுவனங்கள். அவர்கள் பின்பற்றிய கொள்கைகளும் பண்பாடும் அதற்கு அடித்தளங்களாக அமைந்தன. நவதேசிய வரலாற்றினை எழுதியவர்கள் இந்திய மேட்டுக்குடியினர், நிறுவனர்கள், செயற்பாட்டாளர்கள் அவர்களின் கருத்தியல்கள். இந்திய தேசிய வரலாற்றில் சில புரிதல்கள் உண்டு. இதன் மையம் (central modality) அரசியலை கற்றல் (learning process). அதாவது மேட்டுக்குடியினர் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை (negotiation) நடத்தி நாட்டினை ஆளும்முறையினைக் கற்பது (govern the country). அதாவது, ஆள்பவருடன் மேட்டுகுடியினர் சமரசத்துடன் இணைந்து ஆட்சியில், அதிகாரத்தில், சொத்தில் பங்குபெறுவது. இம்மாதிரி ஒருதேசியம் கட்டமைக்கப்பட்டது. இன்னொருவகை தேசியவாத வரலாற்றியல் இந்தியதேசியத்திற்கு (freedom of the country) விடுதலையளிப்பது. இதில் பலவகையான பார்வை (several versions) உண்டு. ஆனால், இவற்றில் உள்ளூர்மேட்டுக்குடியின் (native elite) நல்ஒழுக்கம் (goodness) முன்வைக்கப்பட்டது. தன்னலமற்றவர் (altruists), கருணையுள்ளவர் (people of self-abnegations) என்று இவர்கள் வருணிக்கப்பட்டனர். இப்படி, இந்தியதேசியவரலாறு இந்திய மேட்டுக்குடியின் ஆன்மீக வரலாறுபோல் எழுதப்பட்டது (spiritual biography of the Indian elite) என்கிறார் RG. ஆனால், மேட்டுகுடியினர் எழுதியவரலாற்றியல் காலனியஅரசின் கட்டமைப்பினை புரிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டது. இதன் கருத்தியல் கூறுகளை புரிந்து கொள்ள முடிந்தது (to understand the ideological character of historiography itself). ஆனால், மேட்டுகுடியின் உதவியின்றியே (independency of the elite) அழுத்தப்பட்ட மக்கள் தேசியவதத்தினை வளர்த்தனர் என்பதனை தேசியவாத வரலாற்றியல் சொல்லத் தவறியது. இதனை பொதுமக்கள்இயக்கம் என்று கணிக்கத் தவறி தனிப்பட்டத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது என்று பார்க்கப்பட்டது என்கிறார். ஆனால், பெருந்திரள் போராட்டம் அந்தந்த வட்டாரத்திலுள்ள தனிப்பட்ட புகழ்வாய்ந்த நபர்களால் இயக்கப்பட்டது என்பது உண்மை.

காலனிய காலத்தின் அரசியல் இரு வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்ததாக RG பார்க்கிறார். ஒருபுறம் ஆதிக்கக் குழுக்கள் (dominant groups of the indigenous society), மறுபுறம் அழுத்தப்பட்ட மக்கள் (subaltern groups, classes, labouring population). இது மேல்தட்டு அரசியலால் உருவாக்கப்படவில்லை. காலனியகாலத்திற்கு முன்பே உருவானது என்கிறார் RG. மேட்டுக்குடியின் இயக்கம் நெடுக்காகவும் (vertical) அழுத்தப்பட்ட மக்களின்இயக்கம் குறுக்காகவும்/ கிடையாகவும் (horizontal) நிகழ்ந்தன என்கிறார். முன்னவருடையது பிரிடிஷ் நாடாளுமன்றத்து பாணியிலானது. அது அரைநிலமானிய (semi-feudal) அரசியல் நிறுவனமயமானது; பின்னது மரபுரீதியான இரத்தவுறவு அமைப்புடையது (traditional organisation of kinship). மேட்டுக்குடி இயக்கம் சட்டப்பூர்வமானது; மக்கள் இயக்கம் போராட்டத் தன்மையானது. இங்கு (more violent) அதி வன்மம் என்ற தொடரினை பயன்படுத்துகிறார் RG. அப்போது, நகர்பகுதிகளிலும் பொதுமக்கள்இயக்கம் (peasant insurgency) உருவானது என்கிறார். இது, மேட்டுக்குடியினை எதிர்த்து நின்று ஆடுவது (notion of resistance to elite domination). ஆனால், இக்கருத்து (ideological element) ஒரேமாதிரியில்லை; ஒரே அழுத்தத்துடனும் இல்லை (not uniform in quality and density). அழுத்தப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டம் முற்றிய கருத்தாக நிலைக்கவில்லை. அக்காலத்திய வேளாண்குடிகளின் போராட்டம் (peasant uprising) ஒரு தலைமைக்காகக் காத்திருந்தது என்கிறார்.

06.தொழிலாளியாக மாறிய நிலக்கிழார்: மேற்சொன்னபடி காலனிய வரலாற்றியலை நிலவுரிமையோடும் அதன் அதிகாரத்தோடும் பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு அவர் ஒரு நிலவுடமை சூழலில் பிறந்து வளர்ந்ததால் கிடைத்தது. RG கிழக்கு வங்கத்தின் பகர்கஞ்ச் மாவட்டத்தில் சிந்தகடி எனும் ஒரு வேளாணூரில் 23, மே மாதத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பம் சுமார் 50 ஏக்கர் பரப்புள்ள நிலக்கிழார் பின்னணியுடையது. இஸ்லாமியர், நாமதாரி சூத்திரர், இனங்களின் மத்தியில் ஒரு கயஸ்தாவாக வளர்ந்தார். இவரின் தாத்தா ஒரு வருவாய் அதிகாரி. தந்தையார் வழக்கறிஞராக இருந்து டாக்கா நீதிமன்றத்தில் நீதிமானாகப் பணியாற்றியவர். வங்காளம், ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்த RG அரசின் உதவித்தொகையில் பள்ளிக் கல்வியினை முடித்தார். கல்கத்தாவில் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலையில் சிறப்புப் பட்டமும் (B.A., Honours) முதுகலைப் பட்டமும் முதல் வகுப்பில் பெற்றார். முனைவர் ஆய்வுப் படிப்பினை மேற்கொண்டு ஆய்வேட்டினை சமர்ப்பிக்காமலே அரசியலின் பக்கம் வாழ்க்கையினை மேற்கொண்டார். 1942-1952 காலகட்டம் வரை பொதுவுடைமை இயக்கத்தில் இயங்கினார். அக்கட்சியின் இதழில் பல கட்டுரைகளை எழுதினார். இடையில் 1947 இல் பம்பாயிக்குச்சென்று அங்கு People’s war என்ற இதழில் கட்டுரைகளை எழுதினார். 1947 இல் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் (World Federation of Democratic Youth) பங்கேற்றார். கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வட-ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பயணம் செய்தார். போலந்துநாட்டில் இரண்டு ஆண்டுகள் வசித்தார். அங்கு தம் முதல் மனைவி மார்த்தாவை மணந்தார். சீனப் புரட்சிக்குபின் சைபீரியாவின் வழியே பீகிங்கிற்கு பயணம் செய்தார். கல்கத்தாவிற்கு திரும்பியவுடன் பஞ்சாலையில் ஒரு தொழிலாளியாக வேலை செய்தார். கப்பல் துறைமுகத்தில் ஊழியர்களுடன் வேலை செய்தார்.

07.கல்வியாளராக மாறிய தொழிலாளி: 1953 தொடக்கம் RG வங்காளத்தின் பலகல்லூரிகளில் இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். அப்போது ஆவணக் காப்பகத்தில் வரலாற்று ஆவணங்களைத் திரட்டி ஆய்விற்குப் பயன்படுத்தினார். கட்சிப்பணியும் ஆற்றினார். 1958-1959 களில் ஜாவத்பூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் அசிரியராகச் சேர்ந்தார். 1959 இல் இங்கிலாந்து சென்று அங்கு 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். University of Manchester, School of Asian and African Studies, Sussex University போன்ற உயர்கல்வி நிலையங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு தம் இரண்டாம் மனைவியினைச் (Mechthild) சந்தித்தார். 1970-1971 இல் இந்தியா திரும்பினார். Frontier எனும் இதழில் 1860 இல் வங்காளத்தில் இண்டிகோ கலகம் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையினை வெளியிட்டார். அதே இதழில் 23,ஜனவரி,1971 இல் On Torture and Culture என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அவரது கட்டுரை அறிஞர்தளத்தில் பெரிய வரவேற்பினைப் பெற்றது. மீண்டும் Sussex பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு காலனிய இந்தியாவில் வேளாண்குடிகள், கூலிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். 1983 இல் அவர் வெளியிட்ட காலனிய இந்தியாவில் வேளாண்குடி எழுச்சியின் அடிநிலைக்கூறுகள் (Elementary Aspects of Peasant Insurgency in Colonial India) எனும் நூல் இந்திய வரலாற்றியல் வரைவிற்கு புதுவரவு. 1979-1980 களில் இங்கிலாந்தில் இளம் வரலாற்று அறிஞர்களுடன் RG நடத்திய தொடர்விவாதங்கள் அவருக்கு ஒரு புதிய கருத்துருவினை கொடுத்தது. அதுவே Subaltern Studies எனும் கருத்தியல் உருவாவதற்கு வழிவிரித்தது. இதனடிப்படையில் அக்குழு ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வுக்கட்டுரைகளின் முதல் தொகுதி 1982 இல் வெளியிடப்பட்டது.

08.1980 இல் ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரிலுள்ள ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் (Australian National University) பசிபிக் ஆய்வுப்பள்ளி (Research School of Pacific Studies) என்ற துறையில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றினார். அடுத்து, அங்கு மானிடவியல்துறையில் பணியாற்றினார். அங்குதான் 1982-1989 வரை முதல் 6 தொகுதிகள் (subaltern studies) வெளியிடப்பட்டன. அவர் self-conscious stylist என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டார்.

09.ஆதிக்க வரலாற்றியலும் ஆதிக்கமற்ற வரலாற்றியலும்: தொகுதி 6 இல் RG எழுதிய Dominant Without Hegemony and its Historiography என்ற கட்டுரை இந்தியத் துணைகண்டத்தின் கிழக்கு நிலப்பகுதிகளான Bengal, Bihar, Orisaa போன்ற வட்டாரங்களில் வேளாண்குடிகளின் நிலைமை பற்றி வரலாற்றியல்பூர்வமாக ஆய்கிறது. 1765 இல் நவாபிற்காக மேற்சொல்லப்பட்ட பகுதிகளில் இருந்து வரிவசூலிக்க வேண்டிய பொறுப்பினை (English East India Company) கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்றது. ஆனால், அவர்களால் இந்தியாவின் சொத்துடைமை பற்றி (proprietorship) புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியவேளாண்மையில் உற்பத்திஉறவுகள் (relations of production) என்ற இயங்குமுறையினை (mechanism) அவர்களால் சரியாக கணிக்க முடியவில்லை. அப்போது, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு உள்ளூர் வரலாறு (local history) வலிந்து (hard pressed) எழுதப்பட்டது. பிரிடிஷ் அலுவலர்கள் இந்தியாவில் வழி வழி சொத்துரிமையினை (internal law) புரிந்து கொள்வதற்கு சில நிலக்கிழார் குடும்பங்களின் வரலாறு எழுதப்பட்டது. அங்குதான் மேட்டுக்குடியின் ஒருசார் வரலாறு (elitist bias) எழுதப்பட்டது. இது பிரிடிஷ் அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தும் காலகட்டத்தில் பெரும்பாலான இனக்குழுக்கள் தம் சாதித்தோற்றத்தின் வரலாற்றினை எழுத முற்பட்டதோடு ஒப்பிடலாம். இதில் உள்ளூர் மேட்டுக்குடியினர் (local aristocracies) இம்மண்ணின் சொத்துடைமையாளர்கள் (natural proprietors) என்று கருதப்பட்டனர். அப்போது, இங்கிலாந்தில் Whig கட்சியினரின் சமூகம், சட்டம் என்ற கொள்கையினைப் (doctrines of law, society) பரப்பினர். இக்கொள்கை இந்தியாவின் Zamindari settlement க்கு சாதகமாக எழுதப்பட்டது. இதனால் குடும்ப வாரிசுகளின் வழிமுறை (genealogies) புனைவுகள் (mythical) வழியே நம்பப்பட்டன. சில கட்டுக் கதைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன. சில உரிமைகள் முகலாயர் காலத்து பட்டயங்களில் இருந்து எடுக்கப்பட்டன. தெற்காசியாவின் (south Asian) நிலவுடமைக்கட்டமைப்பு ஐரோப்பியரின் இடையீட்டினால் (intervention of European power) தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இது ஒரு தெளிவற்ற தொடர்ச்சியாகும் (spurious continuity). இத்தவறான புரிதல் உலக வரலாற்றில் (global history) வலியுறுத்தப்பட்டது. இவ்வரிசையில் வரலாறு எழுதியவர்கள் பிரிட்டிஷாரின் சுரண்டலை அவர்களுக்கு முன்புவந்த Turko-Afghan மரபினையும் (medieval chronicles) இடைக்காலத்து வரலாற்றுச் செய்திகளையும் சாதகமான சன்றுகளாகப் பயன்படுத்தினர். இது, British Raj ஊன்றப்படுவதற்குப் வலுவாக உதவிற்று. ஆளப்படுகிற மக்களின் (subject population) சொத்துரிமை பற்றிய கேள்வியும் பதிலும் வரலாறு எழுதலில் கருப்பொருளாயின. இது, ஆங்கிலேய அலுவலரிடையே கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியது.

10.1770 களில் Warren Hastings vs Francis; 1780 களில் Grant vs Shore; 1788-1792 காலகட்டத்தில் Shore vs Cornwallis இடையே வாதப்பொருளானது. அப்போதுதான் நிலவுரிமைச் சட்டம் (permanent settlement) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சொத்துரிமைபற்றிய சட்டம் (rule of property) இயற்றப்பட்டது. இத்தொடக்கநிலை வரலாற்றியல், காலனிய ஆட்சி வலுப்பெற்றபோது கருத்தியல் பின்னணியுடன் (sophisticate discourse) பேசுபொருளானது. 19ஆம் நூற்றண்டில் பிரிடிஷாரின் அறிவு இதற்காக செலவிடப்பட்டது.

11.1812-1881 காலகட்டத்தில் பெருமளவிலான ஆவணங்கள் வரலாறு எழுதுவதற்கு பயன்பட்டன. 1812 இல் James Mill, History of British India என்ற நூலையும் 1881இல் Hunter, Indian Empire என்ற நூலையும் எழுதினர். அப்போது வரலாறுஎழுதுதல் ஒரு காலனியஅறிவாக (A colonial knowledge) அறியப்பட்டது. இந்தியவரலாறு கிரேட் பிரிட்டனின் வரலாற்றின் தொடர்ச்சியாக அறியப்பட்டது. ஆனால், இருநாட்டு மக்களுக்கும் வேறுபாடு இருந்தது. அது: ஆள்பவர்கள்; ஆளப்படுவர்கள். இவ்வேறுபாடு இனவியல்ரீதியாக வெளுப்பானவர்கள் (herrenvolk) கருப்பானவர்கள் (blacks) என்று புரிந்து கொள்ளப்பட்டது. பொருளியல்ரீதியாக மேற்கத்திய செல்வத்தின் அதிகாரம் (prosperous Western power) ஆசிய ஏழைகள் (poor Asian) என்று புரிந்து கொள்ளப்பட்டது. பண்பாட்டுரீதியாக உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றும் சமயரீதியாக உயர்சாதி சமய கிறித்தவம் x உள்ளூர் நம்பிக்கை முறைகள் (indigenous belief-system) என்றும் புரிந்து கொள்ளப்பட்டது. பண்டைய இந்தியா இவ்வாறு நிறமடிக்கப்பட்டது.

12.காலனியகாலத்தில் (colonialist, indigenous nationalist) காலனியர்கள் உள்ளூர் தேசியவாதிகள் என்ற இருகுழுவினரும் இந்தியாவைச் சுரண்டினர். இவ்விருகுழுக்களும் தீராச் சண்டையில் ஈடுபட்டனர். கலனியப்பண்பாட்டு வரலாறு இந்தியாவின் பண்டைய வரலாற்றினை மூடிமறைக்கப் பார்த்தது. அது, காலனிய வரலாற்றியலில் பிரதிபலித்தது. இடைத்தட்டு நகரவாசிகள் (metropolitan bourgeoisie) வீடுகளில் அமைதியாக இருந்து இந்தியப் பேரரசின் தான்தோன்றித் தன்மையினை நடத்தினர். ஐரோப்பாவில் சுயஉரிமையினைப் பாதுகாக்க நினைக்கும் தேசியவாதிகள் இந்தியருக்கு சுயசார்பு உரிமையினை வழங்குவதற்கு மறுத்தனர். 1885-1947 வரை தேசியவாதிகளின் நோக்கம் போராடுவதல்ல; பேரம்பேசி சுமூகமாகப் போவது (tactical means in bargaining for power, compromise and accommodation). இவ்விரு கூறுகளுமே இந்தியச் சமூகத்தின் (semi-feudal) அரை-நிலமானியத் தன்மைகள். இவர்களின் விடுதலைவாதம் (liberalism) காலனிய அட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

13.மேற்கண்டவாறு RG இந்திய தேசிய வரலாற்றின் தொடக்கநிலை வரலாற்றியல் பற்றி விமர்சிக்கிறார். அவருடைய இடைக்காலத்திய வரலாற்றியல் பற்றிய விமர்சனம் பின்வருமாறு தொடர்கிறது. தாராளவாத வரலாற்றியல் (liberal historiography) அதாவது இறுக்கமற்ற வரலாற்றியல் புனைவுகளின் அடிப்படையில் கருத்தியல்களை வடிவமைப்பதாகும். தாராளவாத வரலாற்றியல் தான்விரும்பும் (subjectivity) வர்க்கத்திற்காகப் பேசுகிறது. கி.மு 400-500 காலகட்டத்தில் கிரேக்கத்தில், ரோமில் கி.பி.200 வரையிலான காலகட்டத்தில் சகிப்புத் தன்மை (tolerance) இல்லை என்பது அறியப்பட்ட ஒன்று. அங்கு சமூகத்தில் அடிமைமுறை வழக்கில் இருந்தது. அரிஸ்டாட்டில் அடிமை முறையினை உளவியலாகவும் நிறுவனமயமாகவும் நியாயப்படுத்தினார் (psychological and institutional terms). அரசியலைப் பேசும்போது சிலர் அடிமையாக இருப்பதும் சிலர் அடிமையாக இல்லாமல்இருப்பதும் இயல்பானது என்கிறார். ஹெரடோடசும் அடிமைவர்க்கத்தினர் கீழானவர் (inferior beings) என்கிறார். செனபோன் என்பவர் ஏதென்ஸ் நகரில் அடிமைகளுக்கென்று பொதுநிதித் திட்டம் பற்றிப் பேசுகிறார். இப்படி, ஆதிக்கப் பண்பாடு (dominant culture) அதனடிப்படையில் அடிமைகள் சுரண்டப்படுவது பற்றிப் பேசியது. இங்கு, அறிஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அடிமைமுறை பற்றிய புரிதலில் வேறுபாடில்லை என்று அறிய முடிகிறது.

14.நிலமானிய வரலாற்றியல்: (நிலமானிய வரலாற்றியல் ஆள்பவர்களின் பண்பாட்டுடன் (ruling culture) அடையாளப்படுத்தப்படுகிறது. நிலமானிய முறை வரலாற்றியலின் ஆசிரியர்கள் அரசரிடமும் ஆண்டவரிடமும் மண்டியிடுபவராக இருந்துள்ளனர். ஆளும் வர்க்கத்தின் அடிப்படைகளை கேள்வி கேட்பதற்கு அங்கு ஆளில்லை. சுல்தானியர்காலத்திற்கு முன்பிருந்த கல்ஹணர் விமர்சனப்பூர்வமான ஒரு வரலாற்றாசிரியர் (critical acumen among the historians). அவர், நவீன காலத்தின் வரலாற்றாசிரியர்களை விடவும் சிறப்பாக வரலாற்றினை எழுதினார். அவர் பயன்படுத்திய சான்றுகள்: காலமுறை ஏடுகள் (chronicles) புராணங்கள், வாய்மொழி இலக்கியங்கள் (oral sources), நாணயங்கள், கல்வெட்டுகள் போன்றவை. 11 அரசவரிசைகளின் ஏடுகளை (royal chronicles) ஆய்ந்தார். அவருக்குமுன்பே ஷேமேந்திரா என்பவர் எழுதிய வரலாற்று நூல்களிலுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டினார். கல்ஹணர், அவரை ஆதரித்த அரசர்களையே விமர்சித்தார். ஆளும் இளவரசரரைக்கூட விமர்சித்தார். எனவேதான், சிறந்த வரலாற்றாசிரியராக நவீனகாலத்து வரலாற்றாசிரியர்களால் போற்றப்படுகிறார். ஆனால், கல்ஹணர் மந்திர, தந்திரங்களை (witchcraft and magic) நம்பினார். கடவுள் கோபம்கொள்வார் என்று நம்பினார்; அறிவியல் பூர்வமான கேள்விகளை கேட்கவில்லை. அவர் கர்மா கோட்பாட்டினையும், கூடுவிட்டு கூடுபாயும் (transmigration) நம்பிக்கையினையும் மறுக்கவில்லை. இதுதான் நிலமானி முறையின் வரலாற்றியல். நிலமானிய சமூகத்து அதிகாரத்தின் உளவியலையும் (dominant consciousness) ஆள்பவர்களின் பண்பாட்டினையும் (ruling culture) விட்டு அவரால் வெளியே வரமுடியவில்லை. எழுச்சியுற்ற மக்களால் (people in uprising) மன்னன் கொல்லப்படாமல் போனதற்கு காரணம் அவனை கடவுள் காப்பாற்றினார் என்று கல்ஹணர் கூறுகிறார். அக்காலகட்டத்தில் இராஜபக்தி (devotion to royalty) என்பது அரசியல்தத்துவமாக இருந்தது. அரசர்களுக்கும் பிரபுக்களுக்கும் நடந்த கலகங்களில் அரசன் காப்பாற்றப்படுவது அரசு மக்களால் ஆளப்படவில்லை கடவுளால் ஆளப்படுகிறது என்று கருத்து நிலவியதால்தான் என்று இரணஜித் குஹ சொடுக்கான ஒரு கருத்தினை பதிக்கிறார். இவருடைய இம்மாதிரியான அலசல் பார்வை (analytical view) வரலாற்றியலை அறிவியல்பூர்வமாக வளர்த்தெடுப்பவர்களுக்கு மனத்தில் ஆர்வத்தினை ஊற்றாக்கும்.

15.குடியும் குஜராத்தும்: இரணஜித் குஹ வகுத்தளித்த சிந்தனைப் பள்ளியில் ஒருவரான Hardiman என்பவர் காலனிய காலத்து குஜராத்தின் தென்பகுதியில் நிலவிய குடிப்பழக்கத்தினை சமூகப் பின்னணியில் ஆய்ந்தார். இக்கட்டுரையினை ஆவணச்சான்றுகளின் அடிப்படையில் எழுதி சபால்டர்ன்தொகுதி 6 இல் வெளியிட்டார். அதற்கு முன்பு இதுபோன்றதொரு கட்டுரை வரலாற்றியலில் வெளியிடப்படவில்லை. அவரின் கருத்துகள் வருமாறு: காலனியகாலத்தில் பிரிடிஷ்அரசுக்கு நிலவருவாய் முதன்மையானதாகவும் மதுவினால் வரும்வருவாய் இரண்டாவதாகவும் இருந்தன. அக்காலத்தில் வைதீகஇந்துக்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள் குடிப்பதனை மதிப்பு குறைவாகக் கருதினர். குஜராத்தின் தென்பகுதியில் பல நூற்றாண்டுகளாக மக்கள் தரு (daru) என்ற நாட்டு மதுவினையும், கள்ளினையும் குடித்து வந்தனர். 1608-1610 காலகட்டத்தில் William finch என்பவர் குஜராத்தில் வசித்தபோது பேரீட்சை மரத்திலிருந்து கள் வடிப்பதனைக் கவனித்தார். அங்கு, இலுப்பைப் பூவிலிருந்தும் மது காய்ச்சியுள்ளனர். மொத்த பம்பாய் இராஜதானியிலும் தெற்கு குஜராத் குடிக்கு பெயர்பெற்றிருந்தது. ஓராண்டில் சுமார் 4 இலட்சம் காலன் அளவுள்ள கள் குடிக்கப்பட்டது. ஒரு காலன் 3.375 லிட்டர் அளவு கொண்டது. 1951 புள்ளிவிவரப்படி குஜராத்தின் தெற்கில் 72% குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் குடிப்பழக்கம் கொண்டிருந்தனர். அடித்தட்டுமக்களின் (tribal, untouchable, lower caste) தொகையில் 80% குடும்பத்தில் குடிப்பழக்கம் இருந்தது; 7.5% உயர்சாதி குடும்பங்களில் இப்பழக்கம் இருந்தது. பார்ப்பனர், வாணியர் (இந்து/சமணர்) வேளாண்குடிகளான பட்டிதார்கள் அளவில் பார்ப்பனர்கள் குடிப்பதில்லை. 59% இஸ்லாமியர் குடும்பத்தில் குடிப்பழக்கம் இருந்தது. 1669 இல் இஸ்லாமியர்கள் பெருமளவில் குடித்தனர் என்று காலனியச் சான்றுகள் உரைக்கின்றன. ஆனாலும், 20% மக்கள் குடியிலிருந்து விலகியிருந்தனர். அங்கிருந்த பார்சிகள் குடிப்பிரியர்கள் என்று Hardiman முத்திரையிடுகிறார். பொதுவாக கள், மது இரண்டும் விரும்பப்பட்டன. இவர்கள் கள்வடிக்கும் மரங்களைப் பயிரிட்டனர் என்று Peter Mundy என்பவர் குறித்துள்ளார். இவர்கள் இலுப்பைப் பூக்களை நொதிக்கவைத்து சாராயம்காய்ச்சும் முறையினை அறிந்திருந்தனர். இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள்: மொசாம்பிக் எலுமிச்சை, மாங்கனி, ஏலக்காய், ரோஜாமலர், மல்லிகைமலர், அரபுமல்லி, உலர்திராட்சை, சோம்பு, அன்னாசிப்பழம் போன்றவை. இம்முறையில் காய்ச்சப்பட்ட சாராயத்தினைக் குடிப்பவர் மிகச்சிலர். சூரத்தில் அப்போதைய மாவட்டக் கலெக்டர் W.T.Morison இது தொடர்பாக ஒரு குறிப்பினைத் தருகிறார். அடிநிலைமக்கள் (lower caste people) விழக்காலங்களிலும் விடுமுறை நாள்களிலும் குடிப்பர் என்கிறார்.

1951 ஆம் ஆண்டின் பாம்பாய்பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி குஜராத்தின் தென்பகுதியில் பெரும்பாலும் குடும்பத்தலைவர்கள் குடிகாரர்கள். 59.9% மனைவிகள் குடிப்பவர்கள்; 44.3% மகன்கள் குடிப்பவர்; 32.9% மகள்கள் குடிப்பவர். அதுபோன்றே குடிப்பவர்களில் 5 வயதுக்கு உட்பட்டவர் 22%; 6-10 வயதுக்கு உட்பட்டவர்கள் 23%; 11-15 வயதுக்கு உட்பட்டவர்கள் 29%; 16-20 வயதிற்கு உட்பட்டவர்கள் 43%. இங்கு வயது கூட கூட விகிதமும் கூடுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். இதனை உளவியல்ரீதியான செயற்பாடகக் கருதலாம். நிலமற்ற வேளாண்குடிகளின் அன்றாட வாழ்வில் குடி மையம் கொண்டிருந்தது (centre place in the culture) இதற்கு நேர் எதிர்கொள்கையினைக் கொண்டிருந்தவர் பார்ப்பனர், சமணர், இஸ்லாமியர். பழங்குடிமக்கள் மதுவிற்குப் பெரிதும் மதிப்பளித்தனர். அதனை ஆன்மவியல் பானம் (spirituous drinks) என்று கருதினர். மதுவினைப் படைப்பதன் மூலம் தங்கள் கடவுளர்களை மகிழ்விப்பதாக ஆதிவாசிகள் நம்பினர். மது உணவின் கடவுள் (food of the gods) எனப்பட்டது. கடவுள் பார்ப்பனர்களுக்கு நெய்யினையும் பில்லர்களுக்கு மதுவினையும் வழங்கியுள்ளார் என்று ஒரு பழமொழி உண்டு. கிராமப் பஞ்சாயத்தும் பழங்குடிப் பஞ்சாயத்தும் குடித்தபின்பு முடிகிறது. திருமணத்திற்கான பேச்சுவார்த்தையும் குடியுடன் முடிகிறது. இறப்புச்சடங்குகள் இப்படித்தான் கொண்டாடப்படுகிறது. 1884 இல் F.S.P.Lely என்ற துணை-கலெக்டர் நிலமற்ற ஏழைகளின் உணவில் மதுவும் உண்டு என்று குறிக்கிறார். தரு என்ற மதுவினை அருந்துவதால் மலேரியா, காலரா, பிளேக் நோய்களிலிருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை நிலவியது. அதற்கான கள்ளினை பொதுவாக தென்னை, பனை, பேரீட்சை, பிராஸ் மரங்களில் இருந்து வடித்தனர் என்றும் அறியப்படுகிறது. மற்ற கட்டுரையாளர்களின் கருத்துரைசாரம் பிறிதொரு கட்டுரைக்குத் தளமாகும்.

16.முடிவல்ல: மேற்சொல்லப்பட்டது போன்ற கருத்தியல்களின் பின்னணியில் வெவ்வேறு சமூகத்தளங்களை வரலாற்றய்விற்குள் சேர்ப்பதற்கான முயற்சியினை இரணஜித் குஹ தொடங்கி வைத்தார். தற்போது இச்சிந்தனைப்பள்ளி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. நூறாண்டுகளைக் கொண்டாடுவதற்கு சிலநாள்களுக்கு முன்பு இரணஜித் குஹ மறைந்தார். அவருக்கு புகழேற்றும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்பட்டது. அவர் தொகுத்தளித்த கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டு பல வழிகளை வரலாற்று வரைவியலுக்கு திறந்துள்ளன. அவ்வழிகளில் நடக்கலாம்; புதிய திறப்புகளையும் உருவாக்கலாம்.

(இக்கட்டுரையினை எழுதுவதற்கு இரணஜித் குஹ தொகுத்த பத்து தொகுதிகளையும் தந்துதவிய பேராசிரியர்.E.மணமாறன் அவர்களுக்கு நன்றி பல.)

கி.இரா.சங்கரன்,  தகைசால் பேராசிரியர், கடல்சார்வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613010