முன்னுரை
அறம் என்ற சொல் “அறு” என்னும் வினைச்சொல் அடியாக பிறந்ததே, அறம் என்னும் சொல்லாகும். “அறு” எனும் அடிச்சொல்லிற்கு “அறுத்துச்செல்", “வழியை உண்டாக்கு”, “உருவாக்கு”, “துண்டி”, “வேறுபடுத்து” என்று பலவகைப் பொருட்கள் வழங்குகின்றன. இதனால் மனித வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கான நல்வழியைக் காட்டி தீமையை அறுத்தெரிவது அறம் என்பது தெளிவாகிறது. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஓழுக்க முறைகளின் தொகுதியின், முழுநிறை வடிவமே அறம். வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. அறம் செய்வதை உயிருக்கு மேலாகக் கருதியவர்கள் தான் தமிழர்கள்.
பழங்காலத்தில் தமிழர்கள் பொருளீட்டி அறம் செய்து இன்புற்றனர். இவ்வாழ்க்கையையே அறவாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். எவ்வளவு பணமோ அல்லது பொருள்களோ கொட்டிக் கொடுத்தாலும் பழி தரும் செயல்களை செய்ய மறுத்தார்கள். அறத்தினை மனித உறவின் மையமாக வைத்து வாழ்ந்து வந்தார்கள். மேலும் தன்னலம் துறந்து பொதுநலத்தை உயிரினும் மேலாகக் கருதினர், தம்மிடம் வந்து இரந்த எளிய மக்களுக்கு இல்லை என்று கூறும் அவச் சொல்லைக் கூறுவதை தாழ்வாகக் கருதினர்.
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு வரையறைக்குள் வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் மற்றும் அறநெறிகள் பாதுகாக்கப்பட்டன, போற்றப்பட்டன. பழங்காலத்தில் தமிழர்கள் அறநெறியுடன் வாழ்ந்தார்கள் என்பதனை தமிழ் இலக்கியங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
இலக்கியம் காட்டும் நெறிகள்
இலக்கியம் என்பது ஒரு மொழியின் பண்பட்ட வெளிப்பாடாகும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை ஒன்று கலை இலக்கியம், மற்றொன்று அறிவியல் இலக்கியம்
ஆனால் பொதுவாக கவிதை, உரைநடை, நாடகம் போன்ற கலை இலக்கிய படைப்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. அறிவியலைக் காட்டிலும் கலை அழகியலின் வெளிப்பாட்டை இன்றியமையாததாக இலக்கியம் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இலக்கியங்களில் அற நெறிகள் பற்றி எவ்வாறு தெளிவாக விளக்கப்படுகின்றன என்பதனைக் கீழ்க்காணும் இலக்கியங்கள் கூறும் கருத்துக்கள் மூலம் காணலாம்.
வள்ளுவர் காட்டும் அறம்
ஒருவர் பொறாமை, பேராசை, கடுஞ்சொல் மற்றும் கோபம் இந்த நான்கையும் தன்னுடைய வாழ்நாளில் வராமல் கடைபிடித்து வாழ்பவனே அறவழியில் வாழ்ந்து வருகிறான் என்பதனை,
அழுக்காறு அவா, வெகுளி ,இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள் 35 ) என்ற குறள் வழி அறியலாம். மேலும் கிடைத்ததை பகுந்து கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்பதனை
“பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”(குறள் 322) என்ற குறள் உணர்த்துகிறது.
ஓளவையின் ஆத்திச்சூடி காட்டும் அறம்
எந்த ஒரு செயல் செய்தாலும் அதனை விரும்பி தான் செய்ய வேண்டும். நமக்கு விருப்பம் இருந்தால்தான் அதற்காக நேரம் செலவு செய்வோம். பணம் செலவு செய்வோம். இன்னும், இன்னும் செய்ய வேண்டும் என்று தோன்றும். எது எல்லாம் நமக்கு விருப்பமோ அது நமது சிந்தனையில் இருக்கும். விரும்பினால் மகிழ்ச்சியாக செய்வோம். இங்கு ஓளவை விளக்குவது என்னவென்றால் அறம் செய்வதை விருப்பத்துடன் செய்ய வேண்டும் என்று தான் விளக்குகிறார். அறம் என்றால் தானம், தர்மம் என்ற பொருள் மட்டுமல்ல அறவழியில் நின்று தன் வாழ்நாளில் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது. இதனை
அறம் செய்ய விரும்பு... (ஆத்திச்சூடி - 1) என்ற அடியில் குறிப்பிடுகின்றார்
தன்னிடம் உள்ள உணவை தான் மட்டுமே உண்ணாமல் அடுத்தவருடன் பகிர்ந்து சாப்பிடு, குறிப்பாக இல்லார்க்குப் பகிர்ந்து அளித்து உண் என்பதை,
“ஐயம் இட்டு உண்.” என்ற வரிகளில் குறிப்பிடுகிறார்
சிலப்பதிகாரம் கூறும் அறம்
ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும். ஊழ்வினை விடாது பற்றித் தொடரும். கற்புடைய பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். இதுபோன்ற அறம் சார்ந்த கருத்துக்களை கீழ்க்கண்ட வரிகள் சுட்டிக் காட்டுகிறது.
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவார்
நாலடியார் கூறும் அறம்
அழகும் இளமையும் மிகுந்த செல்வம் ஒருநாள் அழிந்துவிடும். காலம் செல்லச் செல்ல இவையும் சென்று விடும் என்பது இயற்கை நியதி. செல்வத்தின் மூலம் நற்செயல்கள் எதையும் செய்யாது வீணாக காலத்தை கழிப்பவனுடைய வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை என்று கூறுவது தவறாகும். இவ்வாறு வாழ்பவனுடைய வாழ்வு வாழ்ந்தாலும் விழுந்ததற்கு சமம் என்று நாலடியார் கூறுகிறது .
“உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதவன் வாழ்க்கை உடம்(பு)இட்டு
நின்று வீழ்ந் தக்க (து)உடைத்து” (39)
மணிமேகலை காட்டும் அறம்
மனிதனுடைய அன்றாட தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல வழியில் பெற்று இல்லாதவர்கள் கொடுத்து வாழ வலியுறுத்த வேண்டும் என்பதனை ‘அறமெனப்படுவது’ என்ற வரிகளில் மூலம் உணர்த்துகிறார்.
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில் (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 228- 230)
சிறுபஞ்சமூலம் கூறும் அறம்
நமக்கு சிறுபஞ்சமூலம் என்ன சொல்கிறது என்றால் ஐந்து செயல்கள் செய்பவர்கள் அறநெறியில் செல்வார்கள் என்று கூறுகிறது .ஒன்று குளம் வெட்டுகிறவன் இரண்டு நீர் வழிந்து ஓட வாய்க்காலமைப்பவன், மூன்று புது கிணறு அமைப்பவன், நான்கு விளை நிலம் உருவாக்குபவன் ஐந்து மரத்தினை நடுபவன் இந்த ஐந்து செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் அறநெறியில் செல்வார்கள் என்று சிறுபஞ்சமூலம் நமக்கு விளக்குகிறது.
முடிவுரை
சங்க இலக்கியங்களில் அறம் என்று பார்த்தோமானால் சங்க வாழ்க்கையில் எது உயர்வான பண்பாடோ, அதுவே அறமாகப் பார்க்கப்பட்டது. அகம் சார்ந்த வாழ்க்கை காதலைப் பற்றியும் புறம் சார்ந்த வாழ்க்கை வீரத்தை பற்றியும் பேசக் கூடியது . வீரம் என்பது போர்க்களத்தில் பகைவருடன் போரிடும்போது புறமுதுகு காட்டி ஓடக்கூடாது, எதிரியை ஜெயிக்க வேண்டும். இல்லையென்றால் எதிரியை நேருக்கு நேராக எதிர்த்து நெஞ்சில் குத்து வாங்கி சாக வேண்டும். அதுதான் அறம் ஆகும். காதல் வாழ்க்கையில் தோழி தலைவியின் ரகசியத்தை காப்பாற்றுவது, அதேபோல தலைவியின் காதலுக்கு உண்மையாக இருக்கிறது போன்றவற்றை தொல்காப்பியர் அறத்தோடு நிற்றல் என்று குறிப்பிடுகிறார். மேலும் தலைவி தன்னுடைய காதலை முதலில் தோழியிடம் தான் தெரியப்படுத்த வேண்டும். அதனை தோழி செவிலித்தாயிடம் சொல்ல வேண்டும். செவிலித்தாய் அதை நற்றாயிடம் சொல்ல வேண்டும். இப்படித்தான் காதல் திருமணத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதைத்தான் தொல்காப்பியர் அறத்தோடு நிற்றல் என்று குறிப்பிடுகிறார்.
அதன் பின்பு வந்த பக்தி இலக்கிய காலகட்டத்தில் பக்தியினால் மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டது. அறம் பற்றி மக்கள் சிந்திக்கவில்லை. மீண்டும் மக்கள் பக்தியிலிருந்து பகுத்தறிவை நோக்கி எழுச்சி பெறத் தொடங்கிய காலத்தில் பகுத்தறிவின் இலக்கும், சமூகப் பொறுப்பும் இலக்கியத்தின் அறமாகக் கட்டமைந்தன. இன்றைய காலகட்டத்தின் வாழ்வியல் சூழலில் நம் கடைபிடிக்க வேண்டிய அறமும், இலக்கியமும் முன்நிறுத்தக்கூடிய அறமும் எதுவாக இருக்க முடியும் என்பதை உறுதி செய்வது இலக்கிய அறிவியலின் சமூகக் கடமையாகும்.
சமூகப் பொருள் உற்பத்தியில் லாப நோக்கத்தோடு செயல்படுகின்ற நிறுவனங்களின் இன்றைய நடைமுறையானது இயற்கையின் மீது பகை முரணாக அமைகிறது. மனித இயற்கையானது திட்டமிடப்படாத இயற்கை சூழல்களில் திட்டமிட்ட மாற்றங்களை நிகழ்த்துவதாகும். இத்தகைய மாற்றங்கள் இயற்கை மீதான நட்பு முரணாகவே கட்டமைந்து வந்திருந்தன. இந்த மனிதர்களின் உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்ற உண்மையை ஒப்புக் கொள்வது தான் அறம் ஆகும். இந்த உயிரினங்களில் வாழக்கூடிய உலகத்தின் மனிதர்கள் அங்கமாக இருக்கக்கூடிய லாபவெறி பிடித்த நிறுவனங்களின் லாபவெறிக்கு பலியாகக் கூடிய சூழலுக்கு எதிராக இந்த சூழலை நேருக்கு நேர் எதிர்த்துச் செல்வது இந்த காலகட்டத்தில் அறமாக இருக்கிறது.
சமூகப் பொறுப்பற்ற சுயநல வெறிப் பண்பாட்டை எதிர்ப்பதும் சமூக பொறுப்புடையவர்களாக மனிதர்கள் ஒருங்கிணைவதும் அதன் மகத்துவத்தை சமூக ஆழ்மனம் வரை நெகிழ்ச்சியூட்டும் அழகியலாகப் படைத்துக் காட்டுவதும் தான் இந்த காலகட்டத்திற்கு இலக்கியம் போதிக்கும் அறமாக விளக்கம் பெறுகின்றது.
துணை நின்ற நூல்கள்
- இரா. ராதாகிருஷ்ணன் ; நீதி நூல்கள் ஏழு; தெளிவுரை; கவிஞர் -சிவகுரு பதிப்பகம் -சென்னை (2021).
- கே டி கே தங்கமணி ;மணிமேகலை பற்றி ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்; சென்னை (ஆகஸ்ட்- 1988)
- டாக்டர் சி பாலசுப்பிரமணியன்; வாழ்வியல் நெறிகள்; நறுமலர் பதிப்பகம் (சென்னை டிசம்பர் 1990)
- புதியவன் முனைவர் சிவக்குமார் கே.---- இலக்கிய அறிவியல்---- இணையம் கிண்டில் அமேசான்--2021
- பத்தாம் வகுப்பு - தமிழ் உரைநடை உலகம்- சங்க இலக்கியத்தில் அறம்.( பக்கம் 184 முதல் 187 வரை) தமிழ் அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (2019)
- விந்தியா கௌரி- ( May 2021) “நாலடியாரில் வாழ்வியல் அறங்கள்” International Multidisciplinary Innovative Research Journal – An International refereed e- journal . ISSN 2456- 4613 Volume – V issue -2
- முனைவர் மு.நிசாந்த், உதவி பேராசிரியர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி, மதுரை