மாபெரும் சோவியத் புரட்சி இந்திய மண்ணிற்கு மார்க்சியத்தைக் கொண்டு வந்தது.
1925 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த முதல் மாநாட்டில் கட்சி தொடங்கியதாக அதிகாரப்படி அறிவிக்கப்பட்டது.
கட்சி தொடங்கி முறையான கட்சித் திட்டம் வருவதற்கு 15 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது.
முதல் கட்சித் திட்டத்தில் இந்திய சமூக வரையறையைப் பற்றிய மதிப்பீட்டில் இந்தியாவில் நில உடமை ஆதிக்கத்தை வீழ்த்துவது முதன்மையானதாகக் கூறப்பட்டிருக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நில பிரபுத்துவத்தை வீழ்த்தி புதிய ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்துவது நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
1930களில் மொழி வழி தேசிய இனங்களின் மாநிலக் கோரிக்கைகள் வலுப்பெற்ற போது கம்யூனிஸ்ட் கட்சி அதை ஆய்வு செய்தது.
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை கட்சித் திட்டத்தில் வைத்தது.
இந்தியாவை தேசிய இனங்களின் ஒன்றியமாகத் தான் கட்டமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1960-கள் வரை திட்டத்தில் வைத்திருந்தது.
காங்கிரஸ் கட்சியின்பாலான அணுகுமுறைகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடுமாற்றங்களுடனே செயல்பட்டு வந்தது வரலாறாகும்.
பெரியார், அம்பேத்கர் என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகள் இந்தியாவின் வர்ண சாதி ஒடுக்கு முறையையும், மனுதர்மக் கோட்பாட்டையும் பார்ப்பனிய இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றையும் தோலுரித்துக் காட்டினர்.
இந்திய சமூகத்தின் வர்ண சாதி அமைப்பை மிகச் சரியாக அடையாளம் காட்டினர். வர்ண சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான காத்திரமான போராட்டங்களை இதே காலத்தில கட்டமைத்து வந்தனர்.
சமூக நீதி என்னும் கோட்பாட்டை முன்வைத்து அதை சட்டங்களிலும் கொண்டு வரச் செய்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை இந்திய சமூகத்தின் வர்ண சாதிக் கட்டமைப்பை ஆய்வு செய்து பெரியார், அம்பேத்கரின் கூற்றுகளில் இருக்கிற உண்மைத் தன்மையை காணத் தவறியது.
அது மட்டுமல்ல, ஜீவா போன்ற மிகப் பெரிய தலைவர்கள் இராமாயணத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு உச்சி முகர்ந்து, அதன் இலக்கிய நயத்தைப் பேசுகிறேன் என்ற பெயரில் இராமாயணத்தின் வர்ணக் கோட்பாட்டை பிரச்சாரம் செய்தது வரலாற்றுப் பிழை என்பதை இப்பொழுதாவது சுய விமர்சனமாக கம்யூனிஸ்ட் தலைமை உணர வேண்டும்.
இதே காலகட்டத்தில் பெரியார் இராவண லீலா நடத்தினார். அண்ணா, ‘நீதி தேவன் மயக்கம்’ எழுதினார். "இராமாயணம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?" என்று மக்கள் நடுவிலே மாபெரும் விவாதங்களை கட்டமைத்தார்.
இந்து இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிற இலக்கியங்களில் உள்ள மக்களின் வாழ்வு சார்ந்த ஒடுக்குமுறை கருத்தியல்களை திராவிட இயக்கம் மிகச் சரியாகவே மக்களிடம் அம்பலப்படுத்தியது.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நேரு காலத்திய பொருளாதாரக் கட்டமைப்பை அணுகுவதில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
1947-களில் நடந்த மாபெரும் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, கட்சி ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டு நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையை தனது வழியாக தேர்வு செய்து கொண்டது.
மாசேதுங் காலத்தில் இந்தியாவுக்கும் சீனத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அணுகுவதில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட கடும் முரண்பாடு இந்திய பொது உடைமைக் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக வழி வகுத்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964களில் தொடங்கப்பட்டிருந்தாலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பெரும்பாலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைத்து விட்டார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்த டார்ஜீலிங் மாவட்டக் குழு பாராளுமன்றப் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்ட அரசியல் பாதையை முன்வைத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர்கள் நடுவிலும், வெளியிலும் விவாதங்களைத் தொடங்கியிருந்தது.
1967ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்த தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்தனர்.
அதே காலகட்டத்தில் நக்சல்பாரி, காரிபாரி போன்ற பகுதிகளில் நில உடைமை ஆதிக்கத்திற்கு எதிரான வலுவான ஆயுதம் தாங்கிய உழவர்கள் பேரியக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்டக் குழு கட்டமைத்து நடத்தியது.
இந்தப் போராட்டத்தை அணுகுவதில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பிளவுபட வழி வகுத்தது.
பாராளுமன்றப் பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டப் பாதையை உயர்த்திப் பிடித்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)1970ல் உருவானது.
மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி உருவாகி இருந்தாலும், அது மக்கள் திரள பாதையை மறுத்து தனிநபர் அழித்தொழிப்பை ஆணையில் வைத்தது.
இதனால் கட்சி தொடங்கியவுடன் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பல்வேறு குழுக்களாக சிதறுண்டது. இந்தியாவுக்கான விடுதலைப் பாதையை வகுப்பதில் பல்வேறு வகையான கருத்து முரண்கள் எழுந்தது.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டப் பாதையில் இருந்து மக்கள் திரள் பாதைக்கு மாறும் காலகட்டத்தில் தமிழரசன் தலைமையிலான குழுவினர் தேசிய இன, சாதியச் சிக்கல் இங்கு இருப்பதை முன் வைத்தனர்.
இந்த சரியான நிலைப்பாடுகளை முன்வைத்த போதும் அவர்கள் கட்சியின் தீவிரவாத நிலைப்பாட்டையும் கைவிடாமல் அதையும் பின்பற்றினர். எனவே அரசின் கடும் அடக்குமுறைக்கு ஆளாகி அவர்களும் ஒடுக்கப்பட்டனர்.
1980களில் தமிழகத்தில் உருவான கொள்கையியல் வளர்ச்சிப் போக்கில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) தமிழ்நாடு அமைப்புக் குழு தோழர் கார்முகில் தலைமையில் 1984 ஆம் ஆண்டு தனது மூன்றாவது பிளினத்தை நடத்தி உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கோவையில் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக மாநாடு என்ற ஒரு விரிந்த மக்கள் திரள் மாநாட்டை நடத்தியது.
தமிழ்நாட்டின் மா.லெ குழுக்களின் வரலாற்றில் இந்திய அளவிலான தலைவர்களை இணைத்து ஒரு வெளிப்படையான மக்கள் திரள் மாநாடும் - பேரணியும் நடத்தியதில் கோவை மாநாடு திருப்புமுனையாக அமைந்தது.
மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலாச்சார கழகம் என்ற பெயரில் விரிவாக மக்களைச் சென்றடையும் வேலை தொடங்கி கலைக் குழுக்கள் கட்டப்பட்டு கல்லூரிகளிலும் வெகுமக்கள் நடுவிலும் பரந்துபட்ட வேலைகள் நடைபெற்றன.
மன ஓசை என்கிற இலக்கிய இதழும், கேடயம் என்கிற அரசியல் இதழும் கொண்டு வரப்பட்டு தோழர்களின் கடும் உழைப்பால் அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டு பாசிச எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு ஈரோட்டில் இரண்டு நாள் மக்கள் திரள் மாநாடு நடத்தப்பட்டது.
அது பரந்து பட்ட ஜனநாயக சக்திகளை மா.லெ இயக்கத்தின் தலைமையில் அணிதிரட்டுகிற இயக்கமாக நடைபெற்றது.
1990களில் ஈரோட்டில் புரட்சியாளர்கள் மாநாடு நடத்தி இந்தியாவில் உள்ள அதிகபட்சமான மா.லெ. குழுக்களை ஒரு மேடையில் சந்திக்க வைக்கும் முயற்சியும் நடைபெற்றது.
இவற்றிற்கு நடுவில் அரசியல் அரங்கில் முதன்மை பெற்று வந்த மண்டலக் குழு அறிக்கையும், அதன் மீதான போராட்டங்களும், காஷ்மீர் சிக்கல், பஞ்சாப் தேசிய இனப் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் - இவைகளுக்கு சரியான முறையில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முகம் கொடுக்காமல் ஆளும் வர்க்க நிலைபாடுகளை ஆதரிப்பது வெளிப்படையாகவே இருந்தது.
அதே நேரத்தில் மா.லெ. குழுக்கள் இபொக (மா.லெ) கட்சியின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்டு, சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுத்து இந்தப் பிரச்சினைகளை அணுகும் போக்கு வெளிப்பட்டது.
கட்சித் திட்டத்திற்கும், சமூக நிலைமைகளுக்கும் உள்ள முரண்பாடு குறித்த ஆய்வில் இந்திய சமூகச் சிக்கல் என்பது வர்க்கப் போராட்ட வரலாறாக மட்டுமில்லை, இந்திய சமூக வரலாறு தேசிய இன ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை கொண்ட நீண்ட நெடிய பார்ப்பனிய ஆதிக்க வரலாறாக உள்ளதை கட்சி ஆய்வு செய்து முன் வைத்தது.
இந்தியாவை தரகு பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்று வரையறுத்தது, தமிழ்த் தேசிய விடுதலை என்ற முடிவை முன் வைத்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மீட்சி என்பது இந்திய சமூகத்தில் பார்ப்பனிய மீளுருவாக்கத்தை செய்து வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் அணிவகுப்பில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டும் வருகிறது.
ஆர்.எஸ்.எஸ், பாஜக உருவாக்கியுள்ள தாக்கம் இந்திய வரலாற்றில் இன்னும் நுணுக்கமாக அணுகி இந்தியாவின் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டத்திற்குமான வரலாற்று வழியில் வர்க்கப் போராட்டத்தை முன் கொண்டு செல்வதைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையை உணர்த்துகிறது.
சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்குமான பாதையை சென்றடைவதற்கு இந்தியாவுக்கான இன்னும் குறிப்பான நிலைபாடுகளும், வேலை திட்டங்களும் வேண்டும் என்பதை தமிழ்நாடு மார்க்சிய இலெனியக் கட்சி விவாதித்து வருகிறது. இவ்வளவு கால வரலாற்றில் இங்கு மனுதருமத்தின் ஆட்சி வெளிப்படையாகவே நிலைநாட்டப்பட்டதற்குப் பிறகும் இபொ இயக்கத்தின் இரு பெரும் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டும் இந்த நிலைமைகளை மீளாய்வு செய்து கடந்த கால வரலாற்றின் மீது தன்னாய்வாக முடிவுகள் எடுத்து கட்சித் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றவர்களாக இல்லை என்பதை மிகுந்த கவலையோடு பதிவு செய்ய வேண்டி உள்ளது.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை உரிமையை ஏற்க மறுக்கிற கட்சியாகவே இன்றளவும் செயல்படுகிறது. அதே நேரத்தில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் இறையாண்மை உரிமையை ஏற்றுக் கொள்கிறது. இஸ்ரேலின் ஜியோனிச அடக்கு முறையை எதிர்க்கிறது. இதைத்தான் வரலாற்று முரண் என்று குறிப்பிடுகிறோம்.
அது மட்டும் அல்ல, இலங்கையில் பேரினவாதத்தை உயர்த்திப் பிடித்து சிங்களப் பேரினவாதிகளோடு சேர்ந்து தமிழினத்தை அழிப்பதற்கு துணை நின்ற ஜேவிபி கட்சியை விமர்சனம் இன்றி இடதுசாரிக் கட்சி என்று மகுடம் சூட்டி ஆதரித்து வருகிறது மார்க்சிஸ்ட் கட்சி.
அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு பற்றியோ, அதற்கு சர்வதேச நீதி தேவை என்பதைப் பற்றியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் விடுதலையை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதே பொருத்தப்பாடு உடைய தமிழீழ தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது ஏன்?
இதுபோல் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நூற்றாண்டை கடக்கும் இந்த நேரத்திலாவது தம்மை மீளாய்வு செய்து, சாதிய, வர்க்க, தேசிய இன ஒடுக்கு முறைகள் உள்ள ஒரே கண்ணியாக இங்கு பார்ப்பனியம் இருப்பதையும் பார்ப்பனியம் நிதி மூலதனத்தோடு கூட்டு அமைத்துக் கொண்டுள்ள வலுவான கோட்டையும் புரிந்து கொண்டு இந்திய ஆளும் வர்க்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்க வேண்டி உள்ளது.
இதைத்தான் நூற்றாண்டு கால வரலாறு சொல்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் அரசியலில் இணைந்து நின்றாலும், அமைப்பு வழியில் இணைய முடியாமல் இருப்பது கூட ஏன் என்ற கேள்வியை இந்த நூற்றாண்டில் நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
பாசிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை!
ஒரே கட்சித் திட்டத்தையும், ஒரே வேலை திட்டத்தையும் வைத்துள்ள இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவதற்கு எது தடையாக உள்ளது என்பதும் கேள்விக்குறியாகும்.
அத்தோடு பல்வேறு மா.லெ. குழுக்களின் அளப்பரிய தியாகங்களை ஏற்பிசைவு செய்து அவர்களின் நிலைப்பாடுகளில் உள்ள நியாயங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வது தான் கம்யூனிச இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கு உதவும்.
ஒரு நூற்றாண்டைக் கடக்கும் இந்த நிலையிலும் நமது வரலாற்றை திரும்பிப் பார்த்து பின்னடைவுக்கான காரணங்களை கம்யூனிச நேர்மையோடு அணுகி முன்னேறிச் செல்ல புதிய முடிவுகளை எடுப்போம்.
- கி.வே.பொன்னையன், பொதுமை இயக்க ஆதரவாளர்