கீற்றில் தேட...

எப்போதும் தன்னை விட வலிமை குறைந்த இடத்தில் கத்தி காரணம் கற்பிப்பது அரைகுறைகளின் இயல்பு. ட்ரவுசர் போட்ட காலத்தில் இருந்து உடன் இருப்போரிடம் டிராக்டரை ட்ரெயின் என்று சொல்லக் கூடாது இல்லையா. வெட்டித்தனத்துக்கும் வீரத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இன்றைய காலகட்டம் இருக்கிறது. பழகின தோஷத்துக்கு தலையாட்டினால்... பவர் வந்து விட்டதாக நம்புவதா.

பெரும் கட்டடத்துக்குள் மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்து விட்டு வரும் சோ கால்ட் சொக்காய்காரர்கள்... ரோட்டு கடையில் பேரம் பேசுவது சகிக்க இயலாதது. எங்க போனாலும் நான் யாரு தெரியுமா நான் யாரு தெரியுமானு தன்னை தானே நினைவூட்டிக் கொள்ள நின்று கொண்டே குதிப்பதெல்லாம் பரிதாபத்துக்குரியது. தெரிந்த நாலு விஷயத்தையே நாற்பது பேருக்கு போன் போட்டு பேசுவதெல்லாம்... உடன் இருப்போருக்கு மண்டையிடி. மைண்ட் கரப்ஷன் மோசமான வியாதி. தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்யும் பெரு நோய் அது.

நியாயத்தை நியாயமார்கிட்ட பேசணும். தர்மத்தை பிச்சைகாரங்ககிட்ட காட்டணும். ரெண்டையும் போட்டு குழப்பி அடிச்சு... கொடூர நான்- ஐ எப்போதும் நெற்றியில் தொங்க விட்டுக் கொண்டே இருப்பது மெண்டல்தனம். மற்றவரை காமெடி என்ற பெயரில் இழிவு செய்து கொண்டே இருத்தல்... ஒருநாள் செருப்படி வாங்கித் தரும். இன்னமும் சொல்லப் போனால்.. நகைச்சுவைக்கும் நாசூக்குக்கும் வித்தியாசம் தெரியாமல் திரிவதெல்லாம் நொங்கு தின்னத் தெரியாத மங்குனி அமைச்சர் பேர்வழி.

தகுதியை வளர்த்துக் கொள்வதை விட்டு... நான் நான் எனும் தற்குறியை வளர்த்துக் கொண்டிருந்தால் விளங்குமா.

எதிரே இருப்பவர் என்ன சொல்கிறார் என்ற எந்த துளி கவனமும் இல்லாமல் அவர் எடுத்த டாபிக்கில் தனக்கு தெரிந்ததை லூசு மாதிரி சொல்லிக்கொண்டே இருப்பது எத்தனை அறிவீனம். கேட்காத காதுகள் உள்ள முகத்தில் வாயில் இருந்து வருவதெல்லாம் உளறலே. கடைந்தெடுத்த அறியாமை எதுவென்றால்... தான் சொல்லும் பொய்யை எதிரே இருப்பவர் நம்புவது போல நடிக்கறார் என்றே தெரியாமல் மீண்டும் மீண்டும் அதை சொல்லிக்கொண்டே இருப்பது. நேரத்துக்கு ஒரு பேச்சுக்கு நேர்ந்து விட்டா இருக்கிறோம்.

வெற்று மாலைக்கும் தத்துபித்துக்கும் அலையும் புத்தியில் ஆசுவாசம் எப்படி இருக்கும். செய்யும் காரியங்களில் மரியாதை கிடைக்க வேண்டும். மாறாக மரியாதைக்கு வெறி கொண்டு காத்திருக்கும் மனதில் அழுக்கு படரவே செய்யும். நாம என்ன சொன்னாலும் அது எவ்வளோ அபத்தமா இருந்தாலும் மற்றவர்கள் அதை நம்புவார்கள் என்று நம்புவது அறிவிலியின் உச்சம். நாம என்ன வேணா பேசலாம். ஆனா எதிரே இருக்கறவன் யார்னு தெரிஞ்சுக்கறது அடிப்படை அறிவு. இல்லையா.

எப்போதுமே மற்றவரை கீழாகவே எண்ணுவது... தனக்குத் தானே குழி பறிக்கத் தொடங்கி விட்டதற்கான அறிகுறி. நம்மைத் தவிர மற்றவருக்கு அறிவே இல்லை என்று நம்புவது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் விழுவது. அவரவர் வாழ்வை வாழவே கிழியுதாம். இதில் மற்றவர் வாழ்வை வாழ்ந்து காட்டி ஜெயித்து கிழிப்பேன் என்பதெல்லாம்... ஊர்க்குருவி தன்னை கழுகுன்னு நினைச்சிகிட்ட கதை தான்.

தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என்ற இறுமாப்புக்கு இடுப்பெலும்பு கிடையாது. சடுதியில் கூனி குறுகி சரிந்து விடும். எதெற்கெடுத்தாலும் பொய் சொல்வது சாணக்கியம் அல்ல. பிராடுதனம். எங்கிருந்தோ வந்து தலையில் ஏறி அமர்ந்து கொண்ட கெத்துக்கு வெறும் கழுத்துதான் இருக்கிறது. அதற்கு மாலை போட்டு மாலை போட்டு இருக்கின்ற தலையை மறைத்து விட்டால் பிறகு முண்டமாக அலைய வேண்டி வரும். வெறும் முண்டத்துக்கு தொப்பை இருந்தால் நன்றாகவா இருக்கும்.

சாணக்கியத்துக்கும் சாக்கு போக்குக்கும் வித்தியாசம் உண்டு. பொய்யும் புரட்சியும் வேறு வேறு. பேசி சமாளிப்பது உளறி குழப்புவது முற்றிலும் தனி. மாட்டிக்கொண்டு முழிக்கையில் வெங்காயமாகும் வீற்றிருக்கும் வெற்று. விளம்பர பிரியர்களாக இருப்பது இயற்கை தான். ஆனாலும் அதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டாமா. கட்டவுட்டுக்கு பதிலாக நாமே சென்று நின்று விடுவது எத்தகைய கண்றாவி.

"உனக்கு கீழே உள்ளவர் கோடி... நினைத்து பார்த்து நிம்மதி நாடு" கவியரசர் சொன்னது எங்கிருக்கிறது. நமக்கு கீழ இருக்கற கூட்டத்துக்கு நாமளே தலைவன்னு சொல்லிக்கிட்டு தன்னோடு அறியாமையையும் அவர்கள் மேல் திணிப்பது எங்கிருக்கிறது. முழு முட்டாள் கூட்டத்தில் அறைமுட்டாள் தலைவனாவது நகைப்பிற்குரியது. தலைவன் உருவாக வேண்டும். உருவாக்கிக் கொள்ளல் கூடாது. அதுவும் அறியாமை கூட்டத்தில் ஆமையை யானை என்று காட்டினால் யானை என்றுதானே ஆகும். ஆனால் அதன் பலம் சீக்கிரத்தில் வெளிப்பட்டு சாயம் வெளுக்கும். நரிக்கு சாயம் பூசின கதையை அறிவோம். புலிக்கு வேஷம் போட்ட கதையையும் அறிவோம்.

அறிவுமட்டு தனக்குத் தானே மாலை அணிவித்துக் கொள்ளும்.

இதய கணம் அட்டாக் என்றால் மண்டைக்கனம் ஆள் அவுட். வெட்டி பந்தாவை விட்டொழி சிறுவா. அது தொப்பையில் கூடு கட்டி தோற்கடித்து விடும்.

- கவிஜி