அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்-யின் மிகப்பெரிய கொள்கை எதிரி என்பதே அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை பிறந்தநாளை நினைவு கூறுதலின் சிறப்பு உள்ளது
ஏப்ரல் 14, 2025 என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் (அம்பேத்கர் ஜெயந்தி அல்லது பீம் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது) 135வது பிறந்தநாள் ஆகும். இருப்பினும், உலகின் மிகப்பெரிய, நீண்ட காலமாக இயங்கும் பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கருவியான பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், மக்கள் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடும் அதே வேளையில், இந்தியா ஒரு முழுமையான பாசிச ஆட்சியாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்று, ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தை எதிர்ப்பவர்கள், அம்பேத்கரை அவரது வாழ்நாளில் கடுமையாக எதிர்த்தவர்கள் உட்பட, அம்பேத்கர் வரைந்த அரசியலமைப்பின் விதிகளை தங்கள் பாதுகாப்பு வழிமுறையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் 'கடைசி முயற்சியாகவும்' நாடுகிறார்கள். முரண்பாடாக, 1953 ஆம் ஆண்டு ராஜ்யசபா அமர்வில், இந்து சட்ட மசோதாவுக்கு எதிரான எதிர்ப்பால் விரக்தியடைந்த அம்பேத்கர், தான் வரைந்த அரசியலமைப்பின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அன்று அவர் வெளிப்படையாக கூறினார்: “மக்கள் எப்போதும் என்னிடம் “ஓ… நீங்கள்தான் அரசியலமைப்பை உருவாக்கியவர்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனது பதில் என்னவென்றால், நான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டேன். என் விருப்பத்திற்கு மாறாக நான் அவர்கள் சொன்னதை நிறைய செய்தேன்... அதை எரிக்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு அது வேண்டாம். இந்த அரசியல் அமைப்பு சட்டம் யாருக்கும் பொருந்தாது.” என்றார்.
நிச்சயமாக, இந்த அறிக்கையின் மூலம், அரசியலமைப்பின், குடியரசு வாக்குறுதிகளுக்கும் சாதியால் நிறைந்த இந்திய சமூகத்தின் குறிப்பான யதார்த்தங்களுக்கும் இடையிலான பெரிய இடைவெளி குறித்த தனது கடுமையான கவலைகளை அம்பேத்கர் பகிர்ந்து கொண்டார். இந்த அறிக்கையின் மூலம், அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய இந்தியாவின் உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சொத்துரிமை பெற்ற வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பின் முதன்மையான நோக்கு நிலையையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அரசியலமைப்பில் உள்ள ஜனநாயக சுதந்திரங்கள், உரிமைகள் எதிர்காலத்தில் இழக்கப்படும் சாத்தியக்கூறு குறித்து அவர் அஞ்சினார். இன்று, அம்பேத்கர் அன்று எழுப்பிய அந்த சாத்தியக்கூற்றை நாம் அனுபவித்து வருகிறோம். மேலும் இந்துத்துவா பாசிஸ்டுகளின் ஒவ்வொரு அச்சுறுத்தும் நடவடிக்கையும் அம்பேத்கரால் சிரமமின்றி இணைக்கப்பட்ட அரசியலமைப்பின் விதிகளை மேற்கோள் காட்டி இப்போழுது பாசிஸ்டுகளுக்கு எதிரான சவால் விடுகின்றதாக, கேள்விக்கு உள்ளாக்கப்படுவதாக அனைத்து பாசிச எதிர்ப்பு அமைப்புகளும் செய்து வருகின்றனர்.
1920களின் நடுப்பகுதியில் ஐரோப்பாவின் பாசிச அமைப்புகளுடன் இணைந்து நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட சனாதன தர்மத்தை வழிகாட்டும் சித்தாந்தமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அது, தலித்துகளையும் பெண்களையும் மனிதாபிமானமற்றவர்களாகக் கருதி அதன் இந்துத்துவா தாக்குதலைத் தொடங்கிய போது, 1927 டிசம்பர் 25 அன்று மகத் சத்தியாக்கிரகத்தில் "தீண்டத்தகாதவர்களின் அடிமைத்தனத்தின் பைபிள்" என்று அண்ணல் அம்பேத்கர் தான் வகைப்படுத்திய மனுஸ்மிருதியை பகிரங்கமாக எரிக்க முன்வந்தவர்/ முரண்பாடாக, 1950 இல் இந்தியா ஒரு குடியரசாக மாறியதன் அடிப்படையில் அம்பேத்கர் தலைமையில் வரைவு செய்யப்பட்ட இந்திய அரசியலமைப்பை அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டபோது, அம்பேத்கர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு தீ வைத்த அதே மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்பாக முன்மொழிய ஆர்.எஸ்.எஸ். எந்தத் தயக்கமும் காட்டவில்லை. இந்து மதத்தில் பாலின சமத்துவ நீதி இல்லாதது குறித்த தீவிர கவலைகளால், அம்பேத்கர் இந்து பெண்களுக்கு விவாகரத்து, மூதாதையர் சொத்துரிமை வழங்கும் இந்து சட்ட மசோதா வரைவு சட்டத்தைக் கொண்டு வந்த போது, பீதியடைந்த ஆர்.எஸ்.எஸ். 1949 டிசம்பர் 12 அன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் டாக்டர் அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்தது.
இந்தியாவின் சாதி அமைப்பின் கொடிய எதிரியாக, இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்கள், பெரும்பான்மையான உழைக்கும் மற்றும் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மறுக்கமுடியாத தலைவராக டாக்டர் அம்பேத்கர் முன்னிலை வகிக்கிறார், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்திற்கான அவரது மிகுந்த அர்ப்பணிப்புடன் பணிகளை செய்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் 'கலாச்சார தேசியவாதம்' இந்திய நாட்டை மனுஸ்மிருதி அடிப்படையிலான பிராமணிய சாதியத்திற்கு ஒத்ததாக அடையாளம் கண்டாலும், மனுஸ்மிருதி குறியீடு, பிராமணியம் இரண்டும் தீண்டத்தகாதவர்கள், பெண்களின் வாழ்க்கையை விலங்குகளின் வாழ்க்கையை விட மோசமாக்கியுள்ளன என்று அம்பேத்கர் கூறுகிறார்.
இன்றைய இந்துத்துவ தலைவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அம்பேத்கரை சொந்தமாக்க முயற்சிக்கும்போது, அம்பேத்கர் ஒருபோதும் சாதி அடிப்படையிலான பிராமணிய இந்து மதத்துடன் சமரசம் செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை. அதை அவர் "சாதி மிகக் கொடூரமான "திகிலின் உண்மையான அறை"(veritable chamber of caste horror) என்று வரையறுத்தார். அம்பேத்கரைப் பொறுத்தவரை, சாதி அடிப்படையிலான இந்துத்துவ தேசம் முஸ்லிம்களை இழிவுபடுத்தி, அவர்களை நாட்டின் முக்கிய எதிரியாக குறி வைப்பது, இரு பிறப்பாளர்களான பிராமணிய சாதிகள் தலித்துகள் மீதும், பெண்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையைக் குறிக்கிறது. எனவே, அவர் “இந்து ராஜ்ஜியம் ஒரு யதார்த்தமாக மாறினால், அது சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நாட்டின் மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக இருக்கும். இந்துக்கள் என்ன சொன்னாலும், இந்து மதம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாகும். இது ஜனநாயகத்துடன் பொருந்தாது. எந்த விலை கொடுத்தாவது இந்து ராஜ்ஜியம் நிறுவப்படுவதைத் தடுக்க வேண்டும்" என்றார்
அம்பேத்கர் இந்து ராஷ்டிரத்தின் ஆபத்து குறித்து எச்சரித்த போது, இன்றைய அரசியல் நீரோட்டத்தில் இந்துத்துவாவின் செல்வாக்கு அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இல்லை என்பது வெளிப்படை! பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1930, 1940களில், சுதந்திரப் போராட்டத்தை முற்றிலுமாக காட்டிக் கொடுத்ததாலும், முஸ்லிம்களை நாட்டின் பிரதான எதிரியாகக் காண்பித்ததாலும், அதிகார மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் முன்னேற்றங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு மோசமானதாக இருந்ததாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் நம்பகத் தன்மை மிகவும் குறைவாக அப்பொழுது இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், இப்போழுது நிலைமை அடிப்படையில் வேறுபட்டதும், மிகவும் ஆபத்தானதும் காணப்படுகிறது .
இன்று, எண்ணற்ற வெளிப்படையான, இரகசிய அமைப்புகள் மூலம் சங்கப் பரிவாரை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ், நாட்டின் அரசியல்-பொருளாதாரம், கலாச்சாரத் துறைகளில் ஆழமாக வேரூன்றிய இந்துத்துவா பாசிச கூடாரங்களுடன் இந்திய சமூகத்தின் முழு பெரு அரசியல், நுண்ணரசியல் வெளிகளில் தனது பிடியை ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ளது. சிவில் நிர்வாகம், ராணுவ நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, வரலாற்று எழுத்து, கலை மற்றும் இலக்கியம் போன்ற அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் எச்சரித்து, மனுஸ்மிருதியை எரித்து எதிர்த்துப் போராடிய "இந்து ராஜ்ஜியம்", கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு பின்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில், தாராளவாத அரசியல் வர்ணஜால நிறமாலையுடன் ஒப்பிடும்போது, அம்பேத்கரை கம்யூனிச எதிர்ப்பு, "ஏகாதிபத்திய கைக்கூலி" என்று முத்திரை குத்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் நேர்மையான கடமை, அம்பேத்கரைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையை சுய விமர்சன மதிப்பீடு செய்வதும், இந்திய சாதி அமைப்பு குறித்த அவர்களின் பகுப்பாய்வை மறு மதிப்பீடு செய்வதும் ஆகும். நிச்சயமாக, 1930 ஆம் ஆண்டில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தயாரித்த "செயல்பாட்டுக்கான தீர்மான அறிக்கை " என்ற ஆவணம், வர்க்கம், சாதி இரண்டையும் சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டு, உறுதியான இந்திய சூழ்நிலையில் கவனம் செலுத்துவதன் மூலம் சாதியை ஒழிப்பதன் அவசியம் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்களின் ஜனநாயகப் பணிகள் குறித்த ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தது. மேலும், சாதி பற்றிய இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் கம்யூனிஸ்டுகளுக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான சுமுகமான, தோழமையான் உறவு 1930கள் முழுவதும் நிலவியது. மேலும், சாதி பற்றிய உறுதியான பிரச்சினையின் புறநிலை புரிதலின் அடிப்படையில் அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான ஒற்றுமையும், அதனுடன் தொடர்புடைய தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான மூலயுத்தி ஐக்கிய முன்னணியும் தொடர்ந்திருந்தால், இந்த நேரத்தில் இந்தியாவின் வரலாறு வேறுபட்டிருக்கும்.
மேலும், கம்யூனிஸ்டுகளும் அம்பேத்கரும் இணைந்து பணியாற்றிய ஒரு சூழலில்தான், டாக்டர் அம்பேத்கர் தனது "சாதி ஒழிப்பு" என்ற நூலில் "சோசலிஸ்டுகள் சோசலிசத்தை ஒரு திட்டவட்டமான யதார்த்தமாக்க விரும்பினால், சமூக சீர்திருத்தம் என்பது அடிப்படையான பிரச்சினை என்பதையும், அதிலிருந்து அவர்களுக்கு தப்பிக்க வழி இல்லை என்பதையும் அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்." என்று மீண்டும் வலியுறுத்தினார்: மேலும், அப்போதைய கம்யூனிஸ்ட் தலைமையும் அம்பேத்கரின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இருப்பினும், 1940 களில் இருந்து இந்தியாவில் சாதியிலிருந்து பிரிக்க முடியாததை முற்றிலும் புறக்கணித்தது, 'வர்க்கம்' என்ற இயந்திரத்தனமான, வர்க்க குறுக்கல் வாதம், ஐரோப்பிய மைய அணுகுமுறை சிபிஐ தலைமையை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது, இரு கட்சிகளுக்கும் இடையிலான இருந்த நல்லுறவு ஒரு வியத்தகு திருப்பத்தை எடுத்தது. கம்யூனிஸ்டுகள் சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதி பாகுபாட்டை தொடர்ந்து எதிர்த்தாலும், 1943 இல் அதன் முதல் மாநாட்டிலிருந்து சிபிஐ (பின்னர் சிபிஎம்) மற்றும் பிற கம்யூனிஸ்ட் குழுக்களின் ஆவணங்களும் சாதி ஒழிப்பு அல்லது அழிப்பு குறித்து அமைதியாகி விட்டன.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, 1940 களில் இருந்து கம்யூனிஸ்ட் தலைமையில் பொருள் முதல்வாதத்தின் இயந்திரத்தனமான அபகரிப்பு, சாதியை ஒரு மேல்-கட்டமைப்பு, பண்பாட்டுப் பிரச்சினையாக தவறாக மதிப்பிடுவதில் வெளிப்பட்டது. வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான இயங்கியல் உறவை முற்றிலுமாக புறக்கணித்து. சாதி அடிப்படையிலான இந்திய சமூகத்தில் ஐரோப்பிய வர்க்க பகுப்பாய்வைப் பயன்படுத்துகின்ற நகல்-ஒட்டு {copy-paste} முறை, உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நில உடைமை, உழைப்புப் பிரிவினை மற்றும் அதன் மூலம் ஊதிய அமைப்பு, உபரி மதிப்பு பிரித்தெடுத்தல், செல்வத்தை கையகப்படுத்துதல், அரசியல் அதிகாரம், பண்பாட்டு மேலாதிக்கம் மற்றும் பல உட்பட அனைத்தும் சாதி அடிப்படையிலான சாதி சார்ந்த இந்திய சமூகத்தின் மிகவும் தேவையான உறுதியான வர்க்க பகுப்பாய்வை கம்யூனிஸ்டுகள் அவதானிக்க தவறிவிட்டனர்.
வெளிப்படையாக, முந்தைய இந்திய கம்யூனிஸ்ட் தலைமையின் இந்த நிலைப்பாடு மார்க்சிய அணுகுமுறைக்கு இணக்கமாக இருக்கவில்லை. ஏனெனில், மார்க்ஸின் பெரும்பாலான எழுத்துக்களில், அவரது மகத்தான படைப்பான 'மூலதனம்' உட்பட, இந்திய சாதி அமைப்பு பற்றி அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அப்போதைய முதலாளித்துவ ஐரோப்பாவைப் பொறுத்தவரை அவர் உருவாக்கிய 'உற்பத்தி முறை' இந்தியாவிற்கு பொருத்தமற்றது என்பதை மார்க்ஸ் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவில் முழு 'சமூக உருவாக்கமும்' அடிப்படையில் இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவிலிருந்து வேறுபட்டது. இது மார்க்ஸை 'ஆசிய முறை உற்பத்தி' என்ற கருத்தை உருவாக்கத் தூண்டியது, இருப்பினும் அது பிரதான (mainstream) கம்யூனிஸ்ட் சொற்பொழிவால் முற்றிலும் கைவிடப்பட்டது. 1850 களில் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனுக்கு மார்க்ஸ் எழுதிய தொடர் கட்டுரைகளில், இந்திய சாதி அமைப்பு பற்றி அடிக்கடி குறிப்புகள் இருந்தன. இன்னும் குறிப்பாக, "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி" என்ற தலைப்பில் 1853 இல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், இந்தியாவின் சாதி அமைப்பை "இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அதிகாரத்திற்கும் மிகவும் தீர்க்கமான தடையாக" மார்க்ஸ் சித்தரித்திருந்தார்.
இந்தியாவின் குறிப்பிட்ட விஷயத்தில் சாதியைப் பற்றிய இந்த மார்க்சிய அணுகுமுறையை வளர்ப்பதற்குப் பதிலாக, இந்திய கம்யூனிஸ்டுகள், முக்கியமாக, சாதியைப் பற்றிப் பேசுபவர்களை 'சாதிவாதிகள்' என்று முத்திரை குத்தி சாதியை மறைப்பதில் ஆர்வமாக இருந்தனர்.
மறுபுறம், சாதியைப் பொறுத்தவரை, இந்திய கம்யூனிஸ்டுகளை விமர்சித்த அம்பேத்கர், மார்க்ஸுக்கு நெருக்கமாக இருந்தார், இருப்பினும் அம்பேத்கர், குறிப்பாக சுதந்திர தொழிலாளர் கட்சியின் தலைவராக, வர்க்கப் போராட்டத்தையும் சாதிக்கு எதிரான போராட்டத்தையும் விளக்குவதில், இரண்டிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த உறவு உட்பட.அவருக்கே உரிய வழியைக் கொண்டிருந்தார். நிச்சயமாக, வர்க்கத்தைப் பற்றிய அம்பேத்கரின் அணுகுமுறை மார்க்ஸின் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. இருப்பினும், அப்போதைய இந்திய கம்யூனிஸ்டுகளின் முற்றிலும் 'பொருளாதார' வர்க்க அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது, வர்க்க-சாதி உறவு, சாதியை "ஒரு மூடப்பட்டுள்ள வர்க்கம்" {enclosed class} என்று விளக்குவது பற்றிய அம்பேத்கரின் புரிதல் மிகவும் முன்னேறியதாகும்.
நிச்சயமாக, 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்' போன்ற மார்க்சியத்தின் பல தத்துவார்த்த சூத்திரங்களுடன் அம்பேத்கருக்கு சொந்த வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், அம்பேத்கர் "பிராமணர் சிறுவர்கள்" என்று அழைத்த அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களால் அவர்களின் சாதி-இந்து அணுகுமுறையை சுட்டிக்காட்டி முத்திரை குத்தப்பட்டது போல, அவர் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் அல்ல. உண்மையில், 1930களின் இறுதி வரை இந்திய கம்யூனிஸ்டுகளுடன் மிகவும் அன்பாக இருந்த அம்பேத்கர், கம்யூனிஸ்டுகள் நாற்பதுகளில் இருந்து தங்கள் மார்க்சிய அணுகுமுறையை மாற்றியதால் மட்டுமே அவர்களுக்கு விரோதமாக மாறினார் என்பதை ஒரு புறநிலையான மதிப்பீடு செய்கையில் போதுமான அளவு வெளிப்படுத்துகின்றது.
அதே நேரத்தில், அம்பேத்கர் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களுடன் நட்பாக இருந்தார். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஸ்டாலினை அம்பேத்கர் மிகவும் மதிப்பிற்குரியவராகக் கருதினார், மேலும் அவர் 1953 இல் இறந்தபோது, அம்பேத்கர் ஸ்டாலினுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உண்ணாவிரதம் இருந்தார்.
துல்லியமாகச் சொன்னால், சாதிய வெறி கொண்ட இந்திய அரசியல் தலைவர்கள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லாத அம்பேத்கர், ஆங்கிலேயர்களுடன் பேரம் பேசி தலித்துகளின் நலன்களை நிலைநிறுத்த எப்போதும் முயன்றார். "சமூக கொடுங்கோன்மையை" "அரசியல் கொடுங்கோன்மை"யை விட பல மடங்கு ஒடுக்குமுறையாகக் கருதிய அம்பேத்கர், காலனித்துவவாதிகளின் பின்வாங்கலுக்குப் பிறகு தலித்துகளின் எதிர்காலம் குறித்து கடுமையான சந்தேகங்களைக் கொண்டிருந்தார். இன்றும் கூட தீண்டாமை, சாதி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளில் எந்தத் தளர்வும் இல்லை என்பது அம்பேத்கர் கருத்தின் உண்மை தன்மை புரியும். நவீனத்துவத்தின் முன்னேற்றத்தால் சாதியை வாடிவிடும் என்று தங்களைத் தாங்களே சமாதானம் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் தீர்க்கதரிசனம் , இன்று நாம் காண்பது சாதி பன்மடங்கு பலப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. நவீன அறிவியல் , தொழில்நுட்பத்தின் சிம்மாசனத்தில் குட சாதியானது பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறது, மேலும் நவீன 'முன்னணி தொழில்நுட்பங்களின்' கோட்டையாகக் கருதப்படும் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு " கூட சாதியானது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய நிலப்பிரபுத்துவத்துடன் சாதியை அடையாளம் காணும் சுய-புராண புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் இயந்திரக் கண்ணோட்டத்திற்கு மாறாக, சாதியை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, நிலப்பிரபுத்துவ உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொருளாதார மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் அனைத்தும் சமூக - பொருளாதார அமைப்புகளை தாண்டி வளர்ந்து வரும் துறைகளுக்கு இடம்பெயர புதிய வழிகளை வழங்குகின்றன. இவை அனைத்திலும், அம்பேத்கரின் சாதி பற்றிய பகுப்பாய்வும் அதன் அடிப்படையிலான திட்டங்களும் அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் தலைமையுடன் ஒப்பிடும்போது மிகவும் அறிவியல் பூர்வமான தாகவும், உறுதியானதாகவும் இருந்தன என்பது உண்மையாகிறது
தீண்டாமை, சாதி ஒடுக்குமுறை உள்ளிட்ட சாதிவெறி இன்று பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையில், இந்து ஒற்றுமை என்ற பெயரில், அம்பேத்கரின் 'சாதி ஒழிப்பு' கொள்கையை ஏற்காத ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்களையும், புதிய அம்பேத்கரிய பிரிவுகளையும் ஈர்க்க ஆர்.எஸ்.எஸ் முழு வீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனுடன் சேர்ந்து, ஒடுக்கப்பட்ட மற்றும் கீழ் சாதி அமைப்புகளை சிதைத்து, பரந்த இந்துத்துவக் கூட்டணியில் ஒருங்கிணைக்கும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையும் நடந்து வருகிறது. இந்தச் செயல்பாட்டில், தலித் தலைவர்கள் கூட 'காட்டப்பட்ட துண்டுகளாக' ( shown pieces ) முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். இதன் விளைவாக, மோடி ஆட்சி, முற்றிலும் உயர் சாதி சார்ந்த பொருளாதார இடஒதுக்கீட்டிற்கான (EWS) 103வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதன் மூலம் அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியலமைப்பின் தன்மையை மாற்றியபோது, சிறிய எதிர்ப்பு இருந்தது. இங்கே, சிபிஐ (எம்) போன்ற ஒரு கட்சி இந்தியாவில் பொருளாதார இடஒதுக்கீடு என்ற யோசனையின் முன்னோடியாக இருந்தது என்பது வேதனைக்குரியது. இந்த திசையில் சமீபத்திய மூலோபாய நடவடிக்கை "துணை-சாதி இடஒதுக்கீடு" ஆகும், இது தீண்டத்தகாதவர்களைப் பிரித்து திசைதிருப்புகிறது மற்றும் மிகவும் தேவையான 'சாதி கணக்கெடுப்பிலிருந்து' அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறது.
நாடு முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த முக்கியமான கால கட்டத்தில், இந்திய சமூகத்தின் அடிப்படை சனநாயகமயமாக்கலை ஆதரிக்கும் இடதுசாரி, முற்போக்கு சக்திகள் இந்த விஷயத்தில் டாக்டர் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளை ஒரு உறுதியான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் மனிதாபிமானமற்ற இந்திய சாதி அமைப்பு பற்றிய அவர்களின் தவறான புரிதலை முறையாக சரி செய்வதோடு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் மீதான அவர்களின் அணுகுமுறையை கம்யூனிஸ்டுகள் சுய விமர்சன மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் இது. மிகவும் சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் சாதியால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இடையே தவிர்க்க முடியாத ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி இதுதான். இது மட்டுமே இந்தியாவில் பெருநிறுவன -இந்துத்துவா பாசிசத்தை வலுப்படுத்துவதன் கொடூரங்களுக்கு எதிரான மூலயுத்தி அடித்தளத்தை உருவாக்க முடியும்.!
- பி.ஜே.ஜேம்ஸ், டில்லி
(counter current இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்}
தமிழாக்கம்: கி.நடராசன்