ஒரு நிகழ்வில் கவிஞர் வண்ணதாசன் அவர்கள் மனிதர்களைப் பற்றி போகிற போக்கில் ஒன்று சொன்னார்கள். அதன் சாரம்சம் இதுதான்.
மனிதர்களின் கைகளைப் பற்றிக் கொள்ளும் ஸ்பரிசங்களை விட ஓர் ஆழமான கவிதையை எழுதி விட முடியுமா.
அப்படித்தான் நானும் இந்த மனிதர்களைப் பார்க்கிறேன்.நடைப்பயிற்சியின் போது முன் பின்னாக மனிதர்களின் நடை... நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு உடலமைப்புக்கும் ஒவ்வொரு நடை. எத்தனை விதமான உடல்மொழி. எத்தனை விதமான நடைகள். கையை வேக வேகமாய் ஆட்டியபடி.... கைகளையே ஆட்டாமலே. ஒரு காலை வேகமாய் முன்னோக்கி வைத்து அடுத்த காலை மெல்ல பின் வைத்து. வேர்க்க விறுவிறுக்க. பூ போல பூனை நடையில் என ஒவ்வொரு நடையிலும் ரீங்காரம் உணர்கிறேன்.
ஆங்கார நடையும் இடையே எவரிடம் இருந்தாவது வந்து கொண்டுதானிருக்கிறது. காற்றுக்கு நேர்ந்து விட்ட நடைகள் அவை. செந்தூர நடைக்கு சொந்தக்காரிகளையும் காண நேரிடுகிறது. கவிதைக்கு நேர்ந்து விட்ட நடைகள் அவை.
இந்தா... இப்ப போயி அந்த அந்த மரத்துல மொத போறேன் என்பது போல ஒரு நடை. வீட்டுல உக்காந்து டிவி பார்க்க விடாம பொண்டாட்டி தொரத்துறாளே என்பது போன்ற பாவனையில் ஒரு தொய்வுற்ற நடை. தனக்கும் தன் நடைக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற ஸ்பிலிட் பெர்சனாலிட்டி நடை... என பல இடங்களில் நான் புன்னகைத்து விடுகிறேன். வண்ண வண்ண ஓவியங்கள் வரிசை கட்டி நடப்பது போல தோன்றும். இடை இடையே புகும் கால்கள் சிறுபிள்ளை விளையாட்டு போலவும் தோன்றும். எல்லாவற்றுக்கும் சாட்சியாக பத்தடிக்கு... இருபதடிக்கு ஒரு மரம் என வழி நெடுகிலும் எண்ண மயக்கங்கள். விழுந்து கிடக்கும் இலைகளில் தவழ்ந்து தவிக்கும் காற்றுக்கு மாலை நேரத்து மயக்கம் தான் போல.
பேசிக்கொண்டே.... நடக்கிறோமோ பறக்கிறோமோ எனத் தெரியாமல் போகும் ஜோடி கால்களைப் பார்க்கிறேன். செருப்பு நிறம் கூட ஒன்றாக இருப்பது சிறப்பு. வயது முதிர்ந்த இரு தாத்தாக்களின் ஷூக்கள் பளபளவென மின்னுகிறது. நடையில் காலத்தின் நினைவுகள். எப்போதும் யாரையும் முந்திக்கொண்டு இருக்கும் கால்களில் கவனம் அடுத்த நாள் அலுவலகத்தைப் பற்றி இருக்கிறதோ என்னவோ. உடல் கேலிக்கு ஆளாகியிருக்க வேண்டும்... அந்தக் கால்களில் பதற்றம். முகத்தில் கடுகடுவும்... முதுகு நனைந்த குடுகுடுவும்... இன்னும் பத்து நிமிசத்துல மேட்டுப்பாளையத்துக்கு ட்ரெயின் என்பதாகவே இருக்கிறது. பாட்டு கேட்டுக்கொண்டே தானாக நடை போடும் கால்களில் பாட்டுக்கு தகுந்த வேகமும் பீட்டுக்கு தகுந்த தாகமும்.
முதுமை கொண்ட பெண்களின் நடையில் மொத்த வாழ்க்கையின் அயர்ச்சி காண்கிறேன். அதுவும் தனித்த நடையில் இலக்கில்லை.
நடைப் பயிற்சியின் போதாவது இதயம் சீராக இருக்க வேண்டாமா. இங்க வந்தும் அலுவலக சுமை... நாலைந்து பேரையாவது திடும்மென திரும்ப வைக்கும் வால்யூமில் அலைபேசி அலறுகிறது. நாற்பதுகளில் இருக்கும் தொப்பைகள் தனியாக வருகையில் தானுண்டு வேலையுண்டு என நடக்கிறார்கள். கூட்டணியில் வந்தால்.. நடையில் கவனமின்றி பேச்சில் காது முளைக்கிறது. வகுப்பு நடக்கையில்.. தலையை முட்டிக்கொண்டு கிசுகிசுப்பார்களே மாணவர்கள்... அப்படி ஒரு காட்சி மொழி. அதுவும் இடையிடையே சிரிக்கும் சத்தம்... சுத்தம் என்று தலையில் கை வைக்கும் எமோஜிக்கானது.
பேச்சு வாங்க நடை போடும் கால்களை... மூச்சு வாங்க நடை போடும் கால்கள் முந்திக்கொண்டு போகையில்.... காரியத்தில் கண்ணாக இருப்பதை காலாற காணலாம். ஒரு நடையின் வேகமும் இன்னொரு நடையின் வேகமும் அதுகளுக்கு தெரியாமலே ஒன்றை ஒன்றும் முந்தும் வேலையிலும் ஈடுபடுவதை... வெகு நுட்பமான முந்துதலும் பின் தொடர்தலும் காட்டிக்கொடுக்கும்.
சுகருக்கு பயந்த நடைகள் ஏராளம். சுறுசுறுப்புக்கான நடை இடையிடையே. வலிமைக்கு வடிவத்துக்கு என வித விதமான நடை.
அன்ன நடை... வண்ண நடை... ஆட்சி நடை... உடல் மீட்சி நடை என நடைகளின் பட்டியல் றெக்கை கட்டும். சில கால்களில் சக்கரம். சில கால்களில் சர்க்கரை. கொலுசோசைக்கு உகந்த நடையை யானை நடை ஒரு போதும் முந்த முடியாது.
எல்லாரும் இப்படி நடக்கையில்.... விஷம குறும்பர்கள் எதிர் பக்கம் வருவதையும் காண முடிகிறது. அவர்களின் கண்களின் கால்களைத் தாண்டி வந்தவர்கள் தானே நாம். கண்டு கொண்டோம். கண்டு கொண்டோம்.
அலுவலகம் முடிந்து போர் அடிக்கும் சில கால்களையும் இங்கே பார்க்க முடியும். எங்கு போவதென்று தெரியாமல் இங்கு வந்து தத்தளிக்கும் அந்தக் கால்களில் ஒரு ஏனோதானோ. இதில் ஜோடிகளும் இல்லாமல் இல்லை. பெரும்பாலும் கல்லூரி ஜோடிகள்... வந்து வெறுமனே உக்காந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசறது பேசுங்க.. நடந்துக்கிட்டே பேசலாம்ல. சோம்பேறிப் பயலுங்க. காதலை தோள் உரச... கைகள் பட ஜோடி போட்டு நடந்தும் நகர்த்த முடியும் என்று தெரியவே இல்லை. மங்குனிகள்.
சரக்கு பார்ட்னர்ஸ் போல. கைகள் நடுங்க எதுவுமே பேசிக்கொள்ளாமல் ஆனால் ஒன்றாகவே நடப்பது பிராயச்சித்தமோ என்னவோ. சில நடையில் ஓட்டம் இருக்கிறது. சில நடையில் வாட்டம் இருக்கிறது. நடப்பதை ஒரு கடினமான வேலையாக செய்பவர்கள் இருந்தாலும் நடப்பதை அனுபவித்து செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கும் ஆட தெரியும் என்பதாக மேடையில் ஒரு ஓரத்தில் வந்து நின்று விட்டு போவது போல ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அப்படியே பூங்கா இருக்கைகளில் அமர்ந்து விடுவோரும் உண்டு. எட்டு வெச்சு நடப்போருக்கு இடையே எக்கி எக்கி நடப்போரும் இருக்கிறார்கள். ஒருவர் இரண்டு ரவுண்ட் அடித்து விடுகையில்தான் ஒருவர் பாதி ரவுண்ட் வருகிறார். அத்தனை உடல்களும் வேறு. அதில் உள்ள அத்தனை உள்ளங்களும் வேறு. ஆதி வேர் மானுட நீட்சி என்றாகினும் காணும் காட்சிக்கு அடுத்தடுத்த திரை.
கவனித்ததில் இன்னொன்று... மரங்கள் சூழ்ந்திருக்கும் அந்தப் பூங்காவில்... மாலை நேரம் என்பதால் பறவை பட்சிகள் கூடடையும் நேரமும் அது. சத்தம் சும்மா போட்டு தாக்குகிறது. சத்தமா அது. சங்கீதம். ஆனால் எந்தக் கண்களும் அண்ணார்ந்து பார்ப்பதில்லை. ஒருவேளை காதுகள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒருவரின் பார்வையும் கவனமும் பறவைகள் மீது இல்லை என்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை யாராவது கண்களை மேல் நோக்கியோ கவனத்தையோ சீர்தூக்கியோ பறவைகளை உணர்ந்திருந்தால்... நல்லது.
எல்லாம் தாண்டி ஒவ்வொரு கால்களிலும் விதவிதமான செருப்புகள். நடந்த ஒரு மணி நேரத்தில் ஒன்றுகூட ஒன்று போல தென்படவில்லை.
யாருக்கு தெரியும்... இத்தனை நடைகளை கவனித்து பிடித்து பிடித்து நினைவுக்குள் போட்டுக்கொண்டு வரும் என் நடையையும் யாராவது கண்டு கொண்டிருக்கலாம். ஹா.... பொதுவாகவே மனிதர்கள் வேடிக்கை குணம் கொண்டவர்கள் தானே. வேடிக்கை காண்பதும் வேடிக்கை காட்டுவதும்... நடைப்பயிற்சிக்கு நல்லது என்று சொன்ன பறவையை இன்றும் சந்திப்பேன். டாட்டா.
- கவிஜி