காதல் புனிதமானது என்ற சிந்தனை பெருங்காலம் நீடித்து வந்தது. அறிவு வளர்ச்சியின் விளைவாகக் காதலின் மீதான புனிதம் உடையத் தொடங்கியது. தற்போது சாதியத்தைப் பண்படாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்குதத் தகுந்த ஆயுதமாக காதல் கருதப்படுகிறது. அது உண்மையெனினும் காதலுக்கு வேறொரு கொடிய முகமும் இருக்கிறது. வேறு சாதியைச் சார்ந்த நபர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துக்கொள்ளும் பொழுது அதைச் சாதியத்திற்கு எதிரான கிளர்ச்சி என்கிறோம். அவர்கள் அத்தகுக் கிளர்ச்சிக்குப் பின்பு வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய குடும்பம் சமூகத்தில் எவ்வாறு இயங்குகிறது? அவர்களுடைய குழந்தை சாதியத்தை ஏற்காத உடலாக இருக்கிறதா? ஆகியவைக் குறித்துச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம். இந்தக் கேள்விகள் காதலின் கொடிய பக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும்.காதல் என்பது பெண்-ஆண் என இருவர் மட்டும் செய்வது என்ற எதிர்பால் (Hetrosexual) நிலைமாறி பெண்-பெண், ஆண்-ஆண், திருநங்கை, நம்பி, இருபாலீர்ப்பு (Bisexual) என பலரும் செய்யக்கூடியது என்ற மறுவரையறை பெற்றுக் காதலின் எல்லைகள் விரிந்து விட்டன. இவ்வாறு ஒவ்வொரு பாலினமும் தங்களுடைய காதலின் மீதான பகிர்வைக்கோரி போராடி வருகின்றது. இந் நிலையிலும்கூட காதலின் மீது எதிர்தரப்பு வாதத்தை வைக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. காதல் தனிநபரின் இயங்குவெளியை முடக்குகிறது. அது வேறொரு நபரைச் சார்ந்திருக்க வேண்டிய பிறசார்பு நிலையை உருவாக்குகிறது. பாலின அரசியல் பற்றி புரிதலில்லாத காதல் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறது.
பாலின்பம் சார்ந்த தூண்டல் தான் காதல் எனப்படுகிறது. அதுவே காதலின் தொடக்கப் புள்ளி. பண்பு நலன்களைக் கண்டு, சிறப்பு திறன்களைக் கண்டு வரும் காதல்களிலும் கூட பாலின்பம் சார்ந்த தூண்டலே முதன்மை வகிக்கிறது. மற்றவையெல்லாம் பின்புதான். பாலின்பம் என்று இங்கு கூறப்படுவது புணர்ச்சி வேட்கையைத் தான். விலங்குகள் போலத் தேவை ஏற்படும் போதெல்லாம் புணரலாம் என்ற வசதி இருந்தால் காதல் என்ற கதையாடலே தேவையிருக்காது. இந்த உணர்வை நேரடியாகக் குறிப்பிடும் காமம் என்ற சொல் இருந்தாலும் அச் சொல்லைத் தீயச் சொல்லாக்கி காதல் என்ற கற்பு ஒழுகும் சொல்லைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது ஒரு சமூகச் சூழ்ச்சி.
யாரைப் புணர வேண்டும் என்ற கருத்தின் பின்புலம்
மனித உடலானது சதை, நரம்பு, எலும்பு ஆகிய மண்டலங்களால் உருவான ஒரு பருப்பொருள். விலங்குகளைப் போலவே பசியும் காமமும் ஆகிய வேட்கைகள் மட்டும் கொண்டிருப்பின் யாரைப் புணர வேண்டும் என்று சிந்திக்கத் தேவையில்லை. ஆனால், மனித உடலில் மொழியானது தவிர்க்க முடியாத ஒரு பங்கினை வகிக்கிறது. மொழியின் வாயிலாக மனிதனுக்குள் சாதி, மதம், இனம், பாலினம், அழகு, பொருளாதார பின்புலம் போன்ற கருத்துகள் உடலைத் தேர்வு செய்யும் தகுதிகளாக (Criteria) நிறுவப்பட்டுள்ளன. புணர்தலுக்காக மட்டுமே ஏற்படும் காதலுக்கு ஏதேனுமொரு உடல் போதுமானது. காதல் மீது மொழியின் ஊடாக கட்டமைக்கப்பட்ட கருத்துகளே சாதி முதலிய தகுதிகளை உடைய உடலை எதிர்பார்க்கச் செய்கிறது.
காதல் வேட்கை என்பது தன்னிச்சையான மனித உணர்வா அல்லது அதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றா? சமூக அமைப்பின் இயக்கத்தில் காலந்தோறும் அறிவு என்பது மாற்றமடைந்து வந்துள்ளது. அம் மாற்றத்திற்கு ஏற்ப நம்முடைய பழக்கங்களும் நடைமுறைகளும் மாறிக் கொள்கின்றன. விலங்கு போல் வாழ்ந்த மனிதர் தங்களை மனிதராக அடையாளப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய கருத்துருவாக்கம் நாகரீகம் எனக் கூறப்படுகிறது. இந்த நாகரீக வளர்ச்சி காமம் என்ற அடிப்படை உணர்வைக் காதலாக்கியது. நல்ல காதல் × கெட்ட காதல் என எதிர்மையை உருவாக்கியது. இந்த முயற்சிகள் அனைத்தும் சாதியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
சாதியை ஒழிக்கும் நோக்கத்துடன் கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் போன்ற முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் தங்கள் இணையருடன் இணைந்த பின்னும் சாதிக்கு எதிரான தங்களுடைய நிலைபாடுகளில் வீரியத்துடன் இயங்குகிறார்களா? சாதியிடம் சண்டையிட்டு மணம்புரிந்து அடுத்ததாக யாருடைய சாதியைக் குழந்தைக்குச் சூட்டலாம் என்று சண்டை போடுகிறார்கள். இதில் எங்கு சாதி ஒழிகிறது? இது என்ன கிளர்ச்சி? மாறாக, அதில் யாரேனும் ஒருவரின் சாதியை ஏற்று நிற்கும் உடலாக அவர்களின் குழந்தை வளர்க்கப்படுகிறது. பின்னர் அந்தச் சாதியின் ஒரு பிண்டமாக மாற்றப்படுகிறது. மேலும், தம் பெற்றோர் வாழ்ந்த சாதி வாழ்க்கையை அதுவும் வாழ்கிறது.
குடும்பம் என்பது சாதியின் சிறிய அலகு. அதுவே சாதியைப் பாதுகாக்கும் ஒரு அரணாகவும் செயல்படுகிறது. பண்பாடு என்ற பெயரில் திருமணம் முடிந்ததும் பெண் என்பவள் ஆணின் வீட்டிற்குச் செல்வது வழக்கமாக உள்ளது. இச் செயல்பாடு ஆணுடைய சாதியை (தாழ்த்தப்பட்ட சாதி அல்லது தாழ்த்தும் சாதி எதுவாக இருந்தாலும்) எண்ணிக்கை பலமுடையதாக ஆக்குகிறது. பெண்ணுடைய சாதியிலிருந்து ஓர் உடலை உருவி ஆணுடைய சாதிக் கூட்டத்தில் பொருத்துவது சாதி ஒழிப்பிற்கு எவ்வகையிலும் உதவாது. மேலும், குடும்பம் ஆண் என்பவனைப் பொருளாதார மற்றும் அதிகார மையமாக்கி பெண் மீதும் அவர்களுடைய குழந்தைகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வழிவகைச் செய்கிறது.
பாலின இருமைக்கு எதிராக காதல் புரியும் பாலினத்தவர்கள் (LGBTQIA+) அனைவரும் வரவேற்க படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர்கள் மீண்டும் குடும்பம் போன்றதான ஒரு அமைப்பைப் போலச் செய்வது (imitate) உகந்ததாகப் படவில்லை. குடும்பம் என்ற அமைப்பு பாலின இருமையைப் போற்றும் ஓர் ஆண்-மைய நிறுவனம். அதற்குள் அவர்களை இணைத்துக் கொள்வது அவர்களுடைய இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் இச் சமூகக் கட்டமைப்பை உடைத்து வெளிவந்தவர்கள். சமூகக் கட்டமைப்பின் தூணான குடும்ப அமைப்பைத் தழுவுவது அவர்களின் முந்தைய நிலையையும் (கட்டமைப்பை உடைத்தல்) பொருளற்றதாக்கும்.
காதல் vs குடும்பம்
காதலும் குடும்பமும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் நிகழ்வுகள். இவையிரண்டும் ஒன்றிற்கொன்று முரணானவை. இவையிரண்டுமே சாதியக் கருத்தோடு வினைப் புரியக் கூடியன. சாதிக்குக் காதல் எதிராகவும் குடும்பம் ஆதரவாகவும் பெரும்பாலும் இயங்குகின்றன. சிறுபான்மையாகச் சுய சாதிக்குள் மட்டுமே காதலிப்பது; படித்த நபர்களுடைய குடும்பம் சாதியைப் பொருட்படுத்தாமலிருப்பது என்று இவ்விரண்டும் எதிர் நிலையிலும் இயங்குகின்றன. ஒரு குடும்பம் சாதிப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி கொண்டிருக்கும் பட்சத்தில் மாற்று சாதியில் ஏற்படும் காதலைத் தீவிரமாக எதிர்க்கிறது. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் கொலைச் செயல் கூட புரிகிறது. பொருளாதாரப் பின்னணி இல்லையென்றாலும் சோற்றுக்கே வழியில்லை என்றாலும் சாதியைத் தக்க வைத்துக் கொள்ளும் கொடூர எண்ணம் நீங்குவதில்லை.
சமூகம் என்பது பல்வேறு படிநிலைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் உடைய ஒரு பெருந் தொகுதி. அதில் தனிப்பட்ட மனிதரால் பெரிய மாற்றத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தனிப்பட்ட மனிதரால் தம்முடைய இயங்கு வெளியில் (காதல், குடும்பம், நட்பு இன்னும் பிற) எவ்வளவு பெரிய மாற்றத்தையும் செய்ய இயலும். வழக்கமான காதல் அதன்பின் குடும்பம் போன்ற செயல்பாடுகள் ஒன்றும் பெரிய மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தாது. அதற்கு மாற்று வழிகள் தேவை. இதுதான் வழி என்பது எதுவுமில்லை. அது வழியைத் தேர்ந்தெடுப்பவர்களின் தனித்தனி சூழலைப் பொறுத்து அமையும். இருந்தாலும் வழக்கமான முறையிலிருந்து சிறிதளவிலாவது மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தத் தான் வேண்டும். மாற்ற இயலாது எனக் கூறிக் கொண்டிருந்தால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது. மாற்றியாவது பார்ப்போமே.
- குர்குரே