கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நடந்து முடிந்திருக்கும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதியுள்ளார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதினர்.

பத்தாம் வகுப்பு தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதி இருக்கிறார்கள்.

இந்தியாவில் சுமார் 8876 பொறியியல் கல்லூரிகள் உள்ளன , அவற்றில் 6611 தனியார் கல்லூரிகள் மற்றும் 2265 அரசு கல்லூரிகள்.

தமிழ்நாட்டில் 520 மேல் பொறியியல் கல்லூரிகள் உள்ளது. அதில் 511மேல் சுயநிதி கல்லூரிகள் உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் கூடுதலாகவும் இருக்கலாம்.

இந்தத் தகவலை கூறுவதற்கு காரணம் ஒரு தகவல் ஒரு செயலை திறம்பட ஆற்ற எத்தனை பேருதவியாக இருக்கும் என்பதை சொல்வதற்காகத்தான். மற்றபடி அதன் அளவுகளின் மாறுபாடுகள் குறித்தான மெனக்கெடல் நமக்குத் தேவையில்லை.

கடந்த இருபது ஆண்டுகளாக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இருந்ததால் அவர்களை சந்தித்த அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

எட்டு லட்சத்திற்கு மேலாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கும் மாணவர்களில் அவர் அரசு பள்ளிகளில் படித்திருந்தாலும் சரி தனியார் பள்ளிகளில் படித்து இருந்தாலும் சரி அவர்களில் எத்தனை பேருக்கு நீட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது ஜேஇஇக்கு எப்படி விண்ணப்பது என்று தெரியும்.அதன் கல்லூரி தேர்ந்தெடுப்பது குறித்தான தெளிவு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்

ஏழையாக இருக்கப்பட்டவர்களுக்காக இருக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதாவது தெரியுமா என்றால் அதற்கு வேதனையான பதில் இங்கு மாணவர்களிடம் இருக்கிறது.

ஏதோவொரு பிரவுசிங் சென்டரிலோ இல்லை பள்ளிகளிலோ விண்ணப்பித்து விட்டாலும் தான் படிக்கப்போகின்ற துறை என்ன அதை எங்கு படிக்க வேண்டும் அதற்கு சரியான கல்லூரிகள் எது என்பது பற்றிய எந்தவொரு அடிப்படை புரிதலும் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுகளை சந்திக்கிறார்கள்.

பொதுவெளியில் சிவில் இன்ஜினியரிங் என்று பேசு பொருளாக இருக்கும் போது எல்லோரும் அந்தத் துறையே நாடிச் செல்வது. சில முறை மெக்கானிக்கல் துறை பேசுபொருளாக இருக்கும் போது அதை நோக்கிப் படை எடுப்பது. ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் என்றால் அதை நோக்கிப் படை எடுப்பது. ஆட்டு மந்தையாக மாணவர்கள் மாறிக் கிடப்பது காலத்தின் அவலம்.

எனது நோக்கம் மாணவர்களை குறை கூறுவதல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் பணமீட்டும் துறையாக கல்வி மாறி இருப்பதைப் பற்றிய வெறுப்புமல்ல.

மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பள்ளிகள் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் அவர்களுக்கு தினம் ஒரு பத்து நிமிடம் பொறியியல் துறை ஒவ்வொன்றைப் பற்றியும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். எந்தத் துறை எங்கெல்லாம் பயன்படுகிறது.அதற்கு எங்கு படிக்க வேண்டும். எந்த கல்லூரிகள் கடந்த வருடம் வேலைகள் வாங்கிக் கொடுப்பதில் முன்னனியில் உள்ளது.எந்தெந்த துறைகள் எதிர் காலத்தில் சிறப்பாக இருக்கப் போகிறது. எந்த துறைகளை எடுத்தால் நாம் சமூக சிந்தனைகள் சார்ந்த அற்பணிப்பு உணர்வோடு நாட்டிற்காக உழைக்க முடியும்.

மேலும் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளைக் கடந்து கலைக்கல்லூரிகளில் படிப்பதாலும் உள்ள சாதகங்கள் என்ன என்பதனை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது. மத்திய பல்கலைக்கழகங்களில் எப்படி சேருவது போன்ற பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகான படிப்புகள் எல்லாவற்றையும் அவர்களுக்கு தெளிவுபடுத்திவிட வேண்டும்.

குறிப்பாக கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கட் ஆஃப்பி மார்க்கில் இட ஒதுக்கீடுகள் கொடுத்து இருக்கிறது என்ற தகவல் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும்.

ஒரு மாணவன் தான் படிக்கும்போதே வாங்கும் மதிப்பெண்களை வைத்து தான் எந்த பெரு நகரத்தை தேர்ந்தெடுப்பது.அதில் எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதை அவர்கள் அறிய செய்துவிட வேண்டும்.

அரசு கல்லூரிகளில் சேருவதற்கு எவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் நமக்கு அண்மையில் இருக்கும் கல்லூரிகளில் சேர எவ்வளவு மார்க் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

கலந்தாய்வு நேரத்தில் படித்த பெற்றோர்கள் மற்றும் படிக்காத பெற்றோர்கள் அனைவரிடமே பெரிய குழப்பம் நிறைந்திருக்கிறது. பெரும்பாலும் தனக்குத் தெரிந்த புத்திசாலிகளிடம் கேட்டு அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளில் கல்லூரி அதில் உள்ள துறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.பெரும்பாலும் இங்கு தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லக் கூடியவர்கள் குறைவு என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பல கல்லூரிகள் அட்மிஷன் செல்லை அமைத்து தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் இருக்கும் மாணவர்களின் கைபேசி எண்களை வாங்கி தினம் தினம் போன் மூலம் அட்மிஷனை நடத்துகிறார்கள்.அதன் பிறகு அவர்களே அவர்கள் கல்லூரியை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அந்த மாணவருக்கு தேர்ந்தெடுத்து கொடுத்து விடுகிறார்கள். கையில் தகவல்கள் நிறைந்திருக்கும் இன்றைய காலத்தில் இதுபோன்று நடப்பது மாணவர்களின் அறிவு போதாமையைதான் காட்டுகிறது. கல்லூரிகளை குறை சொல்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை அது அவர்களின் வியாபார தந்திரம்.

இங்கு நாம் பள்ளிகளில் அதற்கான அறிவை கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடம் இந்த கலந்தாய்வு குறித்தான தகவல்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மேம்பட்ட புரிதலாக இருக்கின்ற வேலை பளுவில் இது வேறையா என்று அங்கலாய்க்காமலும் இது தேவையற்ற குழப்பங்களை உண்டு பண்ணும் என்று அரசுக்கு ஆலோசனைகள் சொல்கிறவர்கள் நினைக்காமலும் ஒரு கமிட்டியை அமைத்து மாணவர்களின் இந்த விசயம் குறித்தான அறிவு போதாமையை ஆராய வேண்டும். வேதனையான விசயம் இதில் ஆசிரியர்களுக்கே குறைவான புரிதல்கள் தான் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அதனால் ஆசிரியர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அரசும் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளும் இதற்கான தனி கள ஆய்வைக் கண்டு அதன் மூலம் ஆராய்ந்து ஒரு சிறப்பான செயல் திட்டத்தைக் கொண்டு வந்தால் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். மாணவர்கள் கலந்தாய்வின்போது எதிர் கொள்ளும் சிக்கல்களும் சிரமங்களும் தடுமாற்றங்களும் இல்லாமல் ஒரு தெளிந்த அறிவில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும். படிக்கும்போதே இன்னும் பத்து மதிப்பெண் கூடுதலாக வாங்கினால் நம் எதிர்காலம் எத்தகையதொரு மாற்றத்திற்கு உள்ளாகும் என்கின்ற பொறுப்புணர்வு எல்லோரிடமும் தலை தூக்கும்.

மற்றபடி இந்த கட்டுரையின் நோக்கம் அரசையோ, ஆசிரியர்களையோ, பள்ளி, கல்லூரிகளையோ குறைவு கூறுவதல்ல. ஒரு பத்து நிமிடம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு எத்தனைப் பேருதவியாக இருக்கும் என்பதே இதை எழுதுவதன் நோக்கம்.

- ரவி அல்லது