பேருந்து நகரும் சமயம்
மூச்சிறைக்க ஓடிவந்தான்
என் நண்பனின் மகன்
இறுக மூடிய
தன் இரண்டு கைகளில்
ஏந்திக்கொண்டு வந்த
மரவிதைகள என் கைகளில்
வேகமாக இடம் மாற்றி
கைஅசைத்து வழி அனுப்பினான்
விரல் இடுக்குகளின் வழி
கசிந்து வெளியேறிய விதைகள்
பல ஏக்கர் நிலங்களை
பசுமைக்காடாக்கும் என்பதால்
அக்கறையுடன் குனிந்து
ஒன்றுவிடாமல் சேகரிக்கிறேன்
நடுங்கும் பூமியின் அதிர்வு
ஆழிப்பேரலையின் இரைச்சல்
நிலையற்ற வெப்ப அளவு
அனைத்தையும் உணர்த்தியது
என் உள்ளங்கைகளில் இருந்து வழிந்த
விதைகளின் இதமான வெப்பம்
வீட்டிற்கு சென்றவுடன்
என் மகனின் உள்ளங்கைகள்
குவியக்குவிய
விதைகளை இடம் மாற்ற
கண்களை மலர்த்தியபடி
சிரிக்கிறான்
ஒரு பொக்கிஷத்தைக் கண்டது போல
அளப்பரிய கருணையை
வெளிக்காட்டியது
இயற்கை அந்த அரிய தருணத்தில்
ஆழிப்பேரலையும்
பூமியின் சீற்றமும்
சற்றே தணிந்தது போல் உணர்ந்தேன்
நான் அப்போது
- பிரேம பிரபா (