கீற்றில் தேட...

 

அதி அழகான ஓவியங்களை
சுவரில் வரைந்துவிட்டு எங்கோ போயிருக்கிறார்
ஓவியங்களின் தந்தை
அதி அழகான ஓவியங்களை பார்த்தவண்ணமிருக்கிறேன்

சூரியனை இரவிலும்
நிலாவை பகலிலும் புலரவைத்துவிட்டு
ஓவியங்களின் தந்தை எங்கோ போயிருக்கிறார்

தேனை குழைத்துப் பூசிய நிறம் சூரியனிலும்
வெறும் சோற்றை குழைத்துப் பூசிய நிறம் நிலாவிலும்

சுவரின் ஒரு பகுதியில் இரவு
சுவரின் ஒரு பகுதியில் பகல்

அதி அழகான ஓவியங்களின் தந்தை
என்னருகில் வருகிறார்
நெருங்கி இருக்கும் தூரத்தை வரைகிறார்
அவரிடம் ஏதாவது பேச்சுக்கொடுக்கவேண்டி சுகம் விசாரிக்கிறேன்
என்னோடு எதுவும் பேசாமல்
தூரத்திற்கு நிறம்பூசுகிறார்

கீழே விழுகிற நிறங்களை அவர் கொஞ்சமும் கவனிக்கவில்லை
கீழே விழுந்து கிடக்கும் நிறங்களை அள்ளியெடுத்தேன்
என் கைகளில்
ஒரு மரணித்த ஓவியத்தை எங்கு புதைப்பது,
எப்படி புதைப்பது போன்ற ஆலோசனைகளை நடத்தும்
ஒரு கூட்டம்