கீற்றில் தேட...

மரமென்றவொன்று-1

உயரப்பனையிலிருந்து
காய்களை வெட்டி வீசுகிறான்

கான்க்ரீட் தூணொன்றில்
ஏறி  ஃப்யூஸ் கட்டையை
பொருத்துகையில் கருகிச்செத்தான்.

தென்னையின் தலையிலிருந்து
ஒரே
குதி.
கிணற்றுக்குள்.

கள்வனுக்கு
தேள்கொடுக்கு
தேவையிருக்கவில்லை.
யூகலிப்டஸில் நிற்கையில்

மகிழம் பூத்திருந்த
கிளையில் தூக்கிட்டவனை
இரண்டு நாட்கள்
யாரும் தேடவில்லை.

ஆலம் விழுதுகளை
போலத் தலைவிரித்தாள்
மார்ச்சுவரி வாசற்கிழவி.

மரங்கள் பார்த்துக்
கொண்டிருக்கின்றன.
மனிதர்கள்
ஒருபொழுதும்
மரங்களாக மாறுவதே இல்லை.
............................................................................................
மரமென்றவொன்று-2.

போன்சாய் மரமொன்றைப்
பரிசளிக்கிறாய்.
வந்தனம்.
எதிர்காலத்தில்
பாட்டிலில் அடைக்கப்பட்ட
சிற்றுருவ மனிதர்கள்
வரவேற்பறைகளில்
வைக்கப்படுவார்கள்
இயந்திரர்களின் ரசனையொன்றைப்
பறைசாற்றியபடி.
..................................................................................................
மரமென்றவொன்று-3

நெடுஞ்சாலைப்பயணங்களில்
போகையில் வருகையில்
எதிர்புறம்
பயணிக்கும்
மரங்களின் சங்கிலித் தொடரை
காண்கையிலெல்லாமும்
ஞாபகத்துக்கு வருகிறார்
நாலாம் வகுப்பு படிக்கையிலேயே
அத்தனை மரங்களை நட்ட
அசோகச் சக்ரவர்த்தி.
...................................................................................
மரமென்றவொன்று-4

பார்த்தவர்கள்
எந்த மரத்தில் செய்தது
என்று ஆர்வமாகப்
பேசிக்கொண்டிருந்தார்கள்
சென்ற தேசத்தில்
செத்துப் போனவனின்
ப்ரேதம் கொணர்ந்த
வெளிநாட்டுச் சவப்பெட்டியை.
.......................................................................................................
மரமென்றவொன்று-5

சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொண்டு
சும்மா
மரம் மாதிரி நிற்கிறாயே?
என்கிறாய்.

சும்மாவா நிற்கிறது
மரம்..?
.................................................................................