கீற்றில் தேட...

 

உணவும் மருந்தும் தேவைப் படினும்
பணமதில் முதலிட மறுக்கும் கயவர்
ஆயுதம் முதலிய மாசுத் தொழிலில்
பாய்ந்து சென்று முதலிடு கின்றார்
வேளாண் வளர்ச்சியில் வெப்பம் குறையினும்
பாழாய்ப் போகும் இலாபம் குறைவதால்
சுடுகின்ற நெருப்பாய் எண்ணியும் புவியை
அடுமனை யாக்கும் தொழில்கள் மிகுந்த
ஆக்கம் தருவதால் செவ்வான் என்றே
ஊக்கம் கொண்டுத் துள்ளித் திரியும்
சந்தை முறையை ஒழிப்போம் வாரீர்
எந்தையும் தாய்போல் வாழ்வு தொடரவே.
 
(உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தேவைகள் இருப்பினும், அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில்களில் மூலதனத்தை ஈடுபடுத்த மறுக்கும் கயவர்கள், ஆயுத உற்பத்தி முதலிய (புவியை) மாசு படுத்தும் தொழில்களில் பாய்ந்து சென்று முதலீடு செய்கிறார்கள். வேளாண்மை வளர்ச்சியினால் (புவி) வெப்பம் குறைகிறது எனத் தெரிந்தாலும் (பிற தொழில்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது) இலாபம் குறைவாக இருப்பதால், சுடுகின்ற நெருப்பாக எண்ணியும், புவியை அடுமனை போல் ஆக்கும் தொழில்கள், மிகுந்த இலாபத்தைத் தருவதால் செவ்வானத்தைப் போல் அழகுடையதாகவும் எண்ணி ஊக்கத்துடன் (அத்தொழில்களில்) துள்ளித் திரியும், சந்தைப் பொருளாதார முறையை ஒழிப்பதற்கு (மக்களே) முன்வாருங்கள். நம் தாய் தந்தையர்கள் தங்கள் முழு வாழ்நாளையும் வாழ்ந்தது போல (புவி வெப்பத்தால் அழியாமல் இருந்து) நம் சந்ததியினரும் தங்கள் முழு வாழ்நாட்களை வாழ வேண்டும் அல்லவா?)
 
- இராமியா