விளை நிலத்தில்
விழுந்த விதையின்
ஒளிமயமான கனவுகளை
ஒத்திருந்தது
அந்த இருவரின்
எதிர்பார்ப்புகளும்.
உள்ளங்கைகள் இரண்டிலும்
குளிரக்குளிர
ஓடை நீரை ஏந்திய ஆதாம்
ஏவாளை அழைக்கிறான்
முதலில் அவளின்
தாகம் தணியும் பொருட்டு.
அவனை நெருங்கிவந்த
ஏவாளின் உதட்டோரத்தில்
உதிராமல் அடம் பிடிக்கும்
விலக்கப்பட்ட கனியின் விதையைக்
கண்டவன்
அதைத் தன் உதட்டினால் அப்புறப்படுத்த
மணலில் விழுந்த விதை
இந்த மானுடம் தழைக்க
ஆதாமின் முதல் காணிக்கையானது