கட்டற்ற சுதந்திரமாய்
கொட்டும் அருவிகள்,
ஆறுகள், எல்லாம்
நமக்கு சொந்தமல்ல..!
குளிர்பான
நிறுவனங்களுக்கு சொந்தம்..!
எதன் பொருட்டும்
எதிர்பார்த்து பழக்கப்படாத
எனக்காக காத்திருக்கிறது
இலவசங்களின் நீண்ட வரிசை..!
சுரண்டுபவர்களை மக்கள்
வணங்கிச் செல்கிறார்கள்..!
தனக்கு வாய்த்த..
“அடிமைகள்” குறித்து
பெருமிதம் கொள்கிறார்கள்
தலைவர்கள்..!
அரை நூற்றாண்டைக் கடந்த
இந்திய சுதந்திரம்
எனக்கான கழிப்பறையைக் கூட
கட்டித் தந்ததில்லை..!
அஃறிணையைப் போலவே
சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை
என் வாய்
சுவைத்ததே இல்லை..!
கன்றுகள் அடிபட்டு
அலற.. அலற..
குருதிக்கசிவுடன்
மகனை மந்திரியாக்க
விரைந்து செல்கிறான்
சமகாலத்தின் மனுநீதிச்சோழன்..!
வழிமறித்து அவனிடம்
நீதி கேட்டேன்
குறுக்கிட்டதால்
குற்றவாளியென கருதி
கைது செய்தது காவல்துறை..!
குற்றவாளிகளே
நீதிபதிகளாக இருக்கும்
தேசத்தின்
பெருமைக்குரிய பிரதிநிதிகள்
நாங்கள்..!
-அமீர் அப்பாஸ் (