வெகு நாட்களாய்
தவமிருந்தது
இதற்காகத்தான்.
வெறிச்சோடிக் கிடந்த வீதியில்
விதியை தலைக்கு வைத்து
படுத்திருக்கும்
பித்து பிடித்தவளிடம்
கொடுத்துவிடலாம்.
ஒன்பதங்குல பாதம்
நிச்சயமவள்
தொலைத்ததில் ஒன்று தான்
தொலைந்தபோது
ஆறேகால் அங்குலம்.
மரமாசாரி எவரோ
செதுக்கி இழைத்திருப்பார்
திரள் திரளாய்
தேய்ந்திருக்கிறது பாதம்.
நாலாபக்கமும்
விரல்களோடு சேர்ந்த
வளர்ச்சி உப்பியிருந்தது.
விட்டுப்போயிருந்த
விரல்களின் பதிவில்
மரப்பல்லியளவு புடைத்த
விடுபடாத ஞாபகங்கள்.
யாரேனும்
குத்தகைக்கெடுத்து
சுட்டெரிக்கும் வெயிலில்
நடத்தியிருக்கலாகும்
ஒட்டகம் மேய்ப்பதற்கென..
மரமரத்த தடயங்களிருந்தது.
நெருஞ்சி முள்
தைத்த துளைகள்
துளியேதும் மூடப்படாமல்..
வனங்காட்டு ஜாகையில்
கொத்தடிமை கொத்தில்
அடைபட்டு மீட்டப்பட்டிருக்கலாகும்.
இருப்பினுமிந்த
சப்பைக்கால் பாதம்
அழகேசனுடையாதாய் யிருக்கும்
காவலர் தேர்வில்
கழிக்கப்பட்ட பாதம்
கவனமீர்த்திருக்கும் அந்நாளில்.
பித்த வெடிப்பின்
இரத்த கசிவு கரைகளை
எவர் வந்தேனும்
பார்வையிடலாம்
சாட்சி சம்பிரதாயங்கருதி..
ஆமணக்கு எண்ணெய்
வெடிப்பின் வாய்காலூற்றி
அழுத்தி தேய்த்த ஆத்தாளை
அடியோடு மறந்த பாதம்.
'வெண் தாமரை
செந்தாமரை
பொற்றாமரை
வஜ்ஜிர தாமரை'யென
செல்ல பாதம் பிடித்து
கொஞ்சி முத்தமிட்டு
அப்பத்தாள் கொட்டிய பாசத்தில்
வழிந்தோடிய பாதம்.
கண்களில் லொற்றி
அள்ளிய பாதத்தை
இடுப்போரம் சொருகிக் கொள்கிறாள்.
எதிர்திசை பரவி
ஓடோடி வரும் இன்னொரு பாசம்.
ஊர் உடுத்திய அழுக்கு
வெளுத்து துவைக்கும் நதியோரம்
படித்துறை வழுக்கி
பரிதவிக்கவிட்டு போனதவள்
பத்திரை மாத்து பாதமென
மார் தட்டியழுகிறாள்.
ஒரே பாதம்
ரெட்டிப்பு பாசம்
ஒப்படைப்பது யாரிடமெனும்
கேள்விக்கு மத்தியில்
பாதம் தொட்டு தழுவி
பணிந்து யாசிக்கிறது
பழைய பாதம்
தொடர்பில்லா தூரத்தே
தொலைத்து விடச்சொல்லி ..
- கொ.மா.கோ.இளங்கோ (