மழை:
எனது தந்தையின் மழைகள்
சிறுவயதாயிருந்தன.
அந்த மழைக்கு மீசை முளைத்தது.
வாலிபத்தில்
இரண்டு மழைகளுக்கு
நடுவில்
என் மழை பிறந்தது.
என் மழை வளர வளர
என் தந்தை மழைக்கு
வயதாகியது.
ஒரு நாள் என் தந்தை மழை இறந்துவிட்டது.
என் மழைக்குத் திருமணமாயிற்று.
இப்பொழுது
என் மகள் மழைக்கு
ஆறு வயது.
..........................................................................................
கானகம்
இருள் சதை தீய்ந்தொழுகும்
வாசனை
பின்னல் நரம்புகள் நீட்சி
கொட்டியோடும் குருதி
சதா கேட்கும் மத்தளச் சத்தம்
கற்றுப் பிறந்தவை
தப்பிப் பிழைக்கும்.
நீச்சல்பரிச்சயம்
தாமதிக்க மட்டும்
முங்கும் மனிதன்
சவமாய் மிதக்கிறான்.
நடு நதிக் கரையோரம்
எரிந்து கொண்டே இருக்கும்
எலும்புகளின் மத்தியில்
கர்ப்பூர வாசம்
தலைவிரிக்கிறாள்
ஐவரைக் கொன்று
நிலைத்துவிட்ட
பேச்சிக்கிழவி.
................................................................................................
காதல்:
வாழவந்த நிலத்தில்
வாழ்வினை இழக்கையில்
தஞ்சம் புகுகையில்
தரையினில் வீழ்கையில்
அகதியென்றறிவித்து
தனிச்சிறை கிடக்கையில்
வரைபடமெங்கும்
குடும்பம் சிதறுகையில்
சொந்தமென்று நம்பிக்
கழுத்தறுபடுகையில்
இன்னமும் இன்னும்
சீரழிந்து அழுகையில்
யாம் செய்த குற்றமெல்லாம்
தமிழ்மேற் காதல்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மூன்று கவிதைகள்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்