ஒருவர் உழைப்பில் மற்றவர் வாழும்
சிறுமதி இல்லாப் பண்டைச் சமூகம்
வளர்ச்சிப் பாதையில் கெடுமதி யாளரால்
தளர்ச்சி யடைய வர்க்கம் உதித்தது
அடிமைப் பட்ட உழைக்கும் வர்க்கம்
மடியின்றி எதிர்த்தே விடுதலையாகும்
நீடு குழி அகப் பட்ட
பீடு உடைய எறுள் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
(பண்டைய பொதுவுடைமைச் சமூகத்தில் ஒருவர் உழைப்பை மற்றவர் சுரண்டி வாழும் சிறுமதியாளர்கள் இருந்ததில்லை. ஆனால் (உற்பத்திச் சக்திகள் பெருகிய) வளர்ச்சிப் பாதையில் கெடுமதியாளர்களால் (உழைப்பைச் சுரண்டும் வழக்கம் புகுத்தப்பட்டு) வர்க்கப் பிரிவினை உதித்தது. யானைப் படுங்குழியிலே அறியாமையினாலும் எச்சரிக்கைக் குறைவினாலும் வீழ்ந்தது ஒரு யானை. பின் அதைத் தன் வலிய கொம்புகளால் தூர்த்துத் தானே வெளிப்பட்டுத் தன் இனத்தோடும் சேர்ந்தது. அதே போல் உழைக்கும் வர்க்கத்தினரும் சோர்வின்றி (ஒற்றுமையுடன் சுரண்டலை) எதிர்த்துப் போராடுவதன் மூலமாகத் தான் விடுதலையை அடைய முடியும்.)
- இராமியா