ஊடகங்களால்
உருவாக்கப்பட்ட உயரம்
உன்னுடையது இல்லை..!
எவன் மூளையிலோ
உதித்த கருத்துக்களை
உன்னுடையது போலவே
ஒலிபரப்புகிறாய்..!
இரவல் குரலில் பாடும்போதே
அது உன் பாடலாகிறது..!
சுயமாய் எதுவுமற்ற நீ
புணர்வதற்கும் சேர்த்தே
கூலி வாங்குகிறாய்..!
அத்தனை பேரின்
உழைப்புக்கும் சேர்த்து
நீ ஒருவனே
ஊதியம் பெறுகிறாய்..!
உன் மின்னும் மேனி
தொங்கு சதையாகி
தளரும்போது
முதல்வர் கனவு
முளைத்து விடுகிறது..!
கறுப்புப் பணத்தை
கணக்கு காட்டாமல்..
ஒளித்து வைத்த நீ
ஊழலை ஒழிக்க
புறப்பட்டு விடுகிறாய்
காமத்துப் பாலில்
திளைக்கும் உனக்கு
”கட்-அவுட்” டில் பாலூற்றும்
இரசிகர்கள்..!
அவர்களுக்கு நீயே
கடைசிப் பாலூற்றுகிறாய்..!
நீ விரித்த..
மாய வலைக்குள்
வீழ்ந்தவர்கள்
வாழ்விழந்தனர்..!
நம்பிய பெண்கள்
கற்பை இழந்தனர்..!
நாங்கள்-
நாட்டை இழந்து
நம்பிக்கை தொலைத்து
நிற்கிறோம்..!