நான் புளியமரம்!
ஓங்கி உயர்ந்து கிளைபரப்பி
கம்பீரமாக சிலுசிலுத்து நிற்கும்
என் வேர்களை உசுப்பிச் சென்ற
அவர்களது சௌந்தர்ய உறவுதான்
நான் சொல்லப்போகும் கதை!
தென்னங்கீற்றுகளின் இடையே
சூரிய ஒளி நுழைந்துவரும்
இளங்காலைப் பொழுதுகளிலும்
மஞ்சள் வழியும் மாலைகளிலும்
அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள்!
அவர்கள் சந்தித்துக் கொண்டதென்னவோ
எனது நிழலில்தான்
இளைப்பாறிக் கொண்டதெல்லாம்
அவன் அவள் விழிகளிலும்
அவள் அவன் விழிகளிலும்!
அவர்களது சந்திப்பினால்
அவர்களைவிடவும்
நான்தான் புளகாங்கிதம் அடைந்தேன்.
அவர்கள் என் நிழலில் வந்தமரும்போதெல்லாம்
நான் வானத்தையும், மேகத்தையும் பார்த்து
அழுதுகொண்டிருப்பேன்…
மழையினால்
அவர்களது ஆத்மார்த்த சந்திப்பு
கலைந்து விடக்கூடாதென்று…!
என் நிழலுக்குள் வந்தமரும் அவர்கள்
தம் பார்வைகளால்
இதயத்தை நனைத்துக் கொள்கிறார்கள்…!
கண்ணீரைக்கூடக் சிரிக்கவிடுகிறார்கள்…!
இவர்களின் சந்திப்பினால்
கிளர்ச்சியடையும் என் கிளைகளோ,
நானோகூட இதுவரை அறியோம்
அவர்கள் உறவு என்னதென்று!
ஆயினும்,
பூமியைச் சேராத மழைத்துளிபோன்று
அவர்களது உறவு தூய்மையானது!
காலத்தால் மாறாதது என்ன உண்டு?
இப்போதெல்லாம்
அவர்களைக் காணமுடிவதில்லை
என் நிழலை
சுவர்களும் கூரைத்தகடுகளும்
மறைக்கத் தொடங்கியதிலிருந்து…
அவர்களைக் காணமுடிவதில்லை…!
எனது கிளைகளில் வந்தமர்ந்துபோன
ஆயிரமாயிரம் பறவைகளைக் காட்டிலும்,
என் நிழலில் அமர்ந்துசென்ற
அவர்களால்
என் வேர்கள், நார்கள்,
கலங்கள், கிளைகளெல்லாம்கூட
பெருமைபொங்குகிறோம்
பேருவகை கொள்கிறோம்!
ஆனால், அவர்கள்
இன்னமும் அமர்ந்திருப்பார்கள்
ரம்மியமான சூழலில்…
தென்றலின் இதமான தழுவலில்…
மௌனம்பேச,
விழிகளில் இளைப்பாறிக்கொண்டே,
அமர்ந்திருப்பார்கள்
கூரைகள் மறைக்காத
மரமொன்றின் நிழலில்….!