கீற்றில் தேட...

மழையின் பார்வை பிடிக்கும் அதன் பாராபட்சமற்ற விமர்சனம் கூட
மழையிடம் நிறைய விளையாட்டுக்களிருக்கின்றன.
கறுப்பையும், வெள்ளையையும் ஒரே நேரத்தில் நனைக்கிறது.
தலித்தையும் சாதி இந்துவையும் ஒரே மரத்தின் கீழ் கொண்டு வருகிறது.
நாட்டாண்மைகளையும், ஜமீன்தார்களையும் முக்காடிட்டு போகச் செய்கிறது.
விறகொடிக்க வந்து மாட்டிக் கொண்ட கிழவியின் சாபத்தை வாங்கிக் கொள்கிறது.
மழையின் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லும் உத்திரவுகள் யாரிடமும் இல்லை.
யாருடைய உத்திரவுக்கும் அது செவிசாய்ப்பதில்லை.
ஆட்சித் தலைவரின் உத்திரவுகள் மழையிடம் செல்லாதாகின்றன.
காவல்துறையின் கவனிப்புகள் பயனற்றுப் போகின்றன்.
அமைச்சரின் அதிகாரம் கந்தல்கந்தலாய் கிழிந்து போகிறது.
எதிர்க்கட்சியின் அறிக்கைகள் நனைந்து போகின்றன.
மழையின் அதிகாரம் வெள்ளை மாளிகை மீது விழுகிறது.
கிரௌம்ளின் சுவற்றில் வீசி அடிக்கிறது மழையின் பந்துகள்.
செய்வதறியாது எட்டிப்பார்க்கின்றன அமெரிக்காவின் அணுவாயுதக் கிடங்குகள்.
பிரெஞ்சு தேசத்தின் டாங்கிகள் மழையிடமிருந்து ஒதுங்கி நிற்கின்றன.
மழைக்கு ஒதுங்கி வழிவிடுகிறது ஜப்பான்.
வீட்டோ அதிகாரங்கள் மழையின் முன் குடைபிடித்து நிற்கின்றன.
கோவிலின் மீது மழை மின்னலை இறக்குகிறது.
தேவாலயத்தின் சிலுவையை கீழே தள்ளுகிறது.
மசூதியின் மய்யத்தில் இடியை இறக்குகிறது.
அச்சுறுத்தும் அதிகாரங்கள் கைகட்டி நிற்கின்றன
காற்றடித்தால் கலைந்துபோகும் சாதாரண மழையின்முன்.

- கோசின்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)