கீற்றில் தேட...

பண்டைக் காலப் பொதுமைச் சமூகம்
கண்ட  வளர்ச்சியால் உடைந்த போதும்
அடிமை மக்கள் உடையவர்க் கெதிராய்
மடியின்றிப் போரைத் தொடுத்த காலையும்
பண்ணையின் தளையை உழவரின் துணையொடு
மண்ணில் முதலிகள் உடைத்த நிலையிலும்
ஆளும் ஆசையில் புதிய வர்க்கமும்
மாளும் நிலையில் பழைய வர்க்கமும்
உழைக்கும் மக்களை வதைத்திட் டாலும்
முழுதாய் அழிக்க முனைந்தா ரில்லை
கொடியோர் நிலையார் வினைஞர் இன்றேல்
மடியிலா வினைஞரோ பிறரைச் சாரார்
ஆதலின் வர்க்கப் போரில் எதிரியை
காதல் இன்றி முழுமையாய் அழிப்பார்
எதிரியை ஒழிப்பதில் இரங்கா வினைஞர்
மதியிலி கண்களில் கொடியவர் தானே

(புராதன பொதுவுடைமைச் சமூகம் (மிகை மதிப்பை விளைவிக்கும் அளவிற்கு) வளர்ச்சி அடைந்து, வர்க்க சமூகமாய் உடைந்த போதும், (அடிமைச் சமூகத்தில்) அடிமைகள் ஆண்டைகளுக்கு எதிராய்ப் போரைத் தொடுத்த போதும், நிலப் பிரபுக்களினால் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருந்த உழவர்களின் துணை கொண்டு முதலாளி வர்க்கத்தினர் அடிமைத் தளையை உடைத்து எறிந்த நிலையிலும், ஆளும் ஆசையுடன் உதித்த புதிய வர்க்கமும் அழியும் நிலையில் இருந்த பழைய வர்க்கமும் உழைக்கும் மக்களை வதைத்துக் கொடுமைப் படுத்தினார்களே ஒழிய முற்றிலும் அழித்து ஒழிக்க முயலவே இல்லை. (ஏனெனில்) உழைக்கும் வர்க்கம் இல்லாமல் கொடியவர்களால் (அதாவது சுரண்டும் வர்க்கத்தினரால்) பிழைத்து இருக்க முடியாது. (ஆனால்) துடிப்புள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவில்லை. ஆகவே வர்க்கப் போரில் எதிரிகளை எவ்விதமான இரக்கமும் இன்றி முழுமையாய் அழித்து ஒழிப்பார்கள். எதிரிகளை ஒழிப்பதில் (சிறிதும்) இரக்கம் காட்டாத உழைக்கும் வர்க்கத்தினர், புத்தி இல்லாதவர்களின் கண்களில் கொடியவர்களாகத் தோன்றுகிறார்கள்.

- இராமியா