கீற்றில் தேட...

தாக்க வந்த கும்பலை நோக்கி கையெடுத்து கும்பிட்டபடியே கெஞ்சுகிறான்
தன் மத அடையாளங்களை இழந்துவிட சம்மதிக்கிறான்
இன்னொருமுறை இந்த பூமிக்கு வரப் போவதில்லையென கெஞ்சுகிறான்
இந்த தேசத்தில் இன்னொருமுறை பிறக்கப் போவதில்லையென வாதாடுகிறான்
தாக்க வந்த கும்பலுக்கும் அவனுக்கும் முன்பகையோ விரோதமோ இல்லை.
அவர்களின் நிலத்தையோ எந்தப் பொருளையோ அவன் திருடியிருக்கவில்லை
எந்த வன்சொல்லையும் அவர்கள் மீது விசியிருக்கவில்லை
இப்பொழுதுதான் சந்திக்கிறான் முதன்முதலாக
முதன்முதலாக சந்திப்பவர்கள்
எப்படி கொலையாளிகளாக மாற முடியுமென கேட்கிறான்
கடைசியாக ஒரு வார்த்தையைப் பிரயோகிக்கிறான்
நீங்கள் ஏன் என் கடவுளாக இருக்கக் கூடாதென்கிறான்
நாங்கள் கடவுள்தான்
உன் மதத்துக் கடவுளில்லையென்று சொன்னவர்கள்
சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்கள்
இரத்தம் வழியும் ஆயுதங்களுடன்
கடவுள்களால் கொல்லப்பட்டதை நினைத்து
இறந்துக் கொண்டிருந்தான் அவன்.

- கோசின்ரா