சந்தை ஆட்சியின் உற்பத்தி முறையால்
பந்தியில் அமர்ந்தது நெருக்கடி நிலைமை
அழையா விருந்தை விரட்டும் பொருட்டு
உழைப்பவர் கூடினர் வால்ஸ்ட்ரீட் தன்னில்
உலகம் முழுதும் நண்பர்கள் சேர்ந்தும்
தொலைத்திடும் வழியின்றி மருகு கின்றனர்
நெருக்கடி நிலையால் உழைப்பவர் குமுற
உருக்கிடும் வெப்பம் அறிஞரை மிரட்ட
தீர்வைத் தேடி அலையும் மக்காள்
சோர்வின்றி அறிவீர் சமதர்மக் குரவோர்
ஈகையாய் அருளிய உற்பத்தி முறையே
வாகை சூடும் ஒரேவழி யென்று
(சந்தைப் பொருளாதார ஆட்சி நிர்ணயிக்கும் உற்பத்தி முறையால் பொருளாதார நெருக்கடி நிலைமை அழையா விருந்தாளியைப் போல் வந்து சேர்ந்துள்ளது. அதை விரட்டும் பொருட்டு உழைக்கும் மக்கள் (நியூயார்க் நகரில் உள்ள) வால் ஸ்ட்ரீட்டில் ஒன்று கூடிப் போராடுகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அவர்களுக்கு ஆதரவாகத் திரண்டு வந்தும் (இந்த அழையா விருந்தாளியை) விரட்டும் வழி தெரியாமல் மயங்குகின்றனர். பொருளாதார நெருக்கடியால் உழைக்கும் மக்கள் குமுறவும், புவி வெப்ப உயர்வு, அறிவியல் அறிஞர்களை (புவியை அழிவில் இருந்து காப்பாற்றும் வழியைக் கண்டு பிடிக்கும்படி) விரட்டவும், தீர்வைத் தேடி அலையும் மக்களே! சமதர்ம (சோஷலிச தத்துவத்தின் மூலவர்களான) மேதைகள் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் அகியோர் அருளிய சமூக உற்பத்தி முறையே சரியான தீர்வாகும் என்பதை, சோர்வு சிறிதும் இல்லாமல் அறிந்து கொள்ளுங்கள்.)
- இராமியா