யாருமற்ற தெரு
வெறுமையை விரித்தபடி இருக்கிறது
நிழல்படாத வெயிலின் விழிப்பு
அடங்கிப்போன குரல்களின்
இடைவெளியைக் காட்டுகிறது
ஒரு பெரிய நிசப்தத்தின் பின்னால்
இரத்தம் தெறித்த கணங்கள்
குரூரமாய்த் தெரிகிறது
பழக்கப்பட்டதான அவலத்துள்
எல்லா மனங்களும் அந்தரித்திருக்கிறது
கொடும் பெருந்துயரில்
குறுக்கும் நெடுகுமாக கிழிக்கப்பட்ட வசந்தங்களால்
இலையுதிர்காலம் மட்டுமே
எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
***
எமக்கான இருள்
நீண்டுகொண்டே போகிறது
இரவின் கொடிய இருட்டு
ஏதுமறியாக் குழந்தை போல
இன்னும் விழிபிதுங்கியபடியே இருக்கிறோம்
எமக்கான ஒரு பகல்
இன்னும் விடியவே இல்லை
தெருநாய் குரைப்பும் வேலியோரச் சரசரப்புமாய்
எங்கள் இருள்
நீண்டுகொண்டே செல்கிறது
காற்று வாசனையில் கூட கந்தகநெடி மாறவில்லை
இன்னும் மீதமிருப்பதாய் எம்மை அச்சமூட்டுகிறது
வழிப்போக்கர்கள் யாருமில்லாது தெருவிளக்குகள்
சிணுங்கிக்கொண்டிருக்கிறது
ஊழிப்பெருந்தாண்டவம் உக்கிரமடைந்து ஓய்ந்தது
இருப்பினும் இன்னமும் உடுக்கொலிகள்
கேட்டவண்ணமுள்ளன