உன் உட்தவிப்பான
மென் விசும்பல்களில்
உலர்ந்து விழும்
உதிரிப்பூக்களின்
ஒத்திசைவான
முத்தங்களின் எதிரொலி
இந்த அறையெங்கும்.
அடர்த்தியான
நீலப்புகையென
என்னுள்ளில் மெல்ல எழும்பி
என் பிடிவாதமான
அடையாளங்களை
அழித்திடத் துடிக்கும்
கர்வமான காமத்தின்
பார்வையின் முன்
விலாசமிழந்த
வழிப்போக்கனாய்
உன்முன் நான்.
உன் நடுங்கும் இதழ்கள்
என்னிடம் எதையோ யாசிக்க
தொடர்பற்று நீண்டு கொண்டே போகும்
மௌனத்தின் சங்கீதங்கள்
எதிர்பார்ப்பின் ஒவ்வொரு
தருணங்களிலும்
நம் முதல் முத்தத்தின்
முகவரியிலிருந்து
துளியும் மீள முடியாமல்
தொலைந்து போகிறோம்
நாம் இருவரும்
ஒவ்வொரு முறையும்
அனாதையான பறவைக் கூடுகளில்
இன்றளவும்
கேட்டுக்கொண்டேதானே இருக்கிறது
ஜோடிப் பறவைகளின்
முதல் முத்தத்தின்
மெல்லிய நினைவுச் சப்தங்கள்.
- பிரேம பிரபா (