பண்ணை முறையை உழவர் துணையொடு
திண்மையாய் வென்று அரசை அமைத்து
முன்னைச் சமூகம் எண்ணவும் ஒண்ணாது
இன்னுயிர்ப் புவியைப் பிழிந்திட்ட தாலே
கரிவளி யோடு பசுமை வளியும்
பெரிதாய்க் கிளம்பி மாசு படுத்த
திரும்பா விதமாய் அழிவுப் பாதையில்
அருமைப் புவியைச் செலுத்திடும் முதலியே
சந்தை முறையில் மீட்சி யில்லை
செந்தழல் வளியை உயிர்வளி யாக
மாற்றிக் கொடுக்கும் வேளாண் தன்னைப்
போற்றிடும் குணமோ சந்தைக்கு இல்லை
புவியைக் காக்கும் எண்ணம் இருப்பின்
நவிலும் சான்றோர் நல்வழி கேட்டு
உழைப்பவர் நலனை மட்டும் ஏற்கும்
சமதர்ம அரசை அமைக்க விடுவீர்
மண்ணில் உயிரினம் தொடர்வதைக் காட்டிலும்
சுரண்டும் சுகமே பெரிதென நினைத்தால்
நொய்யும் உலகைக் காப்பவர் போலப்
பொய்யாய்ப் பரப்புரை செய்யா திருப்பாய்
(நிலப் பிரபுத்துவ சமூகத்தை உழவர்களின் துணை கொண்டு உறுதியாய் வென்று (முதலாளித்துவ) அரசை அமைத்து, முந்தைய சமூகங்கள் கற்பனையும் செய்ய முடியாத அளவில் பூமியைப் பிழிந்து எடுத்ததினால், கரியமில வாயுவும் பசுமை வீட்டு வாயுக்களும் கிளம்பி (இப்புவியை) மாசு படுத்தி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் முதலாளி வர்க்கமே! (இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்) சந்தைப் பொருளாதார முறையில் (இப்பிரச்சினையில் இருந்து) மீட்சி இல்லை. புவியின் வெப்பத்தை உயர்த்திக் கொண்டு இருக்கும் கரியமில வாயுவை (உறிஞ்சி) உயிர் வளியாக மாற்றிக் கொடுக்கும் வேளாண்மைத் தொழிலைச் சந்தைப் பொருளாதார முறை (அது இலாபம் தராதது மட்டுமன்றி நஷ்டத்திற்கும் இட்டுச் செல்வதால்)போற்றி வளர்க்காது. (ஆகவே) இப்புவியை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சான்றோர்கள் கூறும் நல்வழியான, உழைக்கும் மக்களின் நலன்களை மட்டுமே முன்னெடுக்கும் சோஷலிச அரசை அமைக்க வழி விட வேண்டும். (அப்படியின்றி) மண்ணில் உயிரினம் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதை விட,(உழைக்கும் மக்களைச்) சுரண்டும் சுகமே பெரிது என்று நினைத்தால், அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் இவ்வுலகத்தைக் காப்பது போலப் பொய்ப் பிரச்சாரம் செய்யாது இருக்க வேண்டும்.)
- இராமியா (