எல்லா வழிகளிலும்
முளைத்து நிற்கின்றன
இடையறாது கசியும்
உன் நினைவுகள்
நீ யாருக்கானவன்
என்பதறியாமல்
தடை உடைத்து உறவாட
பெருங்கடலை பழக்குவிக்கிறது
உன் பிரியத்தின் பேரன்பு
உன் மீதான
கையகல நம்பிக்கையில்
உன்னிலிருந்து கிளம்பும்
எதையெதையோ
யாருமறியாத அதன் வேகத்தில்
வண்ணம் தீட்டி
ஓவியமாக்கி உயிரூட்டியலைகிறேன்
மழை பதப்படுத்திய மண் போல
இறுக்கியணைத்த
உன் கைகளின் தீண்டல்
உறங்காக் கனவுகளாய்
ஓடிவந்து ஒண்டிக் கொள்கிறது என்னுள்
ஒவ்வொரு நாளிலும்
ஏதோவொரு நொடியில்
யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படாத எனதன்பு
பரவிக் கிடக்கிறது
உன் வனமெங்கிலும்

- வழக்கறிஞர் நீதிமலர்