தாங்கிக் கொள்ள இயலாத வலி இருக்கும்,
இருந்தாலும் நீங்கள் பேசமாட்டீர்கள்;
உங்கள் இதயம் கிரீச்சிட்டு அலறுமானால் கூட
நீங்கள் பேசமாட்டீர்கள்
அவர்கள் உங்கள் நாவை வெட்டிக் கொள்ளவும்
அதைப் பார்வையில் படாமல் வீசியெறியவும் நிர்ப்பந்திப்பார்கள்
பலரும் உங்களை உற்சாகப்படுத்துவார்கள்
ஆனால் நீங்கள் பேச மாட்டீர்கள்
வரலாற்றின் அந்த தடித்த புத்தகங்களை திறவுங்கள்,
நினைத்துப் பாருங்கள்
வெளிப்படையாகப் பேசியவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்
எனவே நீங்கள் பேச மாட்டீர்கள்
நீங்கள் பேசிப் பேசி செர்ரி பழங்களை விற்பவராக இருக்கலாம்
ஆனால் பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம்,
எனவே நீங்கள் பேச மாட்டீர்கள்
உங்கள் பரம்பரையின் பழைய விதிகள் சொல்கின்றன
மௌனம் பொன் போன்றது
வழிகாட்டுவோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்,
நீங்கள் பேச மாட்டீர்கள்
ஒருவரல்ல, ஒரு சிலரல்ல, ஆனால் இன்னும் கோடிக்கணக்கானோர்
உங்கள் பக்கம் நிற்பார்கள்
அவர்களுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள்
இருந்தாலும் நீங்கள் பேச மாட்டீர்கள்
காது கொடுத்துக் கேட்க இயலாத குடிமக்கள்
உண்மைக்காக ஒன்றுகூடி, உங்களையும் ஒன்றுகூட
மன்றாடிக் கேட்டாலும்
நீங்கள் பேசமாட்டீர்கள்.
--------------------
பாருல் ககார் குஜராத்தில் குடும்பத்தைப் பராமரித்து வரும் ஓர் எளிய பெண்மணி. குஜராத்தி மொழியில் கவிதைகள் எழுதுவார். குறிப்பாக ராதா கிருஷ்ணா குறித்த பக்திப் பாடல்களை எழுது வருபவர். கொரோனா பெருந்தொற்று வந்த போது இறந்து கொண்டிருந்த்வர்களின் உடல்கள் கங்கையில் மிதந்ததைக் கண்டபோது, அவருக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. ‘சவ் வாஹினி கங்கா’ (பிணம் சுமக்கும் கங்கை) என்ற தலைப்பில் 14 வரிகளில் ஒரு கவிதை எழுதி சமூக ஊடகத்தில் வெளியிட்டார். 48 மணி நேரத்தில் அவரை இழிவுபடுத்தி 28 ஆயிரம் கருத்துரைகள் வந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் அந்தக் கவிதையைப் பகிர்ந்திருந்தனர். இப்போது அந்தக் கவிதை அசாமி, இந்தி, தமிழ், மலையாளம், போஜ்புரி, ஆங்கிலம், வங்காளம், மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அந்தக் கவிதையின் தொடர்ச்சியைப் போல மேற்கண்ட கவிதையை அவர் எழுதியுள்ளார். இக்கவிதை முதலில் நிரீக்ஷக் (தி அப்சர்வர்) இதழில் முதலில் வெளிவந்தது.
முன்னர் வந்த அந்தப் புகழ்பெற்ற அக்கவிதை ஆங்கிலத்தில் சலில் திரிபாதியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே:
---------------------------
பிணம் சுமக்கும் கங்கை
கவலைப்படாதே, மகிழ்ச்சியுடன் இரு
ஒற்றைக் குரலில் பேசுகின்றன பிணங்கள்
அரசனே, உனது ராம ராஜியத்தில் மனித உடலகள்
கங்கையில் செல்வதைக் காண்கிறோம்
அரசனே மரங்கள் சாம்பல்களாகின்றன
எரியூட்டும் மயானத்தில் ஓர் இடமும் இல்லை
பிணத்துணி எடுப்போர் எவருமில்லை
துக்கிப்போவோரும் யாரும் இல்லை
துயருற்ற மனநிலையில் ஒப்பாரி பாடவும்
எங்களுக்கு யாரும் இல்லை
அரசனே, உயிர் பறிக்கும் எமகாதகி களிநடம் ஆடுகிறாள்
அரசனே, உனது ராம ராஜ்யத்தில்
எங்கள் உடல்கள் கங்கையில் மிதந்து செல்கின்றன
அரசனே, உருகும் புகைபோக்கி நடுநடுங்குகிறது
பெருந்தொற்று எங்களை உலுக்குகிறது
அரசனே, எங்கள் வளையல்கள் சிதறுகின்றன
விம்மும் எங்கள் நெஞ்சங்கள் உடைகின்றன
நகரம் பற்றி எரிகிறது அவர் ஃபிடில் வாசிக்கிறார்
பில்லாவும் ரங்காவும் ஈட்டிகளை செருகுகின்றனர்
அரசனே, உனது ராம ராஜியத்தில்
உடல்கள் கங்கையில் மிதந்து செல்வதைக் காண்கிறேன்
அரசனே, உனது உடைகள் மினுமினுக்கின்றன
விளம்பர வெளிச்சத்தில் நீ பளபளக்கிறாய், ஒளிர்கிறாய்,
அரசனே, கடைசியில் நகரம் முழுதும்
உனது உண்மையான முகத்தைக் கண்டுகொண்டது
என்றாலும் ஆனாலும் என்று சொல்லிக்கொண்டிராதே
உனது துணிச்சலைக் காட்டு
வெளியே வா, உரக்கக் கூறு
“அம்மண அரசன் நோஞ்சானாக நலிந்து காணப்படுகிறான்”
இனியும் நீ பலவீனன் அல்ல என்று எனக்குக் காட்டு
தீச்சுவாலைகள் ஓங்கி உயர்ந்து வானைத் தொடுகின்றன
சினம் கொண்ட நகரம் சீற்றம் கொள்கிறது
அரசனே, உனது ராம ராஜியத்தில்
உடல்கள் கங்கையில் மிதந்து செல்வதைக் காண்கிறாயா?
_________________________________
நன்றி: ஜனதா வீக்லி
தமிழில்: நிழல்வண்ணன்