கீற்றில் தேட...

வரிசைக்குத் தப்பிய
எறும்புகள் தான்
நிலம் மலரச் செய்கின்றன

*
வால் ஆட்ட மறந்த நாய்க்கு
வன்மம் இல்லை
வறுமை

*
பல காதல்கள்
நிலவிலேயே நின்று விடுகின்றன
சிலது மட்டுமே வானம் ஏறுகின்றன

*
பாறையை யானை என்றவன்
அதன் காலுக்கடியே
காட்டை வரைகிறான்

*
நட்சத்திரங்களை வீசி
நிலவைப் பிடிக்கிறதோ
வானம்

*
யார் அவிழ்த்து விட்டது
தறிகெட்டுத் தாவுகிறது
மலையருவி

*
வயிறு காட்டத் தெரியாமல் தான்
வால் ஆட்டித் திரிகிறது
பசித்த நாய்

*
பெருக்குவதை நிறுத்து
பிறகு பார் வாசலெங்கும்
மரத்தின் இதயங்கள்

*
குளிரில் நடுங்கும்
நெருப்பின் ஜுவாலை
சுற்றி அமர்ந்து சூடு காட்டு

*
மரங்கொத்தி மீது கோபமோ
இத்தனை முறை தட்டியும்
கதவு திறக்கவில்லை மரம்

- கவிஜி