அன்பை
அனல் வெயிலாய் வீசுவாள்
பேரன்பை
மழை மழையாய் பேசுவாள்
நினைப்பின் சுவர்களில்
எனையே மாட்டியிருக்கிறாள்
தொலை தூரம் பொருட்டல்ல
அங்கு சமைத்து
இங்கு ஊட்டியிருக்கிறாள்
வெறுமனே கூப்பிட்டு
சுடு மணல் காட்டுவாள்
வேகமாய் தாழிட்டு
வெண்பனி சூட்டுவாள்
நீலமலைப் பூக்களை
என் திசைக்கே தூவுகிறவள்
தூக்கம் வரும் வரை
கதை சொல்வதைப் போல
முத்தமிடுகிறவள்
எங்கிருந்தும் இங்கிருப்பது தான்
அவள் இருப்பு
தன்னிலிருந்தும் என்னில் இருக்க
முடிவது தான் அவள் சிறப்பு
என் உணர் கொம்புகளில்
வண்ணம் பூசி கன்னம் உரசுகிறவள்
என் வன வெளியில்
காற்றாய் பறந்து மரமாய் அசைகிறவள்
பருவத்தில் அவள் ஊரில் திரிய
ஆசை என்பேன்
பார்வைக்கே உடன் வந்திருக்கும்
இந்த றோஸ் என்பாள்
காதலின் இரு வழி
ஒரு வழியானது புரிவோம்
காத்திருக்கும் கனவெல்லாம்
பூத்திருக்கும் நந்தவனம் அறிவோம்
முப்போதும் என் கற்பனை
எப்போதும் என் சொப்பனம்
பிரியத்தின் வழியே பிரிவுகள் கோடி
பார்க்கின்ற நாளில் பருவங்கள் சூடி
- கவிஜி